Friday, September 14, 2018

தகவலறியும் சட்டத்தின் கீழ் உங்கள் உரிமை யாதென உங்களுக்கு தெரியுமா? ( RTI )

உங்களது மாகாண, பிரதேச அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? அது எவ்வாறு செலவிடப்பட்டது? யார்யாருக்கு காண்ட்ராக்ட் வழங்கப்பட்டது? எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது? போன்ற அனைத்து தகவல்களையும், தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்பதை அறிவீர்களா? இலங்கை பிரஜைகள் அனைவருக்கும் இந்த உரிமை உண்டு!

தகவலைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை.

அரச நிறுவனம் ஒன்றிலிருந்து தகவல் ஒன்றைப் பெற்றுக்கொள்ள பின்பற்றப்பட வேண்டிய நடவடிக்கை முறை பற்றி இனி கவனம் செலுத்துவோம்.

ஏதேனும் தகவலைப் பெற விரும்பும் எவரேனும் பிரஜை தோதான தகவல் அலுவலருக்கு, தேவைப்படும் தகவல் பற்றிய விபரங்களை எழுத்திலே கோருதல் வேண்டும்.

தகவல் அலுவலர் இயன்றளவு விரைவாகவும், 14 வேலை நாட்களுக்கு மேற்படாமலும், கோரப்பட்ட தகவலை வழங்க அல்லது கோரிக்கையை நிராகரிக்க முடிவு செய்ய வேண்டும்.

கோரிக்கையானது நிராகரிக்க முடிவு செய்தால், கோரிக்கை நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை தகவல் அலுவலர் கோரிக்கையை விடுத்த பிரஜைக்கு அறிவிக்க வேண்டும்.

தகவலை வழங்க முடிவு செய்தால், அத்தகைய முடிபு எடுக்கப்பட்டதிலிருந்து 14 நாட்களினுள் குறித்த தகவல் பிரஜைக்கு அளிக்கப்படுதல் வேண்டும்.

தகவலுக்கான கோரிக்கையானது, ஒரு பிரஜையின் உயிர் மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்துடன் சம்மந்தப்படுகின்றவிடத்து, அதற்கான பதிலளிப்பு கோரிக்கை கிடைக்கப்பெற்றதிலிருந்து நாற்பத்தெட்டு மணித்தியாலங்களுக்குள் செய்யப்படுதல் வேண்டும்.

பிரஜை ஒருவர் கோரும் தகவலானது மூன்றாம் நபருடன் தொடர்புடையதாக இருப்பின், தகவலை வழங்குவதா? வேண்டாமா? என்பது பற்றி 7 நாட்களுக்குள் அறிவிக்கும் படி, தகவல் அலுவலர் மூன்றாம் நபரை கோருதல் வேண்டும். மூன்றாம் நபர் தகவலை வழங்க சம்மதியாதுவிடின் தகவலை வழங்கக்கூடாது. மாறாக மூன்றாம் நபர் சம்மதித்தாலோ அல்லது பதில் தராவிட்டாலோ அத்தகவலை வழங்க வேண்டும்.

மேன்முறையீடுகள்.

தகவல் அலுவலரினால் தரப்பட்ட காரணங்களுடன் திருப்திப்படாத பிரஜையொருவர், தகவல் அறிவிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவிற்கு மேன்முறையீடு ஒன்றை முன்வைக்கலாம்.

அதே போல் ஆணைக்குழுவின் முடிவினால் பாதிக்கப்பட்ட பிரஜையொருவர், மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அதன் முடிபுக்கெதிராக மேன்முறையீடு செய்யலாம்

தகவலறியும் உரிமைச் சட்டத்தின் பிரயோகம்

கட்டுரையின் கீழ் வரும் இப்பகுதி இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் பிரசுரம் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டது.

எவ்வாறான சந்தர்ப்பங்களில் தகவலறியும் சட்டத்தினை பிரஜை ஒருவர் பிரயோகிக்க முடியும் என்பது பற்றி உதாரணங்கள் மூலம் பார்ப்போம்.

உதாரணம் – 01

பிரஜை ஒருவரின் முச்சக்கர வண்டி பாதையில் உள்ள குழிகளில் விழுந்து உடைந்து பழுதடையும் போது, அவரது நகரத்தில் உள்ள பாதைகளை செப்பனிட்டு திருத்துவதற்காக ஒதுக்கப்பட்ட பணத்திற்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக கேள்வி எழுப்புவதறகான உரிமை அவருக்கு இருக்கின்றது.

பாதை திருத்தப் பணிகளுக்காக எவ்வளவு பணம் செலவு செய்யப்பட்டது?

இந்த திருத்தப் பணிகளுக்காக வெளிநாட்டு உதவியாக பணம் வழங்கப்பட்டிருந்தால் அதில் இருந்து எவ்வளவு தொகை செலவிடப்பட்டது?

பாதையை செப்பனிடுவதற்காக பணியாற்றிய தொழிலாளர்களுக்கு எவ்வளவு ஊதியம் வழங்கப்பட்டது?

திருத்த வேலைகளுக்கான மூலப் பொருட்களுக்கான செலவினம் என்ன?

போன்ற கேள்விகளை எல்லாம் கேட்கும் உரிமை பிரஜைக்கு உண்டு. அப்போதே பாதை திருத்த வேலைகளுக்காக ஒதுக்கப்பட்ட பணம் சரியான முறையில் செலவிடப்பட்டதா அல்லது ஒப்பந்தக்காரர்களின் சட்டைப் பைகளுக்குச் சென்றதா என்பது பற்றி அறிந்து கொள்ள முடியும்.

உதாரணம் – 02

பிரதேசம் ஒன்றில், பாலம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக கடந்த வருட வரவு செலவுத் திட்டதில் பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த போதும், இன்னமும் வேலைகள் நடைபெறவில்லை எனின் ஒதுக்கப்பட்ட பணத்திற்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக பிரதேச சபையிடம் கேள்வி எழுப்பும் உரிமை இருக்கின்றது.

பாலத்தை நிர்மாணிப்பதற்கு தொழிலாளர்களுக்காகவும் நிர்மாண வேலைகளுக்கான பொருட்களைக் கொள்வனவு செய்வதற்குமாக எவ்வளவு பணம் ஒதுக்கப்பட்டது?

நிர்மாண வேலைகளை பொறுப்பேற்றுள்ள ஒப்பந்தக்காரர் யார்?

ஏன் பாலத்தின் நிர்மாணம் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை?

போன்ற வினாக்களை பிரதேச சபையிடம் வினவ முடியும்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com