Friday, April 22, 2016

நான் மறுபடி பிறப்பேனேயாகின் இதே புரட்சிகரப் பாதையையே தேர்வேன் : பிடல் காஸ்ட்ரோ.

நிகரகுவாவின் அமைச்சரக 11 ஆண்டுகளிருந்த தோமஸ் போர்ஹே ஸான்டினிஸ்டா கெரில்லா தலைவராக இருந்தவேளை 1978இல் பிடல் காஸ்ட்ரோவை முதன் முதலில் சந்தித்தார். 14 ஆண்டுகளுக்கு பின் மறுபடியும் அவர் பிடல் காஸ்ட்ரோவைச் சந்திப்பதற்காக கியூபத் தலைநகர் ஹவானாவுக்கு வநதிருந்தார். மூன்று நாட்களில் 12 மணி நேரங்களில் பல்வேறு விசயங்கள் குறித்து நண்பர்கள் உரையாடினார்கள். அந்த உரையாடலின் விளைவான பேட்டி இது.

உலகெங்கும் தேச விடுதலைக்குப் போராடும் புரட்சியாளர்களுக்கு உத்வேகமூட்டும் பேட்டி இது.

இலத்தீன் அமெரிக்கப் புரட்சியாளர்கள் கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்த 500 ஆண்டு விழாக் கொண்டாட்டங்களை நிராகரிக்கிறார்கள். இப்பொழுதும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதாரத் தடை முற்றுகைக்கு உள்ளாகியிருக்கும் நாடுகள் கியூபா, வியட்நாம், வட கொரியா. நெருக்கடியான காலக்கட்டத்தினூடே தனது பயணத்தை தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கும் பிடலுக்கு உலகெங்குமுள்ள மூன்றாம் உலக இடதுசாரிகளும் ஐரோப்பிய இடதுசாரிகளும் தார்மீக ஆதரவை வழங்குகிறார்கள்.

500 ஆண்டுகள் எதிர்ப்பியக்கம் தற்பொழுது ஐரோப்பிய நாடுகளிலும் இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும் இடதுசாரி வட்டாரங்களிலும் மிகவேகமாக நடந்து விடுகிறது. 500 ஆண்டுகள் எதிர்ப்பியக்கத்தினை நினைவுகொள்ள தமிழர்கள் முன் இம்முக்கியமான பேட்டியை தமிழில் தருவதில் மகிழ்ச்சியடைகிறேன் ஸ்பானிஸ் மூலம் : தோமஸ் போர்ஹே. ஆங்கிலத்தில் : கிரிஸ் டைலர் (London Guardian May: 30-1992).

சமீபத்தில் நீங்கள் சோவியத் யூனியன் பற்றிப் பேசும்போது அந்தநாடு முதுகில் குத்தப்பட்டதாகச் சொல்லியிருக்கிறீர்கள். அதன் மரணத்துக்கு கோர்பச்சேவ் போன்றவர்களும் சதி செய்தார்கள் என்று சொல்லுகிறீர்களா?

இல்லை கோர்பச்சேவை நான் அந்த மாதிரி சொல்லமாட்டேன். சோவியத் யூனியனில் நடந்த தென்னவெனில் கொடுமையான தன்னழிப்பு. சந்தேகமில்லாமல் இந்தத் தன்னழிவுக்கு அந்த நாட்டின் தலைவர்கள் தான் பொறுப்பானவர்கள். சிலர் தன் பிரக்ஞையற்று அதனைச் செய்தார்கள். நிச்சயமாக கோர்பச்சேவ் பிரக்ஞை பூர்வமாக இந்த அழிவைச் செய்தார் என்று நான் சொல்லமாட்டேன். ஏனெனில் கோர்பச்சேவ் சோஷலிசத்தை நெறிப்படுத்துவதில்தான் நோக்கம் கொண்டிருந்தார் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. சோவியத் யூனியன் தன்னளவில் தன்னழிவினாலேயே சிதறடிக்கப்படாமல் இருந்திருந்தால் ஒருபோதும் ஏகாதிபத்தியம் அதனை சிதறடிப்பதற்கான வலிமை கொண்டிருக்க முடியாது. நான் சொல்வது இதுதான்: சோசலிசம் இயல்பில் சாகவே சாகாது. சோஷலிஸம் கொலை செய்யப்பட்டிருக்கிறது. இதைத்தான் நான் சொல்கிறேன்.

