Sunday, October 14, 2018

தற்கொலையை கொலை செய்வோம்! அ. குகாந்தன்

"காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது வேதம் நான்கிலும் மெய்ப் பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே"

இந்தப் பதிவினை ஆன்மீகம் லௌகீகம் கலந்து சில ஒப்பீட்டு அடிப்படையில் தரலாம் என நினைக்கிறேன் ஆனால் மதங்களுக்கு அப்பாற்பட்ட அனைத்துலக மனிதர்களுக்கான பதிவுதான் இது பல வருடங்களில் கண்கள் கண்ட,கேட்ட,படித்த தற்கொலை தானாக தன்னை மாய்த்துக் கொள்ளும் விடயம் சம்பந்தமாக எழுத வேண்டும் விழிபுணர்வு தர வேண்டும் என்ற நீண்ட நாள் ஆதங்கம் இன்று இப்பதிவினை எழுத வைத்து விட்டது;

பண்டைய காலத்தில் இறைவனை காணமுடியவில்லையே ... அல்லது அடையமுடியவில்லையே என்ற ரீதியில் இறைவன்பால் கொண்ட தீராக் காதல் என்பனவற்றாலே தன்னை இறை அர்ப்பணம் செய்திடத் துணிந்து உயிரை மாய்த்திட எத்தனிக்கும் வேளை இறைவன் அவர்களின் உன்னத பக்தியினை உலகிற்கு உணர்த்திட திருவிளையாடல் புரிந்த வரலாற்றுக் கதைகள் பலப்பல புராண இதிகாசங்கள் வேதங்கள் திருமறைகள் சமயம் சார்ந்த நூல்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன; ஆனால் இன்றைய காலமோ இறைவனை மறந்து மாயையின்பால் ஏற்பட்ட உடல் கவர்ச்சி, மோகம், காமம் இறுதியில் ஏமாற்றம் என குறுகிய வட்டத்தில் சிக்குண்டு அதெல்லாம் பொய்,போலி என உணரும் பட்சத்தில் மன அழுத்தம் அதிகரித்து தன்னிலை மறந்து தன்னை தானாக மாய்க்கும் கலாச்சாரம் பூதாகரமாக உருவெடுத்து போதைப்பொருளினைப் போல தற்கொலை எனும் போதைப் பொருள் இன்று நாடெங்கிலும் பேசு பொருளாகவும் பணமின்றி மனம் மூலம் தன்னிடமே தானே கொள்வனவு செய்யக்கூடிய மலிவான பொருளாகவும் மாற்றமடைந்து பல மனங்களை உடையச் செய்து இன்றைய சமூகத்தோடு பின்னிப் பிணைந்து விட்டதென்றே கொள்ள முடிகிறது.

ஆம்! அன்றே உலகிற்கு ஒளியூட்டிய விஞ்ஞானி தோமஸ் அல்வா எடிசன் தன் ஆரம்பக் கல்வி மறுக்கப்பட்டும்; அதே போல அமெரிக்க ஜனாதிபதியாக வலம் வந்த செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகனான ஆப்ரகாம் லிங்கன் தெரு விளக்கு ஒளியில் படித்தும் அவர்கள் போல இன்றும் பெயர் குறிப்பிட்டு கூறுமளவுக்கு போற்றுமளவுக்கு உள்ளவர்கள் பலப்பலர் இவர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டிருக்காதா? இவர்களுக்கு ஏன்? தற்கொலை செய்யும் எண்ணத்திற்கு மாறாக தன்னை உயர்த்த வேண்டும் என்றும் அதற்காக எத்தனை கடின உழைப்பை செய்துள்ளார்கள்; ஸ்காட்லாண்டில் ராபர்ட் புரூஸ்(1274 AD - 1329 AD) என்ற மன்னன் பல முறை எதிரிகளிடம் தோற்று படைகள், நாடு, கௌரவம் எல்லாவற்றையும் இழந்து மலைக் குகை ஒன்றினுள் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மனமுடைந்து போய் விரக்தியுற்று ஒழிந்திருந்த வேளை அவன் மனதிற்கு தெம்பூட்டும் விதமாக சிலந்தி ஒன்று தனது வலையினை அமைக்க ஒரு புறமிருந்து மறுபுறம் பாய்ந்து வலையினை அமைக்க முற்படும் வேளையில் அதன் எச்சிலால் ஆன நூல் அறுவதும் பின்னர் அது விடாமல் முயற்சிப்பதுவுமாக சுமார் 999தடவைகள் தோற்று விட்டது இருந்தும் அதன் 1000மாவது பாய்ச்சலில் சரியாக மறு முனையில் நூல் அறுந்து போகாமல் ஒட்ட வைத்து விட்டது! உடனே அக் குகையிலிருந்து புறப்பட்ட மன்னன் தனது படைகளை மீளவும் மீளவும் திரட்டி வெற்றிவாகை சூடினான் என்பது வரலாறு.

