Friday, October 30, 2015

தமிழினியை முன்வைத்துத் தொடங்கும் உரையாடல். -கனக சுதர்சன்

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் அரசியற்துறை பெண்கள் பிரிவுப் பொறுப்பாளராக இருந்த தமிழினி அண்மையில் நோயின் காரணமாக மரணமடைந்து விட்டார். இதனையொட்டித் தமிழ் மற்றும் சிங்களத்தரப்பில் பல வகையான உரையாடல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இலங்கைக்கு அப்பால் புலம்பெயர் தேசங்களிலும் தமிழ்நாட்டிலும் கூட தமிழினியின் மரண நிகழ்வும் கவனத்தைப் பெற்றிருக்கிறது.

யுத்தம் முடிவுக்குப் பிறகு நிகழ்ந்திருக்கும் புலிகளின் முக்கிய பிரமுகர் ஒருவரின் மரணம் அது. புலிகளின் மரணங்களில் அநேகமானவை யுத்தகளச் சாவுகளாகவே அமைவது வழமை. அதனால்தான் அந்த மரணங்கள் முக்கியத்துவம் மிக்கனவாகவும் அந்த நாட்களில் கவர்ச்சி கூடியவையாகவும் இருந்தன. இது யுத்த முடிவுக்குப் பிறகான மரணம். நோயின் காரணமாக நிகழ்ந்த மரணம். யுத்தம் முடிந்து, வழக்கு விசாரணை, சிறைத்தண்டனை, புனர்வாழ்வு எல்லாவற்றையும் பெற்று, அனுபவித்த பின் தன் சொந்த வாழ்க்கையை இயல்பு நிலையில் வாழ முற்பட்டபோது நிகழ்ந்திருக்கும் ஒரு போராளியின் - முக்கிய பொறுப்பிலிருந்தவரின் - மரணம். அதிலும் ஒரு மூத்த பெண் போராளியின் மரணம் இது.

இந்த மரணம், சாதாரணமான ஒரு மரணத்தைப் போலக் கடந்து சென்று விட முடியாத அளவில் தவிர்க்க முடியாமல் எல்லோரின் முன்னிலையிலும் கேள்விகளாகவும் குற்றவுணர்ச்சிகளாகவும் இரக்கத்தை வரவழைப்பதாகவும் எதிர்காலத்தைக் குறித்துச் சிந்திக்க வைப்பதாகவும் உள்ளது.

எனவேதான் தமிழினியின் மரணத்தைத் தொடர்ந்து பல இடங்களிலும் உரையாடல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

அப்படியென்றால் தமிழினியின் இந்த மரணம் சில சேதிகளையும் பல கேள்விகளையும் நமக்களித்துக் கொண்டிருக்கிறது என்று சொல்ல முடியுமா?

நிச்சயமாக. இதனை நாம் மேலும் விளங்கிக்கொள்ள வேண்டுமானால் இந்த மரணத்தையொட்டி நடந்த நிகழ்ச்சிகளை அறிவது அவசியம்.

தமிழினி நோயினால் மரணமடைந்து விட்டார் என்ற சேதியை ஒருவிதமான பரபரப்புடன் ஊடகங்கள் வெளியிட்டன. இதைத் தொடர்ந்து மெல்ல மெல்ல அவருடைய மரணத்தைப் பற்றிய ஒரு மதிப்பு மிக்க சித்திரம் உருவாகியது. இந்தச் சேதியைக் கேள்விப்பட்ட – அறிந்த – தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள் அவருடைய இறுதி நிகழ்வைப்பற்றி அறிவதில் ஆர்வம் காட்டத்தொடங்கினார்கள். அப்படியே ஒவ்வொருவராக தமிழினியின் மரணச்சடங்கு எங்கே நடைபெறவுள்ளது என்பதை அறியத்துடித்தனர். அது அவருடைய சொந்த ஊரான பரந்தனில்தான் நடைபெறவுள்ளது என்ற செய்திகள் வெளியானதும் பரந்தனில் அரசியற்பிரமுகர்கள் கூடத்தொடங்கினார்கள். அரசியற் பிரமுகர்கள் கூடினால் ஊடகங்களும் கூடத்தொடங்கிவிடுமல்லவா. பிறகென்ன, எல்லாமே அட்டகாசமாகியது. அங்கே ஒரு சிறப்பான நாடகம் அரங்கேறியது.

மரணச் சடங்கிற்கு வந்திருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள், இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் வடக்கு மாகாணசபையின் உறுப்பினர்களும் அமைச்சர்களும் தமிழினிக்குப் புகழாரம் சூட்டினார்கள். அங்கே கூடியிருந்த தமிழினியின் உறவினர்களைவிட, தமிழினியோடு ஒன்றாகப் பயிற்சி எடுத்தவர்கள், களமாடியவர்கள், அரசியற்பணி செய்தவர்கள், தோழமையோடு உறவாடியவர்கள், நெருங்கிப் பழகியவர்கள் எல்லோரையும் விட, அங்கே பிரசன்னமாகியிருந்த அரசியற் பிரமுகர்கள்தான் அவரைப்பற்றி அதிகமாகக் கதைத்தார்கள். தங்களுக்கும் தமிழினிக்கும் ஏதோ ஆத்மார்த்தமான உறவும் பாசப் பிணைப்பும் போராhட்ட உறவும் இருந்ததைப்போல உரையாற்றினார்கள். அதை நிரூபிப்பதற்காகச் சிலர் என்னென்னவோ கதைகளையெல்லாம் சொன்னார்கள். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கும் கேட்டுக்கொண்டிருந்தவர்களுக்கும் தலைசுற்றி மயக்கம் வராததே குறை.

ஏனென்றால், தமிழினியின் மரணம் இவர்களுடைய நிகழ்கால – எதிர்கால அரசியலுக்கான ஒரு சிறப்பான முதலீடாக இருந்தது. அதனால், அதைக் குறிவைத்து அவர்கள் தங்கள் வியாபாரத்தை நடத்தினார்கள்.

இதேவேளை இந்த அரசியற் பிரமுகர்களோ இவர்களுடைய கட்சிகளோ தமிழினி சிறையில் இருந்தபோதும் சரி, வழக்கு விசாரணைகளின் போதும் சரி அவருக்கு உதவ முன்வரவுமில்லை. அவரைச் சென்று பார்த்து ஆறுதல் கூறவும் இல்லை. சிறையிலிருந்து வெளியே வருவதற்காக அவர் சட்ட உதவியை நாடியபோது அதைச் செய்வதற்கு – வழக்காடுவதற்கான சட்டவாளரை ஏற்பாடு செய்து கொடுப்பதில்கூட எவரும் முறையான ஆதரவையும் உதவிகளையும் செய்திருக்கவில்லை. புலம்பெயர் சமூகத்தின் ஆதரவும் ஒத்துழைப்பும் கூடப் பெரிய அளவிற் கிட்டவில்லை. வாக்குறுதியளித்தவர்களும் உரிய நேரத்தில் பின்வாங்கினர்.

பின்னர் சிங்களச் சமூகத்தைச் சேர்ந்த சட்டத்தரணிகளின் உதவியோடு தனிப்பட்ட ரீதியில் தமிழ்ச் சட்டத்தரணிகளும் இணைந்தே தமிழினியின் விடுதலைக்கு உதவினார்கள். அவர்களுடைய வழிகாட்டலின்படியே தமிழினி புனர்வாழ்வு முகாமற்கு மாற்றப்பட்டு அங்கிருந்து விரைவில் விடுதலை செய்யப்பட்டார்.

புலிகளின் உயர்மட்டத்தலைவர்களில் விரைவில் விடுதலையானவர்களில் முக்கியமானவர் தமிழினி. தமிழினியின் இந்த விடுதலைக்கு சர்வதேச நெருக்குவாரங்களும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அவசியச் சமிக்ஞையை வெளிப்படுத்துவதற்கான அரசியலுமே காரணமாகின என்று சொல்லப்படுகிறது. எப்படியோ அவர் எதிர்பார்க்கப்பட்டதை விட விரைவில் விடுதலையாகினார்.

அவர் விடுதலையாகிய சந்தர்ப்பத்தில் வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடந்தது. இதனாtamilini-12ல் அவர் மாகாணசபைத் தேர்தலுக்காகவே அரசாங்கத்தினால் விரைவில் விடுவிக்கப்பட்டார் என்ற வதந்தி பரப்பப்பட்டது. கூடவே வடக்கு மாகாணசபைத்தேர்தலில் அவர் களமிறக்கப்படுகிறார் என்றும் அந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அவர் தயார் என்பதாகவும் சில ஊடகங்கள் எழுதின. இதை அடியொற்றி அந்த நாட்களில் பெரிய அளவில் ஊகநிலைச் செய்திகள் பரவின. முகப்புத்தகக் கணக்குகளில் தமிழினி முக்கிய பேசுபொருளாக்கப்பட்டார். ஏறக்குறைய தமிழரின் போராட்டத்திற்கு அவர் துரோகமிழைக்கிறார் என்ற சாரப்படவே அனைத்து அபிப்பிராயங்களும் இருந்தன.

எனினும் இவற்றையெல்லாம் அவர் தன்னுடைய நிதானத்தினாலும் கனத்தை மௌனத்தினாலும் அமைதியாகக் கடந்தார். அதேவேளை தன்னுடைய எதிர்கால வாழ்க்கையைத் தொடர்வதற்கான திருமண பந்தத்தில் இணைந்தார். தொடர்ந்து நிலைமைகளை அவதானித்தபடி அவருக்கிருந்த திறமையின் அடிப்படையில் எழுத்துலகில் இயங்கினார். எழுதத் தொடங்கிய தமிழினி மீண்டும் பொதுவெளியில் பிரவேசித்தார்.

இப்பொழுது அவர் தன்னுடைய கடந்த கால அனுபவங்களின் வழியில் இரண்டாவது பிறப்பாக புதிய பார்வைகளையும் புதிய அணுகுமுறைகளையும் கருத்தியலையும் கொண்டு எழுதினார், சிந்தித்தார். இன்னொரு பரிமாணத்தில் இயங்கினார்.

இப்படியிருக்கும்போதுதான் தமிழினி புற்றுநோய்த்தாக்கத்துக்குள்ளாகினார். அவரைத் தாக்கிய நோய் கண்டுபிடிக்கப்பட்டு – சிகிச்சை அளிக்கத்தொடங்கிய ஆறு மாதத்தில் அவர் மரணத்தைத் தழுவிக்கொண்டார்.

தமிழினி போராளியாக இருந்தபோது அவர் வகித்த பதவிநிலையினாலும் அவருடைய ஆளுமை காரணமாகவும் மிகப் பிரபலம் பெற்றிருந்தார். யுத்தத்தின் பிறகு அவர் தனிமைப்பட்ட நிலையில், ஆதரவற்றிருந்தார். விடுதலைக்குப் பின்னான காலத்தில் அவரைப் புரிந்து கொண்டு மணமுடித்த கணவரையும் அவருடைய குடும்பத்தினரையும் மிகச் சில நெருங்கிய நண்பர்களையும் தவிர, அவருக்கு எவருடைய ஆதரவும் உதவியும் கிட்டியதில்லை.

ஆனால், அவருடைய மரணத்தைக் கொண்டாட எதிர்பாராத முனைகளிலிருந்தெல்லாம் தலைகள் நீண்டன. இதுதான் வியப்பிலும் வியப்பு. விந்தையிலும் விந்தை.

தமிழினியின் மரணம் சொல்கின்ற சேதிகள் என்ன?

