Saturday, October 20, 2018

ஜமால் காசோஜி சண்டையின் பின் உயிரிழந்ததாக சவுதி ஒப்புக்கொண்டது

காணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் காசோஜி துருக்கியில் உள்ள சௌதி துணைத் தூதரகத்தில் நிகழ்ந்த ஒரு சண்டைக்கு பிறகு மரணமடைந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிப்பதாக சௌதி அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக புலனாய்வுத் துறையின் துணைத் தலைவர் அஹ்மத் அல்-அஸ்ஸிரி மற்றும் முடிக்குரிய இளவரசர் முகமத் பின் சல்மானின் மூத்த ஆலோசகர் சௌத் அல்-கத்தானி ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விசாரணை அறிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள வெள்ளை மாளிகை, விசாரணைகளை நெருக்கமாக கண்காணித்து வருவதாக கூறியுள்ளது.

ஜமால் காசோஜி இறந்துள்ளதை முதல் முறையாக சௌதி அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

சௌதி புலனாய்வு அமைப்புகளை மறுகட்டமைப்பு செய்வதற்காக இளவரசர் முகமத் பின் சல்மான் தலைமையில் அமைச்சரவைக் குழு ஒன்றை சௌதி மன்னர் சல்மான் அமைத்துள்ளார்.

செளதியின் முடியாட்சியை தொடர்ந்து விமர்சித்து வந்த ஜமால், அக்டோபர் 2ஆம் தேதி துருக்கியில் உள்ள செளதி தூதரகத்திற்கு சென்றார். அதன்பின் அவரைக் காணவில்லை.

துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான் உடன் இந்த விவகாரம் தொடர்பாக மன்னர் சல்மான் நிகழ்த்திய தொலைக்காட்சி உரையாடலுக்கு பிறகு அவர் இறந்ததாகச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

முன்னனதாக, ஜமால் கசோஜியின் உடலை அருகில் உள்ள காடு மற்றும் விளைநிலத்தில் துருக்கி காவல்துறை தேடியது.

அவர் துணைத் தூதரகத்துக்குள் கொலை செய்யப்பட்டதற்கான காணொளி மற்றும் ஒலிப்பதிவு ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக துருக்கி கூறியிருந்தது.

ஜமால் கசோஜி துணைத் தூதரகத்துக்கு சென்ற பின் அங்கிருந்த அதிகாரிகளுடன் சண்டை நடந்துள்ளது. அச்சண்டை அவரது மரணத்தில் முடிந்தது.

துருக்கியில் இன்னும் தொடரும் இந்த விசாரணையில் இதுவரை 18 சௌதி அரேபிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கசோஜி சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டபின், அவரது உடல் துண்டுகளாக்கப்பட்டது என்று இந்த வழக்கை விசாரித்து வரும் துருக்கி அதிகாரிகள் உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தனர்.

ஆனால் கசோஜி மாயமான 17 நாட்களுக்கு பிறகு, அவர் அதிகாரிகளுடனான சண்டையைத் தொடர்ந்து இறந்துள்ளதாக ஒப்புக்கொண்டுள்ள சௌதி அரசு தெரிவித்துள்ள கூற்று வேறு மாதிரியாக உள்ளது. அதாவது இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட கொலை அல்ல என்பதை நிறுவ சௌதி முயல்கிறது.

சௌதி அரசுடன் மிகவும் நட்புடன் இருக்கும் மேற்கு நாடுகள் இந்த விவகாரத்தில் சௌதி மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமா என்பது இனிமேல்தான் தெரியும் என்கிறார் பிபிசி செய்தியாளர் ஜேம்ஸ் லேன்ஸ்டேல்.

பிபிசி

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com