Monday, October 15, 2018

ஆபத்தில் சிக்கியிருக்கும் உண்மை! லண்டன் கார்டியன்

பத்திரிகையாளர்களுக்கு எதிரான தாக்குதல்கள் கடுமையாக அதிகரித்து வருவதுடன் அந்த குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்டவர்கள் அநேகமானோர் தண்டிக்கப்படாமல் தப்பிச்செல்லக்கூடிய கவலைக்குரிய சூழ்நிலை தோன்றியதையும் அடுத்து 21 வருடங்களுக்கு முன்னர் ஊடகத்துறைக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்து யூனெஸ்கோ தீர்மானமொன்றை நிறைவேற்றியது.

பத்திரிகையாளர்களின் கொலைகள் தனிமனிதர்களின் வாழ்வை இடைநடுவில் முடிப்பது மாத்திரமல்ல, கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் மீதான தாக்குதலாகவும் இருக்கிறது என்றும் அதன் விளைவாக சமுதாயத்துக்கு பரந்தளவிலான பாதிப்பு ஏற்படுகிறது என்றும் அந்த தீர்மானத்தில் யூனெஸ்கோ கவலையுடன் சுட்டிக்காட்டியது.

அந்த கவலை இன்று மிகவும் பாரதூரமானதாகவும் முனனென்றும் இல்லாத அளவுக்கு பரந்ததாகவும் உணரப்படுகிறது. 2006 -- 2017 காலகட்டத்தில் யூனெஸ்கோவினால் கண்டிக்கப்பட்ட ஆயிரத்துக்கும் அதிகமான பத்திரிகையாளர் கொலைகளில் பத்தில் ஒன்பது தொடர்பில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை.

நிலைமை அவ்வாறே தொடருகிறது. கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களில் வெளிநாட்டு நிருபர்களின் எண்ணிக்கையையும் விட உள்நாட்டு பத்திரிகையாளர்களின் எண்ணிக்கையே மிக அதிகம். சிலர் குற்றவாளிகளும் ஆயுதக் குழுக்களினாலும் பயங்கரவாதிகளினாலும் கொல்லப்பட்ட அதேவேளை மற்றையவர்கள் அரசியல்வாதிகளினால் அல்லது அரசியல்வாதிகளின் சார்பில் அடியாட்களினால் அல்லது அரசின் ஏஜென்சிகளினால் கொலைசெய்யப்பட்டார்கள்.

கடந்தவாரம் ஊழல் மோசடிகள் தொடர்பாக செய்திகளை அறிவித்துக்கொண்டிருந்த பல்கேரிய பத்திரிகையாளர் விக்ரோறியா மரினோவா கொலைசெய்யப்பட்டிருக்கிறார். அவர் ஒரு வருட காலத்திற்குள் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் கொலையுண்ட மூன்றாவது புலனாய்வுப் பத்திரிகையாளராவார். அதற்கு முன்னதாக சிலோவாக்கிய பத்திரிகையாளர் ஜான் குசியாக்கும் ( அவருடன் சேர்த்து அவர் மணம்முடிக்கவிருந்த பெண்மணியும்) மால்டா பத்திரிகையாளர் டஃனி காருவானா காலிசியாவும் கொல்லப்பட்டனர்.

இதேவேளை, கடந்தவாரம் சவூதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கஷொக்கி இஸ்தான்புல் நகரில் உள்ள தனது நாட்டின் துணைத் தூதரகத்துக்குச் சென்ற பிறகு காணாமல்போயிருக்கிறார் ; அவர் கொலைசெய்யப்பட்டுவிட்டார் என்று நம்புவதாக துருக்கி அதிகாரிகள் கூறுகிறார்கள். குறைந்தபட்சம் அவர் கடத்தப்பட்டிருக்கிறார் என்பது தெளிவானது. மேலும் பல பத்திரிகையாளர்கள் ( ஏப்ரலில் கொல்லப்பட்ட 10 ஆப்கான் பத்திரிகையாளர்கள் உட்பட) இவ்வருடம் உயிரிழந்திருக்கிறார்கள்.

இந்த சம்பவங்கள் எல்லாம் ஊடகத்துறையும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரமும் முகங்கொடுக்கவேண்டியிருக்கின்ற பரந்தளவிலான அழுத்தங்களின் மிகவும் கூர்மையானதும் அச்சந்தருகின்றதுமான வெளிப்பாடுகளாகும். கஷொக்கி விவகாரத்தில் சவூதி அரசாங்கத்தின் பிரதானமாக நெருக்குதலைக் கொடுக்கும் சக்தியாக துருக்கிய அரசாங்கமே விளங்குகிறது. அவ்வாறிருந்தாலும், உலகில் பெரும் எண்ணிக்கையில் பத்திரிகையாளர்களைச் சிறையில் அடைத்திருக்கும் நாடாக துருக்கியே இருப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை கூறுகிறது. றிசேப் தயிப் எர்டோகான் ஜனாதிபதியாக வந்த பிறகு 100 க்கும் அதிகமான பத்திரிகையாளர்கள் சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