பெரும்பாலான இலத்தீன் அமெரிக்க புரட்சித் தலைவர்களுக்கு சோஷலிஸத்தின் இந்தச் சமகால நெருக்கடிக்கு அறிவுபூர்வமான காரணகர்த்தா ஸ்டாலின்தான் என்று பாடுகிறது.

ஸ்டாலின் மிகப்பெரும் தவறுகளைச் செய்தார். அதேசமயத்தில் மிகப்பெரும் வெற்றிகளையும் சாதித்தார் எனறு நான் நம்புகிறேன். வரலாற்று ரீதியில் சோவியத் யூனியனில் நடந்த இந்தப் பிரச்னைக்கு ஸ்டாலின்தான் காரணம் என்று அவர் மீது குற்றம் சுமத்துவது, முழுக்கவும் அவர்மீது குற்றம் சாட்டுவது பிரச்சினையை மிக எளிமைப்படுத்துவதாகும். ஏனெனில் ஒரு மனிதன் தானே தன்னளவில் இந்த மாதிரிச் சூழ்நிலையை உருவாக்க முடியாது. ஸ்டாலின் பற்றி நிறையப் பிரச்னைகளில் நான் விமர்சனரீதியாக இருக்கிறேன். ஸ்டாலின் மிக அதிகமாக பதவித் துஷ்பிரயோகம் செய்தார் என்று நான் நம்புகிறேன். மிகக் குறுகிய காலத்தில் வன்முறை மூலம் நிலத்தை சமூக மயப்படுத்த நடந்த முயற்சி மிக மோசமானது. மானுட மதிப்பீடுகள் மற்றும் பொருளாதார அடிப்படையில் மிகமிக அதீதமானது.

ஹிட்லர் ஒரு மிருகபலம் பொருந்தியவனாக வரும்வரை, மேற்கத்திய அதிகாரங்கள் அவனை வளர்த்தது என்பது உண்மையில் மறுக்க முடியாதது. ஹிட்லர் நிஜத்தில் ஒரு ஆபத்து. ஹிட்லரின் பாலான அசாதாரணமான மேற்கத்திய அதிகாரங்களின் பலவீனத்தை மறுக்க முடியாது. இதுதான் ஹிட்லரின் நாடு பிடித்தலையும் விஸ்தரிப்பையும் ஸ்டாலினின் பயத்தையும் தூண்டியது. இதன் தொடர்பாக ஸ்டாலின் எடுத்த நிலைபாட்டை நான் என் வாழ்நாள் முழுவதும் விமர்சித்து வருகிறேன். காலத்தைக் கடத்துவதற்காக எந்த விலைகொடுத்தும் ஹிட்லரோடு சமாதான உடன்படிக்கைக்குப் போனது உண்மையிலேயே மிக அப்பட்டமான கொள்கை மீறலாகும். இலட்சியங்களை விட்டுக் கொடுத்தலாகும். நாங்கள் எமது நீண்ட புரட்சிகர வாழ்வில், ஒப்பீட்டளவில் கியூபப் புரட்சியின் நீண்ட வரலாற்றில், காலத்தை நீட்டிப்பதற்காக எங்களின் ஒரேயொரு கொள்கையைக் கூட விட்டுக் கொடுக்க முன்வரவில்லை. எந்த நடைமுறை ஆதாயத்துக்காகவும் நாங்கள் விட்டுக் கொடுக்க ஒப்பவில்லை.அதிகம் பேசப்படும் மாலட்டோவ் – ரிப்பன்டிரோப் ஒப்பந்தத்தில் அவர் கையொப்பமிட்டார். அந்த அனாக்கிரமிப்பு ஒப்பந்தம் அவருக்கு கால அவகாசம் தருவதை விட்டு காலத்தைக் குறைத்தது, ஏனெனில் அது நிச்சயமாக யுத்தத்தைத் தொடக்கி வைத்து விட்டது. பின்லாந்து மீதான அந்தச் சிறுயுத்தமும் ஒரு மிகப்பெரிய தவறு. கொள்கை ரீதியிலும் சர்வதேசீய உறவுகளின் அடிப்படையிலும் அது மிகப்பெரிய தவறு. வெற்றிகரமான தவறுகளையும் அவர் செய்தார். உலகின் பெரும்பாலான அபிப்பிராயம் சோவியத்யூனியன்பால் விரோதபூர்வமாக ஆகும் அளவு வெற்றிகரமான தவறுகளைச் செய்தார். சோவியத் யூனியனின் நல்ல நண்பர்களாக உலகெங்கும் இருந்த கம்யூனிஸ்டுகளை இக்கட்டில் சிக்க வைத்தார். இறுதியாக ஸ்டாலினின் குணாம்சம். எல்லாவற்றையும் சந்தேகிக்கும் அவர் கொடுஞ் சந்தேகக்குணம், அவரை பிற அங்கீகரிக்கப்படுபவை ஆகும்.