புலிகள் இயக்கத்தின் போராளிகளுக்கு இன்னும் மவிசு உண்டு. அவர்களின் மரணம் கூட தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளுடைய நிகழ்கால – எதிர்கால அரசியலுக்குத் துணைபுரிகிறது.
அவர்கள் தங்களுக்குப் போட்டியாகவும் பங்காளிகளாகவும் வராமல் இருந்தால் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள். பங்காளிகளாகவும் போட்டியாளர்களாகவும் வந்தால் துரோகிகள் - எதிரியின் ஆட்கள்.
ஒரு காலம் போராடியவர்கள், மதிப்போடும் வாய்ப்புகளோடும் இருந்தவர்கள் இப்பொழுது துயரங்களின் மத்தியில் அநாதரவான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையைப் போக்குவதற்கு யாரும் தயாரில்லை. ஆனால், இவர்களுடைய மரணத்தையும் பாதிப்புகளையும் வைத்து, இவர்களைப் புகழ்ந்து அரசியல் ஆதாயம் தேடலாம் என்ற நிலை.
போராளிகளாக இருந்தோரைப் பராமரிக்க வேண்டியதும் அவர்களுக்கு உதவ வேண்டியதும் அரசாங்கத்தின் கடமையும் பொறுப்புமாகும் என்பதே தமிழ்த்தேசியவாதிகளுடைய நிலைப்பாடு. ஆனால், அப்படி அரசாங்கம் அவர்களைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் முன்வந்தால் அவர்கள் அரசாங்கத்தின் ஆட்களாகவே பார்க்கப்படுவர். அரசாங்கத்தின் உதவியைப் பெறாதிருந்தால் அநாதரவான நிலையே தவிர, தேசியவாதத்தைப் பேசும் தமிழர்களால் ஒரு சுகமும் இல்லை.
ஆகவே முன்னர் போராடியவர்கள் இன்றைய அரசியல்வாதிகளுக்கான துரப்புச் சீட்டுகளாகப் பயன்படுத்தப்படுகிறார்கள். அவர்களைப் போற்றும் அளவுக்கு அவர்களை அரவணைக்கவும் அவர்களுக்காக ஆறுதலாக இருக்கவும் தயாரில்லை.
.அதேவேளை அவர்களின் அந்தரிப்புக்கும் கஸ்டமான நிலைக்கும் அரசாங்கமே முழுப்பொறுப்பும் என்று தொடர்ந்து பழியை அரசின் மீது சுமத்திவிட்டுத் தப்பித்து விடுதல்.
இப்படியே நாம் இந்தப் பட்டியலை எழுதிக்கொண்டு போகமுடியும். அந்த அளவுக்கு தமிழ் அரசியல் போராளிகளைச் சுற்றிப் படர்ந்திருக்கிறது. ஆனால், அது போராட்டத்தை விட்டு விலகியிருக்கிறது. கூடவே நாடகமயப்பட்டுள்ளது. பெரும் நடிகர்களால் நிரம்பியுள்ளது. இதையே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சில மாதங்களுக்கு முன், பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அரசியல் பிரமுகரான யதீந்திராவும் கவலையோடும் ஆத்திரத்தோடும் குறிப்பிட்டிருக்கிறார். மரணவீடுகளிலேயே நாடகமாடும் நடிகர்களாக மாறியிருக்கும் தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள் என்று.

மக்களுக்குச் சேவை செய்கின்ற அரசியல் கலாச்சாரம் மாறி, மக்களை வைத்து, அவர்களுடைய துயரங்களையும் அவலங்களையும் வைத்து அரசியல் செய்கின்ற ஒரு நிலை இன்று வளர்ச்சியடைந்துள்ளது. அதுதான் இன்றைய தமிழ்த்தேசிய அரசியலின் பிரதானமான போக்காகும்.

இதற்கு அவர்களுக்கு எப்பொழுதும் துணைநிற்பது, அல்லது அப்படியொரு வியூகத்தில் அவர்கள் கையாள்வது அரச எதிர்ப்பையும் சிங்கள எதிர்ப்புணர்வையுமே. இப்பொழுதும் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

தமிழினியின் மரண நிகழ்வு எழுப்பும் சில கேள்விகள்

தமிழினி விச ஊசி ஏற்றப்பட்டதால்தான் அவர் விரைவில் இப்படியானார் என்று சொல்லப்படும் கட்டுக்கதையின் பின்னாலுள்ள அரசியல். இந்த அறியாமைக்கும் முட்டாள்தனத்துக்கும் முடிவென்ன? எதிர்காலத்தில் புனர்வாழ்வு பெற்று வெளியானவர்களின் உளவியலில் இந்த வதந்தி ஏற்படுத்தப்போகும் தாக்கங்கள் எப்படியிருக்கப்போகின்றன?

தமிழினியின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள வந்தவர்கள் அன்றுதான் அவருடைய குடும்பத்தையும் அவர்கள் இருக்கின்ற வீட்டையும் வாழ்க்கையையும் பார்த்தனர். இதையொட்டி எழுந்த விமர்சனங்களை மெல்ல அரசாங்கத்தின் பக்கமும் கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த காலங்களில் முக்கிய பங்களிப்பைச் செய்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் மீதும் வைத்து விட்டுத் தாம் தப்பித்துக்கொண்டார்கள். இது எந்த அளவிற்கு நியாயமானது? எந்த வகையில் நியாயமானது?

.தமிழினியின் குடும்பத்தினர் இருக்கின்ற பரந்தன் - சிவபுரம் பகுதியில் உள்ள காணிகள் மத்திய வகுப்புத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே தனியாருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டவை. காணியைப் பெற்றவர்கள் அவற்றை உரிய காலத்தில் அபிவிருத்தி செய்யாத காரணத்தினால் அந்தக் காணிகளில் காணியற்றவர்கள் குடியேறினார்கள். அவர்களில் ஒரு குடும்பம் தமிழினியுடையது. ஆனால் இந்தக் காணிகளில் குடியிருப்போருக்கான ஆவணத்தை முறைப்படி சட்டரீதியாக வழங்க முடியாது. அப்படி வழங்கினால்தான் இவர்களுக்கான வீட்டுத்திட்டத்தையும் இவர்கள் குடியிருக்கும் பிரதேசத்துக்கான வீதிகள் உள்ளிட்ட அபிவிருத்தியையும் செய்ய முடியும். அப்படியானால் முதலில் காணியை சட்டபூர்வமாக வழங்குவதற்கான நடவடிக்கையே முதலில் தேவை. அப்படியான நடவடிக்கையை முன்னெடுத்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் முயற்சியைத் தடுத்து நிறுத்தும் விதமாகச் செயற்பட்டதே தமிழ்த்தேசியக்கூட்டமைப்புத்தான். பாராளுமன்றத்தில் இந்தக் காணிகளில் குடியிருப்போரை அங்கிருந்து அகற்றுவதற்கான சட்டமூலம் கொண்டு வந்து விரட்ட முனைந்தது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பே. இது எதற்காக?

.தமிழினியைப்போல ஆயிரக்கணக்கான போராளிகளும் போராட்டகாலத்தில் பாதிக்கப்பட்டவர்களும் உள்ளனரே. அவர்களையாவது இவர்கள் காப்பாற்ற மாட்டார்களா? அவர்களுக்கான உதவிகள் கிடையாதா? அதற்கான ஏற்பாடுகளை எப்படிச் செய்வது? அதை யார் செய்வது? அதை எப்போது செய்வது?

.புலம்பெயர் தமிழர்கள் தங்களிடையே ஒரு உதவிக்கட்டமைப்பை உருவாக்க இன்னும் தயங்குவதேன்? அவர்கள் இலங்கையில் தமிழர்களின் அரசியலில் தலையீடு செய்வதற்கு முண்டியடிக்கும் அளவுக்கும் போரை நடத்துவதற்காக உதவிய அளவிற்கும் போருக்குப் பின்னரான மீள் நிலைக்கு உதவப் பின்னிற்கும் காரணமென்ன?

.தங்களுடைய அரசியல் வெற்றிகளுக்கும் இருப்பிற்கும் புலிகள் தேவை. ஆனால், அவர்களுக்கு உதவவோ, அவர்களை மீட்கவோ உதவத்தயாரில்லை. அவர்கள் நலிவடைந்து இறந்து பட்டபின் அவர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிப்பது நியாயம்தானா? இதை இன்னும் எவ்வளவு காலத்துக்கு நாம் அனுமதிக்கப்போகிறோம்?

போர் முடிந்து ஆறு ஆண்டுகள் முடிந்து விட்டன. புனர்வாழ்வு பெற்ற போராளிகள் பலர் வீடு திரும்பி விட்டனர். வடக்கு மாகாணசபை இயங்கத் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. பல நூறுதடவை புலம்பெயர் நாடுகளுக்குப் பயணம் போய் வந்திருக்கிறார்கள் இந்த மக்கள் பிரதிநிதிகள். இப்படியான நிலையில் ஏன் இன்னும் ஒரு சிறு உதவித்திட்டத்தையோ அதற்கான கட்டமைப்பையோ உருவாக்காமல் இந்தப் போராளிகளைச் சீரழிய விட்டிருக்கின்றனர்?

.விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்காக எப்போதும் நீலிக்கண்ணீர் விடும் தமிழ்த்தேசிய அரசியற் தரப்பினர், அவர்களை தங்களுடைய அரசியற் பங்காளிகளாக ஏற்க மறுப்பதேன்?

.தமிழினி இறந்ததைப்போல ஒவ்வொருவரும் இறந்து படத்தான் வேணுமா? அப்போதுதான் அந்த மரண நிகழ்வுகளை அரசியல் மேடையாகப் பயன்படுத்துவதற்குச் சாத்தியங்கள் கிடைக்குமா?

எனவே இதுபோன்ற உண்மை நிலையை தமிழினியை முன்வைத்து இன்று பலரும் சிந்திக்க வேண்டியுள்ளது. தமிழினி போரின் இறுதியின்போதும் சிறை வாழ்வுக்காலத்திலும் புனர்வாழ்வுக்காலத்திலும் பெற்றுக்கொண்ட அனுபவங்களும் அதன் பின்னான அவருடைய சிந்தனைகளும் முற்றிலும் வித்தியாசமானவை. இதை அவருடைய முகப்புத்தகக்குறிப்புகளில் யாரும் அவதானித்திருக்க முடியும். அவர் பின்னாளில் எழுதிய இலக்கியப்பிரதிகளிலும் இது பிரதிபலித்திருக்கிறது. அவர் வடக்கு மாகாணசபையின் இயங்குதிறனற்ற நிலையைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். தமிழ்த்தேசியத்தை முகமூடியாகப் பாவித்துக் கொண்டு மக்களை ஏமாற்றும் கயமைத்தனத்தைக் கண்டு கோபமடைந்திருக்கிறார். இதையெல்லாம் புரிந்து கொண்டு சிந்திப்பதுதான் அவருக்குச் செய்கின்ற மரியாதையாகும். அதுவே அவருக்கான உண்மையான அஞ்சலியுமாகும்.

Read more...

Tuesday, October 27, 2015

சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர தோள்கொடுத்த மத்தியதர வர்க்க குழுக்கள் அதிருப்தியடைகின்றன. W.A. Sunil

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ’நல்லாட்சிக்கான’ ஐக்கிய தேசிய முன்னணியை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக வக்காலத்து வாங்கிய மத்தியதர வர்க்க அமைப்புகள் மற்றும் குழுக்களும், இப்போது அரசாங்கம் சம்பந்தமாக தமது கவலைகளை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளன. பிரமாண்டமான அமைச்சரவையை கொண்ட தேசிய அரசாங்கத்தை அமைத்தமை, அநியாயக்காரர்களுக்கும் இலஞ்ச-ஊழல்காரர்களுக்கும் எதிராக சட்ட நடவடக்கை எடுப்பதில் அரசாங்கம் “தோல்வியடைந்துள்ளமை” தொடர்பாகவே அவர்களது பிரதான விமர்சனங்கள் உள்ளன.

