Monday, October 1, 2018

சர்வதேச நீதிமன்றுக்கு இராணுவத்தினரை கொண்டு செல்லாது காப்பாற்றியவர் எங்கள் தலைவர் ரணில் விக்கரமசிங்கவே.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும் என்பது தமிழர் தரப்பின் கோரிக்கை. மறுபுறத்தில் இக்கோரிக்கையால் இலங்கைப்படையினரை சர்வதேச குற்றவியல் நீதிமன்று கொண்டு செல்லவுள்ளனர் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மின்சார நாற்காலியில் உட்கார வைக்கவுள்ளனர் என்றும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால் யுத்த குற்றங்களுக்காக இருக்கும் ரோம் சாசனத்தில் 2002 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த பிரதமர் கையொப்பம் இடாத காரணத்தால் எந்தவொரு இலங்கை குடிமகனையும் வெளிநாட்டு நீதிமன்றங்களுக்கோ அல்லது இராணுவ நீதிமன்றங்களுக்கோ அழைத்துச் செல்ல முடியாது என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.

ஒருபுறத்தில் புலிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்து பேசிக்கொண்டு , மறுபுறத்தில் யுத்தக்குற்றம் ஒன்று இலங்கையில் இடபெறுமாயின் அதற்காக சர்வதேச நீதிமன்றில் தமது படையினரை தண்டிக்க முடியாதவாறு தங்கள் தலைவர் எவ்வாறு காய் நகர்த்தி இருக்கின்றார் என்பதை இரத்தினபுரி, கஹவத்த பகுதியில் 29 ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வின்போது விளக்கியுள்ளார் அமைச்சர் அத்துகோரல.

தற்போதைய அரசாங்கம் புத்த சாசனத்தை அழித்து தேரர்களை கைது செய்து வெளிநாட்டு நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகள் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தி விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சிலர் பொய் பிரச்சாரங்களை செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு தான் தேர்தலில் தோல்வியடைந்தால் தன்னை மின்சார கதிரைகளுக்கு அழைத்துச் செல்வதாக மஹிந்த ராஜபக்ஷ பொய் பிரச்சாரம் செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அவர் தெரிவித்தது போன்று எதுவும் நடைபெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ தினமும் காலை எழுந்ததும் அவரது உயிரை காப்பாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க இருக்கும் திசையை நோக்கி வணங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com