Sunday, April 10, 2016

பெண்களை தற்கொலைப் படையாக போகோஹாரம் மாற்றுவது எப்படி?- ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

நைஜீரியாவின் போகோஹாரம் பயங்கரவாத அமைப்பு பெண்களை கடத்திச் சென்று நூதனமான உத்திகளை பயிற்சி அளித்து தற்கொலைப் படையாக அவர்களை மாற்றுகின்றனர் என்று நியூயார்க் டைம்ஸ் ஊடகம் செய்தி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

இது குறித்து நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:

போகோஹாரம் பயங்கரவாத அமைப்பின் பல்வேறு கொடுஞ்செயல்களில் நம் கவனத்துக்கு வருவது மசூதிகள், சர்ச்கள், பள்ளிகள் ஆகிய இடங்களில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்துவது ஆகியவையே. ஆனால் இவர்கள் ஒரு தாக்குதலை ஒரு கிராமத்தில் மேற்கொண்டால் அந்த கிராமமே சாம்பலாகிவிடும் என்பதுதான் எதார்த்த நிலை. இதில் வலுக்கட்டாயமாக பிடித்துச் செல்லும் பெண்களை தற்கொலை வெடிகுண்டாக மாற்ற அளிக்கும் பயிற்சிகள் அதிர்ச்சியளிப்பவையாகும்.

இது குறித்து நைஜீரிய போகோஹாரம் அமைப்பினால் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வந்த ரஹிலா ஆமோஸ் (47) என்ற பெண்மணி கூறுவதாவது: “வெடிகுண்டுகளை கக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள், விரோதியின் கழுத்தை பின்பகுதியிலிருந்து அறுத்து எடுங்கள், ஏனெனில் பின் கழுத்தை அறுத்தால் விரைவில் மரணம் சம்பவிக்கும், மேலும் போராட்டத்தையும் தவிர்க்கலாம்” என்று தனக்கு அறிவுறுத்தியதாகக் கூறுகிறார்.

தற்கொலைத் தாக்குதலுக்குத் தேர்ந்தெடுக்கும் பெண்கள் தங்கள் கூடைகளில் அல்லது தங்கள் உடைகளில் வெடிகுண்டுகளை மறைத்து எடுத்துச் சென்று மீன் சந்தை, அல்லது நெரிசலான மார்க்கெட் பகுதிகளில் வெடிக்கச் செய்ய வேண்டும். அதாவது பள்ளிகள் மட்டுமல்லாது, இந்த வன்முறைக்கு அஞ்சி முகாம்களின் தங்கியுள்ளவர்களையும் எப்படி தாக்கி அழிக்க வேண்டும் என்பதும் போகோஹாரம் கொடுஞ்செயல் திட்டங்களில் பிரதான பங்கு வகிக்கிறது.

இது குறித்து கேமரூன் தகவல்தொடர்பு அமைச்சர் இஸா சிரோமா பகாரி என்பவர் கூறும்போது, “இதனை அவ்வளவு எளிதில் தோற்கடித்து விட முடியாது. முற்றிலும் ஒழிக்கவும் முடியாது. பெண் தற்கொலைப் படையினரை நீங்கள் அடையாளம் காண முடியாது, ஒரு இளம்பெண் உங்களை நோக்கி வருகிறார் என்றால் அவர் வெடிகுண்டை மறைத்து வைத்துள்ளார் என்றா நாம் நினைக்க முடியும்?” என்கிறார்.

பெண்களை தீவிரவாதிகளாக மாற்றும் போகோஹாரம் பயங்கரம் 2 ஆண்டுகளுக்கு முன்பாக உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நைஜீரியாவில் பள்ளி ஒன்றில் புகுந்த தீவிரவாதிகள் அங்கிருந்து 300 மாணவிகளைக் கடத்திச் சென்றனர், அவர்கள் நிலவரம் என்னவென்று இன்றுவரை தெரியவில்லை. மேலும் பிற 100 பெண்களும் கடத்தப்பட்டனர், சிறையில் அடைக்கப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். சில வேளைகளில் புதிய தலைமுறை பயங்கரவாதிகளை உருவாக்க சில பெண்களை கர்ப்பிணிகளாக்குவதும் அங்கு நடந்து வருகிறது.

