Tuesday, October 2, 2018

வியாபாராமாகிப் போன Montessori - அஹமட்

ஒரு சமூகத்தின் சொத்து உண்மையில் பௌதீக வளங்களல்ல. சமூகம் அடைய விரும்பும் இலக்குகளுக்கான சாதனங்கள் மட்டுமே ஒரு சமூகத்தின் சொத்தாகும். அந்த வகையில், சமூகத்தின் மிகப்பெரும் செல்வமாக கல்வியே கருதப்படுகிறது.

கல்வியற்ற சமூகம் - கண்கள் இல்லாதவர்களுக்கு ஒப்பானவர்களாகும்.

"கல்வியை தேடிக் கற்றுக்கொள்வது கடமை" என்கின்ற கருத்து மதங்களில் ஆழப்பதிந்துள்ளது. கல்வியை போதிப்பதற்கு இன்று பலர் தங்களை தயார்படுத்தியுள்ளனர். ஆனால் அந்தக் கல்வியின் தரங்கள் பற்றி நம்மில் அதிகம்பேர் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை.

ஆரம்பக் கல்வியை வழங்கும் இடங்களாக பாலர் பாடசாலைகள் விளங்குகின்றன. பெற்றோர்கள், பலவாறு ஆரம்பக் கல்விக்கான நிலையங்களை தேர்வு செய்கின்றனர். ஆனால் அந் நிலையங்கள் எவ்வாறு அமைந்திருக்க வேண்டும் என்பதில் எம்மால் காட்டப்படுகின்ற அக்கறை மிக அரிதானதாகவே உள்ளது.

திரும்புகின்ற இடமெல்லாம் பாலர் பாடசாலைகள் முளைத்துள்ளன. இது, இன்றைய காலகட்டத்தில் எழுந்திருக்கின்ற முக்கிய பிரச்சினைகளுள் ஒன்றாகும். பாலர் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட நோக்கங்கள் வேறு. ஆனால் தற்கால பாலர்பாடசாலைகள் வியாபார நோக்கங்களை மையப்படுத்தியதாகவே காணப்படுகின்றது என்கிற கருத்து சமூக ஆர்வலர்கள் மத்தியில் நிரம்பிப்போயுள்ளதனை அவதானிக்க முடிகின்றது.

ஆரம்பக் கல்வியை வழங்கும் பாலர் பாடசாலை திட்டமானது, 1907ம் ஆண்டு மரியா மொண்டசூரி அம்மையாரால் ஆரம்பிக்கப்பட்டது. இதனாலே அம்மையாருடைய பெயர் இந்த கல்விக்காக சூடப்பட்டது.
'பாலர்களின் மனோநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தாமல், அவர்களுக்கு பூரண சுதந்திரத்தையும், அவர்கள் விரும்பியவற்றை செய்வதற்கான அனுமதியை, சில கட்டுப்பாடுகளுடன் கொடுப்பதற்காகவுமே' பாலர் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது என்கிற வரலாறு அதில் புதைந்துள்ளதனை கண்டுகொள்ளமுடிகின்றது.

மரியா மொண்டசூரி அம்மையார் பாலர்களையும், சுற்றாடலுடனான தனது அனுபவத்தையும் மையமாக கொண்டே இக் கல்விமுறையை நெறிப்படுத்தினார். பாலர் பாடசாலைக் கல்வியானது 1911ஆம் ஆண்டு காலப்பகுதியில், அமெரிக்காவில் பிரபல்யம் அடைந்து காணப்பட்டது. அக்காலத்தில், ஏனைய தொழில்களை விடவும் மொண்டசுரி ஆசிரியர்களுக்கு சிறந்த வருமானம் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

பாலர்களின் திறமைக்கு இடமளிக்க கூடிய வகையில், அவர்களின் வயதுக்கு தகுந்த செயல்முறைக் கல்வியினை புகட்டுவதே மொண்டசூரி கல்வியினுடைய நோக்கமாகும்.