நியாயமற்ற முறையில் பெருந்தொகை அமைச்சர்களை நியமித்தமை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ சென்ற பாதையிலேயே வெட்கமற்று செல்கின்றது, என செப்டெம்பர் 10 நடத்திய ஊடக சந்திப்பில் சமூக நியாயத்துக்கான தேசிய இயக்கத்தின் (ச.நி.தே.இ.) தலைவர் மாதொலுவாவே சோபித தேரர் அரசாங்கத்தை குற்றம் சாட்டினார். “இது தொடருமெனில் பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரும் அமைச்சர்களாவதை நாம் விரைவில் காண்போம்” என அவர் குறிப்பிட்டார். அப்படியெனில் “19வது அரசியலமைப்புத் திருத்தமும் கேலிக்கூத்தாக்கப்படக் கூடும்” என அவர் மேலும் கூறினார்.

ச.நி.தே.இயக்கமானது அரச சார்பற்ற அமைப்புகள், தொழிற்சங்கள், கலைஞர்கள் மற்றும் தொழில் வல்லுனர்களும் அடங்கிய அமைப்பாகும். இராஜபக்ஷ ஆட்சியின் கீழ் தமது வரப்பிரசாதங்களை இழந்த உயர் மத்தியதர வர்க்க சமூகத் தட்டையே அவர்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

19வது அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ், அமைச்சரவை 30 ஆகக் குறைக்கப்பட்டுள்ள போதிலும், அரசாங்கம் ஒன்றை அமைக்கும் போது அந்த எல்லையை கடந்து செல்லும் விதிகள் குறிப்பிட்ட யாப்பு திருத்தத்தில் சேர்க்கப்பட்டமை, ஆளும் வர்க்கத்துக்கு தேவையானவாறு அரசியல் இலஞ்சம் கொடுப்பதற்கே. தாம் 19வது அரசியலமைப்புத் திருத்தத்தில் அத்தகைய ஒன்று இருந்து என்பதை அறிந்திருக்கவில்லை என்று சுட்டிக்காட்டுவதற்கு சோபிதவும் ச.நி.தே.இயக்கமும் இப்போது எடுக்கும் முயற்சி முற்றிலும் வஞ்சத்தனமானதாகும்.

ச.நி.தே.இ., “ஜனநாயகத்தின் முன்நகர்வாக” 19வது திருத்தத்தை வருணித்தது. அதே போல் நிறைவேற்று ஜனாதிபதி முறை தூக்கி வீசப்பட்டு, நியாயமான “ஜனநயாகமும் நல்லாட்சியும்” நாட்டுக்குள் ஸ்தாபிக்கப்படும் என ச.நி.தே.இ. மக்கள் மத்தியில் ஆழமான பிரச்சாரத்தை முன்னெடுத்திருந்தது.

எதிர்கால பரம்பரைக்காக மிகவும் சிறந்த சமூகத்தை கட்டியெழுப்பும் தமது முயற்சிக்கு கிடைத்துள்ள பதிலிறுப்பையிட்டு தனது குழு “வெட்கப்படுகிறது” என ச.நி.தே.இ. முன்னணி செயற்பாட்டாளரும் நாடக திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான தர்மசிறி பண்டாரநாயக்க கடந்த வாரத்தில் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

பிரமாண்டமான அமைச்சரவையை அமைப்பதை மக்கள் எதிர்பார்க்கவில்லை என கூறிய பண்டாரநாயக்க, மக்களால் நிராகரிக்கப்பட்ட நபர்களை ஆட்சிக்கு கொண்டுவருவதை “மாற்றம்” என ஏற்றுக்கொள்ளமளவுக்கு தமது குழு “அறிவற்றது” அல்ல, என குறிப்பிட்டார். நல்லாட்சி பற்றிய எதிர்பார்ப்பு தகர்ந்து போன மக்கள் கேள்வி எழுப்புவது, அரசாங்கத்திடமோ அமைச்சர்களிடமோ அல்ல, தமது குழுவிடமே என பண்டாரநாயக்க கூறினார்.

மற்றொரு முன்னணி ச.நி.தே.இ. உறுப்பினரும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவருமான கலைஞர் கலாநிதி சந்திரகுப்த தேநுவர, “தேசிய அரசு பற்றிய கலந்துரையாடலின் மத்தியில், தேசியக் குற்றங்கள் தரைவிரிப்புக்கு அடியில் தள்ளப்பட்டுள்ளன,” என குற்றம் சாட்டினார். ஏகாதிபத்திய மற்றும் மஹிந்த இராஜபக்ஷவின் ஊழல் மற்றும் விரோத செயல்களுக்கு எதிராக தாம் குரல் எழுப்பி இருந்த போதிலும், நல்லாட்சியின் கீழும் அவை தொடர்ந்தும் இடம்பெறுவதாக தேநுவர வாய்ச்சவடால் விடுத்தார்.

தாமே ஜனநாயக மற்றும் நல்லாட்சி என்ற போர்வையை அணிவித்துவிட்ட சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அதிக காலம் எடுப்பதற்கு முன்னரே, முன்னாள் ஜனாதிபதியை போலவே ஜனநாயக விரோதிகள் என தொழிலாளர்கள் மற்றும் வறியவர்களின் கண் முன்னால் அம்பலப்படத் தொடங்கியுள்ளதால், இந்தக் “கல்விமான்கள்” இன் வால் மிதிபட்டு குழப்பிப் போயுள்ளனர். சிறிசேன மற்றும் விக்கிரமசிங்கவும், ஊழல்காரர்களாக தோலுரிக்கப்பட்டவர்களுடன் சேர்ந்து ஐ.தே.க.-ஸ்ரீ.ல.சு.க. கூட்டணி ஒன்றை அமைத்துக்கொண்டிருப்பது ஏன்? என கேட்காகாமல் இருப்பது உண்மையை மூடி மறைப்பதற்காகும்.

“தேசிய அரசாங்கம்” ஒன்று அமைக்கப்பட்டிருப்பது பிரதானமாக இரண்டு விடயங்களின் அடிப்படையில் ஆகும். ஒன்று, சீனாவுக்கு எதிரான போர்வாத “ஆசியாவில் முன்னிலையில்” கொள்கையை முன்னெடுக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் அணிதிரள்வதை உறுதிப்படுத்திக்கொள்வதற்காகும். மற்றையது பூகோள பொருளாதார நெருக்கடியின் பாகமாக இலங்கையின் நெருக்கடியும் ஆழமடைந்து வரும் நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின் கீழ், சிக்கன நடவடிக்கைகளை கொடூரமாக முன்னெடுக்கவும், அதற்கு எதிராக வெடிக்கும் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் போராட்டங்களை ஒடுக்குவதற்கும் முதலாளித்துவ ஆட்சியின் கைகளைப் பலப்படுத்திக்கொள்வதற்கே ஆகும்.

ச.நி.தே.இ. தலைவர்களுக்கோ ”கல்விமான்கள்” மற்றும் கலைஞர்களின் சபைகளுக்கு சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தின் அமெரிக்கச் சார்பு வேலைத் திட்டம் பற்றி “வெட்கம்” இல்லை. அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் ஜனநாயகத்தை உருவாக்கத் தலையீடு செய்துள்ளதாக அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். போலி-இடது நவ சம சமாஜக் கட்சி தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன செய்தது போலவே, சிறிசேன மற்றும் விக்கிரமசிங்கவுக்கு தோள் கொடுத்ததன் மூலம், அவர்கள் அமெரிக்கா நேரடியகா இலங்கைக்குள் மேற்கொண்ட ஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைத்தனர்.

அரசாங்கத்துக்கு எதிராக, தமது உரிமைகளுக்காக தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் வறியவர்கள் போராட்டங்களுக்கு வரும்போது, அவற்றுக்கு எதிராக ஜனநாயகத்தை பாதுகாத்தல் என்ற பெயரில் இந்த மத்தியதர வர்க்க அமைப்புகள் எகிறிப் பாய்ந்தமை புதுமையானது அல்ல.

Read more...

Monday, October 26, 2015

அரசனை நம்பி புருஷனை கைவிட்ட நிலையாகுமா கர்ணல் கருணாவின் நிலை.

புலிகளின் முன்னாள் கிழக்கு தளபதி கர்ணல் கருணா என்கின்ற முரளிதரன், சிறி லங்கா சுதந்திரக் கட்சியினால் சன்மானமாக வழங்கப்பட்ட உபதலைவர் பதவியைத் தமிழ் மக்களின் நலனுக்காக துறந்து தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பான தனது அறிவிப்பில் „ தமிழ் மக்களின் தாய்க்கட்சியில் இணைந்து கொள்ளப்போவதாகவும், இனிமேல் சிங்களக் கட்சிகளுடன் இணைந்திருக்கப்போவதில்லை' என்றும் அறிவித்துள்ளார்.

கர்ணல் கருணா சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் தான் வகிக்கும் பதவிகளுக்கு இராஜனாமா கடிதத்தைத்தையும் வழங்கியுள்ளார். இராஜனாமா தொடர்பில் அததெரணவிற்கு கருத்துரைத்த முன்னாள் கர்ணல் „சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் எனக்கும் எந்த பிணக்கும் கிடையாது. என்னுடைய சொந்த அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இம்முடிவை எடுத்துள்ளேன்' என தெரிவித்துள்ளார்.

எது எவ்வாறாயினும் முன்னாள் கர்ணல் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணையவிருப்பதாக வெளியான செய்திகள் தொடர்பில் அக்கட்சியின் தலைவர் ஆனந்தசங்கரி வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் கர்ணலை இணைத்துக்கொள்வது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கருணாவை தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைத்துக்கொள்வதாக ஆனந்தசங்கரி ஒப்புதல் வழங்கியுள்ளபோதும் கட்சியின் புலம்பெயர் ஆதரவாளர்கள் மற்றும் உள்ளுர் முக்கியஸ்தர்கள் சிலர் சங்கரியின் முடிவினை எதிர்த்து வருவததாக அறியக்கிடைக்கின்றது.

இந்நிலைமை முன்னாள் கர்ணலை அரசனை நம்பி புருஷனை கைவிட்ட நிலைக்கு இட்டுச்செல்லுமா என்ற அச்சத்தை தோற்றுவித்துள்ளது.

எது எவ்வாறாயினும் தமிழர் விடுதலைக் கூட்டணி தற்போது சங்கரியின் தனிச்சொத்தாக மாறியுள்ள நிலையில் கர்ணல் கைவிடப்படமாட்டார் என்றே நம்பப்படுகின்றது.

Read more...

Sunday, October 25, 2015

புலம்பெயர் தமிழர் அங்கிருந்து ஈழம் என ஊழையிடுவதை தவிர்த்து இங்கு வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவேண்டும். விக்கி

இலங்கையின் இலவசக் கல்வி மூலம் பட்டம் பெற்றபின் வெளிநாடுகளுக்குச் சென்று குடியேறுபவர்கள் உள்நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அங்கிருந்து குரல் கொடுப்பதைவிட, இங்கு வந்து அவர்களுக்கு சேவையாற்ற முன்வர வேண்டும் என வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்திருக்கின்றார்.

யாழ் நகரில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றின் ஆசிரியர்கைளப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இந்த வேண்டுகோளை வெளியிட்டிருக்கின்றார்.

பட்டப்படிப்பு முடிந்த பின்னர், பொறியியல் மற்றும் மருத்துவ துறைசார்ந்தவர்கள் திறன்சார் குடிபெயர்வில் வெளிநாடுகளில் சென்று குடியேறிவிட்டு, உள்நாட்டில் ஈழம் வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிபுரிய வேண்டும் என்று குரல் கொடுப்பதையும் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

வெளிநாட்டில் உள்ளவர்கள் தமது உழைப்பின் மூலம் கிடைக்கும் பணத்தை மாத்திரம் அனுப்பினால் போதாது, யுத்தத்தினால் பல வழிகளிலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நேரடியாக இங்கு வந்து சேவையாற்ற வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.

எனவே, பட்டப்படிப்பு முடிந்ததும் துறைசார்ந்தவர்கள் குறைந்தது மூன்று வருடங்களாவது உள்நாட்டில் பணியாற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருக்கின்றார்.

இதற்காக சட்டம் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டிருப்பதாகவும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Read more...

