Friday, January 26, 2018

இலங்கை பாராளுமன்ற மோதல் முதலாளித்துவ வர்க்க ஆட்சி நாற்றமெடுப்பதன் வெளிப்பாடு. By Saman Gunadasa and K. Ratnayake

ஜனவரி 10 புதன் கிழமை, இலங்கை பாராளுமன்றத்தில் அரசாங்கத்தினதும் எதிர்க் கட்சியினதும் அமைச்சர்களும் உறுப்பினர்களும் அடிபட்டுக்கொண்டமை முதலாளித்துவ வர்க்க ஆட்சியின் உச்சகட்ட நெருக்கடியையும் நாற்றமெடுப்பையும் பொது மக்கள் கண்டுகொள்வதற்கு சந்தர்ப்பமாக அமைந்தது. இலங்கையில் “பாராளுமன்றத்தின் உயர்ந்த பண்பு” மற்றும் நாட்டின் ஆட்சியை நடத்துவதில் உள்ள “மகா சக்தி” பற்றியும் அரசியல் கட்சிகள், ஊடகங்கள் மற்றும் ஆய்வாளர்களும் விடுக்கும் வாய்ச்சவடால்களுக்கு அடியில் அபிவிருத்தியடைந்து வரும் உண்மையான நிலைமையை இது அம்பலத்துக்கு கொண்டுவந்துள்ளது.

2015 பெப்பிரவரி மாதம் மத்திய வங்கி பிணை முறி வெளியீடு ஒன்றின் மூலம் நடந்த பெரும் நிதி மோசடி சம்பந்தமாக விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக் குழுவின் அறிக்கையை கலந்துரையாடுவதற்காகவே பாராளுமன்றம் கூட்டப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் ஊழல் மற்றும் ஜனநாயக-விரோத ஆட்சியை தூக்கி வீசி, நல்லாட்சியை ஏற்படுத்துவதாகக் கூறி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டுவந்து ஒரு மாதத்துக்குள்ளேயே, அந்த பிரச்சாரத்தை முன்னெடுப்பதில் முன்னணியில் இருந்தவர்களே இந்த நிதி மோடிக்கு உடந்தையாக இருந்தமை ஆச்சரியத்திற்குரியதாகும். பேர்பச்சுவல் டெசரீஸ் கூட்டுத்தாபனம் செய்த இந்த மோசடிக்கு ஜனாதிபதி சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் இருக்கும் நபர்களும், மத்திய வங்கியின் முன்னாள் தலைவர் அர்ஜுன மஹேந்திரன் மற்றும் அதிகாரிகளும், குறைந்த அல்லது கூடிய பட்சம் நேரடியகாவோ அல்லது மறைமுகமாகவோ இதற்கு உடந்தையாக இருந்துள்ளனர்.

டிசம்பர் 30 அன்று தனக்கு கிடைத்த அறிக்கை பற்றி, ஜனவரி 3 அன்று ஜனாதிபதி சிறிசேன விடுத்த அறிக்கையின் படி, ஐந்து மாத குறுகிய காலத்துக்குள் பர்பச்சுவல் டெசரீஸ் நிறுவனம் சுரண்டிக்கொண்ட நிதி குறைந்த பட்சம் 11 பில்லியன் ரூபாய்களை விட அதிகமாக இருப்போதடு ஊழியர் ஓய்வூதிய நிதி உட்பட, அரச நிறுவனத்தால் பேணப்படும் ஓய்வூதீய நிதிக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள நட்டம் 8.5 பில்லியன்களை விட அதிகமாகும். இதற்கு முன்னர் இராஜபக்ஷ அரசாங்கம் ஆட்சியில் இருந்த 2008-2014 இடைப்பட்ட காலத்தில், மத்திய வங்கி ஊடாக மேற்கொள்ளப்பட்ட பிணை முறி வெளியீடுகளுடன் சம்பந்தப்பட்ட இந்த பில்லியன் கணக்கான “நிதி மோசடி” பற்றி சரியானமுறையில் தெரிந்துகொள்வதற்கு, “தடயவியல் விசாரணை ஒன்றை” நடத்த வேண்டும் என ஆணைக் குழு சிபாரிசு செய்துள்ளது. மேலும், முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, அப்போதைய மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன மகேந்திரன், அவரது மருமகனான பேர்பரசுவல் டெசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் மேலும் பலபேருக்கு எதிராக, இந்த மோசடியுடன் சம்பந்தப்பட்டு இடம்பெற்றுள்ள கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக, சட்ட ரீதியாக தண்டனை கொடுக்க வேண்டும் எனவும் ஆணைக்குழு பிரேரித்துள்ளது.

