Monday, November 5, 2018

நீதித்துறையில் நிலவும் வீண் காலதாமதங்கள்.

குற்றவாளிகள் தண்டிக்கப்படாதிருப்பதைப் பார்க்கிலும் குற்றமிழைக்காத நிபராதிகள் தண்டனை அனுபவிப்பது மிகவும் அநீதியானது என்று சட்டவல்லுநர்கள் கூறுகின்றனர்.

குற்றவாளிகள் தங்களுக்குரிய தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்வது, இல்லையேல் அவர்களுக்கான தண்டனை தாமதமடைவது போன்றனவெல்லாம் நீதித்துறையில் நிலவுகின்ற குறைபாடுகளாலேயே ஏற்படுகின்றன. எந்தவொரு நாட்டினதும் அரசியலமைப்பிலும் சட்டம் வலுவானதாகவே இருக்கின்றது. ஆனால் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதிலேயே குறைபாடுகள் காணப்படுகின்றன.இக்குறைபாடுகளில் பிரதானமானது காலதாமதம் ஆகும்.

எமது நாட்டின் நீதித்துறையிலும் இவ்வித காலதாமதம் நீண்ட காலமாகவே நிலவி வருகின்றது. நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரணை செய்யப்பட்டு தீர்ப்பு வழங்கப்படுவதில் ஏற்படுகின்ற தாமதம் நீதித்துறையில் உள்ள பெரும் குறைபாடாக உள்ளது.

இத்தாமதமானது வழக்குகளுடன் சமபந்தப்பட்டோருக்கு வீணான காலதாமதத்தையும் பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றது. நீதி கிடைப்பதற்கான தாமதம், பாதிக்கப்பட்டோருக்கு மனஉளைச்சலை உண்டாக்குகின்றது. அத்துடன் வழக்குத் தவணைகளுக்கு ஒவ்வொரு தடவையும் சென்று வரும் போது அவர்கள் பணச் செலவையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. வழக்கின் மனுதாரரும் எதிர்மனுதாரரும் நீதிமன்றத்தில் தங்களுக்காக சட்டத்தரணியை அமர்த்திக் கொள்ளும் போது பணத்தை வாரியிறைக்க வேண்டியுள்ளது.இது வறிய மக்களைப் பொறுத்த வரை பெரும் பாதிப்பு மிகுந்தது.

வழக்குகள் ஒத்திவைக்கப்படுவதென்பது மனுதாரருக்கும் எதிர்மனுதாரருக்கும் பணவிரயத்தையும் காலவிரயத்தையும் ஏற்படுத்துவதாகும். தீர்ப்பு தாமதமடைவது அவர்களுக்கு பல வகையிலும் பாதிப்புகளை உண்டாக்குகின்றது.

இவ்விடயம் சம்பந்தமாக எமது நாட்டின் புதிய பிரதம நீதியரசரான எச். என். ஜே. பெரேரா சமீபத்தில் வேதனையுடன் சுட்டிக்காட்டியிருந்ததையும் இவ்விடத்தில் கவனத்தில் கொள்வது பொருத்தமாகும்.

புதிய பிரதம நீதியரசராக சமீபத்தில் பதவியேற்றுக் கொண்ட அவர், நீதித்துறையில் நிலவுகின்ற தாமதங்களையே பெரும் குறையாக தனது உரையில் சுட்டிக் காட்டியிருந்தார்.

உரிய காரணங்களின்றி வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டுக் கொண்டு செல்வதில் தனக்கு உடன்பாடு கிடையாதென பிரதம நீதியரசர் தனது உரையின் போது சுட்டிக் காட்டியிருந்தார். வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்தி, அவற்றுக்கான தீர்ப்பை விரைவில் அளிக்க வேண்டும் என்பதே பிரதம நீதியரசரின் எண்ணமாக இருக்கின்றது.

இலங்கையின் நீதிமுறைமையில் காணப்படுகின்ற இவ்வாறான குறைபாடுகள் காரணமாக நீதிமுறைமை மீது மக்களுக்கு நம்பிக்கை படிப்படியாக குறைவடைந்து கொண்டு வருவதையும் அவர் சுட்டிக் காட்டியிருக்கின்றார்.