மாவையின் பாராளுமன்ற உரை (22-10-2015) சிங்கள பௌத்த தேசியவாதிகளுக்கு ஊக்கமளிப்பது. வி.சிவலிங்கம்

மாவையின் பாராளுமன்ற உரை - கண்டிக்கத்தக்கது. - - பிற்போக்குத்தனமானது. - - சந்தர்ப்பவாத அரசியல் நோக்கம் கொண்டது. - - சிங்கள பௌத்த தேசியவாதிகளுக்கு ஊக்கமளிப்பது.

சில தினங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் ஜெனீவா தீர்மானம் தொடர்பான விவாதம் இடம்பெற்றிருந்தது. இவ் விவாதத்தின் போது தமிழர் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவரும் தமிழரசுக் கட்சியின் செயலாளருமான மாவை அவர்கள் ஆற்றிய உரை பல சந்தேகங்களை உருவாக்கி உள்ளது. பிரச்சனைகளைப் பேசித் தீர்ப்பதற்கான முயற்சியில் கட்சியின் தலைமை ஈடுபட்டுள்ள அதேவேளை பிரிவினைக் கருத்துக்களை மீண்டும் அவர் வற்புறுத்துவது உள்நோக்கம் கொண்டதாக உள்ளது.

கடந்த வியாழக்கிழமை ( 22-10-2015) பாராளுமன்றத்தில் ஐ நா சபையின் மனித உரிமை ஆணைக்குழுவின் தீர்மானம் தொடர்பான விவாதங்கள் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகளில் சர்வதேச உறுப்பினர்களை இணைப்பது தொடர்பான விவாதம் மிகவும் காரசாரமாக இடமபெற்றது. இவ் விவாதங்களின் போது தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ச அவர்கள் சர்வதேச தலையீட்டை வன்மையாக கண்டித்து உரையாற்றினார். அவரின் உரையின்போது சிங்கள மக்களின் அடையாளத்தினையும், அரசின் இறைமையையும் பாதுகாப்பதற்கு சகல சிங்கள மக்களும் இணைய வேண்டும் என அறைகூவல் விடுத்தார். மிகவும் இனவாத கருத்துக்கள் செறிந்த அவரது உரையை ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்களைத் தவிர எவரும் ஆதரிக்கவில்லை. இவ்வாறான மிகவும் பிற்போக்குத்தனமான பெருந்தேசியவாத வெறித்தனமான அரசியலை மக்கள் கடந்த ஆகஸ்ட் 17ம் திகதிய பொதுத் தேர்தலின்போது நிராகரித்திருந்தனர். சிங்கள மக்களால் நிராகரிக்கப்பட்ட சிங்கள பௌத்த தீவிரவாத சக்திகள் பாராளுமன்றத்திலும் பலம் குறைந்த நிலையில் தமது அரசியலைத் தக்க வைக்க இவ் அரசியலை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இவை மாவை சேனாதிராஜா அவர்களுக்கு இவை தெரியாத சங்கதிகள் அல்ல. ஆனால் இவ் விவாதத்தின் பொது அவர் பதிலளித்த விதம் தமிழரசுக்கட்சி, கூட்டமைப்பின் அரசியலின் முதிர்ச்சி தொடர்பான பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இனப் பிரச்சனைக்கான தீர்வுகளை அரசு தர மறுக்கும் பட்சத்தில் சர்வதேச அரசுகளின் உதவியுடன் தனியான அரசை நிறுவ தாம் நிர்ப்பந்திக்கப்படுவோம் என எச்சரித்திருப்பது அரசிற்கும் கூட்டமைப்பிற்குமிடையேயான பேச்சுவார்த்தைகளின் உள் நோக்கம் குறித்த சந்தேகங்களை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. தமிழீழக் கோரிக்கைiயை தாம் ஏற்கவில்லை எனவும், பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கைக்குள் அதிகார பரவலாக்கத்தின் அடிப்படையிலான தீர்வை நோக்கி அரசுடன் பேசுவதாகவும் கூறிவரும் தமிழரசுக் கட்சியும், கூட்டமைப்பும் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வு குறித்து கொண்டுள்ள அடிப்படைகளில் தற்போது கேள்வி எழுந்துள்ளது.

ஐக்கிய இலங்கைக்குள்ளான தீர்வு என்பது ஓர் தற்காலிக, சந்தர்ப்பவாத நோக்கங்களுக்காக எடுக்கப்பட்டதா? பிரிவினைக் கோரிக்கை என்பது நிரந்தரமாக கைவிடப்பட்டதா? அல்லது தற்காலிக முடிவா? தேசிய இனப் பிரச்சனைக்கான முயற்சிகள் சர்வதேச உதவிகளுடன் எடுக்கப்பட்டு வரும் இவ் வேளையில் மாவையின் கருத்துக்கள் சிங்கள பௌத்த தேசியவாதிகளை உற்சாகப்படுத்தி நிலமைகளைச் சீரழிக்க எடுத்த முடிவா? இம் முடிவின் பின்னால் செயற்படும் சக்திகள் யார்? இவ் விவாதத்தின் போது ஐ நா சபை மனித உரிமை ஆணைக்குழுவின் தீர்மானத்தினையும் அவர் கண்டித்திருப்பது மேலும் சந்தேகங்களை வலுப்படுத்தியுள்ளது. மனித உரிமை ஆணக்குழவின் தீர்மானத்தினை வடிவமைப்பதில் அமெரிக்காவும், இலங்கையும் ஈடுபட்டிருந்தபோது கூட்டமைப்புடனும் சம காலத்தில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது. இவற்றில் சுமந்திரன் அவர்கள் ஈடுபட்டிருந்தார். அவ்வாறானால் தீர்மானத்தில் கூட்டமைப்பின் சம்மதமும் பெறப்பட்டதாகவே நாம் கொள்ள முடியும்.

இந்த விவாதங்களின் போது கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் அவர்கள் உரையாற்றும் போது உண்மை, நீதி, வந்தி செலுத்துதல், மீள எழாமல் தடுத்தல் என்ற தீர்மானத்தின் வார்த்தைப் பிரயோகங்களின் உள்ளார்ந்த அர்த்தங்கள் உண்மையான நல்லிணக்க முயற்சிகளில் வெளிப்பட வேண்டுமென கேட்டுக்கொண்டதோடு, பாராளுமன்றத்தில் உள்ள பெரும்பான்மை உறுப்பினர்கள் கடந்த காலத்தில் ஏற்பட்ட தவறுகளை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் கூறினார். அதாவது பாராளுமன்றத்தில் நல்லிணக்கத்திற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதை அவர் தெரிவித்த அதேவேளை மிகவும் குறைந்த தொகையிலுள்ள விமல் வீரவன்ஸ போன்றோரின் கருத்துக்களுக்கு மாவை அவர்கள் இவ்வாறு பதிலளித்தமைக்கான காரணம் என்ன? தீர்மானத்தை முழுமையாக செயற்படுத்த அரசு முயற்சிக்க வேண்டுமென சம்பந்தன் அரசைக் கேட்டிருந்தார். அவ்வாறானால் மனித உரிமை ஆணைக்குழுவின் தீர்மானத்தினை கட்சியின் முக்கிய தலைவரான சம்பந்தன் அவர்கள் ஆதரித்துள்ளதாகவே நாம் கொள்ள வேண்டும். இந் நிலையில் மாவை அதனை எதிர்த்துப் பேசியதன் நோக்கமென்ன?

கட்சிக்குள் மிக மோசமான பிளவுகள் ஏற்பட்டுள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. கட்சியின் ஒரு சாரார் அக் கட்சியின் புதிய அணுகுமுறையை முழமையாக ஏற்கவில்லை என்பது தெளிவாகிறது. ஒரு புறத்தில் வட மாகாண முதல்வர் கூட்டமைப்பிற்கு எதிராக பேசி வருகிறார். இன்னொரு புறத்தில் மாவை பேசுகிறார். கட்சி கட்டுப்பாட்டை இழந்து விட்டது. ஆளுக்ககொருவராக, ஆளுக்ககொரு கொள்கையை, ஆளுக்கொரு கோணத்தில் வலியுறுத்துகிறார்கள். தமிழரசுக் கட்சி, தமிழர் கூட்டமைப்பு என்பன மிகவும் செயலிழந்து வருவதை காணக்கூடியதாக உள்ளது. புதிய அரசியல் நிலமைகளுக்கு ஏற்ப தமது அணுகுமுறைகளை மாற்றும் சக்தியை இக் கட்சி இழந்து விட்டது. இதனால் இன்னொரு முள்ளிவாய்க்கால் ஆபத்து காத்திருக்கிறது. கூட்டமைப்பின் இத்தகையை மோசமான அரசியலைத் தட்டிக் கேட்க தமிழ்ப் பிரதேசங்களில் வலுவான கட்சியோ அல்லது சமூக இயக்கங்களோ இல்லாதது மேலும் பல ஆபத்துகளை ஏற்படுத்தப்போகிறது. மாவை போன்றவர்களின் தலைமை குறித்த பல கேள்விகள் எழுகின்றன. கட்சி எடு;த்துள்ள முடிவுகளை அக் கட்சியின் முக்கியஸ்தர்களே ஏற்றுக் கொள்ளாத நிலையில் இத் தீர்மானங்களை யார் எடுத்தார்கள்? இந்த சக்திகள் யார்? தற்போதைய நல்லிணக்க சூழலை குலைக்க பின்னணியில் செயற்படும் சக்திகள் யார்?

இவ் விவாதங்களின் போது ஜே வி பி இன் தலைவர் அனுரா குமார திஸாநாயக்கா அவர்கள் கூட்டமைப்பினரை நோக்கி எமது மக்கள் எதிர்நோக்கியுள்ள இச் சிக்கல்களைத் தீர்க்க இந்தியாவை அல்லது சர்வதேச சமூகத்தை நோக்கி ஓட வேண்டாமென வேண்டுகோள் விடுத்தார். இக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சம்பந்தன் அவர்கள் பண்டா – செல்வா ஒப்பந்தம் புதுடெல்கியில் ஏற்படவில்லை எனவும், அதே போல டட்லி- செல்வா ஒப்பந்தம் அமெரிக்காவில் ஏற்படவில்லை எனவும் கூறி அவை கிழித்ததெறியப்பட்டதற்கான காரணங்களை விளக்கினார். இவ் விவாதத்தில் சம்பந்தன் அவர்கள் பிரச்சனைக்கான தீர்வு உள்நாட்டில் காணப்படவேண்டுமென்பதை வெளிப்படுத்தியதோடு சர்வதேச உதவி தேவைப்படாது என்பதையும் மறைமுகமாக கோடிட்டிருந்தார். கட்சியின் தலைவரின் உரை மிகவும் காத்திரமானதாகவும், சிங்கள மக்கள் நம்பிக்கை கொள்வதற்குமான முயற்சியில் இறங்கும் போது சர்வதேச உதவியுடன் தனிநாடு காணப்போவதாக மாவை கூறுவது நிலமைகளை மிக மோசமாக்க உதவுகிறது.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இவ் விவாதங்களை உற்று நோக்கும்போது பிரச்சனைகள் பேசித் தீர்க்கப்படுவதை இழுத்தடிப்பதற்கான முயற்சிகள் தற்போது தமிழ்ப் பகுதிகளில் ஆரம்பித்திருப்பதை காணக்கூயதாக உள்ளது. கட்சிகளின் முக்கியமான பதவிகளில் இருப்பவர்களின் மத்தியிலே காணப்படும் முரண்பாடுகள் மிக மோசமான விளைவுகளை நோக்கித் தள்ளப் போகின்றன. சிங்கள பௌத்த தீவிரவாத சக்திகள் தம்மால் முடிந்த அளவிற்கு இனவாத விஷங்களை வெளிப்படுத்துவதன் மூலம் தமிழ் இனவாத சக்திகளை தூண்ட முயற்சிக்கின்றன. இதனால் பதில் இனவாத அரசியலில் தம்மை வளர்த்தவர்கள் புதிய இணக்க அரசியலின் தாற்பரியங்களைப் புரிந்து கொள்ளச் சக்தியற்ற நிலையில் உள்ளனர். இவர்கள் தலைமைப் பீடங்களிலிருந்து வெளியேறி புதிய நிலமைகளுக்கு ஏற்ற புதிய தலைமுறையினருக்கு வழிவிடுவதே சாலச் சிறந்தது.