ஒரு குழந்தை பிறந்ததில் இருந்து 05 வயது வரையில், நல்வழிப்படுத்தி கல்வி வழங்குவதற்கு சிறந்த செயல்முறையாக மொண்டசுரி காணப்படுகின்றது. இக்காலப் பருவமே உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் வளர்ச்சி அடைகின்ற பருவமாக திகழ்கின்றது என்கின்றனர் உளவியலாளர்கள்.

பாலர்களுக்கு கல்வி புகட்டுகின்ற பாலர்பாடசாலைகளில் (மொண்டசசூரி), செயல்முறை பற்றி நன்றாக கற்றுக்கொண்டு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள்தான் கற்பிக்க வேண்டுமென மரியா மொண்டசுரி அம்மையார் வலியுறுத்தியிருந்தார்.

ஆனால், துரதிஷ்டவசமாக இன்று வெளிநாடுகளில் மட்டுமல்ல எமது நாட்டிலும் மொண்டசுரியினுடைய உண்மை, தாற்பரியம் புரிந்துகொள்ளப்படவில்லை. பயிற்சி, அனுபவம் மற்றும் திறமையற்ற ஆசிரியைகள் அக்கல்வி முறையை சீர்குலைப்பதனை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

பாலர் பாடசாலை நிலையங்கள் - இன்றைய சமூகத்தில் மிக முக்கியமானவை. அதுவே கல்விக்கான அடிப்படை தளமாகவும் விளங்குகின்றது.

பாலர் கல்வி (மொண்டசூரி) என்றால் எமது மனக்கண் முன் தோன்றுவது, விழாக்களுடன் தொடர்பான ஒரு சில விடயங்கள் மாத்திரம்தான். ஆனால் அவை இக்கல்வி முறைக்கு புறம்பான செயற்பாடுகள் என்கின்றார் மரியா அம்மையார்.

எமது நாட்டில், நாம் வாழுகின்ற சூழலில் திரும்புகின்ற இடமெல்லாம் பாலர் பாடசாலைகள் (மொண்டசுரி) தோற்றம் பெற்றிருக்கின்றன. ஒரு காலத்தில் பாலர் பாடசாலைகள் நிறுவப்படுவதாக இருந்தால், கல்வி அமைச்சிடம் முன் அனுமதி பெறவேண்டும். ஆனால் அந்த நடைமுறைகள் இல்லாமல் போனதன் காரணத்தினால், குக்கிராமத்தில் கூட, தெருவுக்கொரு பாலர் பாடசாலை நிறுவப்படும் 'அபாயம்' ஏற்பட்டுள்ளது.

இங்கு கற்பிக்கின்ற ஆசிரியைகள், சாதாரணதரக் கல்வியை பூர்த்தி செய்யாத, 18, 20 வயதுக்குட்பட்ட பெண்களாக உள்ளனர். இவர்களுக்கு குறைந்தளவு சம்பளமே வழங்கப்படுகின்றது. பாலர் பாடசாலை கற்கை நெறியை பூர்த்தி செய்த, தரமிக்க ஆசிரியைகளை நியமித்து கல்வி போதிக்கின்ற பாலர் நிலையங்கள், மிக அரிதாகவே காணப்படுகின்றன.

குறிப்பாக இலங்கைச் சமூகத்தில்; முன்னெப்போதும் இல்லாதவாறு, கல்விக்கான பணங்கள் அதிகளவில் செலவிடப்படுகிறது. ஆனால், இந்த நிலையினை பாலர் கல்வி நிலையங்கள் பிழையாகப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்க முடியாது.