கொள்ளையடிப்பின் விஸ்தீரணம் மற்றும் உண்மையான திருடர்கள் சம்பந்தமான சமிக்ஞைகள் மட்டுமே அம்பலத்துக்கு வந்துள்ளன. அலோசியஸின் நிறுவனம் சுரண்டிக்கொண்டதாக அம்பலத்துக்கு வந்துள்ள பிரமாண்டமான நிதித் தொகை மட்டுமே கூட முழுமையான வைத்தியசாலை ஒன்றை அல்லது பல பாடசாலைகளை கட்டியெழுப்புவதற்கு போதுமானதாகும். அதற்கு முன்னர், இராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பெரும் நிதி மோசடி சம்பந்தமாகவும் செய்தி வந்தது. மத்திய வங்கி பிணை முறி ஊடாக இடம்பெற்ற மோசடிகளுக்கு மேலாக, மேலும் எத்தனையோ சுரண்டல்கள் பற்றி தமக்கிடையேயான மோதல்களுக்கு மத்தியில் ஆளும் வர்க்கத்தின் கும்பல்கள் ஒன்றுக்கு ஒன்று குற்றம் சாட்டிக்கொள்கின்றன.

பட்டப்பகல் திருட்டு அம்பலத்துக்கு வருகின்ற நிலைமையில், அரசாங்கத்தின் மற்றும் எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றம் கூடியபோது, ஒருவருக்கு ஒருவர் “திருடன் திருடன்” என அசிங்கமான வார்த்தைகளில் திட்டிக்கொண்டு தமது அம்மணத்தை மூடிக்கொள்வதற்கான சண்டையை வேண்டுமென்றே ஏற்படுத்திக்கொண்டனர். அவர்கள் தம்மை நேர்மையானவர்களாக காட்டிக்கொள்ளும் நோக்கத்திலேயே இவ்வாறு குற்றம் சாட்டிக்கொண்டனர். கொள்ளையடிப்புகளை நசுக்குவதாக கூட்டங்களில் சபதம் செய்யும் சிறிசேன, கடந்த மூன்று ஆண்டுகள் பூராவும் திருட்டுக்கள் நடக்கும்போது தான் அரசாங்கத்தின் தலைவராக இருந்தது எப்படி என்பது பற்றி எதுவும் கூறுவதில்லை.

அரசாங்கத்தின் தலைவர்கள் மற்றும் எதிர்க் கட்சி குழுக்கள், தத்தமது நேர்மையைப் பற்றி இந்தளவு பொய் கூறுவது, அன்றாட வாழ்க்கையை கொண்டு நடத்தமுடியாது போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்கள் ஏழைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் இந்த மோசடி சம்பந்தமாக கிளர்ந்தெழும் சீற்றத்தை திசை திருப்பிவிடுவதற்கும் அதில் இருந்து தப்புவதற்குமே ஆகும். வாழ்க்கை மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்தும் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து அதிகாரத்திற்கு வந்துள்ள ஆட்சியாளர்கள், யதார்த்தத்தில் மக்களின் வாழ்க்கை நிலைமைகளை நசுக்கித் தள்ளி முன்னெடுக்கும் தாக்குதல்களுக்கு எதிராக வளர்ச்சி காணும் போராட்டம், அரசாங்கத்தின் ஊழல் அம்பலத்துக்கு வந்துள்ள நிலையில், மேலும் மேலும் உக்கிரமடையும் என ஆளும் வர்க்கம் பீதி அடைந்துள்ளது.

