Friday, September 21, 2018

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் உல்லாசம் அனுபவிக்கின்றார்களாம்! சொல்றார் சங்கரியார்.

தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டு மக்களின் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்காமல் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் உல்லாசமாக இருக்கின்றார்கள் என்று சாடியுள்ளார் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய நிர்வாகிகள் தெரிவிற்கான கூட்டம் 18.09.2018 செவ்வாய்க் கிழமை அன்று; நாச்சிமார் கோவிலடி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு வீ. ஆனந்தசங்கரி அவர்கள் உரையாற்றுகையில் மேலும் தெரிவித்ததாவும்:

மக்கள் தங்களின் பிரச்சினைகளுக்காக வீதியில் இறங்கி அவர்களே போராடவேண்டுமென்றால் மக்கள் பிரதிநிதிகள் எனக் கூறிக்கொள்ளும் இவர்கள் எதற்காக.?

மக்கள்தான் வாக்குப் பிச்சை போட்டு பாராளுமன்ற உறுப்பனர்களின் உல்லாச வாழ்விற்கு வழிசமைத்துக் கொடுத்துள்ளார்கள். மக்கள் தான் எஜமானர்கள். ஆனால் அந்த உணர்வு சிறிதுமின்றி இவர்கள், மக்களின் போராட்டத்தை, வெறுமனே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

வாக்களிப்பதும் மக்கள், தங்கள் பிரச்சினைகளுக்காக போராடுவதும் மக்கள் என்றால் இவர்கள் எதற்காக?. முள்ளிவாய்க்கால் பகுதியில் எமது மக்களின் படுகொலைகளையே வேடிக்கைப் பார்த்தவர்களுக்கு இது ஒன்றும் பெரிதல்லவே.

இந்த நிலைமையை தொடர்ந்தும் நீடிக்க விடாமல், நாம் அனைவரும் நான் பெரிது நீ பெரிது என்று பாராமல் நாடும் மக்களும் பெரிது என நினைத்து அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டு மக்களுக்காக போராட வேண்டும் என்ற எண்ணம் உள்ள மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

மேலும்; உள்ளுராட்சி சபைகளில் தொடர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் போனஸ் ஆசனங்களுக்காக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள், சுழற்சி முறையில் ஆசனங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் எனவும், உடன்படாதவர்கள் மீது ஏற்கனவே கட்சியின் மத்திய செயற்குழுவின் தீர்மானத்திற்கு அமைவாக அவர்களை கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, புதிய உறுப்பினர்களை உள்ளுராட்சி சபைகளுக்கு நியமனம் செய்ய வேண்டும் என்ற முடிவும் குறித்த ஒன்றுகூடலில் எடுக்கப்பட்டுள்ளன.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com