Saturday, October 27, 2018

மாவைக்கு வேண்டாட்டி தனக்கு வேண்டுமாம் முதலமைச்சர் பதவி. சிவிகே சிவஞானம்.

வட மாகாண சபை கலைக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளருக்கான போட்டி தற்போது ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் எதிர்வரும் தேர்தலில் முதமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜா விரும்பாத பட்சத்தில் தானே அடுத்த பொருத்தமான வேட்பாளர் என்றும் தனக்கு அதற்குரிய சகல தகைமைகளும் உண்டு என்றும் தெரிவித்துள்ளார் வடமாகாண சபையின் முன்னாள் அவைத்தலைவர் சிவிகே சிவஞானம்.

பேரவைச் செயலகத்தில் இன்று (27) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வடமாகாண சபையின் ஆட்சிக் காலம் நிறைவுற்ற பின்னரான, திட்டங்கள் மற்றும் எதிர்வரும் மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளர் யார் என கேட்ட போதே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

மாவை சேனாதிராஜாவை தெரிவு செய்ய வேண்டுமென்று முன்மொழியப்பட்ட போது, மாவை சேனாதிராஜாவும் கைவிட்டதால், தற்போது அநுபவிக்கும் நிலை ஏமாற்றத்திற்குரியது. மாவட்டக் கிளையின் தற்போதைய தீர்மானத்தின் பிரகாரம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை வேட்பாளர், தமிழரசு கட்சி சார்ந்தவராக இருக்க வேண்டுமென்றும், தமிழரசு கட்சியின் யாப்பின் அடிப்படையில் ஆகக்குறைந்த சேவைக் காலத்தினைக் கொண்டவராகவும் இருக்க வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், பொதுவாக மாவை சேனாதிராஜா முதலமைச்சராக வர விருப்பம் தெரிவித்த காரணத்தினால் மாவை சேனாதிராஜாவை ஆதரிப்பேன். சில சமயங்களில் மாவை சேனாதிராஜா மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடாத நிலை ஏற்படுமேயானால் அந்த இடத்தில், அடுத்த தெரிவாக, உரித்துடையவன் நான் என்பதே எனது நிலைப்பாடு. அந்த சந்தர்ப்பத்தில், எனது கோரிக்கையை முன்வைப்பேன்.

கட்சியின் செயல்நிலை மற்றும் மாகாண அங்கிகாரங்கள், கடந்த 5 வருடங்களில் நான் செயற்பட்ட விதங்கள், அநுபவங்கள், அறிவுகள், இவற்றின் அடிப்படையில், அந்தத் தகுதி எனக்கு இருக்கு என்றதை மற்றவர்களும் ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகின்றேன். ஆகவே, மாவை சேனாதிராஜா போட்டியிடாத சூழ்நிலையில் எனது கோரிக்கையை வலியுறுத்துவேன் என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com