மியன்மாரில் அரச இரகசியங்களை அறிந்துகொண்டதான குற்றச்சாட்டில் வா லோன், யாவ் சூ ஊ என்ற இரு ராய்ட்டர்ஸ் செய்தியாளர்களுக்கு சில வாரங்களுக்கு முன்னர் நீதிமன்றம் ஒன்று 7 வருடச் சிறைத்தண்டனை விதித்தது. உண்மையில் அவர்கள் இருவரும் அரச பாதுகாப்பு படைகளினால் றொஹிங்கியா கிராமவாசிகள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாகவே விசாரணை செய்து தகவல் திரட்டிக்கொண்டிருந்தார்கள். பிலிப்பைன்ஸில் சுயாதீனமான இணையத்தள செய்திச் சேவை ' றப்ளரின்' அனுமதிப்பத்திரத்தை அரசாங்கம் ரத்துச் செய்திருக்கிறது. என்றாலும் அது தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறது. அதன் தாபகர் மரியா றேசா கடந் மூன்று தசாப்தங்களுடன் ஒப்பிடும்போது தற்போதைய காலகட்டமே பிராந்தியத்தில் ஊடகவியலாளர்களுக்கு மிகவும் ஆபத்தானதாக இருப்பதாகக் கூறியிருக்கிறார்.

சவூதி அரேபியாவுடனான டொனால்ட் ட்ரம்பின் ' காதலும் ' உலகின் ஏனைய பகுதிகளில் மனித உரிமை மீறர்கள் தொடர்பில் அவரின் அப்பட்டமான அலட்சியப்போக்கும் கஷொக்கி எப்போதுமே பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலையை தோற்றுவிப்பதற்கு உதவிசெய்தன.' ஆனால்,' போலிச் செய்திகள் ' மீதான ட்ரம்பின் தாக்குதல்களும் ஊடகங்களை ' மக்களின் எதிரிகள் ' என்ற அவரின் வர்ணனையும் பலம்பொருந்திய ஆட்சியாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகப் போய்விட்டன. இது ஐக்கிய நாடுகள் நிபுணர்கள் அண்மையில் எச்சரிக்கை செய்ததைப்போன்று ஊடகவியலாளர்கள் தாக்குதலுக்குள்ளாகும்்ஆபத்தை அதிகரித்திருக்கிறது.

எதேச்சாதிகாரத் தலைவர்களும் மற்றையவர்களும் ஊடகவியலாளர்களின் குரல்வளையை நசுக்கி அவர்களை மௌனப்படுத்துவதற்கு ஊடகங்களு ஊடாகப் பேசுபவர்களையும் எதிர்காலத்தில் பேசுவதற்கு முன்வரக்கூடியவர்களையும் மௌனப்படுத்தவேண்டும் என்பதை அறிவார்கள்.துணிச்சலான பத்திரிகையாளர்கள் எப்போதுமே ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான சக்கிகளுடன் தங்களை அடையாளப்படுத்துவார்கள். அல்லது குறைந்தபட்சம் அதிகாரத்தின் மீது சி தடுப்புக்களைப் போடுவார்கள்.பொலிசாரிடமிருந்தும் நீதிமன்றங்களிடமிருந்தும் அரசியல் நிறுவனங்களிடமிருந்தும் தங்களுக்கு நீதி கிடைக்காதபோது பிரஜைகள் ஊடகவியலாளர்களையே நாடுகிறார்கள். உண்மையில் நடப்பது என்ன என்பதை பிரஜைகளுக்கு அறியத்தருகின்றவர்களாக ஊடகவியலாளர்களே இருக்கிறார்கள்.

ஊடகவியலாளர்களைத் தாக்குகின்றவர்கள் தண்டனையில் இருந்து தப்பிங்செல்லக்கூடியதாக இருக்கும்வரை ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டுக்கொண்டேயிருப்பார்கள். இது 1997 யூனெஸ்கோ தீர்மானத்தில் தெளிவாகக் கூறப்பட்டிருந்தது. ஊடகவியலாளர்களைத் தாக்குகின்றவர்கள், கொலை செய்பவர்கள் பிடிக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படவேண்டும் என்று யூனெஸ்கோ வலியுறுத்தியது. என்றாலும் கூட உருப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இல்லை. அல்லது குற்றஞ்சுமத்தப்படுபவர்கள் கொலை செய்வதற்கான உத்தரவை வேறு ஒருவரிடமிருந்து பெற்றவர்களாகவே இருக்கிறார்கள். காலிசியாவின் கொலையில் இதுவே நிலைமை. அவரின் குடும்பத்தவர்கள் பகிரங்கமான விசாரணையைக் கோரி நிற்கிறார்கள்.

மரினோவாவின் கொலை குறித்து பாரபட்சமற்ற விரிவான விசாரணை நடத்தி கொலையாளிகளை நீதியின் முன் நிறுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியம், ஜேர்மனி மற்றும் நாடுகள் பல்கேரியாவை வலியுறுத்திக் கேட்டிருக்கின்றன. ஆனால், சுயாதீனமான அல்லது கூட்டு விசாரணை நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கை உட்பட இடையறாத நெருக்குதல் கொடுக்கப்படாவிட்டால் பத்திரிகையாளர்களின் கொலைகளுக்கு பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படாமல் சுதந்திரமாக நடமாடும் நிலைமையே தொடரும். மேலும் பல பத்திரிகையாளர்கள் சாவார்கள்.

(லண்டன் கார்டியன் ஆசிரிய தலையங்கம் 9 அக்டோபர் 2018) - தமிழில். வீரகேசரி.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com