Sunday, October 7, 2018

போதநாயகியின் (தற்)கொலையின் சூத்திரதாரியை காப்பாற்ற செத்தவீட்டு இணையம் தொடங்கியது ஆட்டம். பீமன்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாவராலும் பேசப்பட்டு வழமைபோல் மறந்த அல்லது மறக்கவைக்கப்படுகின்ற சம்பவமாகிப்போகின்றது விரிவுரையாளர் போதாநாயகியின் (தற்)கொலை விவகாரம். போதாநாயகிக்கான நீதி „கல்லில் நார் உரிப்பதாகத்தான்' அமையப்போகின்றது.

சில வருடங்களுக்கு முன்னர் வவுனியாவில் காமுகன் ஒருவனால் குதறப்பட்ட பச்சிளம் பாலகியான வைஷ்ணவியின் கொலையை திசைதிருப்பி, அவருக்கான நீதிக்கு இன்றுவரை தடைக்கல்லாக நின்றுவருகின்ற செத்தவீட்டு இணையம், போதாநாயகியின் கொலையாளியையும் நீதி மற்றும் மக்கள் தீர்ப்பிலிருந்து தப்ப வைக்க தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளது.

„திருமலையில் கர்பிணி விரிவுரையாளர் கொலையில் அதிரடி திருப்பம்!! வெளியான மற்றுமொரு தகவல்'எனத் தலைப்பிட்டு வெளியிட்டுள்ள செய்தியில் கீழ்கண்டவாறு தெரிவிக்கின்றது ஜேவிபி இணையம்.
போதாநாயகி மூன்று மாத கற்பிணியாகையால் தலைசுற்றில் கடற்கரைக்குச் சென்று „இடிவித்தானுள்' வீழ்ந்து தவறுதலாக இறந்து விட்டார் என மக்கள் மனங்களை மாற்றி விசாரணையை திசை திருப்ப முடியும் என்ற நயவஞ்சகத்திட்டத்தில் இறங்கியுள்ளது ஜேவிபி நியுஸ். அந்த இழிசெயலுக்காக ஊர் பெயர் இல்லாத ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள் என்று „வேலிக்கு ஓணான் சாட்சி' என்ற கதை சொல்ல முனைகின்றது செத்தவீட்டு இணையம்.

ஆனால் இவ்விடயம் தொடர்பில் கிளிநொச்சி வைத்தியசாலையின் முன்னாள் சட்டவைத்திய அதிகாரியும் தற்போது கொழும்பு பல்கலைக்கழகத்தின் வைத்திய பீட பதிவாளராக கடமையாற்றுகின்ற திரு. கனகசபாபதி வாசுதேவா அவர்கள் உடற்கூராய்வு பரிசோதனை தொடர்பான விளக்கமொன்றை தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

அப்பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது:

உளவியல் உடற்கூராய்வு பரிசோதனை (Psychological Autopsy)

எம்மில் பலருக்கு சாதாரணமாக வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படும் உடற்கூராய்வு பரிசோதனை அல்லது பிரேத பரிசோதனை பற்றியே தெரிந்திருக்கும். உளவியல் உடற்கூராய்வு பரிசோதனை பற்றியும் அதன்பிரயோகம்கள் பற்றியும் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை.

சாதாரண உடற்கூராய்வு பரிசோதனை மூலம் நாம் முக்கியமாக மரணத்திற்கான காரணம் (Cause of dead) மற்றும் மரணம் ஏற்பட்ட சூழ்நிலை (Circumstance of dead) என்பவற்றை கண்டறியலாம். மரணம் ஏற்பட்ட சூழ்நிலை என்பது தற்கொலை (Suicide), கொலை (Homicide), விபத்து (Accident) மற்றும் தீர்மாணிக்க முடியாத (undetermined) மரணங்களை குறிக்கும். பல சந்தர்ப்பங்களில் மரணம் ஏற்பட்ட சூழ்நிலையை சாதாரண உடற் கூராய்வு பரிசோதனை மூலம் கண்டுபிடிக்க முடியாது. அச்சந்தர்பகளில் உளவியல் உடற்கூராய்வு பரிசோதனையானது முக்கியமாக மரணம் ஏற்பட்ட சூழ்நிலையை கண்டுபிடிக்கபயன்படுகின்றது.

உதாரணமாக நன்றாக இருந்த நபர் ஒருவர் திடீரென தூக்கில் தொங்கி அல்லது நீரில் மூழ்கி இறந்து காணப்பட்டால் உறவினர்களில் ஒருபகுதியினர் கொலையென்றும் மற்றைய பகுதியினர் தற்கொலையென்றும் தங்களுக்குள் மோதிக்கொள்ளவர். இவ்வாறே போலீசாரும் விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுப்பதா இல்லையா என்று குழப்பம் அடைவர் (In the cases of equivocal deaths). இந்நிலையில் இறந்தவர் இறப்பதற்கு முன் என்ன மனநிலையில் இருந்தார் என்பதை கண்டறிந்தால் பல கேள்விகளுக்கு இலகுவாக விடை கிடைத்துவிடும் .