இப்போது ஜனநாயகம் பற்றி அதிகமாகப் பேசக் கேட்கிறோம். இடதுசாரிகளின் வட்டாரங்கள் உட்பட ஜனநாயகம் பற்றி அதிகம் பேசப்படுகிறது. உங்களின் பார்வையில் ஜனநாயகம் என்பது என்ன?

இங்கே பார்.தோமஸ்! மிகச் சுறுக்கமான வார்த்தைகளில் ஜனநாயகம் எனப்து லிங்கன் சொன்னபடி மக்களின் அரசு, மக்களால் ஆளப்படும் மக்களுக்கான அரசு. என்னளவில் ஜனநாயகம் என்பது குடிமகனின் அனைத்து உரிமைகளையும் பாதுகாப்பதாகும். அந்த உரிமைகளில் சுதந்திரமாயிருப்பதற்கான உரிமை, தன்சார்பு உரிமை, தேசீய பெருமித உரிமை, பரஸ்பர மரியாதைக்காகான உரிமை ஆகியன அடங்கும். என்னளவில் ஜனநாயகம் என்பது மனிதர்க்கிடையில் சகோதரத்துவம். நேசம். நான் சொல்வேன், முதலாளித்துவ ஜனநாயகம் இந்த எந்த உரிமைகளையும் கொண்டிருக்கவில்லை. மிகச்சிலர் அதிகமான வாய்ப்புக்களோடும் மிகப்பெரும்பாலோர் ஏதுமற்றம் இருக்கின்ற இந்த நாடுகளில், ஒருவர் எவ்வாறு ஜனநாயகம் இருக்கிறது என்று பேசுகிறார் என்று நான் ஆச்சிரியம் கொள்கிறேன். என்ன மாதிரியான சகோதரத்துவம் அல்லது சமத்துவம் ஒரு கோடீஸ்வரனுக்கும் ஒரு பிச்சைக்காரனுக்கும் இடையில் நிலவ முடியும்? எமது சமூக அமைப்பு ஒப்பீட்டளவில் எந்த அமைப்பை விடவும் ஜனநாயகத்தன்மை வாய்ந்தது என்று நான் நினைக்கிறேன். ஒப்பிட்டுப் பார்க்கவே தேவையற்று, அமெரிக்க நாட்டை விடவும் எமது அமைப்பு மிகமிக ஜனநாயகரீதியானது ஆகும்.

கியூபப் புரட்சியின் அடிப்படை உயிர் வாழ்வுக்காக பொருளாதார தளத்தில் நடந்து கொண்டிருக்கும் சாராம்சமான போராட்டம் பற்றி நான் இப்போது பேச விரும்புகிறேன். உடனடியான உங்கள் இலக்கு என்ன? நீண்ட நோக்கில் உங்கள் இலட்சியம் என்ன?

