Sunday, September 9, 2018

புல்லுமழை. பசீர் சேகுதாவூத்

மட்டக்களப்பில் தண்ணீர் போராட்டம் பிரவகித்திருக்கும் இந்தக் காலத்தில் பலரும் பல விதமாக இது பற்றி எழுதியும், செயல்பட்டும் வருகிற போதினில் இந்த மண்ணில் வாழும் நான், கருத்துச் சொல்லாதிருப்பது எனது நெஞ்சாங்கூட்டை வாளால் அறுப்பது போல் உணர்வதால் எழுதுகிறேன்.

உலகின் எல்லாப் பாகங்களிலும் குடிநீர் தட்டுப்படத் தொடங்கிவிட்டது.நீர் சூழ் உலகில் 15% மட்டுமே நன்னீர் என்பதை அறிவோம். நன்னீரைப் புதுப்பிக்கும் ஒரே வழியாக மழை மட்டுமே காணப்படுகிறது.மழை நீர் பூமிக்கடியிலும், நீரேந்து நிலைகளிலும் சேமிக்கப்பட்டு மக்களால் பயன்படுத்தப்படுகிறது. பனி மலைகள் உருகுவதாலோ, மலை முகடுகளிலிருந்து ஊற்று வீழ்ச்சியாகவோ மட்டக்களப்பு மக்களுக்கு நீர் கிடைப்பதில்லை. நமது மாவட்டத்தில் மழை வீழ்ச்சி குறைவடையத் தொடங்கி நீண்ட காலமாயிற்று என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

உலகில் தண்ணீர் விலை கொடுத்து வாங்கும் பொருளாகி பல்லாண்டுகள் கடந்துவிட்டன.

பன்னாட்டு நிறுவனங்கள் மூன்றாம் உலக நாடுகளில் தாதுப் பொருட்களைக் கிண்டி எடுத்து பணமாக்கி வங்கிகளில் முதலீடு செய்தன. இப்போது தாதுப் பொருட்கள் முடிவடையும் நிலைக்கு வந்துவிட்டதனால், தண்ணீரைக் கிண்டி எடுத்துப் பணமாக்க கம்பனிகள் முயல்கின்றன.இவ்வாறான பல திட்டங்களில் இலங்கை அரசு பல ஒப்பந்தங்களைக் கைச்சாத்திட்டுள்ளது.இவ்வாறே உள்ளூராட்சி நிறுவனங்களும் இது விடயத்தில் சோரம் போயுள்ளன. இவ்வாறு மக்கள் நலனுக்கு எதிராக போத்தலில் நீரை அடைத்து விற்கும் கம்பனிக்கு அனுமதி அளித்ததனால் சோரம் போயுள்ள உள்ளாட்சி நிறுவனங்களில் ஏறாவூர் பற்று பிரதேச சபையும் இணைந்துகொண்டுள்ளது.

மூன்றாம் உலகப் போர் தண்ணீருக்காகவே இடம்பெறும் என கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால் மட்டக்களப்பில் தமிழ் முஸ்லிம் அரசியல் போர் தண்ணீருக்கானது எனக் காட்ட முற்படும் இரு தரப்பையும் சேர்ந்த பிற்போக்கு அரசியல்வாதிகளையும் மக்கள் இனங்காண வேண்டும்.

1) தண்ணீரைத் தனியார்மயப்படுத்த அனுமதிக்க முடியாது.

2) உலகவங்கி 1997 இல் தண்ணீர் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் பொலிவியா நாட்டுக்கு நிதியுதவி அளித்ததைப் போல இலங்கையில் செயல்பட அனுமதிக்க முடியாது.

3) தண்ணீர் விற்பனைப் பண்டமல்ல, அது மக்களுக்கான இயற்கையின் கொடையாகும்.

மேலே குறிக்கப்பட்ட மூன்று அடிப்படைகளிலும் இருந்து வழுவுதல் மனுக்குல விரோத செயல்பாட்டுக்கு உதவுதலாக அமையும்.

