Tuesday, November 27, 2018

உலகில் அதி உயர் சகிப்புத் தன்மை மிக்க ராணுவம் இலங்கை இராணுவமே! மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண

ரணில் விக்கிரமசிங்க புலிகளுடன் 2002 ல் ஒப்பந்தம் செய்து கொண்டபோது, எமது இராணுவ முகாம்களுக்கு முன்னால் வந்த புலி ஆதரவாளர்கள் சரத்தை கிளப்பி முன்பக்கத்தையும் அவ்வாறே திரும்பி பின்பக்கத்தையும் காட்டியபோதும், இராணுவச் சீருடை அணிந்து, கையிலே துப்பாக்கியுடன் இருந்த எமது படைவீரர்கள் மிகவும் சகிப்புத் தன்மையை கடைப்பிடித்து அரசாங்கம் செய்து கொண்டிருந்த சமாதான ஒப்பந்தத்தை கடைப்பிடித்தனர் என ஒய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார்.

டுபாயில் இலங்கையர்களைச் சந்தித்து நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் அசமந்த நிலைதொடர்பில் விளக்கமளிக்கும்போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் தொடர்ந்து பேசுகையில் :

மஹிந்த ராஜபக்ச அவர்களின் திடமான அரசாங்கம் எமக்கிருந்திருக்கா விட்டால் எம்மால் இன்று இலங்கையில் சுதந்திரமாக வாழ முடிந்திருக்காது. பல்வேறு வகையான தாக்குதல்களில் பங்கெடுத்ததன் ஊடாக இவற்றை நான் உணர்ந்துகொண்டுள்ளேன். நாங்கள் புலிகளுக்கு எதிரான தாக்குதல்களை ஆரம்பித்து புலிகளை முடக்கும் அல்லது முடிக்கும் நிலைக்கு வரும்போது, அரசியல் தலைமைகளிடமிருந்து தாக்குதலை நிறுத்திக்கொண்டு திரும்புமாறு உத்தரவு வரும். பல்வேறுபட்ட இழப்புக்களை மேற்கொண்டு கைப்பற்றியவற்றை விட்டுவிட்டு வெறும் கையுடன் திருப்பியிருக்கின்றோம்.

அதற்கான சிறந்த உதாரணத்தை கூறுகின்றேன். வடமாராட்சி லிபரேஸன் ஒப்பரேசன் இலங்கையிலே பெருமதிப்புக்குரிய இரு ஜெனரல்களான டென்சில் கொப்பேகடு, விஜய விமலரட்ண ஆகியோரது கட்டளையின் கீழ் இடம்பெற்றது. அப்போது இந்திய இராணுவத்தினர் எமது வான்பரப்பினுள் பலாத்காரமாக நுழைந்து பருப்பு வீசினர். அதை தொடர்ந்து எமது தளபதிகளை தொடர்பு கொண்ட அன்றைய ஜனாதிபதி தாக்குதல் நடவடிக்கையை கைவிடுமாறு பணித்தார். அவர் அவ்வாறு செய்ததற்கு இந்தியாவின் அழுத்தம் காரணமாக இருந்தது.

ஆனால் ராஜபக்ச அவர்களின் அரசாங்கத்திற்கும் அவ்வாறான அழுத்தங்கள் இருந்தது, அமெரிக்கா யுத்தத்தை நிறுத்துமாறு அரசாங்கத்தை நிர்பந்தித்தது, அத்துடன் புலிகள் சரணடைவதற்கு தயார் என்றும் அவர்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடமே சரணடைவர் என்றும் அரசை சிக்கலில் போட்டது. அவ்வாறான நிலையிலும் ராஜபக்ச அரசாங்கம் நிலைகுலைய வில்லை.

12 ம் திகதி மே மாதம் 2009 ஆண்டு கோட்டபாய ராஜபச்சவிடமிருந்து அவசர அழைப்பு வந்தது. அவர் கமால் இன்னும் எத்தனை நாட்கள் வேண்டும் என்றார். சுமார் 10 நாட்கள் தேவைப்படும் என்றேன். 10 நாட்கள் தரமுடியாது 5 நாட்களில் முடியுங்கள் என்றார். என்ன காரணம் என்றபோது மேற்சொன்ன அழுத்தத்தை கூறினார். அப்போது நீங்கள் அவர்களுக்கு என்ன சொல்லியிருக்கின்றீர்கள் என வினவினேன். நாம் இலங்கைப்படையினரிடம் சரணடையலாம் மூன்றாம் தரப்பிற்கு இடமில்லை என்று சொல்லியிருக்கின்றோம். அவற்றை நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம் நீங்கள் உங்கள் பணியை செய்யுங்கள் என எமக்கு தெளிவான ஆலோசனையை வழங்கினார்.

அழுத்தங்களுக்கு அடிபணியாத தலைமைத்துவம் கிடைத்ததாலேயே எமக்கு புலிகளை ஒழித்துக்கட்ட முடிந்தது என்றார் கமால் குணரட்ண.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com