Saturday, September 10, 2016

பிரபாகரனின் ஒழுக்க வரலாறு

இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றுள்ள மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, 800 பக்கங்களில், ‘நந்திக்கடலுக்கான பாதை’ என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளார். அதில் "பிரபாகரன் ஒரு ஒழுக்கமான தலைவராக இருந்தார்" என்று கூறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது இதுவரைகாலமும் பிரபாகரனின் கேவலமான சரணடைவால் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்துக்கிடந்த பலரது வாய்க்கு சுக்குத்தண்ணி கிடைத்து இருக்கின்றது.

"ஆகா எங்கள் தலைவர் ஒழுக்கம் மிக்கவர், எதிரியே ஒப்புக்கொண்டான். அவருக்கு குடிப்பழக்கம் கிடையாது". என்று தமிழ் தேசியவாத ஊடகங்கள் மார்புதட்ட தொடங்கியுள்ளன. மறுபுறத்தில் சீரழிந்து கிடக்கும் வடக்கு மாகாண சபையின் கையாலாகாத்தனத்தை சிறிது காலத்துக்கு மறைக்க " ஓய்வுபெற்றுள்ள மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன அளித்துள்ள பிரபாகரன் பற்றிய ஒழுக்க குறிப்புக்கள்" வழங்கியுள்ள சந்தர்ப்பத்தை எண்ணி பெருமிதத்தில் திளைக்கின்றார் அமைச்சர் ஐங்கரநேசன்.

ஏதோ ஒரு வகையில் ‘நந்திக்கடலுக்கான பாதை’ என்னும் இந்நூல் தமிழினியின் கூர்வாழுக்கு அடுத்ததாக பிரபாகரனின் பல மறுபக்கங்களையும் மீண்டும் மீண்டும் பேசுபொருளாகத்தான் போகின்றது.

மதுப்பழக்கம் என்பது ஒழுக்கம் சார்ந்ததா? அல்லது பிரபாகரன் மதுப்பழக்கத்துக்கு ஆளானவரா என்பதுக்கு அவரது தனியறையில் அவரது தலைமாட்டில் இருந்த குளிர்சாதனப்பெட்டியே சாட்சி. இறுதியுத்தத்தின் போது அதிலிருந்து கண்டெடுக்கப்பட்ட பிரண்டி போத்தல் அதற்கு பதில் சொல்லும்.

அது ஒரு புறமிருக்க தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு கொண்டிருந்த இயக்க உறுப்பினர்கள் "எவரும் திருமணம் செய்ய கூடாது" என்கின்ற ஆரம்பகால சட்டத்தை முதன்முதலாக மீறியவர் அதன் தலைவர் பிரபாகரனே ஆகும். மதிவதனியை காதலித்து திருமணம் முடித்ததன் ஊடாக அவர் முதலில் அந்த ஒழுக்கவீனத்தை செய்தார்.அதன் பின்னரே புலிகள் அமைப்பில் திருமணமாவதற்கு வயது அனுபவம் போன்றன கணக்கில் எடுக்கப்பட்டு அனுமதி வழங்கப்படும் முறை அமுலுக்கு வந்தது.

புலிகள் இயக்கத்தில் ஒழுக்கம் போதிக்கப்பட்டது என்பது உண்மை. அதன் கடுமை காரணமாகவே கட்டுக்கோப்பாக சண்டையிடும் வண்ணம் படையணிகள் செயல்பட்டன. இதுவெல்லாம் உண்மைதான். ஆனால் அதன் தலைமையோ தளபதிகளில் பலரோ அந்த ஒழுக்க கோவைகளுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்தாரா என்பது கேள்விக்குறிதான். "ஊருக்குத்தாண்டி உபதேசம்" என்பதாகவே அவர்களது செயல்பாடுகள் இருந்துள்ளன.அவையெல்லாம் ஒருபுறமிருக்கட்டும்.

இங்கு மது அருந்துவதோ புகை பிடிப்பதோ மற்றும் திருமண பந்தங்களில் ஈடுபடுவதோ புரட்சிக்கும்,போராட்டத்துக்கும் ஊறு விளைவிக்கும் என்கின்ற கருத்தாக்கம் போலி ஒழுக்கம் சார்ந்த விம்பங்களிலேயே கட்டப்பட்டுள்ளது. உலக பெரும் புரட்சியாளர்களில் பலர் மது அருந்துவதற்கோ புகை பிடிப்பதற்கோ விதிவிலக்கானவர்களாய் இருக்கவில்லை. புரட்சியின் சின்னமாக உலகெங்கும் கொண்டாடப்படுகின்ற எர்னஸ்ட் சேகுவாராவை அவரது சுருட்டை விடுத்து ஒருபோதும் தனியாக தரிசிக்க முடியாது.லெனினோ ஸ்டாலினோ குடிக்காத வோட்கா இருக்கமுடியாது எனலாம். இவர்களெல்லாம் உலகப்பெரும் புரட்சிகளை திறம்பட நடாத்தி வெற்றியீட்டியவர்களாகும். அதனாலேயே இன்றுவரை அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை பற்றி பேசும் ஒவ்வொருவருக்கும் அது உலகின் எந்த மூலையாய் இருப்பினும் முன்னுதாரண புருஷர்களாக திகழ்கின்றனர்.