இலங்கையின் பாராளுமன்ற அரசியலில் தற்போது பாரிய மாற்றங்கள் ஏற்படவுள்ளன. உலக நாடுகளின் சட்ட திட்டங்கள் யாவும் ஓர் பொதுவான கட்டமைப்பிற்குள் செல்வதை நாம் அவதானிக்கலாம். அரசின் இறைமை அதிகாரம் என்பது புதிய வியாக்கியானங்களுக்குள் செல்கிறது. தமிழ் இறைமை, சிங்கள இறைமை என்பது காலாவதியாகியுள்ள கோட்பாடுகளாகும். இதிலிருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் விமல் வீரவன்ச போன்றோர் மாவை போன்றோருக்கு பிரதான அரசியல் எதிரிகளாக தோற்றப்படலாம். அதேவேளை பெருந்தொகையான சிங்கள உறுப்பினர்களின் ஆதரவு அவரது கவனத்திற்குச் செல்லவில்லை. இது மிகவும் ஆச்சரியமானது. நிலமைகள் வெகுதூரம் சென்றுவிட்டன. மக்கள் இம் மாற்றங்களைப் புரிந்து கொள்ளாதவரை இரண்டாவது முள்ளிவாய்க்காலும் தவிர்க்க முடியாதது.

Read more...

Saturday, October 24, 2015

ஐ.நா. சபையின் விசாரணை தமிழ்த் தேசியத்தின் ஒரு கானல்நீர்!

இலங்கையின் 1977 ஆவணி இனக் கலவரத்தைத் தொடர்ந்து நாட்டில் அரசுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிக்கத் தொடங்கின. 1978 அக்டோபர் 5ம் நாள் ஐ.நா.சபைக் கூட்டத் தொடரின் போது அனுமதியின்றி உள்ளே நுழைந்து மேடை ஏறிய திரு வைகுந்தவாசன் பின்வருமாறு உரை நிகழ்த்தினார்.

"பேரவைத் தலைவர் அவர்களே! உலகத் தலைவர்களே!! தமிழ் ஈழம் போன்ற ஒடுக்கப்படும் நாடுகளைக் கொண்ட நாடுகள் உலக நாடுகளின் உச்சப் பேரவையான இங்கே எங்கள் இன்னல்களைக் கூறாமல் வேறு எங்கே போய் எடுத்துக் கூறுவது? அருள் கூர்ந்து என்னை ஒரு மணித்துளி பேசுவதற்கு அனுமதியுங்கள்!

என் பெயர் கிருஸ்ணா. இந்தியாவிற்கும் சிறீலங்காவுக்கும் இடையேயுள்ள 25 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட 'தமிழீழம்" நாட்டிலிருந்து பிரதிநிதியாக வந்திருக்கிறேன். சிறீலங்கா அரசு சிறுபான்மை இனத்தோரைத் துன்புறுத்தி ஒடுக்கும் கொள்கையைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. தனிநாடாக வாழ்வதற்கு எங்களுக்குள்ள உரிமையை நாங்கள் பயன்படுத்துவதற்கு அறிவித்துள்ளோம். தமிழர் சிக்கல் இந்தியப் பகுதியின் அமைதியையும் அச்சுறுத்திக் கொண்டுள்ளது. உலகத் தலைவர்களாகிய நீங்கள் இதில் தலையிட்டுத் தீர்வு காணாவிட்டால் எங்கள் பிரச்சனையும் பாலஸ்தீனியர்களினதும் சைப்ரஸ் நாட்டினதும் போராட்டம் போல் உருவெடுக்கும்"

1979ல் இலங்கையின் வடபகுதியில் அவசரகாலச் சட்டம் அமுல் செய்யப்பட்டு இராணுவத்தினரால் தமிழ் இளைஞர்கள் கைது செய்ப்பட்டுக் கொலையுண்டும் காணாமலும் போயினர்.

1981ல் இலங்கையில் மலையகத் தமிழர்களுக்கு எதிராக ஒரு இனக்கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. பலர் கொல்லப்பட தப்பியோர் அகதிகளாக வவுனியாவுக்கு வந்து சேர்ந்தனர்.

1983 யூலைக் கலவரமும் அதில் ஆயிரக்கணக்கில் இடம்பெற்ற படுகொலைகளும் இலட்சக் கணக்கில் இலங்கைத் தமிழர்களை தமிழ்நாட்டுக்கும் மேற்கத்தைய நாடுகளுக்கும் தப்பி ஓட வைத்தது. சர்வதேசம் இலங்கைத் தமிழர்கள் நிலைபற்றி பூரணமாக அறிந்து கொண்டது. தி.மு.க. தலைவர் கருணாநிதி 10 இலட்சம் கையொப்பம் இட்ட மனு ஒன்றை ஐ.நா.வுக்கு அனுப்பி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தனது ஆலோசகரான அமைச்சர் பண்ருட்டி இராமச்சந்திரனை இந்தியப் பிரதமர் இந்திராகாந்தியுடன் நியூயோக் அனுப்பி பிரதமர் முன்னிலையில் ஐ.நா.சபையில் இலங்கைத் தமிழர் சார்பாக அவரைப் பேச வைத்தார். அத்துடன் (25.11.83 திகதியில்) இராமச்சந்திரன் இலங்கைத் தமிழர்கள் படும் இன்னல்களை நிரூபணம் செய்யும் ஆவணங்களை அன்றைய ஐ.நா.வின் பொதுச் செயலாளர் ஜாவியர் பேரஸ் டி கூலர் ( Javier Pérez de Cuéllar) கையில் கையளித்தார். அதே சமயம் கூட்டத் தொடர் முடிந்ததும் திருமதி இந்திராகாந்தி அமெரிக்காவில் உள்ள இலங்கைத் தமிழர்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை நன்கு கேட்டறிந்து கொண்டார்.

1987 மார்ச் மாதம் இடம் பெற்ற ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழுக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக செனகல் நாடு முன்மொழிந்த தீர்மானத்தை ஆர்ஜன்டீனா கனடா நோர்வே ஆகிய நாடுகள் ஆதரித்து இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை உலகத்திற்குப் பகிரங்கப்படுத்தின. அதனையடுத்து அதேயாண்டு யூலையில் இலங்கைக்கு இந்திய அமைதிப்படை வந்ததன் மூலம் உலகம் முழுவதும் இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைகளை ஐயந்திரிபறப் புரிந்து கொண்டன.

2009ல் வன்னி யுத்தத்தின் பிற்பகுதி வரைக்கும் நேரடிப் பார்வையாளராகவும் போரின் இறுதி நாள் வரைக்கும் ஆழ்ந்த கவனிப்பாளராகவும் செயற்பட்ட ஐ.நா.சபை தனது இயலாமை பற்றி பகிரங்கமாகவே வருத்தம் தெரிவித்துக் கொண்டது.

2012 முதற் கொண்டு இலங்கைக்கு எதிராக ஐ.நா.மனித உரிமை சபையில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இலங்கையின் இனப்படுகொலை தொடர்பாக ஒரு சர்வதேச விசாரணை இடம்பெறும் என பிரச்சாரம் நடாத்தப்பட்டு வந்தது. 2015 அக்டோபர் மாதம் அது 'யுத்தக் குற்றம்" பற்றி வெளிநாட்டு ஆலோசனை அடங்கிய உள்ளக விசாரணை என்ற முடிவை எட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை (ஐ.நா.சபை) என்பது தற்போது 193 உலக நாடுகளை அங்கத்தவர்களாகக் கொண்டுள்ளது. அதன் ஒரு அங்கமாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை உள்ளது. 15 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் இந்தப் ஐ.நா.பாதுகாப்புச் சபையில் 5 நிரந்தர உறுப்பினர்களும் 10 நிரந்தரமற்ற (இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை தெரிவு செய்யப்படும்) உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரித்தானியா ஆகியவையே நிரந்தர உறுப்பினர்களாகும். ஐ.நா.அமைப்பு விதிகளின் பிரகாரம் இந்த 5 நாடுகளுக்கும் 'வீட்டோ" எனப்படும் அதிகாரம் உண்டு. ஐ.நா.பொதுச் சபையினால் நிறைவேற்றப்டும் தீர்மானம் எதனையும் இந்த 5 நாடுகளும் தங்களது விருப்பு வெறுப்புக்கு ஏற்ப தங்களது 'வீட்டோ" அதிகாரத்தைப் பாவித்து நிராகரித்து விடமுடியும்.

இதற்கு நல்ல உதாரணம் மத்திய கிழக்கு நெருக்கடியாகும். 1948ல் இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்ட நாள் முதல் பாலஸ்தீன்-இஸ்ரேல் மோதல் கடந்த 67 வருடங்களாக தொடருகிறது. இதுவரை ஐ.நா.பொதுச் சபையால் இஸ்ரேலுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட அனைத்துத் தீர்மானங்களும் அமெரிக்காவின் 'வீட்டோ" அதிகாரத்தினால் நிராகரிக்கப்பட்டே வந்துள்ளது. பல இலட்சம் பாலஸ்தீனியர்கள் கடந்த 67 வருடங்களாக பிறந்த மண்ணிலும் உலக நாடுகளிலும் அகதிகளாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அரபுக் கண்டத்தின் ஒரு கண்காணிப்பு நிலையமாக இஸ்ரேல் இயங்குவது போல் இந்து மகா சமுத்திரப் பிராந்தியத்தின் கண்காணிப்பு நிலையமாக இலங்கையை மாற்றும் நகர்வுகளே வல்லாதிக்க சக்திகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

1977ல் ஜெயவர்த்தனா நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசியலமைப்பை உலகத்தின் புதிய தாராளவாதப் பொருளாதாரக் கட்டமைப்புக்குள் இலங்கையையும் இணைத்துக் கொள்வதற்காகவே உருவாக்கினார். முன்-பின் யுத்தத்தின் போதும் அந்தப் பொருளாதார நடைமுறை செயற்பட்டுக் கொண்டே வருகிறது. இன்றைய நல்லாட்சி அரசாங்கத்திற்கு நாளும் பொழுதும் மில்லியன் தொகை கணக்கில் இந்தியா, சீனா, ரஷ்யா, யப்பான் உட்பட மேற்குலக நாடுகள் யாவுமே உதவியாகவும் அபிவிருத்தியாகவும் தங்கள் பணத்தை வாரி இறைக்கின்றன.

இலங்கைத் தமிழர்களின் பிளவுபட்ட அபிலாஷைகளும் அரசியல் வழிகாட்டிகளின் சுயநலப் போக்குகளும் சேர்ந்து இன்று தமிழ்ப் பேசும் மக்களை நிர்க்கதியான கையறு நிலைக்குக் கொண்டு வந்து விட்டுள்ளது. தமிழ்ப் பேசும் மக்களுக்கான தலைவர்கள் தோன்றாமல் அவர்களைப் பிரித்தாளும் தமிழ்த் தேசியப் பிரதிநிதிகளே நமக்கு கிடைத்துள்ளனர். இலங்கை அரசுடன் முரண்பட்டு இந்தியாவிடம் போனோம். இந்தியாவை உதறித் தள்ளி இலங்கை அரசிடம் அடைக்கலம் புகுந்தோம். மறுபடி இலங்கை அரசுடன் மோதிக் கொண்டு சர்வதேசம் சென்றோம். இப்போது மறுபடி இலங்கை அரசை நம்புகிறோம்.

