Friday, September 14, 2018

சிங்களப்பிள்ளையின் தாயும் தமிழ் பிள்ளையின் தாயும் தாய்மாரே! காணாமல் போனோரை தேட உரிமை உண்டு! டிலான்-எஸ்பி.

தனது மகன் காணாமல் போனால், ஒரு சிங்கள தாயாருக்கு இருக்கும் வலியே தமிழ் தாயாருக்கும் இருக்கும். தமிழ் தாயாருக்கு தனியான வலிகள் எதுவுமில்லை. ஒரு பிள்ளை காணாமல் போனால், அந்த பிள்ளை பற்றி அறிந்து கொள்ளும் உரிமை பெற்றோருக்கு உள்ளது என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 15 பேர் அணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி.திஸாநாயக்க மற்றும் டிலான் பெரேரா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த இந்த விடயம் குறித்து கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பபட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவர்கள் இதனை கூறியுள்ளனர்.

டிலான் பெரேரா,

காணாமல் போனோர் சம்பந்தமான எடுக்கப்படும் விடயங்களை நாங்கள் எதிர்க்கவில்லை. காணாமல் போனோர் தொடர்பான செயலகம் குறித்த சட்டமூலம் கொண்டு வந்த போது நாங்களே கைகளை தூக்கி அதனை நிறைவேற்றினோம்.

அது மட்டுமல்ல, அதில் இருந்த ஆபத்தான பந்திகளை ஜனாதிபதியிடம் கூறி மாற்றினோம். காணாமல் போனோர் தொடர்பான செயலகத்தை எதிர்க்கும் தரப்பினர் கூட்டு எதிர்க்கட்சிக்குள் இருக்கலாம்.

எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் என்ற வகையில் சிங்கள பிள்ளையின் தாயும், தமிழ் பிள்ளையின் தாயும் இரண்டு பேரும் தாய்மார்கள் அதற்கான உரிமை அவர்களுக்கு இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தொடர்ந்தும் இருந்து வருகிறோம்.

இந்த விடயத்தில் மாத்திரமல்ல மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பிலும் கூட்டு எதிர்க்கட்சிக்குள் பல நிலைப்பாடுகள் இருக்கின்றன. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிலைப்பாடு வேறு ஜாதிக ஹெல உறுமயவின் நிலைப்பாடு வேறு.

காணாமல் போனோர் தொடர்பான விடயத்தில் தமது பிள்ளைகள் காணாமல் போனமை தொடர்பான நிலைமையை அறிந்துக்கொள்ளும் உரிமை தமிழ் தாய்மாருக்கு இருக்க வேண்டும் என்பதே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிலைப்பாடு.

எஸ்.பி. திஸாநாயக்க.

உலகில் இப்படியான சம்பவங்கள் நடந்தால், பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் காணாமல் போனவர்கள் பற்றிய விடயங்களை தெரியப்படுத்தி அவர்களை தேற்ற வேண்டுமே தவிர துரத்தி, துரத்தி அடிக்க கூடாது.

தேவை ஏற்பட்டிருந்தால் தென் ஆபிரிக்காவின் நெல்சன் மண்டோலாவுக்கு வெள்ளையர்கள் அனைவரையும் கொலை செய்திருக்க முடியும். அவர் அப்படி செய்யவில்லை. விடயங்களை தேடி அறிந்து பாதிக்கப்பட்டவர்களின் மனதை தேற்றி, அவர்களுக்கு இழப்பீடுகளை வழங்கி பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தார்.

டிலான் பெரேரா.

இலங்கையிலும் தென் ஆபிரிக்காவில் நடந்தது போல், அனைத்தும் முடிவடைந்த பின்னர் உண்மையை கண்டறியும் ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.

தென் ஆபிரிக்காவின் ஆயர் டுட்டு தலைமையில் ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அதில் அரசசார்பற்ற நிறுவனங்களின் தலைவர்கள் அமர்ந்து நடந்த உண்மை சம்பவங்களை விசாரித்தனர்.