மேற்சொன்ன அனைத்து உண்மைகளுக்கும் அப்பால் புல்லுமலையில் நீரெடுத்து போத்தலில் அடைத்து விற்கும் கம்பனி ஒன்றின் முன்னைடுப்புகள் தொடர்பாக மக்கள் மத்தியில் எதிர் மற்றும் ஆதரவு நிலைப்பாடுகள் காணப்படுவதை அவதானிக்கிறேன்.

இயற்கையை நேசிப்பதாகவும், தமிழர் பூமியைக் காப்பதாகவும், தமிழ் உணர்வாளர்கள் போலவும் காட்டிக்கொண்டு மட்டக்களப்பில் பிரதேசத் தமிழரசியல் குழு ஒன்று, இந்த நீரைச் சுரண்டும் முயற்சியை முஸ்லிம் சமூகம் செய்வதாக தந்திரமாகப் பிரச்சாரம் செய்கிறது.

வழமையான முஸ்லிம் வணிக அரசியலாளர்கள் - புல்லுமலைப் போத்தல் நீர் விவகாரத்தை எதிர்ப்பதை முஸ்லிம் என்ற அடையாளத்துக்கு குந்தகம் விளைவிப்பதாகப் பிரச்சாரம் செய்து முஸ்லிம் மக்களை உணர்ச்சிக் கொம்பில் ஏற்றி இலாபம் சம்பாதிக்க முயல்கிறார்கள்.

நமது நாட்டில் சுதந்திரத்திற்குப் பிற்பட்ட கடந்த பல பத்தாண்டுகளாக மூன்று இனத்தவர்களாலும் தீவிர உணர்ச்சி அரசியல் செய்யப்பட்டு வருகிறது. அரசியலில் தானாக உணர்ச்சி வசப்படுதல் நன்மையை நோக்கியதாகவும்- வேறெவராலும் உணர்ச்சிவசப்படுத்துதல் தீமையை நோக்கியதாகவும் அமையும் என்ற அனுபவ ரீதியான எதார்த்தத்தை பெரும்பாலோர் திரிகரண சுத்தியுடன் இன்னும் உணரவில்லை.

இந்த நிலைமையில் புல்லுமலை நீரரசியல் எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் முஸ்லிம் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.புல்லுமலை தமிழ் சிங்கள எல்லைப் பிரதேசமாகும் இங்கே தமிழ் முஸ்லிம் முரண்பாடு ஆழமாவது அப்பகுதியில் அரசின் ஆதரவுடனான சிங்களக் குடியேற்றத்தை இலகுவாக்கும் என்பதை உணர்தல் வேண்டும்.

தமிழரசியல்வாதிகளே!

சமூகத்தளத்தில் வேலை செய்வது என்பதையும், ஆட்சித் தளத்தில் வேலை செய்வது என்பதையும் குழப்பிக்கொள்ள வேண்டாம். நீங்கள் இந்த நல்லாட்சியில் எதிர்க்கட்சியில் இருந்தவாறே ஆளுங்கட்சி உறுப்பினர்களாகச் செயல்படுகிறீர்கள் என்பதையும் மறக்கவேண்டாம்.ஆகவே, இந்த நீர் கொள்ளையை நிறுத்துமாறு ஜனாதிபதியையும், பிரதமரையும் கோருங்கள். ஏனெனில் இத்திட்டத்துக்கான அனுமதியை அரசாங்கமே வழங்கியுள்ளது. இந்தப் பிரச்சினை ஈழ தேச மக்களுக்கும் ஒரு கம்பனிக்கும் இடையிலான பிரச்சினையே அன்றி தமிழ்- முஸ்லிம் ஈழவர்களுக்கிடையிலான பிரச்சினை அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

முஸ்லிம் குழுநிலை அரசியல்வாதிகளே!

