Friday, January 26, 2018

உண்மையும், யதார்த்தமும் மறைக்கப்படும் சாக்கடை அரசியல்! ‘அண்டம் காக்கைக்கும், குயில்களுக்கும் பேதம் புரியலே’ வி. சிவலிங்கம்.

தமிழ் அரசியல் தற்போது எடுத்துச் செல்லப்படும் போக்கு மிகவும் கவலை அளிக்கிறது. பொய்களும், புனைவுகளும். ஆர்ப்பரிப்பும் உண்மைகள் மக்களைச் சென்றடையவிடாது தடுக்கின்றன. சுயநலமிகளினதும், சந்தர்ப்பவாதிகளினதும் கைகளில் ஊடகங்கள் இருப்பதால் உண்மைகள் சென்றடையாமல் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். நல்ல அரசியல் சக்திகளை மக்களால் அடையாளம் காணப்பட முடியவில்லை. அரசியல் யதார்த்தங்களை மக்கள் தத்தமது மனங்களில் விவாதித்து முடிவுகளை நோக்கிச் செல்வதற்குப் பதிலாக ஏற்கெனவே உற்பத்தி செய்யப்பட்ட முடிவுகள் உணர்ச்சிகளுடன் கலந்து ஊட்டப்படுகின்றன. இதனால் ஏற்கெனவே துன்பச் சுமைகளுக்குள் உழலும் மக்களால் உண்மை நிலமைகளை உணர்ந்து கொள்ள வாய்ப்புகள் இல்லை. அதிகார மமதையும்,ஆதிக்கச் செருக்கும் போரிற்குப் பின்னதான எச்ச சொச்சங்களாக வலம் வருகின்றன.

தற்போதைய ஊள்ளுராட்சித் தேர்தல்கள் ஏற்கெனவே போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் சமூகத்தின் வாழ்வியலில் மாற்றங்களை ஏற்படுத்த உதவலாம் என்ற நம்பிக்கை சிதைந்துள்ளது. எந்தவிதமான அரசியல் மற்றும் சமூகக் கட்டுமானங்களற்று ஊழல்களின் இருப்பிடங்களாக மாறிவிட்ட அரசியல் கட்சிகளும், சுயாதீனக் குழுக்களும் துன்பத்தில் சிக்கியுள்ள மக்களை மேலும் அதற்குள் தள்ளும் அரசியலையே நடத்துகின்றன.
இவற்றிற்கெதிரான சக்திகள் காணப்படினும் அவற்றிற்குள்ளும் இணைப்புகள் இல்லாதது வேதனைக்குரியது. இதற்குப் பிரதான காரணம் அங்கு தொடர்ந்தும் வன்முறை சக்திகளின் ஆதிக்கம் நிலவுவதுதான். மக்கள் இன்னமும் கடந்த கால இருண்ட வாழ்விலிருந்து மீளவில்லை. ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அம் மக்களைச் சென்றடையவில்லை. மாற்று அரசியல் சிந்தனைகள் மக்கள் எண்ணங்களை எட்டவில்லை.

இலங்கை அரசியலில் முதன் முறையாக பெண்களுக்கு வழங்கியுள்ள பொது வாழ்விற்கான அங்கீகாரம் முளையிலேயே கிள்ளி எறியப்படும் ஆபத்துக்கள் ஆங்காங்கே எழுந்துள்ளன. இவை தமிழ்ப் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தும் கூட்டமைப்பனால் எடுத்துச் செல்லப்படுவது மேலும்வெறுப்பை ஏற்படுத்துகிறது. தாம் ஜனநாயகவாதிகள் எனவும், அகிம்சாவாதிகள் எனவும் கூறிக்கொண்டு வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவதை அவதானிக்கும் போது இவை அரசியல் அஸ்தமன அந்திம காலத்தின் இயலாமையின் வெளிப்பாடே என எண்ணத் தோன்றுகிறது.

தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அக் கட்சியால் நியமிக்கப்பட்ட பெண் வேட்பாளரை கண்களும், கைகளும் கட்டப்பட்ட நிலையில் வீட்டிற்குள் பூட்டி வைத்திருந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. கட்சித் தலைமைப் பீடம் எந்த நடவடிக்கையையும் அந்த உறுப்பினர் மீது மேற்கொள்ளவில்லை. அப் பாராளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்பிற்காகச் சென்ற பொலீசாரும் அக் கொடுமையைக் கண்டும் செயலற்று இருந்தனர். இக் குற்றச் செயலைத் தடுக்க பொலீசார் ஏன் முன்வரவில்லை? என அந்த உறுப்பினரை வினவியபோது அப் பொலீசார் தனது பாதுகாப்பிற்காக வந்தவர்கள் எனப் பதிலளித்துள்ளார். அப் பெண் அபேட்சகரைத் தாக்கியது மட்டுமல்ல பொலீசாரை ஈடுபடுத்தவும் அவர் தவறியுள்ளார். தமிழரசுக் கட்சியின் உயர் மட்டத்தின் வன்முறை அருவருக்கத் தக்கது. இதனைக் கண்டித்துப் பேச வக்கற்ற நிலையில்  கூட்டமைப்பின் இதர கட்சிகள் மௌனமாக உள்ளன. இப் பெண் அபேட்சகர் மலையகத்தைப் பின்னணியாகக் கொண்டவர். இத் தாக்குதலுக்கு அவரது பின்னணியும் வாய்ப்பாக அமைந்ததாக கூறப்படுகிறது. தமிழர் ஒற்றுமை குறித்துப் பீத்தும் தமிழ் அரசியல் தலைமைகளின் உண்மைத் தோற்றம் இதுவே.

முஸ்லீம் மக்கள் தனித்துவமானவர்கள், அம் மக்களின் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனக் கொக்கரிக்கும் முஸ்லீம் தலைமைகள் இத் தேர்தலில் நடந்து கொள்ளும் முறை அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக உள்ளது. இத் தேர்தலில் போட்டியிடும் பெண்கள் மிகவும் இழிந்த விதத்தில் பகிரங்கமாக முகப்புத்தகங்களில் அவமானப்படுத்தப்படுகிறார்கள். தேர்தலில் போட்டியிடும் முஸ்லீம் பெண்மணி ஒருவரின் காரியாலயம் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் அதிகளவு முஸ்லீம் பெண்கள் பொதுவாழ்விற்குள் வருவது இதுவே முதற் தடவையாகும். அதுமட்டுமல்ல மிகவும் உறுதியுடன் இத் தேர்தலில் அப் பெண்கள் இணைந்திருப்பது பெருமை அளிக்கிறது.

நாற்றமெடுக்கும் தமிழ் அரசியல்

கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த தமிழரசுக் கட்சி தனது அரசியல் வலுவை இழந்திருப்பதை அதன் அரசியலும், நடைமுறையும் நன்கே தெளிவுபடுத்துகிறது. தேர்தல் காலங்களில் தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிடுவது என்பது பயனற்ற பொது நடைமுறையாகிவிட்டது. தமிழரசுக் கட்சி கடந்த காலங்களில் வெளியிட்ட எந்தத் தேர்தல் விஞ்ஞாபனமும் நடைமுறை சார்ந்ததாக இருந்ததில்லை. இவை மக்களை ஏமாற்றும் தந்திரங்களாகவே இருந்தன.

ஆனால் இம்முறை அவர்கள் ஏற்படுத்திய பொறிக்குள் அவர்களே வீழ்ந்துள்ளதை நாம் காண முடிகிறது. உள்ளுராட்சித் தேர்தல்கள் என்பது உள்ளுர் அபிவிருத்திகளை மையப்படுத்தியது என ஆரம்பத்தில் தெரிவித்த தமிழரசுக் கட்சியினர் தற்போது இத் தேர்தலை புதிய அரசியல் யாப்பில் ஈடுபடுவதற்கான அங்கீகாரமாக மாற்ற முனைந்துள்ளனர்.

தற்போது வெளிவந்துள்ள அரசியல் அமைப்பின் இடைக்கால அறிக்கை என்பது நிரந்தர அரசியல் அமைப்பாக கருதப்பட்டு விவாதம் முன்னெடுக்கப்படுகிறது. சிறீலங்கா சுதந்திரக் கட்சி, ஐ தே கட்சி என்பன இணைந்த தேசிய அரசு தேசிய இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு முன் வந்தமையால் தாம் இந்த அரசை ஆதரிப்பதாக கூட்டமைப்பினர் கூறினர். பதவிகளைப் பெற்றனர். அரச ஆடம்பரங்களை அனுபவித்தனர். தற்போதைய தேர்தல் விவாதங்களைப் பார்க்கும் போது தேசிய அரசு நிலைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் புதிய அரசியல் அமைப்பு வருமா? என்பது நிச்சயமற்றதாக உள்ளது.