ஒரு நாட்டின் அரச கட்டமைப்பு தங்கள் நலனுக்கு ஏற்புடையதாக அமையாவிட்டால் அந்தந்த நாடுகளுக்குள் புகைந்து கொண்டிருக்கும் பிரச்சனைகளைத் தூண்டி விட்டு வன்முறையை வளர்த்துப் பின் பயங்கரவாதமாக்கி மக்களைப் பலிக்கடாக்களாக்கி விட்டுத் தங்கள் அரசியல் லாபத்தை அடைவதற்கான செயற்பாட்டுத் தளமே ஐ.நா.சபையாகும். ஒரு நாட்டில் சர்வாதிகாரத்தைப் பராமரிப்பதும் பின்னர் அது தனது கட்டுப்பாட்டை மீறும்போது ஜனநாயகம் எனக் கூறி அதை சின்னாபின்னப் படுத்துவதையும் இந்த 'வீட்டோ" நாடுகள் ஐ.நா.சபை ஊடாக நாகரீகமாக செய்து வருகின்றன.

எனவே இலங்கை அரசின் போர்க் குற்றங்கள் ஐ.நா.வின் கரிசனையைப் பெற்றுள்ளதாகவும் அதன் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்புவதும் எம்மை நாமே ஏமாற்றுவதாகும். நிலவைத் தேடி பரதேசம் போகிறோம் நாம். பெயர் இல்லாத ஊருக்கு வழி தேடுகிறோம் நாம். எமது பிரச்சனைகளைத் தீர்க்கும் சுலபமான வழிமுறை இலங்கைக்கு உள்ளேயே இருக்கையில் எமது அதிகார ஆசையாலும் அரசியல் அறியாமையாலும் பரம்பரையில் விளைந்த சுயநலம் காரணமாக அந்நியருக்குப் பணிந்து நடக்கும் அடிமை மனப்பான்மையாலும் ஐ.நா.விசாரணை என்ற கானல்நீரை உண்மையென நம்பி ஓடிக் கொண்டிருக்கிறோம்.

Read more...

Friday, October 23, 2015

இறுதிக்கட்டப் போரில் பொதுமக்களின் உயிரிழப்புக்கு பிரதானமாக தமிழீழ விடுதலைப்புலிகளே பொறுப்பு! பரணகம ஆணைக்குழு .

-சமன் இந்திரஜித்-

கடத்தல் மற்றும் காணாமற்போதல் தொடர்பாக விசாரணை நடத்திய மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு என அறியப்படும் விசாரணை ஆணைக்குழுவின், விசாரணை அறிக்கை நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டபோது, போரின் இறுதிக்கட்டமான இறுதி 12 மணித்தியாலங்களில் பெரும்பான்மையான தமிழ் பொதுமக்களை எல்.ரீ.ரீ.ஈதான் கொன்றுள்ளதாக அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு அறிக்கை மற்றும் உடலகம ஆணைக்குழு அறிக்கை ஆகியவற்றை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஸ்ரீலங்காவில் மனித உரிமைகள் மீறல் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டு வெளியான அறிக்கையுடன் சேர்த்து பாராளுமன்றில் சமர்ப்பித்தார்.

பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவித்திருப்பது,” எல்.ரீ.ரீ.ஈ பற்றிய அதன் கண்டுபிடிப்புகளிலிருந்து ஆணைக்குழு நன்கு அறியும் உண்மை ஒவ்வொரு பிரதான தொண்டு நிறுவனங்களும் மற்றும் அநேக சர்வதேச அமைப்புகளும் எல்.ரீ.ரீ.ஈ யின் நடத்தைகள் மற்றும் குறிப்பாக, இறுதிக்கட்ட போரின்போது சிறுவர்களை சிறுவர் போராளிகளாக கட்டாய ஆட்சேர்ப்பு செய்வது உட்பட தமிழ் பொதுமக்களை அது உபசரித்த விதத்துக்கும் ஒட்டுண்ணித்தனமான சார்பு அங்கீகாரத்தை வழங்கியிருந்தன. யாழப்பாணத்தை தளமாக கொண்ட மதிப்பு மிக்க ஒரு தொண்டு நிறுவனத்தின் கணிப்பீட்டின்படி, இறுதி 12 மணித்தியால மோதலின்போது பெரும்பான்மையான தமிழ் பொதுமக்களின் மரணம் எல்.ரீ.ரீ.ஈ யினாலேயே மேற்கொள்ளப் பட்டது” என்று.

“பொதுமக்கள் இராணுவத்தால் ஒன்றில் நேரடியாக இலக்கு வைக்கப் பட்டதையோ அல்லது பாரபட்சமாக ஸ்ரீலங்கா இராணுவத்தால் இன அழிப்பு திட்டத்துடன் இலக்கு வைக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்படுவதை” அந்த அறிக்கை நிராகரிக்கிறது.

“ஆணைக்குழு கண்டுபிடித்திருப்பது தருஸ்மன் அறிக்கை அதேபோல ஏனைய அறிக்கைகளும், சர்வதேச குற்றங்களுக்காக ஸ்ரீலங்கா அரசாங்கத்தை விசாரணை நடத்தவேண்டும் என்கிற கடமையை கருத்தில் கொண்டு குறிப்பாக குறுகிய மற்றும் கட்டுப்பாடான கண்ணோட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன”

அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பது,” பிரதானமாக இறுதிக்கட்ட ஆயுத மோதலின்பொழுது பொதுமக்களின் இழப்புக்கு பிரதானமாக எல்.ரீ.ரீ.ஈயே பொறுப்பாக இருந்திருக்கிறது, ஏனெனில் 300,000 முதல் 330,000 வரையான பொதுமக்களை அது பணயக் கைதிகளாக வைத்திருந்தது உட்பட, தங்கள் இராணுவ இலக்குக்கு பொருத்தமான வகையில் தமிழ் மக்களை கொலை செய்யும் மூலோபாயத்தை நடைமுறைப் படுத்தத் தக்க விதத்தில் பொதுமக்களை ஒரு மனித கவசமாக பயன்படுத்தும் உத்தியை கையாண்டதால் கணிசமானளவு உயிரிழப்புக்கு அது வழிவகுத்தது, பணயக் கைதிகளைப் பயன்படுத்தி அகழிகளைத் தோண்டியதனாலும், வலுவூட்டும் கட்டமைப்புகளை மேற்கொண்டதினாலும் அவர்களுக்கு தீங்கு ஏற்படும் வகையில் அவர்களை வெளிப்படுத்தியது, எல்.ரீ.ரீ.ஈ தலைமையை அதிகாரத்தில் வைத்திருப்பதற்காக எண்ணற்ற பணயக் கைதிளான பொதுமக்கள் தங்கள் உயிர்களை தியாகம் செய்ய வேண்டியிருந்தது, பணயக் கைதிகளை ஆயுதம் ஏந்த வைத்து அவர்களை கட்டாயப்படுத்தி போரின் முன்னரங்க நிலைகளுக்குத் தள்ளியது பெருமளவு மரணத்தை ஏற்படுத்த வழி செய்தது,பெருமளவிலான சிறுவர்களை போரின் முன்னணி நிலைக்கு வற்புறுத்தி கொண்டுவந்து நிறுத்தியது, அவர்களது திறமையான கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதை வேண்டுமென்றே தடுத்தது, போர் நடைபெறும் பகுதிகளை விட்டு தூரச் செல்லாமல் பொதுமக்களை தடுத்தது மற்றும் தாங்கள் சிறைப்பிடிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து தப்பியோட முயன்ற பணயக் கைதிகளை கொலை செய்தது, பணயக் கைதிகளான பொதுமக்கள் மீது குண்டுமாரி பொழிந்தது ஏனென்றால் அந்த மரணங்கள் ஸ்ரீலங்கா இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டது என்று கூறி சர்வதேச மனிதாபிமான தலையீட்டை எழுச்சி பெறவைக்கும் நோக்கம் கொண்ட ஊடக பரப்புரைகளுக்காகவும் எல்.ரீ.ரீ.ஈ இதனை மேற்கொண்டிருக்கலாம்,

தங்களுடைய கனரக ஆயுதங்களை பொதுமக்கள் மத்தியில் வைத்ததினால் பொதுமக்கள் இழப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியாமற் செய்தது, தற்கொலை குண்டுதாரிகளைப் பயன்படுத்தி பொதுமக்களைக் கொன்றது, கண்ணி வெடிகள் மற்றும் இதர வெடிபொருள் உபகரணங்களை வைத்ததின் விளைவாக பொதுமக்களுக்கு மரணம் ஏற்படுத்தியது. எல்.ரீ.ரீ.ஈ யின் பிடியில் இருந்து தப்பியோடும் முயற்சியில் பொதுமக்கள் நீரில் மூழ்கி மரணமடைந்ததுக்கு காரணமாகவிருந்தது. மற்றும் கணிசமானளவு எண்ணிக்கையிலான அதன் அங்கத்தவர்களை சிவில் உடையில் போரிடும் நடவடிக்கையை பின்பற்றியது, இது போராளிக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான வேறுபாட்டை மழுங்கடித்தது காரணமாக தவிர்க்க முடியாதபடி பொதுமக்கள் மரணமடையும் நிலை உருவானது.”

“இறுதிக்கட்ட போரில் பொதுமக்களின் உயிர் இழப்புக்கான பிரதான காரணம், எல்.ரீ.ரீ.ஈ யினால் பொதுமக்கள் பணயக்கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டு மனிதக் கேடயங்களாக பயன்படுத்தப் பட்டமையே என்பதுதான் ஆணைக்குழுவின் கருத்து”

ஸ்ரீலங்கா இராணுவத்தின் ஷெல் வீச்சு சந்தேகமின்றி கணிசமானளவு எண்ணிக்கையிலான பொதுமக்களின் மரணத்துக்கு காரணமாக இருந்தது என்பதை ஆணைக்குழு ஏற்றுக் கொண்டுள்ளது.”ஆனால் ஆணைக்குழு வலியுறுத்துவது, ஏப்ரல் 12ல் ஸ்ரீலங்கா அரசாங்கம் ஒரு யுத்த நிறுத்தத்துக்கு அனுமதித்தபோதும் கூட, எல்.ரீ.ரீ.ஈ பொதுமக்களை தங்கள் கட்டுப்பாட்டை விட்டு வெளியேற அனுமதிக்க மறுத்தது, அவர்களை ஒரு கவசமாகப் பயன்படுத்துவது மற்றும் ஆட்சேர்ப்புக்கு தேவையான ஆட்களை பெறலாம் என்கிற இரண்டு காரணங்களுக்காக என்பதால், இது ஒரு தவிர்க்க முடியாத சூழ்நிலையாகி விட்டது. அதனால் அத்தகைய ஈவு இரக்கமற்ற முறையில் பொதுமக்கள் சுரண்டப்படுவதற்கு ஒரு முடிவு கட்டுவதற்கு வசதியான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல், எந்த அரசாங்கமும் சிறுவர்களை முன்னரங்க நிலைகளில் கட்டாயமாக நிறுத்துவதை அனுமதிக்கும் என்று நிச்சயமாக எதிர்பார்க்க முடியாது.,

தருஸ்மன் அறிக்கையின் கண்டுபிடிப்பாக கூறப்பட்டிருக்கும் “நம்பிக்கைக்குரிய தரப்பினர் 40,000 வரையிலான பொதுமக்களின் மரணம் ஏற்பட்டிருக்கலாம் எனக் கணிப்பிட்டிருப்பதை” ஆணைக்குழு நிராகரித்துள்ளது. காணாமற்போனவர்களின் விடயம் மற்றும் அந்த நோக்கத்துக்கான பல்வேறு மட்டங்களிலான பொறிமுறையை நிறுவு வேண்டியதன் அவசியம் பற்றி ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது. “வெவ்வேறு சூழல்களில் வெவ்வேறு தீர்வுகள் தேவைப்படும், மற்றும் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் பொருத்தமான எந்த அணுகுமுறையும் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை. ஒருங்கிணைப்பு பொறிமுறை மற்றும் தேசிய பொறிமுறை என்பன எப்போதும் கவலைக்குள்ளாகியுள்ள குடும்பங்கள் மற்றும் சமூகங்களுடன் தங்கள் பணி தொடர்பாக ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும், அதன் வரம்புகள், வெற்றிக்கான வாய்ப்புகள் மற்றும் காணாமற்போன நபர் உயிரோடிருப்பதை கண்டு பிடிப்பதற்கான நிகழ்தகவுகள் அல்லது பிணத்தை தோண்டியெடுத்தல் அல்லது தடயவியல் ஆயு;வு மூலம் கண்டறிதல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். அதற்கு கூடுதலாக தேவையான உதவிகளை அவர்கள் எப்படி பெறமுடியும் எனக் குடும்பங்களிடம் அறிவிக்க வேண்டும் மற்றும் இழப்பீடு வழங்குவதுடன் மற்றும் அவர்களின் பிரியப்பட்டவர்கள் காணாமற்போனதற்கு பொறுப்பாக இருந்தவர்களை தணடிப்பதற்கான சாத்தியங்கள் பற்றியும் தெரிவிக்க வேண்டும்.

