Saturday, November 10, 2018

கனேடிய வர்த்தக வங்கி இணையத் திருடர்களின் இலக்காக மாறியுள்ளது!

வட அமெரிக்காவில் உள்ள இணைய ஊடுருவலாளர்களால் (Hackers) அதிகம் இலக்கு வைக்கப்படும் நிறுவனமாக CIBC எனப்படும் கனேடிய இம்பீரியல் வர்த்தக வங்கி உள்ளது. பிரான்ஸை தளமாக கொண்ட மின்னஞ்சல் பாதுகாப்பு நிறுவனம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் மாத்திரம் குறித்த வங்கி மீது போலி மின்னஞ்சல் மூலமான தாக்குதல் முயற்சிகள் 600 சதவீதமாக அதிகரித்துள்ளதாக அந்த தகவலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தமது தனிப்பட்ட தரவுகளைக் கொண்டு இணையம் மூலம் கையாளும் முக்கியமான முதல் நிலையில் உள்ள 25 நிறுவனங்களுள், இந்த வங்கி மட்டுமே இந்தளவிற்கு இணைய தாக்குதல் முயற்சிகளை அதிகம் எதிர்கொண்டுள்ளது.

குறித்த இந்த வங்கிக்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக 5.3 புதிய இணைய ஊடுருவல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாகவும், இது கடந்த காலாண்டுடன் ஒப்பிடுகையில் 622 சதவீதம் அதிகம் என்றும் கூறப்படுகிறது.

அதேவேளை CIBC வங்கியின் இணையத் தளத்தைப் போன்றே வடிவமைக்கப்பட்ட போலி இணையத் தளங்கள் ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு அனுப்பப்படுவதாகவும், இதன்மூலம் பயனாளிகளின் இரகசியத் தகவல்கள் திருடப்பட்டு மோசடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com