Tuesday, September 25, 2018

கல்முனையில் தமிழருக்கு அநீதி இழைக்கப்படுமாயின் அதை எதிர்ப்பாராம் தேரர். பாறுக் ஷிஹான்

அபிவிருத்தி வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றபோது கல்முனை வாழ் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுமாக இருந்தால் அதனை எதிர்ப்பேன் என கல்முனை ஸ்ரீ சுபத்திரராம மஹா விகாரையின் விகாராதிபதியும் கல்முனை சிவில் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் தலைவராகவும், அம்பாறை மாவட்ட சர்வமத அமைப்பின் இணைத் தலைவராகவும் அம்பாறை வித்தியானந்த பிரிவெனாவின் தமிழ்ப்பாட வளவாளராகவும் இருக்கும் வண.ரன்முதுகல சங்கரட்ண தேரர் குறிப்பிட்டுள்ளார்.

கனேடிய அரசின் நிதியுதவியுடன் கல்முனை மாநகரில் 3400 கோடி ரூபா நிதியில் மலசலகூடக் கழிவகற்றல் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ள நிலையில் அப்பகுதி வாழ் தமிழர்கள் மத்தியில் கல்முனை -1 பல்தேவை கட்டடத்தில் இடம்பெற்ற சந்திப்பொன்றில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய அவர்:

அம்பாறை மாவட்டத்தில் கல்முனையில் வாழும் தமிழர்களை திட்டமிட்டமுறையில் அழித்தொழிக்க வேண்டும் என்பதில் முஸ்லிம் அரசியல்வாதிகள் குறியாக இருந்து வருகின்றார்கள் என்பதை இங்குள்ள மக்களே எனக்கு தெரிவிக்கின்றனர். இதற்காகவே தான் கல்முனை மாநகர சபைக்குட்ட 75 கிராம சேவகர் பிரிவுகளில் வாழும் மக்களின் சுகாதாரத்தைப் பேணும் வகையில் மலசலகூடக் கழிவுகளை அகற்றி சுத்திகரிக்கும் வேலைத்திட்டத்தை மக்கள் செறிந்து வாழும் பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிகின்றேன். இத்திட்டம் நல்ல ஒரு திட்டம் தான். காலத்தின் தேவையும் கூட. ஆனால் இவ்வாறான பாரிய திட்டங்கள் அமைக்கப்படும் போது மக்களிற்கான விழிப்பூட்டல்கள் அவசியமாகும். ஆனால் அவை ஒன்றும் இதுவரை எவரும் முன்னெடுக்கவில்லை என்பதே எமது கவலையாகும்.

இப் பிரதேசத்தில் அதிகாரத் துஸ்பிரயோகத்தில் அரசியல் பொருளாதார ரீதியில் பலம் பெருந்தியவர்கள் ஈடுபட முயன்றால் நான் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க போவதில்லை. இன்னுமொரு இனத்தின் உரிமைகளைப் பறித்தெடுக்கின்ற நிலை இத்திட்டத்தில் காணப்பட்டால் இதற்கு நாம் அனைவரும் கட்சிபேதங்களை மறந்து செயற்பட வேண்டும். ஒரு இனம் பாதிக்கப்படாமல் அரச அதிகாரிகள் இன மத குல பேதங்கள் பார்க்காமல் பரந்த மனப்பாங்குடன் மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும். அதிகாரங்களை துஸ்பிரயோகம் பண்ணக்கூடாது. மக்கள் செறிவாக வாழுகின்ற பிரதேசங்களுக்கும் அதிகமாக மக்கள் கூடிக்கலைகின்ற இடங்களுக்கும் இந்த கழிவு நீர் முகாமைத்துவ திட்டத்தை அமுல்படுத்த இந்த விடயம் தொடர்பில் மக்கள் பூரண விளக்கத்தினை அளிக்க வேண்டும். அந்த விளக்கத்தினை ஊடகங்கள் ஊடாக மக்களுக்கு வழங்க முன்வர வேண்டும்.