ரஹீலா ஆமோஸ் தொடர்கிறார், “என் கிராமத்துக்கு போகோஹாரம் வந்தனர், கார்களிலிருந்து இறங்கி பெண்களையும் குழந்தைகளையும் சுற்றி வளைத்தனர்” என்றார். கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த இவரை அவர்கள் சுயமாக வியாக்கியானம் அளித்துக் கொள்ளும் இஸ்லாம் பாடங்களை வலுக்கட்டாயமாகக் கற்க செய்துள்ளனர். அதாவது தற்கொலை வெடிகுண்டாகும் முன்பாக இது முதல் படி.

இப்படியே பல மாதங்கள் போகோஹாரம் பிடியில் இருந்த ஆமோஸ், ஒருநாள் மாலை நேர பிரச்சாரத்துக்கு போகோஹாரமியர்கள் தயாராக இருந்த போது பின்னால் வந்த இவர் தனது 2 வாரிசுகளுடன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தப்பி கேமரூன் வந்துவிட்டார்.

போகோஹாரம் பற்றி தப்பி வந்த மற்ற பெண்கள் கூறுவதும், ஆமோஸ் கூறுவதும் ஒரேமாதிரியாகவே உள்ளதாக கேமரூன் அதிகாரிகள் தெரிவித்தனர். அதாவது பெண்கள் வெடிகுண்டாக மாறி தாக்குதல் நடத்தச் செல்லும் முன் புனித இறுதிச் சடங்கும் நடத்தப்படுமாம்.

கேமரூன் ராணுவ செய்தித் தொடர்பாளர் கலோனல் திதியர் பாட்ஜெக் கூறும்போது, சமீப காலங்களாக கிராமங்களுக்கு வரும் போகோஹாரம் பயங்கரவாதிகளை ராணுவம் விரட்டி அடித்து விடுகிறது. அங்கு கிராமத்தில் வீடுகளையே கடத்திய பெண்களுக்கான பயிற்சி-வதை முகாம்களாக போகோஹாரம் பயன்படுத்தியது தெரியவந்தது. இங்குதான் பெண்களுக்கு குரான் பயிற்றுவிக்கப்படுவதோடு, வன்முறைகளும் பழக்கி வைக்கப்படுகிறது.

அதாவது பதின்ம வயது பெண்கள் தாங்கள் பயங்கரவாதிகளாக மாற்றப்படுகிறோம் என்பதை அறிந்துள்ளார்களா என்பதே தற்போது ஆய்வாளர்களுக்கு பெரிய விவகாரமாக எழுந்துள்ளது.

ஆனால் தற்போது போகோஹாரம் இந்தத் திட்டத்தில் விரிசல்கள் விழத்தொடங்கியுள்ளதாக கேமரூன் அதிகாரிகள் கூறுகின்றனர், கடந்த பிப்ரவரி மாதம், கேமரூனின் தொலை வடக்கு கிராமம் ஒன்றிற்கு பெண் ஒருவரை வெடிகுண்டுகளுடன் அனுப்பியது போகோஹாரம், ஆனால் அந்தப் பெண் அங்கு வந்து வெடுகுண்டுகளை போட்டு விட்டு அதிகாரிகளிடம் சரணடைந்ததையடுத்து போகோஹாரம் நிலைகள் மீது பெரிய அளவில் தாக்குதல் நடத்த முடிந்தது என்கின்றனர் கேமரூன் அதிகாரிகள்.

