Friday, September 21, 2018

திருட்டு வழக்கில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், அவரின் மகன் உள்ளிட்ட நால்வருக்கு பிணை.

சவுதி அரேபியாவின் நிதியுதவியின் கீழ் தனியார் பல்கலைக்கழகமொன்று நிர்மாணிக்கப்படுகின்றது. இதன் கட்டுமானப் பணிகள் நிறுவனமொன்றிற்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், குறித்த கட்டுமானப்பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அங்கு அத்துமீறி பிரவேசித்த நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் M.L.A.M. ஹிஸ்புல்லாஹ், அவரின் மகன் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட நால்வர் அங்கிருந்த 150 மில்லியன் ரூபா பெறுமதியான நிர்மாணப் பணிகளுக்கான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களைக் திருடிச்சென்றதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கு நேற்று முன்தினம் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரதிவாதிகளான இராஜாங்க அமைச்சர் M.L.A.M. ஹிஸ்புல்லாஹ் மற்றும் அவரின் மகன் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட நால்வரையும் தலா 2 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 25 இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் செல்வதற்கு நீதவான் ஏ.சி. ரிஸ்வான் அனுமதித்துள்ளார்.

அத்துடன், பிரதிவாதிகள் வெளிநாடு செல்வதாக இருந்தால் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு தகவல் வழங்கிய பின்னர் செல்லலாம் எனவும் நீதவான் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸார் மற்றும் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு பிரதிவாதிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் இதன்போது உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரதிவாதிகள் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காத பட்சத்தில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் நீதிமன்றத்தால் கவனம் செலுத்தப்படுமெனவும் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனையடுத்து, வழக்கு விசாரணை அடுத்த மாதம் 3 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நால்வரையும் கைது செய்ய வேண்டுமென தெரிவித்து பொலிஸாராலோ நீதிமன்றத்தாலோ கட்டளை பிறப்பிக்கப்படவில்லை என கூறி பிரதிவாதிகளால் பிணை கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com