இந் நிலையில் தேர்தல் கூட்டங்களில் கூட்டமைப்பிற்கு எதிராக எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாத நிலையில் உள்ளனர். இதனால் தமிழரசுக் கட்சியினரும், எதிர் தரப்பினரும் தமிழ் மக்களைப் பயமுறுத்தும் அரசிலிற்குள் தள்ளி வருகின்றனர். குறிப்பாக தமிழர் கூட்டமைப்பிற்கு எதிராக இதர கட்சிகள் அணி திரண்டுள்ளன. ஒரு புறத்தில் தமிழரசுக் கட்சியின் தலைமையிலும், மறு புறத்தில் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையிலும் அணிவகுத்து நிற்கின்றனர்.

இந்த இரு தரப்பினரும் எடுத்துள்ள அரசியல் விவாதங்கள் மக்களை ஏமாற்றுவதாகவும், தவறாக வழி நடத்துபவையாகவும், மக்களின் வாழ்வாதாரங்கள் குறித்த எந்தவித திட்டங்கள் அற்றதாகவும், மக்களைக் குழப்பத்தில் தள்ளுவனவாகவும் உள்ளன. இவற்றில் சிலவற்றை வாசகர்களின் கவனத்தில் தருவதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

இறைமை குறித்த விவாதங்கள்

கஜேந்திரகுமார் தலைமையிலான அணியினர் புதிய அரசியல் யாப்பின் இடைக்கால அறிக்கையை நிரந்தர யாப்பாக முன்வைத்தே விவாதங்களை நகர்த்துகின்றனர். இடைக்கால அறிக்கை என்பது மக்களின் விவாதத்திற்காக, கருத்தக்களை அறியும் பொருட்டு முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கையாகும். இவ் விவாதங்களின் பின்னர் முன் வைக்கப்படும் திருத்தங்களை வழிகாட்டுக் குழு பின்னர் விவாதித்து முடிவு செய்யும். எனவே இவ் இடைக்கால அறிக்கையை முடிவுப் பொருளாக முன்வைத்து அரசியலை எடுத்துச் செல்வது மக்களை ஏமாற்றுவதாகும்.

இருப்பினும் விவாதங்களை ஆராய்ந்து பார்ப்போம். இத் தேர்தலை புதிய யாப்பிற்கு எதிரான வாக்கெடுப்பாக மாற்றும் முயற்சியில் கஜேந்திரகுமார், சுரேஷ் ஆகிய தரப்பினர் இணைந்து செயற்படுகின்றனர். இவர்கள் புதிய இடைக்கால வரைபின் ஆரம்ப பக்கங்கள் ஒரு சிலவற்றுடன் தமது விவாதங்களை முடிக்கின்றனர். ஏனெனில் ஆரம்பமே பிழை என்பதால் அதற்கு மேல் விவாதிப்பதில் அர்த்தமில்லை என்கின்றனர். ஆனால் ஏனைய பிரிவுகளுக்குச் செல்லும்போது அவர்களின் விவாதம் வலுவற்றதாக மாறும் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். இங்கு எமது அவதானத்திற்குரியது எதுவெனில் புதிய யாப்பு தேசியப் பிரச்சனைகளைத் தீர்க்க உதவுகிறதா? என்பதை விட அதன் அடிப்படைத் தார்மீக விவாதம் திரிபுபடுத்தப்படுவதையே முதலில் அவதானிக்க வேண்டியுள்ளது. இங்கு பிரிவினைவாத அரசியல் வேறு கோணத்தில் அதாவது தமிழ் இறைமை என முன் வைக்கப்படுகிறது.

முதலில் நாட்டின் கட்டுமானம் எவ்வாறானது? என்பதற்கான வியாக்கியானங்களே அவர்களது கவனத்தில் உள்ளது. உதாரணமாக இலங்கை அரச கட்டுமானம் என்பது ‘ஏக்கய ராஜ்ய அல்லது ஒருமித்த நாடு’ என்பதற்கான விளக்கம் குறித்த விவாதங்களாகும்.