இதே பிப்ரவரி மாதத்தில் மற்றொரு தாக்குதல் முயற்சியில் 3 இளம் பெண்கள் வெடிகுண்டுகளுடன் முகாமுக்கு வந்து தாக்குதல் நடத்த வந்தன்ர். இருவர் குண்டுகளை வெடிக்கச் செய்ததில் 60 பேர் பலியாகினர், ஆனால் மற்றொரு பெண் குண்டுகளை வெடிக்கச் செய்யும் முன் முகாமில் தனது தாய் தந்தையரைக் கண்டவுடன் குண்டுகளை புதரில் விட்டெறிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்புடன் இணைந்ததாக அறிவித்துள்ள போகோஹாரம், 2012-ம் ஆண்டு முதல் சுமார் 2,000 பெண்கள், குழந்தைகள் ஆகியோரை கடத்தியுள்ளனர்.

இதில் பெண்களே ஆயுதம் தாங்கிகளாக போகோஹாரம் விரும்புகிறது, காரணம் அதிகாரிகள் இவர்களை முழுதும் பரிசோதனை செய்வதில்லை. அப்படி பரிசோதனை செய்தால் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெண் வெடிகுண்டுகள் போகோஹாரம் கண்டுபிடிப்பல்ல, செசன்யா போரின் போது ‘கருப்பு விதவைகள்’ என்ற பெயரில் பெண் தற்கொலைப் படையினர் இருந்தனர். பாம் ஷெல்: பெண்களும் பயங்கரவாதமும் என்ற தலைப்பில் எழுதிய மியா புளூம் என்ற ஆய்வாளர் கருத்தின் படி, 1985 முதல் 2008 வரை நடந்த தற்கொலைத் தாக்குதல்களில் 25% பெண்கள் நடத்தியதே.

ஆமோஸ் கூறுகிறார், அதாவது, தன்னுடன் பயங்கரவாத பயிற்சி மேற்கொண்ட 30 பெண்களில் பெரும்பாலானோர் மிகவும் உற்சாகமாக இதனைச் செய்ய முன் வந்தனர் என்கிறார். இதுதான் சொர்க்கத்துக்குச் செல்லும் நேரடி வழி என்கிறதாம் போகோஹாரம். உணவு அளிக்காமல் பட்டிணி போட்டு, அமரத்துவம் எய்தும் மரண வாழ்வு குறித்து அவர்களுக்கு போதிக்கப்படுகிறது என்கிறார் ஆமோஸ்.

தன்னைப் பிடித்து சென்ற போகோஹாரம், நாளொன்றுக்கு ஒருமுறை சோளக்கஞ்சியை மட்டும் உணவாக அளிப்பார்கள் என்றார் ஒருநாள் வந்து ‘நீ கிறிஸ்துவ மதத்தில் இருக்க விரும்புகிறாயா அல்லது முஸ்லிமாக மாற விரும்புகிறாயா?” என்று கேட்டுள்ளனர். கொலை செய்யப்படுவோம் என்ற அச்சத்தில் அனைவரும் இஸ்லாமுக்கு மாற ஒப்புக் கொண்டோம் என்கிறார் ஆமோஸ்.

ஆரம்பக் கல்வி 1, ஆரம்பக் கல்வி 2 என்று போகோஹாரம் பயிற்சி தொடங்குமாம். முதலில் குரானில் பயிற்சி. 3-வது பயிற்சி தலையைத் துண்டிப்பது மற்றும் தற்கொலைத் தாக்குதல் நடத்துவது பற்றி...அதாவது “ஒருவரை கொல்வது எப்படி, ஒரு வீட்டை வெடிவைத்து தகர்ப்பது எப்படி?” இது அடுத்தகட்டம்.

ஆனால் பிரைமரி 4,5, 6 ஆகிய பயிற்சி முறைகள் ரகசியாமானவை என்று கூறும் ஆமோஸ், ஆனால் அங்கு என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் முன்னரே தான் தப்பிவிட்டதாகக் கூறுகிறார்.

தற்போது ஆமோஸின் கூற்றுகளை அமெரிக்க ராணுவம் விசாரிக்க முடிவு செய்துள்ளது.நைஜீரியாவின் போகோஹாரம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு தப்பி வந்த ரஹிலா ஆமோஸ் என்ற 47 வயது பெண்மணி. | படம்: நியூயார்க் டைம்ஸ்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com