அதுமட்டுமன்றி, நீதிபதிகள் அனைவரும் தங்களது கடமையின் தார்மிகப் பொறுப்பை மனப்பூர்வமாக உணர்ந்து கொண்டு பணியாற்ற வேண்டுமென்ற ஆலோசனையையும் நீதியரசர் கூறி வைத்திருக்கிறார்.நீதித்துறை பரிசுத்தம் மிகுந்ததாகவே நோக்கப்படுகிறது.

ஜனநாயக நாடுகளைப் பொறுத்தவரை நீதித்துறையானது எந்தவொரு உயர்மட்ட தலையீடுமின்றி சுயாதீனமாக இயங்குவதற்கு வழியேற்படுத்தப்படுவது அவசியம். அப்போதுதான் நீதித்துறை மீது மக்களுக்கு பூரணமான நம்பிக்கை ஏற்படும். அதேசமயம் பணவசதியற்ற வறிய மக்களும் தமக்கான நீதியை பெரும் பணச்செலவின்றி பெற்றுக் கொள்வதற்கான சௌகரியம் நாட்டில் நிலவுதல் வேண்டும்.இதற்கெல்லாம் வழியேற்படுத்திக் கொள்வது அரசாங்கத்தின் கடமையாகின்றது.

எனினும் நீதிமன்றங்களின் மூலம் நீதியைப் பெற்றுக் கொள்வதென்பது பெரும் பணச்செலவு மிக்கதென்ற அபிப்பிராயம் எமது நாட்டு மக்களிடம் நிலவி வருகின்றது.இதற்கான காரணம் காலதாமதம் ஆகும்.

நீதி கோரி வழக்கொன்றைத் தாக்கல் செய்கின்ற போது, இறுதித் தீர்ப்புக் கிடைப்பதற்கு வருடக்கணக்கான காலம் எடுக்குமென்று மக்கள் சலிப்படைந்து கொள்கின்றனர். வழக்குகள் தாமதமடைந்து கொண்டு செல்கின்ற போது, சட்டத்தரணிகளுக்கான கட்டணம், போக்குவரத்துச் செலவு என்றெல்லாம் பெரும் பணச்செலவை எதிர்கொள்ள நேரிடுமென்ற அச்சம் சாதாரண மக்களுக்கு ஏற்படுகின்றது.

இதன் காரணமாக அம்மக்கள் தாங்கள் எதிர்கொள்கின்ற சிறிய பிரச்சினைகளுக்குக் கூட நீதிமன்றங்களின் உதவியை நாடுவதற்குத் தயங்குகின்றனர். இதுவே நீதித்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருவதற்கான காரணமாகவும் அமைந்து விட்டது.

இது ஒருபுறமிருக்க, நீதிமன்ற நடவடிக்கைகளை எவரும் அர்த்தமற்ற வகையில் விமர்சனம் செய்வது தவறு. அதற்கு பொறுப்பு வாய்ந்த ஊடகங்கள் களம் ஏற்படுத்திக் கொடுப்பது மிகவும் தவறு.

இவ்வாறு நீதிமன்ற செயற்பாடுகளை எவரும் தாராளமாக விமர்சனம் செய்வது நீதித்துறையை அவமதிப்பதற்குச் சமம். அதுமாத்திரமன்றி நீதித்துறை மீது மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும் வழியேற்படுத்தி விடும். வெகுஜன ஊடகங்கள் இவ்விடயத்தில் மிகுந்த பொறுப்புடன் நடந்து கொள்வது அவசியம்.ஊடகங்கள் சிலவற்றின் போக்கு இவ்விடயத்தில் கண்டிக்கத்தக்கது.

சாதாரண மக்கள் தங்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகளுக்கு நியாயம் தேடுவதற்கான ஒரேயொரு நம்பிக்கை நட்சத்திரமாக நீதிமன்றங்களையே நம்பியிருக்கின்றனர். அந்த நம்பிக்கையை குலைத்து விடுதல் கூடாது!

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com