எனவே "குடிக்காமல் வாழ்ந்தார் தலைவர் அதனால் உலக புகழ் பெற்ற ஒழுக்க சீலரானார்" என்று துள்ளி குதிப்பதும் பெருமையாக அதை உணர்வதும் சிறு பிள்ளைத்தனமானது.

ஒழுக்கம் என்பது குடிப்பழக்கத்தாலோ உடை நடை பாவனையாலோ அளவிடப்படுவதல்ல. ஒழுக்கம் என்பது தாம்கொண்ட கொள்கையில் இருக்க வேண்டும், தாம் போதித்த கொள்கைக்கு விரோதமில்லாமல் முன்மாதிரியாக நடப்பதில் இருக்க வேண்டும்.விடுதலையின் பெயரில் தலைமைக்கு வந்த இந்த தலைமைகள் மக்களின் விடுதலை பாதையில் எவ்வளவுதூரம் விசுவாசமாக செயல்பட்டனர் என்பதுவே ஒழுக்கத்தின் அடிப்படையாகும்.

சுருங்க சொன்னால் ஒழுக்கம், அறம் என்று நாம் எதை நம்புகின்றோமோ நாம் எதை சரியென்று மற்றவர்களுக்கு போதிக்கின்றோமோ அதையே நாம் விசுவாசிப்பதும் அதையே நாம் பின்பற்றுவதும்தான் ஒழுக்கத்தின் அடிப்படையாக இருக்க முடியும். இந்த விடயத்தில் புலிகள் அமைப்பும் அதன் தலைமையும் மிக மோசமாக ஒழுக்கங்களை மீறியிருக்கின்றார்கள்.

2004 ல் கிழக்கு புலிகள் பிரிந்து நின்றபோது வன்னியிலிருந்து வந்த புலிகள் வெருகல் படுகொலையை நிகழ்த்தினர். அன்றுவரை தம்மோடு உண்டும் உறங்கியும் போராடியும் ஒருமித்து வாழ்ந்து வந்த சக போராளிகள் முன்நூறுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். சரணடைந்த பெண்போராளிகள் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனம் விபரிக்க முடியாதது. அப்போது எங்கே போனது புலிகளின் ஒழுக்கம்? படையணிகள் கட்டுக்கோப்பு? தளபதிகளின் வழிநடத்தல்? இந்த கேள்விகளுக்கு யாரிடம் பதிலுண்டு?
யுத்தத்தில் கொலைசெய்வதுதான் அறமென்றால் சரணாகதி அடைந்தவர்களுக்கு உயிர்ப்பிச்சை அளிக்கவேண்டியதே யுத்ததர்மமாகும் . இந்த யுத்ததர்மம் வெருகலாற்றங்கரையிலே அப்பட்டமாக மீறப்பட்டதே. அப்போது எங்கே போனது புலிகளின் ஒழுக்கம்? கொல்லப்பட்டவர்களை அடக்கம் செய்யக்கூடாது என அக்கிராமத்து மக்கள் எல்லோரையும் துரத்தியடித்துவிட்டு கதிரவெளி கடலோரமெங்கும் எத்தனையோ உடலங்களை நாய்களுக்கும் நரிகளுக்கும் இரையாக்கி மகிழ்ந்தனரே புலித்தளபதிகள். அதுவா புலிகளின் ஒழுக்கம்?

2004ல் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் ராஜன் சாத்தியமூர்த்திக்கு மரண தண்டனை கொடுத்து சுட்டுக்கொன்றனர் புலிகள். நாம் எத்தனையோ கொலைகளை ஈழத்திலே கடந்து வந்தவர்கள்.ஆனால் கொன்று போட்டப்பின் அடக்கம் செய்யப்பட்ட அவரது உடலை தோண்டியெடுத்து புலிகள் ஆடிய சன்னதம் இருக்கின்றதே அந்த வெறியாட்டத்தை நாம் வேறெங்கும் காணவில்லையே! இதுதானா புலிகளின் ஒழுக்கம்?


எந்த யுத்தத்திலும் ஆயுதம் ஏந்தாத அப்பாவிகள்,பெண்கள்,குழந்தைகள்,வயோதிபர்கள்,நோயாளிகள் போன்றோரை கொல்லுதல் கூடாது என்பதே யுத்த தர்மம் ஆகும். ஆனால் இதில் எவற்றை புலிகள் கடைப்பிடித்தனர்? கிழக்கு மாகாண பள்ளிவாசல்களில் கொல்லப்பட்டவர்கள் அப்பாவிகள் மட்டுமல்ல குழந்தைகளும் கூட என்பது பலரறியாத செய்தி. புலிகளால் கொல்லப்பட்ட பெண்களின் பட்டியல் செல்வநிதி தியாகராஜா (செல்வி) ,ராஜினி திரணகம, சரோஜினி யோகேஸ்வரன், ரேலங்கி செல்வராஜா , மகேஸ்வரி வேலாயுதம் ,--- என்று நீண்டு கொண்டே செல்லும். இவற்றையெல்லாம் பிரபாகரனின் எந்த ஒழுக்கத்தில் சேர்ப்பது?