முதலில் இடைக்கால வரைபில் உள்ள விளக்கத்தினை அவதானித்தால் அதில் இலங்கை என்பது இறைமையும், சுயாதீனமும் உள்ள நாடு அதாவது ‘ஏக்கய ராஜ்ய’ அல்லது ‘ஒருமித்த நாடு’ என்பதுடன் அது மத்தியிலும், மாகாணத்திலும் அரசியல் அமைப்பின் பிரகாரம் அதிகாரத்தைப் பிரயோகிக்கும் கட்டுமானங்களைக் கொண்டுள்ளது எனக் குறிப்பிடுகிறது.

இதன் அர்த்தம் என்னவெனில் இலங்கையின் ஆதிபத்தியம் மத்தியிலும், மாகாணத்திலும் உள்ள நிறுவனங்களால் பரிபாலிக்கப்படுகிறது என்பதாகும். இதுசமஷ்டியா? அல்லவா? அதிகாரம் மையத்தில் குவிக்கப்பட்டுள்ளதை உணர்த்துகிறதா? அல்லது மாகாணங்களுக்கும் பகிரப்பட்டுள்ளதை உணர்த்துகிறதா? என்பதை வாசகரிடம் விடுகிறேன். இதன் பிரகாரம் பார்க்கையில் தற்போது நடைமுறையில் உள்ள அரசியல் யாப்பு (1978) ஒற்றை ஆட்சி எனக் குறிப்பிடப்படுவது அதிகாரங்கள் குவிக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சிமுறை என்பதால் அவ் விளக்கம் நாட்டின் ஒட்டுமொத்த கட்டுமானத்தின் தோற்றத்தினை அதாவது ஏனைய சமூகங்களும் இத் தேசத்திற்குள் உள்ளனர் என்பதை அது புலப்படுத்தவில்லை. பதிலாக அரசின் தன்மையை விபரிக்கிறது என்பதை சிங்கள மக்களும் ஏற்றுள்ளதால் அதனை மேலும் விரிபுபடுத்தும் வகையில் மேலும் விளக்கத்தை இணைத்துள்ளனர். எனவே ‘ஏக்கய ராஜ்ய’ என்பது பிரிக்கப்படாத, பிரிக்க முடியாததாகவும், அரசியல் அமைப்பை மாற்றும் அதிகாரம் அரசியல் அமைப்பில் வழங்கியுள்ளவாறு பாராளுமன்றத்திற்கும், மக்களுக்கும் உரியது எனக் குறிப்பிடுகிறது. இங்கு எந்த இடத்திலும் சிங்கள மக்கள் என்ற வார்த்தை இடம்பெறவில்லை. மக்கள் என்றே குறிப்பிடப்படுகிறது. இது எவ் விதத்தில் சிங்கள மக்களை மட்டும் குறிக்கிறது?

இந் நிலையில் கஜேந்திரகுமார் தரப்பினர் ஒற்றை ஆட்சி என்ற ஒற்றை விவாதத்திற்குள் சென்று அதன் விரிந்த விளக்கத்தை மறைக்க முயற்சிக்கின்றனர். சமஷ்டியை ஏற்காத அவர்கள் சமஷ்டியைக் காணவில்லையே! என வினவுகின்றனர். இங்கு மாற்றம் சமஷ்டியை நோக்கியதா? இல்லையா? என்பது தனியான விவாதத்திற்கு உரியது. ஆனால் புதிய விளக்கம் இதர தேசிய இனங்களின் இருப்பை அங்கீகரிப்பதாகவே உள்ளது.
இனி நாட்டின் இறைமை அதிகாரம் குறித்த விளக்கங்களைப் பார்ப்போம். புதிய வழிகாட்டுக் குழு அறிக்கையில் ‘நாட்டின் இறைமை மக்களுக்குரியது. பாராதீனப்படுத்த முடியாதது.’ எனவும், அவ் இறைமை அதிகாரம் அம் மக்களிடமே தொடர்ந்து இருக்கும் எனவும்,அவர்களிடமிருந்து பிரிக்க முடியாதது எனவும் கூறுகிறது.