இந்த திட்டத்திலுள்ள படித்த சிலருக்கே நன்மைகள் தீமைகள் தொடர்பில் விளக்கமில்லாமல் இருக்கிறது. அவர்களுக்கு இது தொடர்பில் போதிய அளவில் அறிவு இருக்கவில்லை. மலசலத்தை அகற்றி அதனை மீள் சுழற்சிக்குற்படுத்துகின்ற போது அதனால் சூழலில் துர்நாற்றம் எழும் என மக்கள் கருதுகிறார்கள். அவ்வாறே வீடுகளில் இருந்து குழாய்வழியாக பிரதான கழிவு நீர் முகாமைத்துவ சட்டகத்திக்கு அவற்றை நிலக்கீழ்வழியாக கொண்டுவரும் போது குழாய்களில் வெடிப்பு ஏற்பட்டு சூழல் மாசடையும். அந்த பிரதேசமே துர்நாற்றம் வீசும் என அவர்கள் கருதுகிறார்கள். இதனால் தான் இந்த திட்டத்தை ஆரம்பிக்கின்ற போது மக்கள் அத்திட்டத்தை நிறுத்தும் முயற்சியில் இறங்குகிறார்கள். இதுவே உண்மை.

ஆனால் இந்த கருத்தை தற்போது மக்கள் கருத்தாக தான் முன்வைக்கும் போது, பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸை வசைபாடுவதாகவும், இனவாதம் கதைப்பதாகவும் சிலர் குறிப்பிடுகின்றனர். ஆனால் எனது நோக்கம் மக்களுக்கு நன்மையான விடயங்களை பெற்றுக்கொடுப்பதாகும். இந்த தேசிய அரசாங்கத்தில் நாட்டில் நல்லிணக்க சக வாழ்வு ஏற்படுத்த முயற்சிகள் இடம்பெறுகிறது. எனவே எதிர்கால சந்ததிகளின் நலனை அடிப்படையாக கொண்டு எமது மக்களிற்கான அபிவிருத்தி திட்டங்களை நாம் மேற்கொள்ள வேண்டும்.

நான் ஒரு பௌத்த குருவாக மாத்திரமன்றி தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்தும் வகையில் அயராது உழைத்து வருபவன். நான் ஒரு இனவாதி அல்ல. பல்லின மக்கள் வாழுகின்ற இப்பிரதேசத்தின் அனைத்து மக்களின் மொழி மத கலாசாரத்திற்கு மதிப்பளிக்க பழகிக்கொள்ள வேண்டும். இதனை ஏற்படுத்துவதில் நான் உறுதியாக உள்ளேன். அதற்கு ஏற்ற வகையில் ஒவ்வொருவரது சிந்தனையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.

இங்கு மக்களின் தேவைகளை அறிந்து கல்முனை மாநகர உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் எங்களையும் மக்களையும் அரவணைக்கின்றார். நாமும் அவருக்கு பக்க பலமாக இருக்க வேண்டும். இவருடைய நல்ல சிந்தனையை பாராட்டுகின்றேன்.

கல்முனை மாநகரில் மக்களுக்காக செய்ய வேண்டிய பல அபிவிருத்திகள் எம் கண்முன்னே இருக்கின்றன. அதனை செய்யவேண்டும். எமது பிரதேச மக்களுக்கு நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. அதனையெல்லாம் தீர்த்து வைக்கவேண்டும். அதற்காகவேண்டித்தான் இக்கூட்டத்திற்கு அழைத்தவுடன் வந்தேன். கல்முனையில் தமிழ் மக்களுக்கு பாதகமான முறையில் நகர அபிவிருத்தி மேற்கொள்ளப்படுமாக இருந்தால் அதனை நான் எதிர்ப்பேன் என்றும் தெரிவித்தார்.

கனேடிய அரசாங்கத்தின் இந்த வேலைத்திட்டம் மக்களின் எந்தவித பாதிப்புகளையும் ஏற்படுத்த நாம் அனுமதிக்க முடியாது என்பதே எனது கருத்தாகும்.

எனவே அனைத்து தலைவர்களும் அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் ஒத்துழைத்தால்தான் இந்த வேலைத்திட்டத்தை மக்களிற்கு சாதகமாக நிறைவேற்ற முடியும்.

இக்கூட்டமானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தலைமையில் இடம்பெற்றதுடன் இதில் சிவில் அமைப்பு த.தே.கூட்டமைப்பின் மாநகரசபை உறுப்பினர்கள் கிராமப்பெரியார்கள் ஆலயங்களின் உறுப்பினர்கள் மற்றும் கிராம அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.







0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com