இந்த அம்பலப்படுத்தல்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் பற்றி, சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு அணிதிரண்ட போலி-இடதுகள், கல்வியாளர்கள் மற்றும் சிவில் அமைப்புகள் எனச் சொல்லப்படுபவை அச்சம் அடைந்துள்ளன.

முதலாளித்துவ ஆட்சியை பாதுகாக்க போலி கட்டுக் கதைகளை பின்னும் ராவய பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் விக்டர் ஐவன், ஜனவரி 14 ஞாயிறு வெயீட்டுக்கு, பிணை முறி மோசடி நடந்தது ஏன்? என்பது பற்றி, கண்களுக்கு மண் தூவும் “விவரணம்” ஒன்றை வழங்கியுள்ளார். பிணை முறி மோசடியில் மத்திய வங்கியும் நாட்டின் அரசியல் கட்சிகளும் அழுகிப் போயுள்ள அளவு புரிந்துகொள்ள முடியும் என கூறும் ஐவன், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் இத்தகைய பிழைகளை செய்வதற்கு தூண்டப்பட்ட “என்னுடைய நம்பிக்கைக்கும் காரணமான அர்த்தப்படுத்தல் இதுவே” என விவரித்துள்ளதாவது: “கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு பெரும் செலவுகளைச் செய்யவேண்டி ஏற்பட்டதால், ஐக்கிய தேசியக் கட்சிக்கு அதில் ஏற்பட்ட பெரும் கடன் சுமையை தீர்த்துக்கொள்வதற்காக, ’மத்திய வங்கிக்கு சாதகமான ஆளுனரை நியமித்து, கட்சிக்கு இருந்த நிதி நெருக்கடியை மத்திய வங்கி மூலமாக தீர்த்துக்கொள்வது சிறந்த வழி என நினைத்திருக்கலாம்’. இராஜபக்ஷ காலத்திலும் அப்படி நடந்திருப்பதால், இரகசியமாக அப்படிச் செய்ய முடியும் என ஐ.தே.க. தலைவர்கள் நினைத்திருந்தாலும், ’திட்டம் பிசகிவிட்டது’”.

தெற்காசியாவின் அரசியல் பண்டிதராக ஊடகங்களில் கூறப்படும் பேராசிரியர் ஜயதேவ உயன்கொட, “அரசியல் உடலில் பற்றிக்கொண்டுள்ள பெருமளவிலான இலஞ்சம் மற்றும் ஊழல் ஆகிய புற்று நோயை அகற்றுவதற்கு எந்தவொரு அரசாங்கமும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?” என கேள்வி எழுப்புகின்றார்.

இந்த முரண்பாட்டை தீர்த்துக்கொள்வதானது “சரத் விஜேசூரிய தலைமைத்துவம் வகிக்கும் பிரஜைகள் இயக்கமும், ஐவன் ஐயா தலைமைவகிக்கும் புனருத்தாரண இயக்கமும், அனுர குமார திசாநாயக்க ஐயா தலைமை வகிக்கும் ஜே.வி.பி.யும் ஆழமாக கலந்துரையாட வேண்டிய விடயமாகும்” என உயன்கொட பிரேரித்துள்ளார். எனினும், மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், ஊழல் எதிர்ப்பு என அரசாங்கத்தை அரவணைத்துக்கொண்ட உயன்கொட உட்பட இந்த கும்பல், அதன் செயற்பாடுகளுக்கு அரசியல் ரீதியில் பொறுப்புச் சொல்ல வேண்டும்.

