Sunday, October 14, 2018

மக்கள் நீதி மன்றம் உருவானது. சந்தா கட்டாத தொழிலாளி! பந்தா காட்டாத அரசியல்வாதி !

களுத்துறை மாவட்ட தமிழ் இளைஞர்களை கொண்டு புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள அரசியல் சமூக அமைப்பான 'மக்கள் நீதி மன்றம்' தனது அங்குரார்ப்பண கூட்டத்தினை இங்கிரியவில் இன்று (14) நடத்தியது.

மன்றத்தின் தலைவராக ஊடகவியலாளர் ஆர் சிவராஜா தெரிவு செய்யப்பட்டார். செயலாளராக கே. உதயகுமார், பொருளாளராக செல்வராஜ், உபசெயலாளராக டி .தேவநாதன் தேசிய அமைப்பாளராக எஸ்.விமலனேசன், உபதலைவராக ஏ .பிசிவபெருமாள் ஊடக செயலாளராக மணி ஸ்ரீகாந்த் ஆகியோரும் நிறைவேற்றுக் குழுவில் 10 பேரும் தெரிவு செய்யப்பட்டனர்.

அங்கு உரையாற்றிய சிவராஜா பேசுகையில் :
இன்று ஆரம்பிக்கப்படும் இந்த அரசியல் பேரியக்கம் மக்களுக்கானது. எந்த கட்சிக்கு ஆதரவுக்காகவோ அல்லது யாரின் ஊதுகுழல்களாகவோ நாங்கள் இருக்கப்போவதில்லை. காலப்போக்கில் எங்கள் செயற்பாடுகளை பார்த்து மக்கள் அதனை தெரிந்துகொள்வார்கள். புதிய புரட்சியொன்றை நாங்கள் ஏற்படுத்துவோம்.

இன்று , வடக்கு கிழக்கு மலையகம் ,நான் பெரியவன் நீ சிறியவன் , நீ பணக்காரன் நான் ஏழை , மேல்ஜாதி கீழ் ஜாதி , படித்தவன் படிக்காதவன் என்ற நிலைமை உள்ளது . அந்த நிலைமை தமிழ் பேசும் சமூகத்தில் மாறவேண்டும். செய்யவேண்டிய விடயங்கள் எவ்வளவோ உள்ளன.

அரசியல்வாதிகளை அரசியல் கட்சிகளை குறைசொல்லிக் கொண்டிராது தமிழ் இளைஞர்கள் யுவதிகள் விழித்தெழ வேண்டும். அரசியலால் எல்லாவற்றையும் செய்துவிட முடியாது. அதற்கப்பால் மக்கள் சக்தி என்ற ஒன்று உள்ளது..

இன்று எல்லா தமிழ் அரசியல்வாதிகளும் அரசிடம் மண்டியிட்டுக் கிடந்தாலும் அவர்கள் என்ன சாதித்து கிழித்தார்கள் என்ற கேள்வியை எழுப்பி நாம் நேரத்தை வீணடிக்காமல் புதிய அத்தியாயம் நோக்கி செல்ல வேண்டும்..

தமிழருக்கு நீதியான ஓரு அரசியல் தீர்வு , சமவுரிமை , அரச தொழில்வாய்ப்புக்களில் இன விகிதாசாரம் , சுயதொழில் வாய்ப்புக்கள் அதற்கான பயிற்சிகள் , பெண்களுக்கான உரிமைகள் , தோட்டத் தொழிலாளர்கள் நலன் , மாணவர்களின் எதிர்காலம் குறிப்பாக சந்தா கட்டாத தொழிலாளி பந்தா காட்டாத அரசியல்வாதி என்ற நிலையை ஏற்படுத்த நாங்கள் பாடுபடுவோம்.

இவை தவிர இதர பல சமூக விடயங்கள் குறித்தும் நாங்கள் பேசுவோம். செய்யவேண்டிய வேலைகள் எவ்வளவோ உள்ளன.

களுத்துறை மாவட்டம் அனைத்து தமிழ் அரசியல்வாதிகளாலும் புறக்கணிக்கப்பட்ட ஒரு பகுதி. எங்களுக்கென தேசிய பாடசாலை இல்லை. இருக்கும் பாடசாலைகளின் நிலைமை கூட திருப்தியானதாக இல்லை. தமிழ் வாக்குகள் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக நாங்கள் புறக்கணிக்கப்பட்டோம். அப்படி புறக்கணிக்கப்பட்டமையும் நன்று. அதனால் தான் இன்று நாங்கள் சொந்தக் காலில் நிற்கிறோம்..

எங்களின் இந்த ஆரம்பத்தை பலர் மாற்றுக் கண் கொண்டு பார்ப்பார்கள், சேறை பூசுவார்கள், கல்லெறிவார்கள், அவற்றை எல்லாம் துடைத்தெறிந்து நாங்கள் முன்னேற வேண்டும். குரைக்கும் நாய்களுக்கெல்லாம் கல்லெறிந்து கொண்டிருந்தால் நாங்கள் இலக்கை தவற விட்டுவிடுவோம்..

எனவே இந்த பயணத்தில் இணைந்து கொள்ள அனைத்து சக்திகளும் முன்வர வேண்டும்.. களுத்துறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும் இந்த இயக்கம் ஏனைய பகுதிகளுக்கும் எதிர்காலத்தில் பரவும் .0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com