நீங்கள் ஜனாதிபதியையும், பிரதமரையும் ஆராதித்து செய்யும் ஆட்சித்தள அரசியலை ஒத்தி வைத்து சமூகத்தள அரசியலை செய்வீர்களானால் பிரகாசம் பிறக்கும். ஒரு பன்னாட்டு முஸ்லிம் கம்பனிக்கு உதவுவதைவிடவும் தமிழ் முஸ்லிம் உறவை மீளக் கட்டி எழுப்புவதற்கு உதவுவதும், இயற்கை வளங்களைக் காப்பாற்றுவதும் பல நூறு மடங்கு முக்கியமானது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

பிளாஸ்டிக் போத்தல்களில் அடைத்த தண்ணீரைக் குடிப்பது மிகப் பெரும் சுகாதாரக் கேடாகும்.இது எங்கும் சொல்லப்படவில்லை. பிளாஸ்டிக் பாவனையை இலங்கையில் தடை செய்துள்ள இந்த அரசாங்கம் எப்படி பிளாஸ்டிக் போத்தலில் தண்ணீர் அடைத்து விற்கும் கம்பனிக்கு அனுமதி வழங்கும் என்று அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பும் தைரியம் இந்த அரசியல்வாதிகளுக்கு ஏன் வரவில்லை?

மேலும், தியேட்டர் மோகனை இந்தப் போராட்டத்திற்கு முன்னிலைப்படுத்தியது மாபெரும் தவறாகும்.இவரது நடவடிக்கைகள் பலவற்றின் காரணமாக முஸ்லிம்கள் இவரைத் தங்களுக்கு எதிரானவர் என்று கருதுகிறார்கள். இவர் முன்னர் கிழக்கு மாகாணத்தின் ஆழும் தரப்பாக இருந்த சந்திரகாந்தனின் விடுதலைப் புலிகள் மக்கள் கட்சியின் (ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சி) முக்கிய பிரமுகராக இருந்தார். பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி மத்தியில் ஆட்சியிலமர்ந்த பின் அக்கட்சியின் அமைப்பாளராக உள்ளார்.தன்னை தனது சொந்தத் தேவைக்கேற்ப ஆழுங்கட்சியின் பிரமுகராக மாறிக்கொள்ளும் இவர், கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது ஏறாவூர் பற்றில் கட்சி தொடர்பான விடயங்களில் தீர்மானிக்கும் சக்தியாக இருந்தார். ஆழுங்கட்சிகளை அவாவி நிற்கும் மோகன் ஏன் இந்த வாய்ப்பை மக்கள் நலனுக்காகப் பாவிக்க முயலவில்லை? இவர் பிரதமரிடம் நீர்ப்பிரச்சினையை எடுத்துக் கூறி கம்பனியின் நடவடிக்கைகளைத் தடை செய்திருக்கலாமே! ஏன் அம்முயற்சியைச் செய்யவில்லை?

தமிழ் முஸ்லிம் சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து நீர்க் கொள்ளையின் பாதிப்புகளை இரு சமூகங்களுக்குள்ளும் எடுத்துச் சொல்லி ஹர்த்தாலை இரு சமூக மக்களும் ஒன்றித்துச் செய்திருந்தால் அது அரசுக்கான சரியான அழுத்தத்தைக் கொடுத்திருக்கும்.

எதிர் காலத்தில் இவ்வாறு ஒற்றுமையாகச் செயல்படுவதற்கு தமிழர்களுக்குள்ளும், முஸ்லிம்களுக்குள்ளும் மூன்றாவது அணிகளின் தோற்றமும் இவ்வணிகளின் கூட்டும் அவசியம் என்பதைப் புல்லுமலை நீர் பிரச்சினை நமக்கு உணர்துகிறது. இன்னும் பல தமிழ் முஸ்லிம் முரண்பாடுகளில் கிடைத்த பாடமும் இதுதான். ஆனால் நாம் இன்னும் அனுபவங்களில் இருந்து கிடைத்த பாடங்களைக் கணக்கில் எடுக்கத் தொடங்கவில்லையே!

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com