1989 இல் யூலை 26 ஆண்டு விழாவில் (மன்காடா கொத்தளத்தைத் தகர்த்த நாள், ஒரு புரட்சிகர தேசீய விடுதலை நாள்) காமாகுவாவில் நான் சொன்ன விசயங்கள் மிகப்பல செவிகளுக்கு விநோதமாகக் கேட்கிறது. போராடுவதற்கான எமது தயார்நிலை பற்றிப் பேசியது ஆச்சரியமாகப்படுகிறது. அப்போது பேசிய அந்த அந்த வார்த்தைகள் இதோ : ‘எப்போதைக் காட்டிலும் இப்போது நாங்கள் யதார்த்தமாக இருக்கிறோம். நாங்கள் ஏகாதிபத்தியத்திற்கு எச்சரிக்கை செய்கிறோம். சோஷலிச சமூகக் கட்டமைப்பில் (சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் – மொழி பெயர்ப்பாளர்) ஒரு முறிவு ஏற்பட்டால் எமது புரட்சி தாங்கி நின்று எதிர்த்துப் போராட இயலாததாகிவிடும் என்று பிரம்மைகளை வளர்ப்போருக்கு நாங்கள் எச்சரிக்கை செய்கிறோம். ஏனெனில் நாளை அல்லது ஏதோ ஒரு நாளில் சோவியத் யூனியனில் மிகப்பெரிய உள்நாட்டு கொந்தளிப்பு ஏற்பட்டு அந்த நாடு சிதறிப் போகும் – அது ஒருபோதும் நடக்காது என்று நாங்கள் நம்புகிறோம் – சந்தர்ப்பத்தில் கூட கியூப்புரட்சி கியூப மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்தவர். எதிர்ப்பைத் தொடர்வர்’ கவனி தோமஸ்!

இவைகளை நான் சோவியத்யூனியன் சிதறிப்போவதற்கு இரண்டரை ஆண்டுகளுக்கு முன் சொன்னேன். ஆமாம். வளர்ச்சிக்கான அனைத்துத் திட்டங்களும் நெருக்கடிக்குள்ளாகியிருக்கிறது. தோமஸ்! நாங்கள் இப்போது அந்த நெருக்கடிக்கால கட்டத்தின் மத்தியில்தான் இருக்கிறோம். மிகுந்த மனவருத்தத்துடன் நாங்கள் இப்போது முன்னுரிமைகளை உருவாக்க நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறோம். மிகமுன்னேயே நாங்கள் அசாதாரண காலகட்டத்தைக் கொண்டு வர நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கிறோம். அசாதாரண காலகட்டத்திட்டத்தை நாங்கள் முன்னமேயே வகுத்து வைத்திருந்தோம். முழுமையான கடல் போக்குவரத்து முற்றுகை ஏற்படுமானால் எதை எதிர்கொள்வதற்கான திட்டம். இப்போது கடல் போக்குவரத்து முற்றுகை இல்லாமலேயே ‘அசாதாரணமான முறையில் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. சரியாகச் சொல்ல வேண்டுமானால் எமக்குத் தேவையான எரிபொருளில் 50 சதத்துடன் நாங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறோம். எமது நாட்டுக்குத் தேவையான இறக்குமதியில் 40 சதவீதமான பொருட்களோடுதான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்களது இலக்கு என்ன? இந்த ‘அசாதாரண கால கட்டம்’ எதிர்த்து நிற்பதற்கு மட்டுமல்ல. எங்கள் வளர்ச்சிக்கும் தான். அத்தியாவசியத் தேவையற்ற உற்பத்தி அனைத்தும் வீழும். நடைமுறையில் அனைத்தும் வீழும். நடைமுறையில் எமது சமூக மேம்பாட்டுத் திட்டங்களைக்கூட செயலற்றதாக்க வேண்டிவரும். எங்கள் கட்டிட நிர்மாணத் திட்டங்கள், வீட்டு வசதித் திட்டங்கள், குழந்தைப் பராமரிப்பு இல்லங்களுக்கான திட்டங்கள், சிறப்புப் பாடசாலைத் திட்டங்கள், தொழில்நுட்பப் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழக வசதித்திட்டங்களை நலியவிட வேண்டும். முன்னுரிமையான திட்டங்களை சமூகத்தில் முழு வளர்ச்சியோடு சம்மந்தமானவற்றுக்கு விட வேண்டும். உதாரணமாக உயிர் தொழில்நுட்பம் மருந்துத் தொழிற்சாலை, மருத்துவக் கல்வித் தொழிற்சாலை, சுற்றுலாத் திட்டங்கள், உணவு உற்பத்தித் திட்டங்கள், உணவு உற்பத்தித் திட்டங்கள் போன்றவைகள் முதலிடத்தை எடுத்துக் கொள்ளும். விஞ்ஞானத் திட்டங்களும் முழு வளர்ச்சியோடு தொடரும். ஆகவே எங்கள் சாராம்சமான கேள்வி என்பது அடிப்படை வாழ்வு மட்டுமல்ல, அதோடு மேல்நோக்கி வளர்ச்சியடைவது. எங்கள் அத்தனை துன்பங்களுக்கு இடையிலும் வளர்ச்சியடைவது.

சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபடும் புரட்சிக்கு எதிரானவர்கள் மீது ‘துப்பாக்கிப்படை’யின் தண்டனைகளை கியூபா வழங்காமல் இருந்தால் நல்லது என்று பலர் சொல்கிறார்கள்.. ..

எவரும் கொலைத் தண்டனையை விரும்ப மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். நான் அறிவேன்-கியூபாவின் நண்பர்கள் உட்பட பலர் என்னிடமும் இது பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். நான் சொல்ல விரும்புவது இதுதான். நடைமுறையிலிருக்கும் சட்டங்களின்படிதான் மிகக் கடுமையான குற்றங்களின் பின்னணியில் மரண தண்டனை செயல்படுத்தப்படுகிறது. உலக அளவில் மரணதண்டனை ஒழிக்கப்படும் என்று ஒப்பந்தம் ஏற்படுமானால் நாங்களும் அதை ஒழிக்க ஒப்புக் கொள்வோம். ஒரு தலைப்பட்சமான நாங்கள் மரணதண்டனையை ஒழிக்க ஒப்புக் கொள்ள முடியாது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தொடர்ந்த பயமுறுத்தல் மற்றும் ஆத்திரமூட்டலுக்கெதிரான வாழ்வா சாவா எனும் அடிப்படையில் அடிப்படை வாழ்வுக்கான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் நாங்கள் ஒருதலைப்பட்சமாக மரணதண்டனையை ஒழிக்க ஒப்புக்கொள்ள முடியாது.

‘அமெரிக்காவைக் ‘கண்டு பிடித்தார்கள்’ என்று சொல்லிக்கொண்டு நடந்த கொண்டிருக்கும் விழாக்கள் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?

‘இரண்டு கலாச்சாரங்கள் சந்திக்கின்றன’ என்று சாதுரியமாகச் சொல்கிறார்கள். இந்தச் சொற்றொடர் எனக்கு ஒருபோதும் சரி என்று படவில்லை. உண்மையில் இது ஒரு காலச்சாரத்தின் மீது மற்றொரு கலாசாரத்தின் திணிப்பு. பிறமக்களின் மீது மிக முன்னேறிய ராணுவ தொழில் நுட்பத்தை வைத்துக்கொண்டிருக்கும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய வன்முறையாளர்கள் ஆக்கிரமிப்புத் தன்மை வாய்ந்த அடக்குமுறை இது. இரண்டு கலாச்சாரங்களின் மாபெரும் இணைப்பின் 500 ஆண்டுகள் என்று பிதற்றுகிறார்கள். எந்த ஒரு தனி நாட்டின் மீதும் வெறுப்புற்று இவைகளை நான் சொல்லவில்லை. மிக நேர்மையாக நான் சொல்கிறேன். நிறவெறிபிடித்த ஐரோப்பியர்களால் அல்ல ஸ்பானிஸ்காரர்களால் கியூபா காலனியாக்கப்பட்டது. அந்தக் காலனியாக்கத்தின் தவிர்க்கவியலாத கலவையாகத்தான் வெல்லமுடியாத இன்றைய எம்மக்கள் உருவாகியிருக்கிறார்கள்.