நாட்டின் இறைமை குறித்து வெளிப்படுத்தப்பட்டுள்ள இப் பிரிவை இவர்கள் வியாக்கியானப்படுத்தும் முறை நாட்டின் சட்டத்துறை சார்ந்தவர்களை அவமானப்படுத்துவதாகவே உள்ளது. உதாரணமாக நாட்டின் இறைமை மக்களுக்குரியதாக இருப்பதோடு, பாராதீனப்படுத்த முடியாததாகவும் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கும் பகுதி நாட்டின் ஒவ்வொரு பிரஜையினதும் பிரிக்க முடியாத இறைமை அதிகாரத்தைக் குறிக்கிறது. இந்த இறைமை அதிகாரம் என்பது மனிதன் என்பதை மையமாகக் கொண்டு வியாக்கியானப்படுத்தப்படுகிறதே ஒழிய தமிழ், சிங்களம், முஸ்லீம் என அடையாள அரசியல் வழியில் வியாக்கியானப்;படுத்தப்படவில்லை.
ஆனால் இவர்கள் மக்கள் என்பதை மறைத்து அதனுள் தமிழ் மக்கள் என்பதை இணைத்து தமிழ் மக்களின் இறைமை என வியாக்கியானம் செய்கின்றனர். இறைமை அதிகாரம் என்பது மக்களிடமிருந்து பிரிக்க முடியாதது என்பது அரசு என்பது மக்களின் தேவைக்காக மக்களுக்காக, மக்களால் உருவாக்கப்பட்டது. மக்களே தமது உரிமை அதிகாரத்தை சகல மக்களும் பாராளுமன்றம் சென்று பிரச்னைகளைத் பேசித் தீர்க்க முடியாது என்பதால் பிரதிநிதித்துவ ஜனநாயக முறையைத் தேர்ந்தெடுத்தார்கள். தமது இறைமை அதிகாரத்தை தமது வாக்குச் சீட்டின் மூலமாக தமது பிரதிநிதியைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம் தற்காலிகமாகஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் தமது இறைமையை ஒப்படைத்தார்கள். எனவே இறைமை அதிகாரம் என்பது மக்களிடமே தொடர்ந்து இருக்கும், தாம் தேர்ந்தெடுத்த பிரதிநிதி கொடுத்த வாக்குறுதியை மீறும் பட்சத்தில் மீள அழைக்கும் அதிகாரமும் அந்த மக்களுக்கு உரியது. எனவேதான் இறைமை அதிகாரம் மக்களிடம் தொடர்ந்து இருக்கும் என யாப்புக் கூறுகிறது. இந்த இறைமை அதிகாரம் தனி நபர் இறைமையைக் குறிப்பிடுகிறதே தவிர ஒருபோதும் கூட்டு இறைமையைக் கூறவில்லை. மனித உரிமை என்ற கோட்பாடு இந்த தனி மனித இறைமை அதிகாரத்திலிருந்துதான் எழுகிறது. தமிழ் இறைமை எனக் கூறி மனிதனின் இறைமையைக் கொச்சைப்படுத்தும் அரசியலாகவும், மக்களை அறிவிலிகளாகக் கருதும் போக்காகவும்இது உள்ளது.

பிரிவினை அரசியல்


இவர்களால் முன்வைக்கப்படும் விவாதங்கள் மறைமுகமாக பிரிவினை அரசியலை மீண்டும் முன்வைக்கும் தந்திரங்களாக உள்ளன. உதாரணமாக இலங்கை என்பது இரண்டு பிரதான தேசங்களை உள்ளடக்கியதெனவும், அது சிங்கள தேசம், தமிழ்த் தேசம் என்பதாக அமையுமெனவும், சிங்கள தேசத்திற்கு இறைமை அதிகாரம் உள்ளது போலவே, தமிழ்த் தேசத்திற்கும் இறைமை உள்ளது எனவும், இறைமை பிரிக்க முடியாதது என அரசியல் வரைபு கூறுவது தமிழ் மக்களின் இறைமையை மறுப்பதாக அமையும் என பிரிவினைவாதம் உள்ளெடுக்கப்படுகிறது. இவ் வரைபை ஏற்றால் இலங்கைத் தீவில் தமிழர் தேசம், தமிழர் தாயகம், அந்தத் தாயகத்திற்கான இறையாண்மை என்பவை ஏதும் இல்லை என ஆகிவிடாதா? என முன்வைக்கப்படுகிறது.இவ் வகை அரசியல் மிகவும் சூழ்ச்சி நிறைந்தது. மக்களை உணர்ச்சிக்குள் தள்ளி மீண்டும் முள்ளிவாய்க்காலை நோக்கிப் பயணிக்க வைக்கிறது.இங்கு தனிமனித இறைமை அதிகாரம், தமிழ் இறைமை அதிகாரம் என்ற பதங்களிடையே ஏற்படுத்தப்படும் குழப்பமான விளக்கங்களே கவனத்திற்குரியவை.

