Sunday, April 10, 2016

"-வெருகல் படுகொலை 12 ஆண்டு நினைவுநாள்" --2016 சித்திரை 10- - மீன்பாடும் தேனாடான்.

பேரிகை ஆற்றின் கதறல்

கதிரவெளி ஒரு குருசேத்திரமாக

மகாவலி உறைந்து போனதொரு கணத்தில்

கிழக்கு சூரியனும் உதிக்க மறுத்தான்

வெலிக்கடையையும் வென்றுவிட்ட இறுமாப்பு

வடக்கேயிருந்து வந்த வன்னி சூறாவளிக்கு

அன்றுதான் 1972 ஆண்டுகள் கழித்து

இரண்டாவது பெரியவெள்ளியை

எழுதிச் சென்றது இலங்கைத்தீவின் வரலாறு.

வடக்கு வாரியடித்த புழுதியில்

வாகரைக்காடுகள் அதிர்ந்தது மட்டுமல்ல

கிழக்கு மண்ணும் சிவந்தது.

வெருகலாற்று படுக்கை வெந்தணலானபோதும்

வங்கக்கடல் வற்றிவிடப்போவதில்லையே

அதை நாம் அறிவோம் என்றும்

காற்று திருப்பி அடிக்கும் காலம் வரும் என்றும்

கணக்குத் தீர்த்துக்கொள்ள காத்திருப்போம் என்றும்

காடுகளுக்கு சொல்லிப்பறந்தது

கதிரவெளி கடலலைகளுக்குள் ஒர் ஆள்காட்டி குருவி.

2004 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழீழ விடுதலைப்புலிகளுக்குள் இருந்த பிரதேச ரீதியான பிரச்சனைகள் அம்பலத்துக்கு வந்தன. அதனை அடிப்படையாகக் கொண்டு மாபெரும் கிழக்கு பிளவு நிகழ்ந்தது. தமிழீழ விடுதலைப்புலிகளின் சுமார் ஆறாயிரம் போராளிகளைக் கொண்ட மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் சிறப்புத் தளபதியான கேணல் கருணா மார்ச் மாதம் 03 ஆம் திகதி இந்த கிழக்குப் பிரிவனை பகிரங்கமாக அறிவித்தார். தமிழீழ விடுதலைப்புலிகளின் புதிய நிர்வாகக் கட்டமைப்பிற்காக நியமிக்கப்பட்ட 32 துறைச் செயலாளர்களிலும் ஒருவர் கூட கிழக்கு மாகாணத்தில் இருந்து தெரிவு செய்யப்படவில்லை என்பது முதற்கொண்டு கிழக்கு மாகாணத்து போராளிகளும் கிழக்கு மாகாண மக்களின் நலன்களும் புறக்கணிக்கப்படுகின்றன எனும் பல அதிருப்திகள் கேணல் கருணாவால் முன்வைக்கப்பட்டது.

இந்த குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள மறுத்த புலிகளின் தலைமை கேணல் கருணாமீது துரோகப்பட்டம் சூட்டி கிழக்கு மாகாணப் போராளிகள் மீது படைகொண்டு ஏவியது. வன்னியில் இருந்து சொர்ணம், பானு தலைமையில் திருகோணமலையை வந்தடைந்த புலிகள் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி அதிகாலைப் பொழுதில் வெருகல் ஆற்றினை கடந்து மட்டக்களப்பு மண்ணில் நிகழ்த்திய கொலைவெறியில் சுமார் 210 கிழக்கு போராளிகள் கொன்றொழிக்கப்பட்டனர். இந்த படுகொலையே வெருகல் படுகொலை என இன்றுவரை கிழக்குமாகாண மக்களால் நினைவுகூரப்படுகின்றது.

எதிரி இராணுவம் கூட செய்யத் தயங்குகின்ற முறையில் இந்த வெருகல்படுகொலை நிறைவேற்றப்பட்டது. பாலியல் கொடூரங்களை நிகழ்த்தி கிழக்குமாகாண பெண்போராளிகள் மீது வன்னிப்புலிகள் அரங்கேற்றிய இப்படுகொலையானது எழுத்துகளால் விபரிக்கத்தக்கனவல்ல. வெருகல் ஆற்றுப்படுக்கைகளில் கரையொதுங்கிய சடலங்களையும் கதிரவெளிக் கடற்கரையின் வெந்தமணற்பரப்பில் வெம்பிக்கிடந்த வெற்றுடல்களையும் கூட எடுத்து அடக்கம் செய்யக்கூடாதென்று அக்கிராமவாசிகளை துரத்தியடித்தனர் சொர்ணம்பானு தலைமையிலான புலிகள். இந்த துயர நினைவுகளின் ஒன்றிப்பாகவே ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10 ஆம் நாள் கிழக்கு மாகாணத்தின் கரிநாளாக நினைவுகூரப்படுகின்றது.

அன்றைய காலகட்டத்தில் இந்த படுகொலையை பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் மூடி மறைத்தன.விதியே விதியே இத்தமிழ் சாதியை என செய்ய நினைத்தாய் என்று நொந்து கொண்ட என்னால் ஒரு கவிதை மட்டுமே எழுத முடிந்தது அதை தேனீ இணையத்தளம் மட்டுமே பிரசுரித்து தன் கடமையை செய்தது பின்னர் தோழர் மனோரஞ்சன் தனது நிர்மாணம் இதழில் அதனை பிரசுரித்தார்

மீன்பாடும் தேனாடான்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com