சமப்பாலுறவு குறித்து உங்கள் அபிப்பிராயம் என்ன?

இப்போதும் எமது மக்களிடம் இந்த ஆண்பெருமித பண்பு இருக்கிறது. பிற இலத்தீன் அமெரிக்க மக்களைவிட குறைந்து அளவில் இருக்கிறது என்று நம்புகிறேன். ஆயினும் இன்னும் அந்தப் பண்பு இருக்கிறது. பல நூறு ஆண்டுகளாக எமது மக்களின் தனிப்பண்பின் ஒரு பகுதியாக அது இருந்து வந்திருக்கிறது. நான் இதை மறுக்கவில்லை. சில குறிப்பிட்ட கால கட்டங்களில் இந்த ஆண்பெருமிதத் தன்மை சமப்பாலுறவு குணாம்சத்தின் பாலான அணுகுமுறையை உருவாக்குகிறது. சொந்தமுறையில் சமபாலுறவாளர்கள் மீதான வெறுப்புக் கோளாறுக்கு நான் ஆளாகவில்லை. நான் ஒருபோதும் சமப்பாலுறவாளர்களுக்கு எதிரான கொள்கையை ஆதரிக்கவோ, மேற்கொள்வோ, எதிரானவர்களுக்குச் சாதகமாகவோ இருந்ததில்லை. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நானும் அந்த ஆண்பெருமித பாரம்பரியத்துக்கு உடன் பட்டிருக்கிறேன். இதை நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.

அரசியல் தலைவர்கள் 60 வயதில் ஓய்வுபெற்று விட வேண்டும் என்று சொல்கிறார்கள். அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பிரச்னை சாதாரணமாக ஓய்வு பெறுதல் என்பது அல்ல. ஓய்வு பெறுவதற்கான சாத்தியம். அதுதான் பிரச்னை. இரண்டும் வேறு வேறு விசயங்கள். முழுக்க முழுக்க நேர்மையாகச் சொல்கிறேன். எனது இலக்குகளை பிறர் நிறைவேற்றுவர்களானால் நான் ஓய்வு பெறவே விரும்புகிறேன். எனது சொந்தத் திருப்திக்காக எனது வேலையை நான் செய்யவில்லை. எனது கடமையாகச் செய்கிறேன். நான் அதை மகிழ்ச்சியாக செய்கிறேன். எனது தோழர்கள் எதுவரை இந்த யுத்த களத்தில் நான் தேவை என்று நினைக்கிறார்களோ அதுவரை நான் களத்தில் இருப்பேன். அரசியலில் ஈடுபடும் உரிமைகளை வயதானவர்கள் என்பதற்காக மறுக்கப்படக்கூடாது என்று நான் நினைக்கிறேன். என் வாழ்வில் முதன் முறையாக இப்போதுதான் நான் என்னை வயதானவன் என்று அழைத்துக் கொள்கிறேன் என்று நினைக்கிறேன்.

நான் கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் என்னிடம் சொல்லியிருக்கிறீர்கள்-நீங்கள் தீவிரமான அசைக்க முடியாத படிப்பாளி என்று.