புதிய அரசியல் யாப்பு வரைபில் இலங்கை மக்கள் என்பதைத் தவிர சிங்கள, தமிழ் இறைமை என எந்த இடத்திலும் இல்லை. ஆனால் அவ்வாறு இருப்பதாக ஒரு மாயையை ஏற்படுத்தி மக்களை ஏமாற்றுகின்றனர். தமிழ் மக்களுக்கான தனி இறையாண்மை உள்ளதெனில் அக் கொள்கையோடு ஆரம்பித்து தனிப் பாராளுமன்றம் அமைக்க தமிழ் மக்களின் ஆணையைக் கோர வேண்டும். சிங்களதேசத்தின் பாராளுமன்ற மற்றும் ஏனைய தேர்தலில் பங்குபற்றுவது அவர்கள் கூறும் தமிழ் தேசத்தின் மீதான சிங்கள தேசத்தின் இறையாண்மையை ஏற்றுச் செயற்படுவதாகும். தமிழ் மக்களின் இறையாண்மையை தமிழ் மக்களே பிரயோகிக்க வேண்டும். சிங்கள தேசத்தின் இறையாண்மைக்குள் உள்ளதாகக் கூறும் பாராளுமன்றத்திற்கு எவ்வாறு செல்ல முடியும்? அவ்வாறானால் சிங்கள தேசத்தின் இறையாண்மையை ஏற்பதாக அமையாதா?  இவைஇவர்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற முன் வைக்கும் குறுக்கு வழிகளாகும்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் ஜெனீவா மனித உரிமை மாநாட்டில் அங்கு சென்ற வேளையில் இவ் இறைமை அதிகாரம் குறித்து ஒருபோதும் பேசியதில்லை. இலங்கை அரசின் அரசியல் அமைப்பின் இறைமை குறித்த பிரச்சனைகள் பற்றிப் பேசியதில்லை. பதிலாக இலங்கையின் நீதித்துறையினதும், ராணுவத்தினதும் அரசியல் அமைப்பு மீறல்களை, மனித உரிமை மீறல்களைப் பேசியுள்ளார். இதன் அர்த்தம் என்ன? இலங்கையின் அரசியல் அமைப்பின் பிரகாரம் அரசு செயற்படவில்லை என முறையிடுவது எனில்,அரசியல் அமைப்பை ஏற்றே அவ் விவாதங்களை நகர்த்தியுள்ளார். அவரால் தனது முறைகெட்ட அரசியல் விவாதங்களை சர்வதேசம் முன்னிலையில் வைக்க முடியவில்லை.மக்களின் உணர்ச்சிகளோடு விளையாடும் இந்த அரசியல் ஏற்படுத்திய ஆழமான வடுக்கள் ஆறுமுன்னர் மீண்டும் இறைமை என்றபோலி முகங்களுடன் மக்களை ஏமாற்றுவது மிக மோசமான வஞ்சக அரசியலாகும்.

இவ் வகையான துரோக அரசியல் குறித்து தமிழரசுக் கட்சி மௌனமாகச் செல்கிறது.இவர்களில் பலர் இந்த அயோக்கிய அரசியல் தொடர மனதார விரும்புகின்றனர். இவர்களால் ஏற்பட்டு வரும் சமூக மாற்றங்களை ஜீரணிக்க முடியவில்லை. இதனால் இவர்களும் மக்களைப் பயமுறுத்தியே செல்கின்றனர். எதிர்வரும் பெப்ரவரி 10ம் திகதி கூட்டமைப்பு தனது ஆதரவை இழக்க நேரிட்டால் புதிய அரசியல் யாப்பை நிறைவேற்ற முடியாமல் போகலாம். தமிழ் மக்கள் எமக்குத் தந்த ஆதரவை மீளப் பெற்றுள்ளார்கள் என்ற நிலையை ஏற்படுத்த உதவாதீர்கள் எனப் பயமுறுத்தல் வழியில் கூறும் சுமந்திரன், இறைமை குறித்து கஜேந்திரகுமார் எழுப்பும் கேள்விகளுக்குப் பதிலளிக்காது தவிர்த்து வருகின்றார்.