“அநேக முறைப்பாடுகளில் தெரிவிக்கப் பட்டிருப்பது அவர்களின் குடும்ப உறப்பினர்கள் கடத்தப்பட்டது அல்லது கட்டாய காணாமற் போக்கடித்தலுக்கு ஆளானது அவர்களது வசிப்பிடத்தில் வைத்துத்தான் என்று, அதேவேளை சிலர் சொல்லியிருப்பது அவர்களது அங்கத்தவர்கள் கடத்;தப்பட்டது அவர்களின் வீடுகள் அல்லாத வேறு இடங்களில் என்றும், அந்த தகவல் அந்த அங்கத்தவரின் குடும்பத்தினருக்கு மூன்றாவது தரப்பினரால் தெரியப்படுத்தப் பட்டது என்றும்”.

எல்.ரீ.ரீ.ஈ செயற்பாடுகள் தொடர்பாக சிறைச்சாலைகளில் உள்ளவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்று ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

“காணாமற் போனவர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட வேண்டும், அப்படி வழங்குவதினால் அவர்கள் சுயமாக தங்கள் வாழ்வாதாரங்களை நிலைநிறுத்தும் வரையான ஒரு குறிப்பிட்ட காலம்வரை அவர்களுக்கு தொடர்ச்சியாக தங்கள் வாழ்வாதாரங்களை தாங்கிக் கொள்ள வேண்டிய உதவிகளை வழங்குதல் வேண்டும். யுத்தம் காரணமாக காணாமற் போனவர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரங்களை இழந்து துயரமான நிலையில் மூழ்கியுள்ளதை இந்த ஆணைக்குழு அவதானித்துள்ளது”

ஆணைக்குழு மேலும் பரிந்துரைத்திருப்பது ஆலோசனை வழங்கும் நடவடிக்கை மற்றும் சமூக உளவியல் தொடர்பான சேவைகளை வழங்குவதற்கு. கடத்தல் மற்றும் காணாமற்போக்கடித்தல் பற்றி விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு, வடக்கு மற்றும் கிழக்கில் 12 பொது அமர்வுகளை நடத்தியது. ஒவ்வொரு பொது அமர்வும் நான்கு நாட்கள் வரையான காலம்வரை நீண்டிருந்தது.

இந்த ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற சிரேட்ட நீதிபதி மக்ஸ்வெல் பரணகமவும் அங்கத்தவர்களாக சுரஞ்சனா வைத்தியரத்ன,மனோ ராமநாதன்,டபிள்யு.ஏ.ரி.ரத்னாயக்கா மற்றும் எச்.சுமணபால ஆகியோர் நியமிக்கப் பட்டிருந்தனர்.

பாராளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட இரண்டாவது அறிக்கை, ஆகஸ்ட் 1, 2005 முதல் தீவிரமான மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை செய்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் (உடலகம ஆணைக்குழு) இறுதி வெளிப்பாடு சம்பந்தமானது.

உடலகம ஆணைக்குழு தெரிவிப்பது, ஆகஸ்ட் 2006ன் ஆரம்பத்தில் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனமான அக்ஷன் கொன்ட்ரோ லா பாமின் 17 உதவிப் பணியாளர்களின் கொலைகள் தொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்டிருந்த ஆரம்ப கட்ட விசாரணைகளில் தொழில் நிபுணத்துவம் குறைவாகக் காணப்படுகிறது என்று. அனைத்து காவல்துறை மற்றும் இராணுவ பயிற்சித் திட்டங்களில் மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் சட்டங்கள் தொடர்பாக ஒருங்கிணைந்த விரிவான கூறு இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

17 உதவிப் பணியாளர்களின் கொலைக்கு மேலதிகமாக ஆகஸ்ட் 2006ல் செஞ்சோலை எனப்படும் நட்டாலம்மோட்டன்குளம் என்னும் இடத்தில் வைத்து 51 பேர் கொல்லப்பட்ட சம்பவம்,மூதூரில் வைத்து முஸ்லிம் கிராமவாசிகள் கொல்லப்பட்டது, மூதூரை சேர்ந்த 14 பேரை 2006 ஆகஸ்ட் ஆரம்பத்தில் அம்புலன்ஸ் வண்டியில் ஏற்றிச்சென்று வெலிக்கந்தையில் வைத்து கொலை செய்தது, 2006 செப்ரெம்பர் 17ல் பொத்துவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரதெல்ல என்னும் இடத்தில் வைத்து 10 முஸ்லிம் கிராமவாசிகள் கொல்லப்பட்டது, திருகோணமலையில் வைத்து ஐந்து தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டது போன்ற சம்பவங்கள் தொடர்பாகவும் மற்றொரு அறிக்கையினையும் இந்த ஆணைக்குழு தொகுத்திருந்தது.;

“ஆணைக்குழுவிற்கு விசாரணை செய்வதற்காக ஆணை வழங்கப்பட்டிருந்த 16 வழக்குகளில், ஆணைக்குழு அமர்வுகளை மேற்கொண்டு ஏழ வழக்குகளைப் பூர்த்தியாக்கியுள்ளது. மிகுதி ஒன்பது வழக்குகளையும் ஆணைக்குவிற்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசத்துக்குள் விசாரணைக் குழுவினால் விசாரணைகளை நடத்த சாத்தியப் படவில்லை. பிரதானமாக இரண்டு வழக்குகள் அக்ஷன் கொன்ட்ரோ பாமைச் சேர்ந்த 17 உதவிப் பணியாளர்களின் கொலைகள் மற்றும் திருகோணமலையில் வைத்து ஐந்து இளைஞர்கள் கொல்லப்பட்டதும் சர்வதேச அமைப்புகள் மற்றும் வெளிநாட்டு அரசாங்கங்கள் உட்பட பல கட்சியினரதும் கவனத்தை பெரிதும் ஈர்த்திருந்தன. இந்த இரண்டு வழக்குகளின் விசாரணையுமே ஆணைக்குழுவின் பெரும்பகுதி நேரத்தை எடுத்திருந்தன”

இந்த ஆணைக்குழுவின் தலைவராக நீதியரசர் என்.கே. உடலகமவும் இதன் அங்கத்தவர்களாக உபவன்ச யாப்பா, தேவநேசன் நேசையா, கே.சி.லோகேஸ்வரன், மனோரி முத்தெட்டுவேகம, ஜெசீமா இஸ்மாயில் எஸ்.எஸ். விஜேரட்ன, ஜாவிட் யூசுப், டக்ளஸ் பிரேரட்ன, எம்.பைசல் ரசீம் மற்றும் டென்சில் ஜே. குணரட்ன ஆகியோர் நியமிக்கப் பட்டிருந்தனர்.

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்குமார்

அறிக்கை தொடர்பில் திரு. பரணகம அததெரண விற்கு வழங்கிய நேர்காணல்


Read more...

Thursday, October 22, 2015

தமிழினிக்காய் அழுகிறார்கள்….. ரகு

மனித உயிர் மகத்தானது. மனித உயிரை விட சுதந்திரம் மகத்தானது. என்றவர் தமிழினியின் தலைவர். ஆயிரக்கணக்கான மனித உயிர்களைக் குடித்து தமிழர்களுக்கு இருந்த சுதந்திரத்தையும் இல்லாமல் பண்ணிவிட்டார்.

மனிதர்களைக் கொன்று மகிழ்ந்தவர்கள் புலிகள். புலிகள் கொன்றபோது மகிழ்ந்தவர்கள் புலிகளின் ஆதரவாளர்கள்.

தமிழினி போன்று எத்தனை பெண்களைக் கொன்றிருப்பார்கள் புலிகள்?

செல்வியும், ராஜினியும், மகேஸ்வரியும், ரேலங்கியும் மற்றும் புலிகளால் கொல்லப்பட்ட தமிழ் பெண்களின் உயிருக்குப் பெறுமதி இல்லையா?

பத்மநாபாவும் தோழர்களும் துரத்தி துரத்தி புலிகளால் கொல்லப்பட்டபோது விருந்துண்டு கொண்டாடியவர்கள் தமிழினி உயிருக்காய் அழுது வழிகிறார்கள்.

யாருக்குத்தான் உயிர் வாழ ஆசை இல்லை. தலைவர் முதற்கொண்டு தமிழினி வரைக்கும் உயிர்வாழ ஆசைப்பட்டவர்கள்தான் . தலைவருக்கு உயிர் ஆசை இருந்தபடியால்தானே சயனைட் கடிக்காமல் சரணடைந்தார்.

தமிழர்களைக் கேடயமாக வைத்து யுத்தம் செய்தார் பிரபாகரன்.

சிறுவர் சிறுமிகளுக்கெல்லாம் சயனைட் கட்டி போர்க்களம் அனுப்பிச் சாகடித்த தமிழினிக்கும் அவரின் தலைவர் பிரபாகரனுக்கும் சயனைட் செயலிழந்து போனது.

எத்தனை உயிர்களை அழித்த ஒரு பயங்கரவாத இயக்கத்தின் அங்கம்தான் தமிழினி. புலேந்திரனும், குமரப்பாவும் உயிருடன் இருக்கக் கூடாது என்று சிறைக்கே சயனைட் அனுப்பியவர் பிரபாகரன். ஆனால் தான் மட்டும் சயனைட் கடிக்கவில்லை. இந்திய இராணுவத்தால் பிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட புலிகளைச் சுட்டுக் கொன்றவரகள் புலிகள். காரணம் அவர்கள் பிடிபடும்போது சயனைட் கடிக்கவில்லையாம். அவர்களுக்கு அவர்களுக்கு சயனைட் குப்பி கழுத்தில் கட்டிவிட்ட தலைமைகள் சரணடைந்தபோது கொல்லப் பட்டுவிட்டார்கள் என்று ஜெனிவா வரை சென்று நீதி கேட்கிறார்கள்.

சயனைட் கடிக்காமல் குடும்பப் பெண்போல மக்களோடு மக்களாக இராணுவத்திடம் சரணடைந்தவர் தமிழினி. மக்களால் தான் இராணுவத்திடம் காட்டிக் கொடுக்கப் பட்டார்.

கதிர்காமர் புலிகளால் கொல்லப்பட்டபோது வன்னியில் அரைக்கம்பத்தில் பறந்த ஐ நா கொடியைக் கூட அறுத்து வீசிக் காலால் மிதித்தவர்கள் புலிகள்.

அப்படியொரு இயக்கத்தின் அங்கம் தானே தமிழினி. ஐயகோ எத்தனை அஞ்சலிகள்? விழுந்து விழுந்து அஞ்சலி செய்கிறார்கள்.

தமிழினி மரணத்தில் நாங்கள் மகிழவில்லை! ஆனால் புலிகளால் தமிழ்ப் பெண்கள் துரத்தித் துரத்திக் கொல்லப்படும் போது கண்களை மூடிக் கொண்டிருந்த கூட்டம் தமிழினியின் இயற்கை மரணத்துக்காய் அழுகிறது.

