Friday, October 26, 2018

விசேட அதிரடிப்படையினர் சிறைச்சாலைகளை பாமெடுத்து ஓரிரு நாட்களில் 5 காவலர்கள் கைது.

அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலை அதிகாரி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் மேலும் நான்கு அதிகாரிகளும் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.

அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள கைதிகள் சிலர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறைச்சாலை கண்காணிப்பு கோபுரத்தின் மீதேறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்காமல் கடமை தவறிய குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், சிறைக்கைதிகளை பார்வையிட வரும் சிறுவர்களிடம் சட்டவிரோதமான பொருட்களை சிறைச்சாலைக்குள் அனுப்பும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும் பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது சிறுவர்களிடமிருந்து பணம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் இவ்வாறான நடவடிக்கை இடம்பெறுகின்றமை தெரிய வந்துள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

சோதனையின் போது சிறுவர்களிடமிருந்து ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பணத்தொகை கைப்பற்றப்பட்டுள்ளதாக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இதேவேளை, பல்வேறு முறைகேடுகள் இடம்பெறுவதாக கண்டறியப்பட்டுள்ள வெலிக்கடை, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை மற்றும் புதிய மெகசீன் சிறைச்சாலை ஆகியவற்றுக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை பாதுகாப்பில் ஈடுபடுத்தவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த சிறைச்சாலைகள் வளாகத்திற்கு வௌிப்புறத்தில் இருந்தவாறு தமது உத்தியோகஸ்தர்கள் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுவார்கள் என பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை பார்வையிட வருவோரை சோதனையிடுதல் மற்றும் சிறைச்சாலை மதில்களைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் வியாபாரத்தை தடுத்தல் போன்ற செயற்பாடுகளில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஈடுபடவுள்ளனர்.

இதேவேளை, ஏனைய சிறைச்சாலைகளில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை கண்காணிக்க சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவை ஈடுபடுத்த சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு உத்தேசித்துள்ளது.

தற்போது 100 பேருடன் இயங்கும் சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவில் 200 பேரை பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com