ஆமாம் தோமஸ்! என் வாழ்நாளில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு புத்தகங்களை நான் படிக்கிறேன். படிப்பதற்கு இன்னும் அதிக நேரம் கிடைக்கவில்லையே என்றுதான் எனக்கு மனசு வலிக்கிறது. எல்லா வகையான இலக்கியங்களையும் நான் படிக்கிறேன். எனது காப்பியங்களில் பைபிளும் அடங்கும். எனது வார்த்தைப் பிரயோகங்களை அலசுகிற எவரும் பல பைபிள் வார்த்தைகளைக் கண்டு பிடிக்க முடியும். நான் 12 வருடங்கள் மத பாடசாலைகளில் பயின்றேன். அதிகமாக ரோமன் கத்தோலிக்கப் பாதிரிகளுடன் பயின்றேன். எனக்குப் படிக்க அதிகநேரம் கிடைத்தது. நான் சிறையில் கழித்த 1953 மற்றும் 1955 ஆகிய இரண்டு வருடங்கள்தான். நான் எப்போதும் படித்துக் கொண்டிருக்கிறேன். உதாரணமாக பொலிவர் சம்பந்தமாக மிகப்பெரிய புத்தகத்தொகுதிகளைச் சேர்த்திருக்கிறேன். நான் பொலிவர் மீது எல்லையற்ற ஈர்ப்பு கொண்டிருக்கிறேன். மார்ட்சையை அந்த அளவு நான் சொல்லமாட்டேன். என்னை குறுங்குழுவாதி என்னும் பிறர் சொல்லக் கூடும். நேற்றிரவு பாட்ரிக் சுஸ்கிந் எழுதிய பர்ப்யூம் நாவல் படித்துக் கொண்டிருந்தேன். தனிநபர் நட்பு அல்லாது கேபிரியல் கார்ஸியா மார்க்யூஸேயின் அனைத்துப் புத்தகங்களையும் நான் பார்த்திருக்கிறேன்.

நீங்கள் உங்கள் விருப்பமான எழுத்தாளர் என்று தேர்ந்தால் யாரைச் சொல்வீர்கள்

சேர்வான்டிஸ்

எந்தத் தயக்கமுமின்றித்தான் இதைச் சொல்கிறீர்களா?

எனக்கு எந்தச் சந்தேகமுமில்லை. அதன் கருத்துக்காக அதன் உள்ளடக்க அழகுக்காக டான் குவிக்ஸாட்டை குறைந்த பட்சம் ஐந்து ஆறுமுறை படித்திருக்கிறேன்.

கவிஞர்கள் பற்றி என்ன சொல்கிறீர்கள் பிடல்?


நெருதாவை நான் மிக விரும்புகிறேன் என்று சொல்ல வேண்டும். அவர் கவிதைகள்தான் நான் அதிகம் படித்த கவிதைகள். ஆயினும் நான் நிக்கலஸ் கில்லனுக்கு முன்னுரிமை தருவேன்.

நீங்கள் பாடுவீர்களா?

இசைக்காக தீவிரமான செவிகளை நான் கொண்டிருக்கிறேன். பாட விரும்புகிறேன். அதிகத் திறமை இல்லை.

குளிக்கும் போது ஸவரின்கீழ் கூட பாடமாட்டீர்களா?

ஊஹீம். ஸவருக்குக் கீழ் நான் நடுங்குவேன். குளிரில் நடுங்குவேன். எனக்கு இசை மிகப்பிடிக்கும். குறிப்பாக புரட்சிகரப் பாடல்கள். எனக்கு ஸாஸ்திரீய ஸங்கீதம் பிடிக்கும். ஆயினும் அணிவகுப்புப் பாடல்களுக்கு மனத்தைப் பறி கொடுப்பேன்.

நீங்கள் வாழ்வில் செய்தவை எவற்றுக்காவது வருத்தப்பட்டது உண்டா?

நாங்கள் தந்திரோபாயத் தவறுகள் செய்திருக்கிறோம். அவற்றுக்கு நான் வருத்தப்படமுடியும். ஒன்றில் தெளிவான சிந்தனையோடு இருக்கிறேன். புரட்சி முழுவதிலும் நாங்கள் எப்போதும் மூலோபாயத் தவறு செய்யவே இல்லை. இலட்சியங்களை மீறியது என்கிற தவறு செய்யவே இல்லை. நான் மறுபடி பிறப்பேனேயாகின் மறுபடி இதே புரட்சிகரப் பாதையையே தேர்வேன்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com