இப்படி ஆயிரமாயிரம் மனதுக்கு வலிமை தரும் உண்மைச் சம்பவங்கள் புராண இதிகாச கதைகள் உள்ளன போது இன்றைய சமூகம் தற் கொலைக் கலாச்சாரத்தை முன்னெடுப்பது மிகுந்த வேதனை கலந்த அவமானம்.

ஆன்மீக ரீதியில் அன்று வாழ்ந்த ஞானிகள் சித்தர்கள் யோகிகள் எத்தனை எத்தனையோ ஞானப் பொக்கிசங்களை எம் தலைமுறைக்காக விட்டுச் சென்றுள்ளனர் ஆனால்..... அதனைப் படித்திட இன்றைய தலை முறை முயற்சி எடுக்கவுமில்லை எடுப்பதற்காக தூண்டப் படவுமில்லை; காரணம் தொழில் நுட்ப வளர்ச்சி தகவல் தொடர்புக்கென நல் நோக்கத்துக்காக உருவாக்கம் பெற்ற கணணி, தொலைக்காட்சி, கைப்பேசி தொழில்நுட்ப சாதனைகளால் விளைந்த சாதனங்கள் பல்கிப் பெருகி பலரின் வாழ்வியலை கேள்விக்குறியாக்கி பல வீடுகளை மயான பூமியாக்கிக் கொண்டு வருகிறது;

"தீர்வினைத் தேடுவார் இல்லை இத் தீவினிலே 'தீ' வினை தேடுவோர் பலர் உள்ளனரே! தேவனைத் தேடியே உளம் நலம் பெற வேண்டியோர் இன்று தூக்கெனும் கயிறினில் தொங்கியே ஆவிகள் சங்கமம் ஆகியே போகிறாரே" இது கட்டுரையாசிரியன் என் மன உணர்வு.

தற்போதைய உலகில் ஒவ்வொரு மனிதனும் தனக்குரிய ஸ்திரத்தன்மையினை தானாகவே உருவாக்க முற்பட வேண்டும் அதற்காகவே இறை அனுஸ்டானங்கள் ஒவ்வொரு மதங்களிலும் வலியுறுத்தப் படுகிறது ஆக மதங்களின் உருவாக்கம் மனிதனை மதம் பிடிக்கச் செய்திட அல்ல மதம் பிடித்த ஐம் புலன்களை அடக்கியாளும் தன்மையினையே வலியுறுத்துகிறது ஆனால் தவறான கண்ணோட்டம் தவறான புரிதல் தவறான வழிநடாத்தல் இன்றைய மதம் சார்ந்த கலவரங்களுக்கு வித்திட்டு வேடிக்கை காண்பிக்கிறது.

தற்போதைய தலை முறையின் தூர நோக்கு சிந்தனைகள் தடம் புரண்டுள்ளன அல்லது மறைமுகமாக தொழில் நுட்ப சாதனங்கள் பாவனைகள் மூலமாக தடப்புரள்வினை ஏற்படுத்தி வருகின்றன.

இங்கே முதல் அங்கம் வகிக்கிறது பால் கவர்ச்சி இந்த பால் கவர்ச்சி என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் என்றில்லை ஆண் பெண் என இன வேற்றுமைகளை கொண்ட அனைத்து ஜீவராசிகளுக்கும் பொருந்தும் ஆனால் மனிதனுக்கு சற்று அதிகமாகவே இந்த பால் கவர்ச்சி எனும் உணர்ச்சி ரீதியான வெளிப்பாடு காணப்படுகிறது நிதர்சனம்.

