Saturday, November 3, 2018

வியாளேந்திரனுக்கு எதிராக புளொட் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்போறாங்களாம்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான வியாளேந்திரன் நேற்று அரசுடன் இணைந்து கொண்டதுடன் பிரதி அமைச்சர் பதவியையும் பெற்றுக்கொண்டார். இவர் புளொட் அமைப்பினூடாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுக்கொண்டவர் என்பது யாவரும் அறிந்தது. இந்நிலையில் வியாளேந்திரன் தமது கட்சியில் ஒழுங்கு முறைகளை மீறியுள்ளதாகவும் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் புளொட் அறிவித்துள்ளது.

அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

பத்திரிகை அறிக்கை

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாளேந்திரனின் திடீர் அரசியல் தீர்மானம் எம்மையும் தமிழ் மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கடந்த சில தினங்களாக வெளிநாடுகளுக்கு விஐயத்தினை மேற்கொண்டு இன்று அதிகாலை தாயகம் திரும்பும் வரை, கட்சியின் தலைமையுடன் தொடர்புகளை கொண்டிருந்த ச.வியாளேந்திரன், நாடு திரும்பியதும் மேற்கொண்டுவரும் அரசியல் நடவடிக்கைகள் எம்மால் புரிந்துகொள்ள முடியாதவையாகவுள்ளன. இன்று கட்சியின் சார்பில் அவருடன் தொடர்புகொள்ள தொடர்ச்சியாக மேற்கொண்ட முயற்சிகள் எவையும் பயனளித்திருக்கவில்லை.

இன்று நடந்த விடயங்கள் யாவும் ஏற்கனவே திட்டமிடப்பட்டு அதன் தொடராகவே நடந்தேறியவை என்பதை எம்மால் நம்பமுடியாமல் உள்ளது. அண்மைய நாட்களில் அவரின் செவ்விகள், கலந்துரையாடல்களை அவதானித்தோருக்கும் அவரது இன்றைய தீர்மானம் மிகுந்த அதிர்ச்சியையே கொடுத்திருக்கும்.

வியாளேந்திரன் அவர்கள் எமது கட்சியின் சார்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட போதிலும்கூட, அவரது மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகள் எவற்றிலும் கட்சி இற்றைவரையிலும் தலையீடுகளை மேற்கொண்டிருந்ததில்லை. மாறாக அவரை உற்சாகப்படுத்தியும் பூரண சுதந்திரம் வழங்கியுமே வந்திருக்கின்றது.

எமது கட்சியின் தலைவர் த.சித்தார்த்தன் அவர்கள் வியாளேந்திரன் மீது கொண்டிருந்த அதீத நம்பிக்கைக்கு இழைத்த துரோகமாகவே அவரது இன்றைய நடவடிக்கைகளை நாம் காண்கின்றோம்.

கட்சியின் கட்டுக்கோப்பையும் தீர்மானத்தையும் மீறியதுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்கு முரணான வகையில் செயற்பட்டிருக்கும் பா.உ ச.வியாளேந்திரன்மீது விரைவில் கட்சியின் மத்தியகுழுவினூடாக ஒழுக்காற்று நடவடிக்கையெடுத்து அத்தீர்மானத்தை தமிழரசுக் கட்சியின் மேலதிக நடவடிக்கைகளுக்காக சமர்ப்பிக்கவுள்ளோம்.

மேலும், எவரும் எதிர்பார்த்திராத வகையில் அமைந்த அவரது செயற்பாடு, கட்சியின் அங்கத்தவர்களும் அவரைத் தேர்ந்தெடுத்த மக்களும், அவர்மீது கொண்டிருந்த நம்பிக்கையின்மீது பாரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது என்பதை தெரியப்படுத்துகின்றோம்.


ம.பத்மநாதன்,
நிர்வாகச் செயலாளர்
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)
02.11.2018.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com