அந்த ஆணைக்குழுவின் முன் வெள்ளையின படையினரும் நெல்சன் மண்டேலாவின் கறுப்பின போராளிகளும் செய்தவற்றையும் நடந்தவற்றையும் கூறினர். உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவில் அவர்கள் உண்மைகளை கூற ஆரம்பித்தனர்.

எங்களால் இவை நிகழ்த்தப்பட்டன என்று உண்மையை கூறினர். அப்போது மனதில் இருந்த சுமை குறைந்தது. இறுதயில் ஆணைக்குழு இரண்டு தரப்பிலும் காணாமல் போனவர்களுக்கு மரண அத்தாட்சி பத்திரங்களை வழங்கு, இழப்பீடுகளை வழங்குமாறு பரிந்துரைத்து, இரண்டு தரப்பினருக்கு மன்னிப்பு வழங்கியது.

நெல்சன் மண்டேலா ஒரு பயங்கரவாதி எனக் கூறி சிறையில் அடைத்த ஜனாதிபதி டி கிளர்க். மண்டேலா ஜனாதிபதியாக பதவி வகிக்கும் போது அவருக்கு கீழ் உப ஜனாதிபதியாக பதவி வகித்தார். இலங்கையில் இப்படியான ஒன்றை எண்ணி பார்க்க முடியுமா?.

மகிந்த ராஜபக்ச அல்லது மைத்திரிபால சிறிசேன ஆகியோர் ஜனாதிபதியாக இருக்கும் போது சாதாரண தமிழர் ஒருவரை உப ஜனாதிபதியாக நியமிக்குமாறு நான் பரிந்துரைத்தேன் என்று வைத்துக்கொள்வோம்.

கலகொட அத்தே ஞானசார தேரர் இதற்கு எதிராக 10 தடவைகள் இலங்கை முழுவதும் செல்வார். எனினும் எமது நாடு அந்த இடத்தை நோக்கி பயணிக்க வேண்டும். அனைத்து இனத்தவரும் சமமானவர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

எஸ்.பி. திஸாநாயக்க,

நீங்களும் நாமும் அறிந்திருந்திருந்தும் வெளியில் கூறாத சரணடைந்த நிலையில் கொல்லப்பட்டவர்களில் சிலரும் இருக்கின்றனர். இது உங்களுக்கும் தெரியும் எங்களுக்கும் தெரியும்.

டிலான் பெரேரா.

காணாமல் போனோர் தொடர்பான செயலகம் குறித்த சட்டமூலம் கொண்டு வரப்பட்ட போது, தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகித்த நாங்களும் அதற்கு உதவினோம்.

எஸ்.பி. திஸாநாயக்க.

காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான விடயத்தை நாங்கள் முழுமையாக எதிர்ப்பவர்கள். நாங்கள் இருவரும் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்கள்.

எனினும் போரின் இறுதிக்கட்டங்களில் பிரபாகரன் மிகவும் மனிதாபிமானமற்றவராக செயற்பட்டுள்ளார். பிரபாகரன் அவர்களின் ஆட்களுக்கு எதிராக செயற்பட்டுள்ளார். அவர் ரமேஷை கொண்டு சென்று சிறை வைத்திருந்தார்.

கருணா அம்மான் விலகிய பின்னர், பிரபாகரன் ரமேஷை கொண்டு சென்று தடுத்து வைத்திருந்தார். ரமேஷை சுட்டுக்கொன்றிருப்பார். இறுதியில் ரமேஷ் படையினரிடம் சரணடைந்தார். அவரை கொன்றனர். இப்படியான விடயங்கள் இருக்கின்றன.

டிலான் பெரேரா.

பிரபாகரன் கொலை செய்த அரசியல் தலைவர்களை எடுத்துக்கொண்டால், அவர் அதிகளவில் தமிழ் அரசியல் தலைவர்களையே கொலை செய்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com