அடுத்ததாக மோகம் இந்த மோகிப்புக்கு பெயர்தான் மோகினி அல்லது மன்மதன் என்கிறார்கள் உலகின் தோற்றம் ஆதாம் ஏவாளாக இருக்கட்டும் அல்லது வேறு எதுவானதாகவும் இருக்கட்டும் மோகிப்பு எனும் மகுடிதான் மனிதனை அடுத்தபடியான காமம் எனும் நிலைக்கு கொண்டு செல்கிறது இனி அந்த மாய வலை மிகவும் பாதுகாப்பாக பின்னப்பட்டு அந்த வலையில் அகப்பட்ட ஆணோ பெண்ணோ மீண்டு வருவது மிக மிக இலகுவான காரியமல்ல; ஒரு ஆண் தான் காமுற்ற பெண்ணை அடைய உடல் மன ரீதியாக பல தியாகங்களை செய்கிறான் அதே போல பெண்ணும் செய்கிறாள் ஆனால் காலப் போக்கில் "ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்" என்பதைப் போன்று வாழ்வில் ஒரு சலிப்புத் தன்மை ஏற்படுகிறது அங்கே காதல் எனும் புனிதம் சோரம் போகிறது பின்னர் பூதாகரமான பூகம்பம் ஏற்படுகிறது இதனால் கண்ட கனவுகள் ஏமாற்றம் எனும் நிலையடையும் போது வெறுப்பு சோர்வு தனிமை வாட்டி வதைக்கிறது ; இங்கேதான் மனிதன் தன் சுயத்தை இழக்கிறான் அல்லது இழக்க வைக்கப் படுகிறான் தோல்வி அது ஆணோ சரி பெண்ணோ சரி மனம் என்பது இருவருக்குமே ஒன்றுதான் உடல் ரீதியான பலம் மனத்தின் உறுதியை தீர்மானிக்கும் கருவி என்பது ஏற்க முடியாத ஒன்று; இனி வாழ்ந்து என்ன பயன் எனும் கேள்விக் கணைகளால் அந்த அஸ்திரங்களால் ஒவ்வொரு நொடியும் வெறுமை நோய் அவர்களது வைராக்கியத்துக்கு தீ மூட்டி காலன் அகால மரணத்திற்கு கயிற்றினை வழங்கி விட்டு காத்திருக்கிறான் ஆம் அந்த மரணத்திற்கு முன்னரான ஐந்து வினாடி இறை பிரார்த்தனையினை செய்ய மறந்தவர்கள் மரண தேவனின் பிடியில்; அந்த இறை பிராத்தனையினை செய்தவர்கள் இன்று உலகின் உச்சாணிக் கொம்பில் வைத்து போற்றப்படும் ஞானவான்களாக மிகப் பிரபலமடைந்தவர்களாக வாழ்ந்து வழிகாட்டி வருகிறார்கள்! அந்த வகையில் நானும் அந்த இறுதி ஐந்து வினாடி பிரார்த்தனையில் ஈடுபட்டவனாக இனி மேல் தற் கொலை என்ற எண்ணத்தினை எதிர்ப்பவனாக இன்று இப்பதிவினை முன் வைக்கிறேன்.

பாலும் நீரும் கலந்து வைத்தால் அன்னப்பட்சி பாலினை வேறாக்கி அருந்தி நீரினை மீதமாக வைக்கும் என்று கூறுகிறார்கள் அந்த அன்னப்பட்சி யாது? என்றால் ஒரு பறவை என்கிறார்கள் சரி அது புராணம் சார்ந்தது என்று விட்டு விடுவோம் ஆனால் உண்மையில் பாலோடு நீரைக் கலந்து அரிசிச் சோற்றினை அதனுள் சிறிது நேரம் போட்டுப் பாருங்கள் பாலினை மட்டும் உறுஞ்சி விட்டு நீர் மீதியாக பாத்திரத்தினுள் இருக்கும் இப்படி நம் முன்னோர்கள் பல மர்ம முடிச்சுக்களை நமது தேடலுக்காக விட்டுச் சென்றுள்ளனர் தேடாமல் "கண்டதே காட்சி கொண்டதே கோலம்"என்று காலச் சக்கரத்தினை அடுத்த பிரளயத்தினை நோக்கி நகர்த்துகிறோம் என்பதில் எந்த விதமான ஐயமுமில்லை.

