Thursday, October 25, 2018

சிங்கள பௌத்த மக்கள் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போறாராம் மேர்வின் சில்வா.

சிங்கள பௌத்தர்களுக்காக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிட உள்ளதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் நடைபெற்ற வீர துட்டுகெமுனு அமைப்பு ஆரம்ப நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்...

டி.எஸ். சேனாநாயக்கவின் கட்சியிலிருந்து விலகிய போது பண்டாரநாயக்க புதிய கட்சி அமைப்பது பற்றி முதலில் சிந்திக்கவில்லை. அது போன்றே நானும்.

இந்த நாட்டை கட்டியெழுப்பிய வீர துட்டுகெமுனு அரசனின் பெயரில் அமைப்பை நிறுவியுள்ளேன். மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் கடந்த அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தற்போதைய அரசாங்கத்தின் அங்கத்தினர்களுக்கும் தொடர்பு உண்டு.

தற்பொழுது வழக்கும், களவாடப்பட்ட பொருளும் நீதவானுடையது என்ற நிலை காணப்படுகின்றது. மத்திய வங்கி பிணை முறி மோசடி என்ன?

வாகனங்களை இறக்குமதி செய்து பாரியளவில் பல பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 1675 வாகனங்கள் தருவிக்கப்பட்டு நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் ஒரு அமைச்சருக்கும் தொடர்பு உண்டு. மத்திய வங்கி பிணை முறி மோசடிகயை விடவும் இந்த வாகன இறக்குமதி மோசடி பெரிய தொகையாகும். துட்டுகெமுனு பிறந்த ஊரைச் சேர்ந்த அரசியல்வாதி நானாவேன்.

வட மத்திய மாகாணத்தின் குளங்களும், விஹாரைகளும் அழிவடைந்தால் அது எனக்கு வெட்கமான செயலாகும். இந்த வெட்கத்திலிருந்து மீளவும் மக்களுக்கு சேவையாற்றுவதற்கும் நான் வட மத்திய மாகாணத்தை தெரிவு செய்தேன்.

எதிர்வரும் காலங்களில் முதலமைச்சர் வேட்பாளராகவும் களமிறங்குவேன். ஜனாதிபதி தேர்தலின் போது சிங்கள பௌத்த மக்களின் சார்பில் தேர்தலில் போட்டியிட உத்தேசித்துள்ளேன்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு பாரிய மாற்றத்தை செய்ய எதிர்பார்க்கின்றேன். இந்த மாற்றம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் தெளிவுபடுத்துவேன் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com