அவரின் இறப்பதற்கு முன் உள்ள மனநிலையானது பின்வருமாறு ஆராயப்படும்
1. இறந்தவரின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், வேலை செய்பவர்கள் ஆகியோரிடம் இருந்து தகவல்களை பெறுவதன் மூலம்
2. இறந்தவரின் முகப்புத்தகம், டயரி, தனிப்பட்ட கணனி மற்றும் கைபேசி என்பவற்றை ஆராய்வதன் மூலம்
3. இறந்தவரின் மருத்துவ அறிக்கைகள், பள்ளிக்கூட அறிக்கைகள் மற்றும் போலீஸ் அறிக்கைகள் என்பவற்றை ஆராய்வதன்

உளவியல் உடற்கூராய்வு பரிசோதனையை வழமையாக உளவியல் நிபுணர்களே மேற்கொள்வர். மேலும் இறந்தவர் கடந்த காலங்களில் எவ்வாறான மனத்தாக்கங்களிற்கு உட்பட்டார் அதன் பொது அவரின் எதிர்வினை எவ்வாறு இருந்தது, ஏன் இம்முறை அவர் இறப்பதற்கான முடிவினை எடுத்தார் போன்ற பல்வேறு விடயங்களை அறிந்து கொள்ளலாம்.


மனிதநேயம் கொண்டோர் இவ்வாறு போதாநாயகிக்கு நீதிவேண்டும் எனக் கோருகின்றபோது, ஜேவிபி நியூஸ் கொலை விசாரணையையும் கொலைக்கு நீதிகோருவோரையும் திசை திருப்ப முனைவதற்கான காரணம் யாது என்று சற்று வினவுவோமானால், விடை நிலாவைப் பார்ப்பது போன்று தெட்டத்தெளிவானது. ஜேவிபி இணையத்தளக்காரனின் தம்பி சிறிதரன். பாராளுமன்ற உறுப்பினராகவுள்ள அவர் தற்போது வட மாகாண முதல்வராக போட்டியிடுவதற்கு பல்வேறுபட்ட முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார். போதாநாயகியின் கொலையாளி என அவரது குடும்பம் மற்றும் சுற்றத்தாரால் குற்றஞ்சுமத்தப்படுபவரான செந்தூரன் சிறிதரனின் சகா. அவர் தேர்தல்காலங்களில் சிறிதரனுக்காக நேரடியாக பிரச்சார வேலைகளில் இறங்குபவர். இப்போது வாசகர்களுக்கு ஜேவிபி நியூஸ் இன் நோக்கம் விளங்கியிருக்கவேண்டும்.போதாவின் (தற்)கொலை தொடர்பில் அவரது தாயாரால் நேரடியாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள போதாவின் கணவரான செந்தூரன், தனது மகளை அடித்து துன்புறுத்தி வந்ததாகவும், அவரை ஒரு முழுநாளும் அறையொன்றில் போட்டு பூட்டி வைத்திருந்தாகவும் , அவருடைய பணத்தை சூறையாடியதாகவும் ஊடகங்கள் முன்னிலையில் குற்றஞ்சாட்டினார் என்பது யாவரும் அறிந்த விடயம். ஆனால் நீதித்துறை இவனை கண்டு கொண்டதாக இதுவரை இல்லை.

தாயாரின் கூற்றுப்படி செந்தூரன் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும். குறைந்தது விரிவுரையாளர் போதாநாயகி இறந்ததிலிருந்து இருவாரங்களுக்கு அவரது உள்-வெளி அழைப்புக்கள் பரிசோதனைக்குட்படுத்தப்படவேண்டும். கடந்த இருவாரங்களில் போதாவுடன் செந்தூரனுக்கிருந்த தொடர்பு மற்றும் அவன் அவரை துன்புறுத்தியுள்ளானா என்பதை உரையாடல்களை ஆய்வுசெய்வதன் ஊடாக கண்டறியப்படவேண்டும்.