இவர்களால் புதிய அரசியல் யாப்பு சாத்தியமா? என்பதையும் உறுதிப்படுத்த முடியவில்லை. அதே போல அவ்வாறு அரசியல் அமைப்பு சாத்தியப்படாத நிலை ஏற்பட்டால் மாற்றுத் திட்டமும் இவர்களிடம் இல்லை. எந்தவித முன் நிபந்தனைகளும் இல்லாமல் அரசை ஆதரிக்கின்றனர். ராணுவம் நிலங்களை விடவில்லை. முகாம்களிலிருந்து விலகவில்லை. சிறைக் கைதிகள் விடுவிக்கப்படவில்லை. காணாமல் போனோர் காரியாலயம் செயற்படவில்லை. போர்க்குற்ற விசாரணையைக் காணவில்லை. இடைக்கால  நீதி வழங்கப்படவில்லை. இவ்வாறு பட்டியல் நீழ்கிறது.

அரச மட்டத்தில் பிரச்சனைகள் உண்டு. ஆனால் இவ்வாறான சரணாகதி அரசியல் எந்த முன்னெற்றத்தையும் தரப் போவதில்லை. அரசாங்கத்தை நிபந்தனை இல்லாமல்  காப்பாற்றுவதற்கான நியாயங்கள் எதனையும் காணவில்லை. சர்வதேச வலையில் வீழ்ந்து தமிழ் மக்களின் ஜனநாயக உரிமையை விலை கூறி விற்பதாகவே இவை காணப்படுகிறது. விட்டுக் கொடுப்பே எஞ்சியுள்ளது. மாற்று அரசியல் வழிமுறைகளும் இல்லை. பலமான சிங்கள, தமிழ்,முஸ்லீம் இணைப்பும் இல்லை. அதிகாரத்தையும், செல்வாக்கையும் அனுபவித்ததைத் தவிர எஞ்சியது எதுவுமில்லை.

இவர்கள் மீண்டும் கஜேந்திரகுமாரின் ஏமாற்று அரசியலிற்கே செல்வார்கள். சமீப காலமாக அரசியல் யாப்பு வரைபு குறித்த விவாதங்களில் சுமந்திரன் பலிக் கடாவாக முன்வைக்கப்பட்டுள்ளார். கூட்டமைப்பின் இதர உறுப்பினர்கள் எவரும் இவ் விவாதங்களில் இல்லை. சம்பளமும், சலுகைகளும் தவறாமல் கிடைக்கிறது. ஆனால் மக்கள் சேவை எங்கே? சுமந்திரனிடமோ, அவரது கட்சியிடமோ தமிழ் மக்களின் எதிர்காலம் குறித்த திட்டங்கள் எதுவும் இல்லை. அது மட்டுமல்ல, சுமந்திரனின் குறுகிய கால வளர்ச்சி தமிழ் அரசியலில் பெரும்கொதிப்பை ஏற்படுத்தி வருகிறது. புலிகளின் கடந்த கால ஜனநாயக விரோத செயல்களை காத்திரமாக விமர்ச்சிக்கும் அவரது அரசியல், தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற கதிரைகளை நோக்கிய அரசியல் பச்சோந்திகளுக்குப் பெரும் கொதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமது வாக்குப் பலத்திற்கு ஆப்பு வைப்பதாகக் கருதி முணுமுணுக்கின்றனர். அவரை எந்த விதத்திலும் சம்பந்தருக்குப் பின்னர் தலையெடுக்க விடுவதில்லை எனக் கங்கணம் கட்டி வருகின்றனர். இருப்பினும் தற்போதைய தேர்தலில் தனது ஆதரவு சக்திகளை அவர் நிறுத்தியுள்ளதாக தெரிய வருகிறது.  அரசியல் அமைப்பில் உள்ள தீர்வுகளே அவரது தீர்வுத் திட்டங்களாக உள்ளன. கூட்டமைப்பின் ஏனையோர் வெற்றி கிடைத்தால் ‘நாம்’, தோல்வி என்றால் சுமந்திரன் என்ற வகையில் அரசியலை நடத்துகின்றனர்.

