Friday, October 5, 2018

இனவாதத்திற்கு துணைபோகும் ஊடகங்களின் அதிகார துஷ்பிரயோகத்திற்கெதிரான பங்கென்ன?

அண்மையில் கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தில் இடம்பெற்ற இடமாற்றங்கள், அதனூடான வெற்றிடம் , வெற்றிட நிரப்பு தொடர்பில் பல்வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றது. அங்கே இனவாதம் ஒழிந்து நிற்கின்றது அல்லது நிமிர்ந்து நிற்கின்றது என்று கூறலாம்.

குறித்த இடமாற்றம் மற்றும் இடநிரப்பு தொடர்பில் சேவை மூப்பின் அடிப்படையில் வழங்கப்படவேண்டிய ஒருவருக்கு வழங்கப்படாமல் , அவரிலும் சேவையில் இளையவர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக சில அரசியல்வாதிகள் நீலிக்கண்ணீர்வடிக்க, அவற்றை தூக்கி செய்தியாக்கிய தமிழ் தேசிய ஊடங்கள் தமது தேசியத் தகமையை நிலைநிறுத்திக்கொள்கின்றன.

இடமாற்றம் மற்றும் இடநிரப்பு தொடர்பாக ஆளுநரின் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அங்கே திட்டமிட்படி நியமனங்கள் குறித்து ஆளுநரால் சந்திப்பில் கலந்து கொண்டிந்த மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சிவநேசன் மற்றும் வியாழேந்திரன் உட்பட்ட அனைவருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்விடத்தில் அனுபவத்தில் மூத்தவர் என்று சொல்லப்படுகின்ற குறித்த பெண்மணியை அவ்வாசனத்தில் ஏன் அமர வைக்க முடியாது என்ற காரணமும் கூறப்பட்டுள்ளது. கூறப்பட்ட காரணம் யாதெனில் அவர் ஒரு பெண் என்றும் அவரால் நிலைமைகளை சமாளிக்க முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது. இங்கு குறிப்பிட்டுக்காட்டவேண்டிய அயோக்கியத்தனம் யாதெனில், உலகிற்கு முதலாவது பிரதம மந்திரியை தெரிவு செய்துகாட்டிய இலங்கையில், ஒரு கல்வித்திணைக்களத்தில் பெண்ணை தலைமைக்கு அமர்த்த முடியாதா என்ற வாதத்தை முன்வைக்க முடியாதவர்களாக பெட்டிப்பாம்பாக உள்ளே அமர்ந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளியேவந்து ஊடகங்கள் முன் இனவாத நஞ்சைக்கக்கியுள்ளனர்.

ஊடகங்கள் முன்னால் இவ்விடயத்தை பேச முடிந்தவர்களுக்கு ஆளுநரிடம் நேரடியாக விடயத்தை விவாதிக்க முடியாதிருந்துள்ளது.
இதில் மேலும் குறிப்பிடத்தக்க விடயம் யாதெனில் பிரதிக் கல்விப் பணிப்பாளராவிருந்த சிவநேசனுக்கு குறித்த பெண்ணின் அனுபவம் மற்றும் நிர்வாக பலம் பலவீனம் தொடர்பிலும் தெரிந்திருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறாயின் அவர்கள் விடயத்திற்கான தீர்வை பெறவேண்டிய இடத்தில் பெறுவதை தவிர்த்து , அதை இனவாதமாக்கி அரசியல் இருப்பை தக்க வைத்துக்கொள்ளவே முயலுகின்றனர்.

அரசியல்வாதிகளின் குறித்த பிச்சைக்காரன் கைப்புண் கைங்கரியத்தை எதிர்க்க திராணியற்ற ஊடகங்கள் ஒத்தோடுகின்றன.

இன்று அரச உத்தியோகத்தர்கள் இனரீதியான ஒதுக்கீட்டில் சில நிர்வாக கதிரைகளில் அமர்கின்றனர். இது மூவின மக்களும் வாழுகின்றதோர் நாட்டுக்கு பொருத்தமானதாகுமா? அவ்வாறு அமர்கின்றர்வர்களில் சிலர் தங்கள் இனம்சார்ந்து செயற்படுகின்றபோது மாற்று இனத்தை சேர்ந்தவர்கள் மீது அநீதி இழைக்கப்படுவது நியாயமானதா? என்ற கேள்விகளை எழுப்பும் ஊடகங்கள் அரிதாகவே காணப்படுகின்றது.

இனவாதக்கருத்துகளை தேடிப்பிடித்து முக்கியத்துவம் வழங்குகின்ற ஊடகங்கள் அரச ஊழியர்களின் அதிகார துஷ்பிரயோகத்தை கண்ணால் கண்டு கொள்வதே இல்லை. மக்கள் இன்று அரச ஊழியர்களின் அடாவடித்தனங்களில் சிக்கித்தவிக்கின்றனர். ஆனாலும் ஊடகவியலாளர்கள் தங்களது சுயலாபங்களுக்காக அவற்றை சுலபமாக கடந்து செல்கின்றனர். ஏன் அவ்வாறானவர்களுக்கு வக்காலத்தும் வாங்குகின்றனர்.

சமூக அநீதி ஒழிக்கப்படவேண்டுமாக இருந்தால் ஊடகங்கள் அதிகார சக்திகளின் அடாவடித்தனங்கள், அடக்குமுறைகள் மற்றும் பாரபட்சம் போன்றவற்றிக்கு எதிராக மக்கள் நலன்சார்ந்து நிற்கவேண்டும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com