இறுதி யுத்தத்தின் போது பல்லாயிரம் பொது மக்களை தமக்கான கவசமாகவும் கட்டுக்கோப்பாகவும் பிடித்து வைத்திருந்தனர் புலிகள். யுத்தம் அகோரமாக அகோரமாக புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பொது மக்கள் இராணுவம் நிலை கொண்டிருந்த நிலைகளை நோக்கி தப்பியோடத்தொடங்கினர். அப்போது புலிகள் தமது சொந்த மக்கள் மீதே கொலைவெறிகளை நிகழ்த்தினர். தம்முயிரை காப்பாற்ற தப்பியோடிய மக்கள் மீது சரமாரியாக சுட்டு அவர்களை கொன்றது எந்த வகை ஒழுக்கம்? ஆனால் யுத்தத்தின் இறுதி கணங்களில் அனைத்து புலி தளபதிகளும் தத்தமது மனைவி குழந்தைகளை தப்பியோட வைத்தனரே எழிலன்,ரமேஷ்,பிரபா,தமிழ்ச்செல்வன் -----என்று எல்லோரது மனைவி குழந்தைகளும் எப்படி தப்பித்தனர்? நீங்கள் பொது மக்களுக்கு போதித்த அந்த கட்டுக்கோப்பான ஒழுக்கத்தை உங்கள் குடும்பத்தினருக்காக மட்டும் எப்படி மீறினீர்கள்?

ஒவ்வொரு பாசறை முடிவிலும் எத்தனை ஆயிரம் போராளிகளுக்கு பிரபாகரன் உள்ளிட்ட ஒவ்வொரு தளபதிகளும் கழுத்திலே அந்த சயனைட் குப்பியை கட்டி விட்டு வீரசபதம் எடுக்கவைத்தீர்கள்? ஒருபோதும் எதிரியிடம் உயிருடன் பிடிபட்டுவிடக்கூடாது என்று எப்படியெல்லாம் போதித்தீர்கள்? உயிருடன் பிடிபடுவது மாவீரத்துக்கு இழுக்காகும் என்பனால்தானே அந்த நஞ்சுக்குப்பியுடன் பிரபாகரனும் அலைவதாக படம்பிடித்து காட்டினீர்கள்?.கழுத்திலே சயனைட் குப்பியில்லாத பிரபாகரனின் படம் ஒன்றேனும் இருக்கின்றதா? உங்களின் பேச்சை கேட்டு எத்தனை ஆயிரம் சாமானிய மக்களின் குழந்தைகள் சயனைட் கடித்து தம்முயிரை மாய்த்தனர்?

ஆனால் இந்த குறைந்த பட்ச ஒழுக்கத்தை புலித்தலைமைகளால் கடைப்பிடிக்கமுடிந்ததா? தங்களுக்கான தரணம் வந்தபோது அவர்கள் அந்த அடிப்படை ஒழுக்கத்தை அப்பட்டமாக மீறினரே? 1974ம் ஆண்டு தொடக்கி சுமார் நாற்பது வருடங்கள் எத்தனை ஆயிரம் அப்பாவி இளம் உயிர்கள் புலிகளின் பேச்சை நம்பி முட்டாள்தனமாக சயனைட் கடித்து மாண்டு போயினர்? ஆனால் புலித்தளபதிகள் எல்லோரும் உயிருடன் பிடிபட்டதாகவும் அவர்களை இராணுவம் விசாரணைக்காக அழைத்து சென்றதாகவும் அவர்களது மனைவி குழந்தைகள் எல்லோரும் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளனரே அப்படி என்றால் ஏன் அவர்களெல்லாம் தங்கள் போதனையின் படி நடக்கவில்லை? தளபதிகள் அதிலும் புலித்தளபதிகள் எப்படி உயிருடன் பிடிபட முடியும்?

கேவலம் தளபதிகளை விடுங்கள் அந்த பிரபாகரனாலேயே சயனைட் கடிக்க முடியவில்லையே? அந்த புலி வீரம்,மாவீரம் என்னவாயிற்று? சயனைட் கடிப்பதுதான் பிரபாகரன் கற்பித்த முதலாவது ஒழுக்கம் அதை அவரே மீறி "தமிழ் மக்களின் வரலாற்றில் ஒரு அவமான சின்னமாக கைகளை உயர்த்திக்கொண்டு எதிரியிடம் சரணடைந்தார்" என பிரபாகரனின்ஒழுக்க வரலாறு ஒருநாள் எழுதப்படும்.

எழுகதிரோன்

நன்றி உண்மைகள்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com