மேலும் செந்தூரன் 19, 20 ம் திகதிகளில் தனது அலுவலகத்தில் விடுமுறை பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. அவ்வாறாயின் அவன் எங்கிருந்தான். திருமலைக்கு வந்திருந்தானா என்பதை அவனது தொலைபேசி இருந்திருக்கக்கூடிய கோபுரங்களை வைத்து கண்டறியவேண்டும். சிலவேளைகளில் இக்கொலைக்கு அவன் திட்டமிட்டிருந்தானாக இருந்திருந்தால் தனது தொலைபேசியை தன்னுடன் கொண்டு செல்லாமல் இருந்திருக்கலாம். ஆனாலும் வேறு ஒரு தொலைபேசியை நிச்சயமாக பயன்படுத்தியிருக்கவேண்டும். அது எந்த தொலைபேசி என்பதை போதாவின் இறுதி இருநாட்கள் அழைப்பு விபரங்களினூடாக கண்டு பிடிக்க முடியும்.

அவ்வாறு கண்டு பிடிக்கின்றபோது, போதாநாயகியை யார் கடலுக்கு அழைத்துச்சென்றது என்றும் அவர் எவ்வாறு ஆழ்கடலுக்கு கொண்டு செல்லப்பட்டார் என்பது தெளிவாகலாம். மிகவும் சனநடமாட்டம் உள்ள ஓர் கடற்கரையில் எவருக்கும் சந்தேகம் ஏற்படா வண்ணம் விடயம் நடந்தேறியிருக்கின்றது என்றால் அது ஒரு விபத்தாக நடைபெற்றதாக தீர்ப்பாகும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது என்பது மாத்திரம் தெளிவு.

அதேநேரம் கொலையில் சந்தேகம் உள்ளதாக செந்தூரன் தெரிவித்தது தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும், திசைதிருப்பும் நோக்கத்திற்காக அவ்வாறான யுக்தியை பயன்படுத்தியிருந்தால் அதற்காகவும் அவன் தண்டிக்கப்படவேண்டும்.

மறுபுறத்தில் மேற்குறித்த கயவன் தன்னை ஓர் உணர்சிக்கவிஞனாகவும் தமிழ் தேசியவாதியாகவும் காண்பித்துக்கொண்டிருக்கும் அதேவேளை, பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கையின் குற்றவியல்கோவை , அரசியல் யாப்பு மற்றும் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள இனவாதத்தை தூண்டுகின்ற கருத்துக்களுக்கு எதிரான சட்டம் என்பவற்றை மீறும்வகையில் தொடர்ச்சியாக கருத்து தெரிவித்து வந்துள்ளான்.

இவன் தெரிவித்துள்ள கருத்துக்கள் அமைச்சுப்பதவியை பறிகொடுத்த விஜயகலா தெரிவித்த கருத்துக்களிலும் பாரதூரமானவை. அவை பிரிவினையை தூண்டுபவை, பயங்கரவாதத்தை நியாயப்படுத்துபவை, இனங்களிடையேயான சகவாழ்வுக்கு குந்தகமானவை. ஆனால் செந்தூரன் எந்தச் சந்தர்ப்பத்திலும் இலங்கைப் பாதுகாப்பு பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்படவில்லை. அவ்வாறு பார்க்கின்றபோது, இவ்வாறான போலித்தேசியவாதிகளை இலங்கை அரசே இயக்கி வருகின்றது என்பதும் அவர்களின் பாதுகாவலர்களாக பொலிஸ்துறை செயற்படுகின்றது என்பதும் தெளிவாகின்றது.

செந்தூரன் மீது நடவடிக்கை வேண்டுமென அவரது குடும்பத்தினர் வேண்டினர். பல்கலைக்கழக சமூகம் தெருவில் இறங்கி நின்று வலியுறுத்தியது. இவ்விடத்தில் இலங்கை அரசின் அரவணைப்பு அல்லாத சாதாரண நபர் ஒருவர் இவ்வாறான குற்றச்சாட்டுக்கு உட்பட்டிருந்தால் நிலைமை என்னவாக இருந்திருக்கும் என்பதை சற்று கற்பனை பண்ணி பார்கின்றபோது, இலங்கையில் தேசியம் பேசுகின்றவர்களுக்கு இலங்கைப் பாதுகாப்புத்துறை பாதுகாப்பு கொடுக்கின்றது என்பதுடன் தமிழ் தேசியத்தின் யோக்கியமும் புரிகின்றது.

தமிழ் தேசியபோர்வையால் தமிழ் ஊடகங்கள் குற்றவாளிகளை மறைக்க முற்படுகின்ற இச்சந்தர்ப்பத்தில் திருமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக திரு இளஞ்செழியன் உள்ளார் என்றும் குற்றவாளிகள் இலகுவாக அவரிடம் தப்பித்துக்கொள்ள முடியாது என்பதும் போதாநாயகிக்காக நீதி கோருவோரது நம்பிக்கை. ஆனால் இலங்கை காவல்துறை குற்றவாளி சார்பாக செயல்படுமாக இருந்தால் இக்குற்றத்தை நீதிபதி இளஞ்செழியன் முன்னிலைக்கு கொண்டு செல்லுமா என்பதும் கேள்வியே.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com