நவம்பர், டிசம்பர் மாதங்கள் வருடத்தின் இறுதிக் காலப்பகுதி. பாலர் பாடசாலைகளில் கல்வி பெற்ற பாலகர்கள், தாம் கற்ற கல்வியை மேடையேற்றுகின்ற விழாக் காலமாகும். இந் விழாக்களினூடாக பல லட்சம் ரூபாய்களை பாலர் பாடசாலை நடத்துநர்கள் வருமானமாகப் பெற்றுக் கொள்கிறார்கள். ஏலவே கற்கும் பிள்ளைகளிடமிருந்து மாத வருமானமாக பல ஆயிரம் ரூபாய்களை பெற்றுக் கொண்டு வருகிறார்கள். விழாக்கள் நடாத்தி, ஏட்டிக்குப் போட்டியாக வருமானம் உழழைக்கின்ற நிலையங்களாக பாலர் பாடசாலைகள் இருக்கும் நிலை, இல்லாதொழிக்கப்பட வேண்டும்.

60 வீதமான பாலர் பாடசாலைகளில் கற்கை நெறிக்கோவைகள் பின்பற்றப்படுவதில்லை. இவ்வாறான பாலர் நிலையங்களுக்கு செல்கின்ற பிள்ளைகளுக், கல்வி கற்பதற்குரிய சரியான அடித்தளம் அமைவதில்லை.

வெறுமனே அங்கு கற்பிக்கப்படுகின்ற ஓரு சில ஆங்கில வார்த்தைகளையும், கவிதைகளையும் மனனமிட்டு பேசுவதற்கும், பாடுவதற்கும் கற்கொள்ளகின்றனர். இதைக் காணுகின்ற கணிசமான பெற்றோர்களும் திருப்தியடைகின்றனர். பாலர் பாடசாலைக் கல்வி என்பது இதுவல்ல. சூழல்களை புரிந்துகொள்ளாமல் பாலர் பாடசாலைகளுக்கு செல்கின்ற கணிசமான பாலகர்களை எம்மால் அவதானித்துக்கொள்ள முடிகின்றது.

தற்போது இலங்கை அரசினால் பாலர் பாடசாலை ஆசிரியைகளுக்காக ஒரு தொகை கொடுப்பனவு வழங்கப்படுகிறது. ஆனால், முறையான அடிப்படை பேணப்படுவதாகத் தெரியவில்லை. இங்கு கற்பிக்கின்ற ஆசிரியைகள் பாலர் கல்வி தொடர்பாக அரச அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் டிப்ளோமா அல்லது அதற்கு மேற்பட்ட கல்வி நிலையை பூர்த்தி செய்யவேண்டும். இவ்வாறான நிபந்தனைகள் இது விடயத்தில் எடுக்கப்படுகின்ற போதுதான், பாலர் கல்வி சிறப்பானதாக மிளிரும். அப்போதுதான் அறிவுத்திறன் கூடிய சமூகமொன்று, உருவாவதை எதிர்பார்க்க முடியும்.

ஆரம்பக்கல்வியை போதிக்கின்ற பாலர் பாடசாலைகள் முறையான திட்டங்களுக்குள் கொண்டுவரப்படல் வேண்டும். முறையான திட்டங்களுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறப்படும் பாடசாலைகள் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படுதல் அவசியமாகும். சமூகத்தினுடைய எழுச்சியும் வீழ்ச்சியும், பாலர் கல்வியிலேயே தங்கியுள்ளது.

அடித்தளம் உறுதியாக இடப்படுகின்ற போதுதான், அதன்மேல் கட்டப்படுகின்ற கட்டிடமும் உறுதியானதாக இருக்கும். எனவே, இது விடயத்தில் பெற்றோர்கள் அவதானிப்புடன் செயற்பட வேண்டியது காலத்தின் தேவை. ஆன்மீகம், கல்வி மற்றும் மருத்துவம் போன்ற விடயங்களில்தான் சமூகங்கள் அதிகமாக ஏமாற்றப்படுகின்றன. அவ்வாறான ஒரு காலத்தில் நாம் இருக்கின்றோமோ என்கின்ற அச்ச உணர்வு எம்மில் பலருக்கு இல்லாமலில்லை.

நமது சிறார்களின் கல்வி விடயத்தில், காலங்கடந்து சிந்திப்பதனை தவிர்த்து விழிப்புடன் நடந்துகொள்வோம்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com