இன்னொரு ஆய்வாளராக ஊடகங்களுக்கு கட்டுரைகள் எழுதும் குசல் பெரேர என்பவர், டெயிலி மிரர் பத்திரிகைக்கு பின்வருமாறு விவரித்துள்ளார்: “நாம் வாழ நேர்ந்துள்ள மேலும் மேலும் ஆழமடைந்து வரும் நெருக்கடிகளுக்கு, தேசிய ரீதியில் [ஏற்படுத்திக்கொள்ளப்பட வேண்டிய] தீர்வுகள் சம்பந்தமாக, ஆழமான கலந்துரையாடல்கள் இல்லை,.” சில சட்டங்களை திருத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பதே கடும் தீர்வு என ஜே.வி.பி. உட்பட ஊழல்-எதிர்ப்பு குழுக்கள் கோருகின்றன. எனினும், பாராளுமன்றமே சட்டத்துக்கு முரண்பாடானது என்றும் தற்போதைய அரசியல்வாதிகள் சம்பந்தமாக நம்பிக்கை இல்லை என்பதையும் கூறும் குசல் பெரேராவின் பிரேரணை பின்வருமாறு உள்ளது: “நாம் துணியை நன்கு துவைத்து காயவிடும் எதிர்பார்ப்புடன் அடிக்கடி லோன்றிகளுக்கு செல்லாமல், பாராளுமன்றத்தை அன்றாடம் துப்புரவுபடுத்தி வைக்கின்ற புதிய மற்றும் மாற்றீட்டு நடவடிக்கை ஒன்றை வழங்குவது அவசியமாகின்றது”. அவர், “இந்த சமூகம் சிதறுண்டு போவதற்கு முன்னர், சிறந்த நடவடிக்கையைக் கொண்ட புதிய அபிவிருத்தி மாதிரி ஒன்றைப் பற்றி உடனடியாக கலந்துரையாடல்களை ஆரம்பிக்க வேண்டும்” என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவரே தோள் கொடுத்த “நல்லாட்சி மாதிரி” அம்பலத்துக்கு வந்துள்ள நிலையில், இந்த ஊழல்கள் உச்சத்திற்கு செல்வதைத் தடுப்பதற்காக, புதிய அபிவிருத்தி மாதிரி பற்றிய கலந்துரையாடல்கள் மூலம் முட்டுச் சந்து ஒன்றை உருவாக்கி விடுவதற்கு பெரேரா பிரேரிக்கின்றார். தாம் காலூன்றிக்கொண்டுள்ள முதலாளித்துவ அமைப்புமுறை சிதறிப்போகக்கூடிய நெருக்கடி உருவாகியிருப்பதால், தலையில் இருந்து பாதம் வரை தமது நாற்றமெடுப்பை பல்வேறு வழியில் காட்சிப்படுத்துகின்ற ஆளும் வர்க்கத்தின் பகுதியினரதும் அவர்களுக்கு கூலி வேலை செய்பவர்களதும் தொடைகள் நடுங்கத் தொடங்கியிருக்கின்றது. ஊழல்களுக்கு எதிராக கண்டனம் செய்யும் இவர்களின் கட்டுரைகளில், ஊழல் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறை க்கும் இடையிலான உறவு பற்றி, ஒரு சொல் கூட இல்லாமல் இருப்பது தற்செயலானது அல்ல. முதலாளித்துவ அமைப்புமுறைக்கு வெளியில் ஒரு உலகம் அவர்களுக்கு கிடையாது.

ஆளும் வர்க்கத்தின் கட்சிகள் மற்றும் குழுக்களின் ஊழல் குணாம்சத்தை வெட்டி அகற்றி, முதலாளித்துவ அமைப்புமுறையை துப்புரவு செய்து பாதுகாக்க முடியாது. முதலாளித்துவத்தின் உச்சத்தில் இருக்கும் ஊழல் மற்றும் சூறையாடல்கள், முன்னேறிய நாடுகள் முதல் பின்தங்கிய நாடுகள் வரையும் ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்புமுறையின் சீரழிவினால் தோன்றியுள்ளது. முதலாளித்துவ வர்க்க ஆட்சியை முன்னெடுக்கும் நிறுவனங்கள் அனைத்தும் சீரழிந்து, ஜனநாயக-விரோத அமைப்புகளாக மாறியுள்ளன. தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளால் அவற்றை தமது உரிமைகளை பாதுகாக்கும் நிறுவனங்களாக பயன்படுத்த முடியாது.

நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்தே நிதி மூலதனம் மேலாதிக்கம் செய்யும் முதலாளித்துவத்தின் ஏகாதிபத்திய யுகத்தின் ஒட்டுண்ணி பண்பு பற்றி ஆராய்ந்த லெனின், நிதி பிரபுத்துவ தட்டின் எழுச்சியை ஆராய்ந்தார். நிதி மூலதனத்தின் எழுச்சியுடன் சம்பந்தப்பட்ட “பிரமாண்டமான ஊழல், இலஞ்சம் மற்றும் எல்லா வகையிலுமான மோசடிகள்” அதன் குணாம்சங்களாகும். “இந்த அமைப்புமுறைக்குள் ஜனநாயக, குடியரசு மற்றும் பிற்போக்கு மன்னர் ஆட்சிகள் மற்றும் ஏகாதிபத்தியத்துக்கும் இடையிலான வேறுபாட்டை மூடி மறைத்து, அவர்கள் இரு தரப்பினருமே அழுகிக்கொண்டு வாழ்கின்றனர்,” என லெனின் குறிப்பிட்டார்.

அக்காலத்தில் இருந்து நூறு ஆண்டுகளுக்குப் பின்னர், உலக முதலாளித்துவ அமைப்புமுறையை இந்த ஊழல் பற்றிப் படர்ந்துள்ளது. இந்த நிலைமையில், உற்பத்தி பொருளாதாரத்தில் இருந்து மேலும் மேலும் தூர விலகி, நிதி ஊகம் மற்றும் சூறையாடலில் பணம் சம்பாதிப்பதை எல்லா நாடுகளிலும் காணக் கூடியதாகிருப்பது தற்செயலானது அல்ல. அதற்கு சமாந்தரமாக உலக அளவில் ஒரு மூலையில் நிதி குவிவதும், மறு மூலையில் வறுமை குவிவதும் இடம்பெறுகின்றது.

தொழிலாளர்கள், ஏழைகள் மற்றும் இளைஞர்களும், முதலாளித்துவ அமைப்புமுறையை துப்புரவு செய்து பேணிக் காப்பது பற்றிய அதன் கள்வர்களின் வஞ்சத்தனமான திட்டத்தை முழுமையாக நிராகரிக்க வேண்டும். தற்போதைய சமூக நோய்கள் அனைத்திற்கும் அழுகிப்போன முதலாளித்துவமே தோற்றுவாயாகும். தற்போதைய அமைப்புமுறையை மாற்றியமைப்பதன் மூலமே அதை இல்லாமல் ஆக்க முடியும். பிரதான முதலாளித்துவ தொழிற்துறைகள், வர்த்தகங்கள் பெருந்தோட்டங்கள் மற்றும் வங்கிகளையும் தொழிலாளர் ஆட்சியின் கீழ் சோசலிச முறையில் மறு ஒழுங்கு செய்ய வேண்டும் என்பதே இதன் அர்த்தமாகும். இது சர்வதேச சோசலிசத்துக்காக முன்னெடுக்க வேண்டிய போராட்டத்தின் பாகமாகும்.

பெப்பிரவரி மாதம் நடத்தப்பட உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில், ஊழலை அகற்றும் விடயத்தையே சகல கட்சிகளும் மோசடித்தனமாக முன்வைக்கின்றன. சோசலிச சமத்துவக் கட்சி, இந்த சகல கட்சிகளுக்கும் முற்றிலும் மாறான சோசலிச வேலைத் திட்டத்தை முன்வைத்து தொழிலாளர்களின் மற்றும் விவசாயிகளின் அரசாங்கம் ஒன்றை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு அவசியமான புரட்சிகர தலைமைத்துவத்தை கட்டியெழுப்புவதற்காக தேர்தலில் போட்டியிடுகின்றது. அது வட இலங்கையில் யாழ்ப்பாணத்தின் ஊர்காவற்துறை, மத்திய பெருந்தோட்ட பிரதேசமான அம்பகமுவ, கொழும்பு கொலன்னாவை ஆகிய ஊள்ளூராட்சி மன்றங்களுக்கு போட்டியிடுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com