சமீப காலமாக தென் இலங்கையில் இடம்பெறம் பிரதான கட்சிகள் மத்தியிலே காணப்படும் போட்டிகளில் மைத்திரி தரப்பையே சுமந்திரன் குற்றம் சாட்டி வருவதாக தெரிகிறது. தமிழரசுக் கட்சி முழுமையாக ஐ தே கட்சியிடம் சரணடைந்துள்ளது. இதன் காரணமாகவே ஐ தே கட்சி தனித்து அரசு அமைக்கப் போவதாகப் பயமுறுத்தி வருகிறது. தமிழரசுக் கட்சியிடமிருந்த குறும் தேசியவாத போக்குகள் தற்போது தற்காலிகமாக சுரேஷ், விக்னேஸ்வரன் போன்றோரிடம் பொறுப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பிலுள்ள இதர சக்திகள் இவர்களுடன் இரகசிய உறவுகளைப் பேணி வருகின்றனர். தமிழரசுக் கட்சிக்கு எதிரான அணியினர் என்பது தோற்றப்பாடாக இருப்பினும், இவை தற்காலிகமானதே. ஏனெனில் அடிப்படையில் பாரிய கருத்து வேறுபாடுகள் இல்லை.

இலங்கை அரசியல் மிகவும் சிக்கலான ஓர் சூழலுக்குள் உள்ளது. நாட்டில் லஞ்சம், ஊழல், ராணுவ அதிகாரம் நிறைந்த அரசு வேண்டுமா? அல்லது ஜனநாயகமும், சட்டம், ஒழங்கு நிறைந்த ஆட்சி தேவையா? என்ற விவாதத்திற்குள் சென்றுள்ளது. நாட்டின் பொருளாதாரம் ஸ்தம்பித்தள்ளது. மிக அதிகமான கடன்களால் நாட்டின் அபிவிருத்திக்குப் பணம் இல்லை. இதனால் வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, அபிவிருத்தியின்மை, சட்டம், ஒழுங்கு சீர்குலைவு, சமூக விரோத செயற்பாடுகளின் அதிகரிப்பு, உயர்மட்டம் வரை ஊழல் என பிரச்சனைகள் அதிகரித்துள்ளன. எந்த அரசும் நீடித்திருப்பது கேள்விக்குரியதாகியுள்ளது. இந் நிலையில் நிலைத்த அரசு அமைப்பது எனில் தேசியப் பிரச்சனைகளில் தெளிவான நிலைப்பாடுகளை எடுக்கும் அரசினை அமைக்க உதவ வேண்டும். கூட்டமைப்பிடம் தெளிவான நிலைப்பாடு உண்டா? சுpல சர்வதேச அரசுகளின் கைப் பொம்மையாக உள்ள கூட்டமைப்பினால் சுயாதீனமாக இயங்க முடியாது. எனவே புதிய அரசியல் பார்வை தேவையாகிறது.

தமிழ் அரசியல் தரப்பில் ஊழலும், வன்முறையும், குடும்ப ஆதிக்கமும் அதிகரித்துள்ளது. இதனால் சமூக முன்னேற்றம் சம்பந்தமாக எந்தவித முன்னெடுப்புகளோ அல்லது எதிர்ப்புகளோ இல்லை. எதிர்க் கட்சியில் இருந்தவாறே வரவு செலவுத் திட்டத்தை ஆதரிப்பது ஜனநாயகத்தையே கேலிக்குள்ளாக்குகிறது.

இவ்வாறான குழப்பமான சந்தர்ப்பவாத அரசியல் சகதிக்குள் முற்போக்கு மற்றும் ஜனநாயக சக்திகளைக் கைதூக்கி விடுவது தேசத்தை நேசிக்கும் மக்களின் கடமையாகும். இங்கு கட்சிகள் பலவற்றில் சமூக நலன்களுக்காக அர்ப்பணிக்கும் பலர் உள்ளனர். இவர்கள் சமூக நிறுவனங்களின் அதிகாரத்தில் வைக்கப்பட வேண்டும். எனவே கட்சி அரசியலை விட நல்ல மனித நேயம் கொண்ட மனிதர்களை மக்கள் அடையாளம் கண்டு வாக்களிக்க வேண்டும்.
Vsivalingam@hotmail.com

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com