சரி தற்கொலை என்றால் காதல் சார்ந்ததுதானா? என்று நீங்கள் கேட்பது என் காதிலும் ஒலிக்கிறது ஆம்! இங்கே முதன்மைக் காரணியைத்தான் கூறினேன் ஏனெனில் அதன் தாக்கமே 100க்கு99% உலகெங்கிலும் அதிலும் இலங்கை இந்தியா அதிலும் பாருங்கள் தமிழ் சமூகத்தில் அதிகரித்துக் காணப்படுகிறது; ஒருவர் பணத்தின் மேல் மோகம் கொள்கிறார் அதனைக் காதலிக்கிறார் இறுதியில் ஏதோ ஒரு வகையில் ஏமாற்றப்படுகிறார் உடலியல் ரீதியாக இங்கே பாதிப்புகள் நிகழவில்லை உள ரீதியாகத்தான் நிகழ்கிறது அதுதான் ஆரம்பத்தில் கூறியது போல ஆசை,மோகம்,காமம், இறுதியில் ஏமாற்றம் அதனடிப்படையில் விரக்தி அதனால் தற்கொலை இந்த அடிப்படை எதிர்வு கூறல்களே அனைத்து விதமான தற்கொலைகளுக்கும் அடிப்படைக் காரணிகள் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்பவற்றால் ஏற்படும் தற்கொலைகளுக்கும் காரணிகளாக அமைகிறது என்பது ஆராய்ச்சிகள் மூலம் நிதர்சனமாகிறது.

இனி ஒரு முடிவுக்கு வரவேண்டுமல்லவா! ஒன்று கல்விக்கூடங்களில் பாலியல் சம்பந்தமான முழுமையான விழிப்புணர்வு பாடங்களை கல்வி அமைச்சின் ஊடாக செயற்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் பத்திரிகைகள் இணையத் தளங்கள் இவ்வாறான மரணப் பதிவுகளை விடுத்து அதனை தடுப்பதற்கான உள நலப் பதிவுகளை அடுக்கடுக்காக நாளாந்தம் அல்லது வாரம் ஒரு முறையேனும் பதிவிடல் வேண்டும்; அடுத்து வீட்டில் உள்ளவர்கள் குடும்ப உறுப்பினர்கள் திறந்த பேச்சு வார்த்தைகளை அதாவது ஒழிவு மறைவற்றவைகளாக இரகசியப் படுத்தாமல் வெளிப்படைத் தன்மையோடு இருக்கவேண்டும் ;உதாரணத்திற்கு தற்போது ஒருவரின் கைப்பேசிதான் அவரது லட்சண அவலட்சணங்களை காண்பிக்கிறது ஆயிரம் குப்பை மேடுகள் கைப்பேசியில் சேகரிக்கப்படுகிறது அதனால் பாதுகாப்பு இலக்கங்களால் மூடி வைக்கிறார்கள் தேவையற்றதை இல்லாதொழித்து தேவையானதை சேமித்து வையுங்கள் "மடியில் கனமிருந்தால்தானே வழியில் பயம் வரும்" நாம் ஒரு விடயத்தை ஒழித்து வைத்து பாதுகாக்க முற்படும் போது...

குடும்ப அங்கத்துவருக்கான அவசரத் தேவைக்கு நமது பயன்பாடு உதவாமல் போகிறது அதனால் அவரும் தன் குப்பைகளை சேகரித்திட மற்றொரு கைப்பேசியை நாடுகிறார் திறந்த வெளியில் சுகமான பிராண வாயுவை சுவாசிக்கலாம் அடைக்கப்பட்ட அறையில் மூச்சுத் திணறல்தான் ஏற்படும் அவ்வாறே இந்த தொழில் நுட்ப உலகு இலத்திரனியல் படைப்புக்களை எம் மீது திணித்து பரந்த வெளியில் சுதந்திரமாக சஞ்சரிக்க விடாமல் சிறியதொரு அறையில் கூண்டுக் கிளியாக்கி வேடிக்கை பார்க்கிறது ஆகவே திறந்த வெளிச் சமூகமாக எமது வீட்டினுள்ளே உருவாகுவோம்.

