Saturday, November 10, 2018

அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்கும் கவலையாம்! ஐ.நா அவதானிக்கின்றார்களாம்!

இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பில் கவலையடைந்துள்ளதாகவும் இச்செயற்பாடானது அரசியல் நெருக்கடியை மேலும் அதிகரிக்கும் என்றும் இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க தூதரகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் உறுதியான பங்காளர் என்ற வகையில், ஸ்திரத்தன்மை, சுபீட்சத்தை உறுதிபடுத்த ஜனநாயக நிறுவனங்கள், நடவடிக்கைகள் மதிக்கப்பட வேண்டும் என்று நாம் கருதிகிறோம் என அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. .

பிரித்தானியா

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடா்பில் இன்று காலை டுவிட்டரில் பதிவிட்டுள்ள, பிரித்தானியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க் ஃபீல்ட் (Mark Field), தனது கவலையை பதிவு செய்துள்ளார்.

அத்தோடு, இலங்கையின் ஒரு நண்பராக அரசியலமைப்பை நிலைநாட்டவும், ஜனநாயகத்தை பாதுகாக்கவும் அனைத்து கட்சிகளும் முன்வர வேண்டும் என்றும் ஐக்கிய இராச்சியம் அழைப்பு விடுப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா

இதேநேரம் இலங்கை தொடர்டபில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இலங்கைப் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் இனிவரும் காலத்தில் மேற்கொள்ளப்படும் விடயங்கள் தொடர்பில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

நியூயோர்க்கில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இலங்கையின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஐ.நா பொதுசெயலாளரின் பேச்சாளர் பர்ஹான் ஹக்கீம் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் தமக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்தவகையில் இலங்கையில் அரசியலமைப்பிற்கு ஏற்பவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென உறுதியாக நம்புவதாகவும் இதனால் இலங்கை அரசியல் நிலைமைகள் தொடர்பில் எந்நேரமும் அவதானிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com