அடுத்ததாக இறை வழிபாடு... காலை மாலை என இரு நேரங்களை கண்டிப்பாக ஒதுக்கி நேரமில்லாமல் திண்டாடும் நாம் வாழ்வின் நேரத்தை முக்கியத்துவப்படுத்தும் இந்த இறை வழிபாட்டுக்கென காலையில் 15 நிமிடம் மாலையில் 15 நிமிடம் ஒரு நாள் எனும் 24மணித்தியாலத்தில் 1/2மணித்தியாலத்தினை ஒதுக்கி குடும்பத்தோடு அமர்ந்திருந்து உங்கள் மத வழக்கப்படி வணங்கி விட்டு அப்படியே அமர்ந்திருந்து ஒரு மூன்றுதரம் "நான் ஆனந்தமாக இருக்கிறேன்" அடுத்து இன்னொரு மூன்றுதரம் "என் குடும்பம் என் சுற்றம் சூழல் உற்றார் உறவினர்கள் எல்லோரும் ஆரோக்கியமாகவும் நின்மதியாகவும் ஆனந்தமாகவும் இருக்கிறார்கள்" இப்படி ஒரு மூன்று தரமும் "நான் எனது ஊர்மக்கள் எனது தேசத்து மக்கள் உலக மக்கள் என எல்லோரும் சாந்தி நிறைந்த சமாதானமான ஆரோக்கியமான ஆனந்த வாழ்வு வாழ்கிறார்கள்" எனவும் தொடர்ந்து தனக்கான, தன் உறவுகளுக்கான, தன் சமூகம், ஊர், தேசம், நாடு, உலகம் என நேரான நல்லெண்ணம் கொண்ட பிரார்த்தனைகளை முன் வையுங்கள் பின்னர் ஒருசில நிமிடங்கள் அமைதியாக இருந்து நீங்கள் வெளி விடும் சுவாசத்தினையும் உள்ளீர்க்கும் சுவாசத்தினையும் கவனியுங்கள் பிரார்த்தனைகளின் போது எதிர்மறையான எண்ணங்கள் எழுந்தாலும் அவற்றை கவனத்தில் கொள்ளாமல் நேரானவற்றை மட்டும் நினைத்திடுங்கள் உதாரணத்திற்கு எனக்கு நோய் இல்லை, நான் கடும் சிக்கலாக இருக்கிறேன் இப்படியான நோய்,சிக்கல்,மரணம் போன்ற சொற்கள் எண்ணத்திலோ பிரார்த்தனைகளிலோ வருவதை தடை செய்ய வேண்டும் இவற்றை நான் கூறவில்லை மகா யோகி ஆன்மீகக்குரு திரு. எஸ்.புண்ணியரெத்தினம் சுவாமிகளால் கூறப்பட்ட இலகுவாக மனதினை நம் வசப்படுத்திட அவர் அருளிய ஞான உபதேசங்களின் ஒரு பாகம்.

அடுத்து என்ன? ஒன்றுமே இல்லாத! அப்படியென்றால்? மன ரீதியாக அழுத்தங்கள் வரும் போது எதிர் கொள்ளும் ஆற்றலை வரவழைத்துக் கொள்ள ஆலயங்கள் மத தலங்களின் குரு மார்கள் முன் வந்து நல் வாழ்வுக்காக ஆன்மீக சார்ந்து; (பழைய புராணங்களை பாடலாக கூறிச் செல்லாமல் நொந்து வரும் மக்களை இன்னுமின்னும் நோகடிக்காமல்) இன்றைய சமூகம் ஏற்கும் படியான பல உதாரணங்களை முன்னிலைப் படுத்தி சொற்பொழிவுகளை மேற் கொண்டு தெளிவூட்டல்களைச் செய்ய வேண்டும்; இவற்றினை சரியாக கடைப் பிடித்து வந்தால் பல தூக்குக் கயிறுகள் தொட்டில் கயிறாகவோ அல்லது ஊஞ்சல் கயிறாகவோ மாறும் என்பது உறுதி இல்லையேல் தூக்கில் தொங்கி அரை குறை ஆசைகளோடு ஆவி உலகத்துக்கும் போக முடியாமல் பிதிர் உலகத்துக்கும் போக முடியாமல் ஆசை நிரம்பிய ஆத்மாவாக பல யுகக்கணக்கில் பரிணாம வளர்ச்சி பெறாமல் தானும் நிம்மதியாக வாழாமல் பலரின் நிம்தியினைக் கெடுத்து அலைந்து திரியும் துர் ஆத்மாவாக இருப்பதா? அல்லது நல்லவற்றை எண்ணி நல்லதை செய்து நிறைவான ஆத்மாவாகி அகால மரணத்தை தவிர்த்து கால மரணத்தை தழுவி புண்ணியப் பேற்றினை பெறுவதா? தீர்மானிப்பு எனும் ஆறாவது அறிவினை இன்று முதல் பயன்படுத்துவோம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com