பெண்கள் ,குழந்தைகள் எல்லாம் உடல் சிதறி இறந்த போதும் யுத்தத்தை நிறுத்தாது மக்களுக்கு நடுவில் நின்று யுத்தம் புரிந்த கூட்டம் தங்கள் உயிர் போகப்போகிறதென்று உலக நாடுகளிடம் கெஞ்சி வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தது. தமிழினி உட்பட,

போர்க்களத்தில் பெண்பிள்ளைகளை யுத்தம் புரிய வைத்துச் சாகடித்தவர் தமிழினி. தப்பியோட முயன்றவர்களுக்குச் சித்திரவதை செய்தவர் தமிழினி. யுத்தம் வேண்டாம். வீண் உயிரழிவு வேண்டாம். சமாதானமாய் போவோம் என்றவர்களெல்லாம் துரோகிகளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள்.

யுத்தத்தை நிறுத்தி அமைதியக் காக்க படையை அனுப்பிய அயல் நாட்டுத் தலைவனைக் கொன்ற கூட்டம். யுத்தம் வேண்டாம் என்று சமாதானத்துக்காக கையொப்பமிட்ட கருணாவை இன்று வரை துரோகி என்று திட்டுகிற கூட்டம்.

தமிழினி உயிர் போய்விட்டதென்று அழுகிறது. அவர்கள் எதிரிகளென்று போரிட்ட சிங்கவனுக்கும் இரக்கம் தமிழினி இன்று வரையாவது உயிர் வாழ்ந்திருக்கிறாள்.


Read more...

Tuesday, October 20, 2015

டேவிட் ஐயாவின் மறைக்கபட்ட இருண்ட பக்கங்களில் ஒன்று. பீமன்.

தமிழரின் விடுதலைக்காக, அவர்களின் மேம்பட்ட வாழ்வுக்காக அனலாக கொழுந்துவிட்டெரிந்த எஸ்.ஏ.டேவிட் என்ற அக்கினிப்பிழம்பு இந்தியாவில் தனக்கே அளவான சிறியதொரு அறையில் நுளம்புக்கு எரியும் சுக்குவிறகுக்கட்டைபோன்று கடந்த 3 தசாப்தங்களுக்கு மேலாக புகைந்துகொண்டிருந்து இறுதியாக கிளிநொச்சியில் அணைந்திருக்கின்றது. இறுதிக்கிரிகையும் முடிந்தாயிற்று. பலர் டேவிட் ஐயாவின் புகழ் பேசியிருக்கின்றார்கள். பலர் அவரின் தியாகம், திறமை, வாழ்வியல் என்பன பற்றி எழுதியிருக்கின்றார்கள். ஆனால் அக்கினி பிழம்பு வெறும் புகையாக மாற காரணம் யாது , 3 தசாப்தங்கள் அவர் இருண்ட யுகத்தில் வாழக் காரணம் யாது என்ற கேள்விகளுக்கு பதில் தேட வேண்டும்.

புகைந்து கொண்டிருந்த அந்த விறகுக்கட்டை மீது கொஞ்சம் எண்ணையூற்றி பிரகாசிக்கச்செய்வோம் என சிலர் முயற்சி செய்திருக்கின்றார்கள். ஆனால் அவையாவும் முறியடிக்கப்பட்டிருக்கின்றது. காரணம் ஐயாவின் அற்பணிப்பில், விடுதலையின் மீது அவர் கொண்டிருந்த பற்றுறுதியின்பால், திறமையின்பால் சந்தேகமோ அல்ல. அவரை யாரும் சந்தேகிக்கவும் இல்லை அதற்கு அவர் வாழ்நாளில் இடமளிக்கவுமில்லை மாறாக டேவிட் ஐயா தான் நேசித்த அமைப்பிடம் „இல்லாத கடுவன் புனைக்குட்டியை கண்ணிரண்டும்தெரியாத குருடனொருவன் இருட்டறையில் தேடியதுபோல்' சமத்துவத்தையும், மனிதநேயத்தையும் , தலைமைத்துவப் பண்புகளையும் எதிர்பார்த்தமையேயாகும். வெளிப்படையாக கூறினால் உள்வீட்டு படுகொலையை நிறுத்து! என்று கூறியதால்.

புளொட் அமைப்பு ஒர் தனிமனிதனின் சர்வாதிகார ஆளுகையின் கீழ் கொண்டுவரப்படுவதை உணர்ந்த டேவிட் ஐயா, சமரசத்திற்கோ, விட்டுக்கொடுப்புக்கோ வழிவிடாது போர்கொடி தூக்கிக்கொண்டு அவ்வமைப்பை விட்டு வெளியேறியிருக்கின்றார். புளொட் தனது சகதோழர்களை கொலைசெய்வதை தடுப்பதற்கு அபார முயற்சிகளை எடுத்திருக்கின்றார். தமிழ் மக்களின் விடுதலை வேண்டி தம்மை அர்ப்ணித்த உயிர்கள் உமாமகேஸ்வரனின் தலைமைவெறிக்கு காவுகொடுக்கப்பட முடியாதவை என உரக்க குரல் கொடுத்திருக்கின்றார் அந்த உயர்ந்த மனிதர்.

தவறுகளை தட்டிக்கேட்டமைக்காக டேவிட் ஐயா 02.08.1985 ம் ஆண்டு இரவு 10.30 மணியளவில் அண்ணாநகர் பஸ்நிலையத்தின் பின்னால் வைத்து 4 இளைஞர்களால் அடித்து வீழ்த்தப்பட்டு அரைப்பிணமாக வான் ஒன்றி அள்ளிச்செல்லப்பட்டிருக்கின்றார். இக்கடத்தல் தன்மீது மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சி என தனது Tamil Eelam Freedom Struggle ( An inside Story) எனும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள டேவிட் ஐயா, தான் கடத்தப்பட்ட வாகனச் சாரதியின் தயவால் அன்று விடுதலை செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

தெருவோரத்தில் வீசிச்செல்லப்பட்ட டேவிட் ஐயா அவ்வழியால் வந்த சைக்கிளோட்டி ஒருவரால் மீண்டும் அண்ணா நகருக்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றார். அன்று உடனடியாகவே 11.45 மணியளவில் திருமங்களம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று நடந்தவற்றை விபரித்திருக்கின்றார். சந்ததியாரை கொல்வதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தொடர்பிலும் முறையிட்டிருக்கின்றார். முறைப்பாடு தொடர்பில் பொலிஸார் கணக்கிலெடுக்கவில்லை என குற்றஞ்சுமத்தியுள்ள டேவிட் ஐயா அங்கிருந்த இன்ஸ்பெக்டர் ஒருவர் ஈழப் போராளிகள் தொடர்பிலான எந்த முறைப்பாடுகளையும் பதிவு செய்யவேண்டாமென அரச மேல்மட்ட உத்தரவு எனவும் தன்னிடம் பகிர்ந்து கொண்டதாகவும் எழுதியுள்ளார்.

பொலிஸாரின் நடவடிக்கையில் திருப்தியடையாத டேவிட் ஐயா, தான் கடத்தப்பட்ட விடயத்தையும் , சந்ததியாருக்கு நேரவிருக்கும் அபாயத்தையும் அதேவாரம் அன்றைய தமிழ் நாடு முதலமைக்சர் எம்.ஜி ராமச்சந்திரனுக்கும் இந்திய ஊடகங்களுக்கும் முறையிட்டிருக்கின்றார். அம்முயற்சியும் பயனற்றதாகவே முடிவுற்றிருக்கின்றது.

19.09.1985 அன்று சந்ததியார் கடத்தப்பட்டிருக்கின்றார். டேவிட் ஐயாவுடன் ஒரே அறையில் தங்கியிருந்த சந்ததியார் அன்று மாலை வெளியே சென்று திருப்பி வராததையடுத்து 20.09.1985 திருமங்களம் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டிருக்கின்றார். தொடர்ந்து தமிழ் நாட்டு முதலமைச்சர் எம்ஜிஆர் மற்றும் நாட்டின் அன்றைய பிரதமர் ரஜீவ் காந்தி ஆகியோருக்கும் முறையிட்டிருக்கின்றார். தீப்பொறி பத்திரிகை மற்றும் பல ஊடகங்கள் ஊடாக சந்ததியாரின் விடுதலைக்காக பாடுபட்டிருக்கின்றார்.

இச்செயற்பாடுகளால் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளான டேவிட் ஐயா இந்தியாவின் பல மூலைகளில் தலைமறைவு வாழ்கை வாழ்ந்து தனது உயிரை காத்திருக்கின்றார். உமா மகேஸ்வரன் இலங்கை அரசுடன் கைகோர்த்துக்கொண்டு கொழும்பில் நிலைகொண்டவுடன் தனது தலைமறைவு வாழ்வு முடிவுக்கு வந்ததாக தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் டேவிட் ஐயா.

தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்தை நியாயமான வழியில் வெல்லவேண்டுமென நேரிய வழிகாட்டிய உயரிய சிந்தனையாளர்கள், அப்பழுக்கற்ற தியாகிகள் தமிழீழ விடுதலை போராட்ட அமைப்புக்களின் சர்வாதிகாரப்போக்கினால் எண்ணிலடங்கா இன்னல்களை சந்தித்திருக்கின்றார்கள். அவர்களது கனவுகள் கலைக்கப்பட்டிருக்கின்றது. அவர்களது அறிவு , ஆற்றல் , அனுபவங்களை தாங்கள் நேசித்த சமூகத்திற்கு பயனுள்ளாதாக்க முடியாத செல்லாக்காசாக்கப்பட்டிருக்கின்றார்கள். தவறுகளை தட்டிக்கேட்ட நேர்மையான மனிதர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள் என்பதற்கெல்லாம் டேவிட் ஐயாவின் வாழ்வும் முடிவும் சிறந்த உதாரணமாகும்.




உங்களுக்கு பாடம் படிப்பிக்க எனக்கு தெரியும். டேவிட் ஐயாவை மிரட்டிய உமா மகேஸ்வரன்



மட்டக்களப்பு சிறை உடைப்பு குறித்து டேவிட் ஐயா ...




Read more...

Sunday, October 18, 2015

அக்னி ஏவுகணையை ஏவுவதற்கு முன்னர், அதை நிறுத்த அப்துல் கலாமுக்கு அதிகாலை 3 மணிக்கு வந்த அவசர போன் அழைப்பு !

அக்னி ஏவுகணையை ஏவுவதற்கு முன்னர், அதை தடுத்து நிறுத்த அதிகாலை 3 மணிக்கு முன்னாள் ஜனாதிபதியும், ஏவுகணை மனிதருமான அப்துல் கலாமுக்கு வந்த அவசர போன் அழைப்பைப் பற்றிய அரிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக, அமரர் அப்துல் கலாம் எழுதி விரைவில் வெளியாகவுள்ள ’சவால் முதல் வாய்ப்புவரை: இந்தியாவின் சிறப்பம்சம்’ ("Advantage India: FromChallenge to Opportunity") என்ற நூலில் அவர் ஒரு நிகழ்வை பதிவு செய்துள்ளார்.

அதில் அப்துல் கலாம் தெரிவித்துள்ளதாவது:-

22-5-1989 அன்று அக்னி ஏவுகணையை விண்ணில் ஏவுவதற்கு நாள் நிர்ணயிக்கப்பட்டது. ஒடிசா மாநிலம், சண்டிப்பூரில் உள்ள ஏவுகணை பரிசோதனை முகாமில் நானும் மற்றவர்களும் முன்நாள் நள்ளிரவில் இருந்தே அதற்கான ஆயத்தப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தோம்.
அப்போது அதிகாலை 3 மணியளவில் எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அந்த நேரத்தில் வருவது சாதாரண அழைப்பாக இருக்க முடியாது என்பது எனக்கு புலனானது.

எதிர்முனையில், அந்நாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மந்திரிசபை செயலாளரான டி.என். சேஷன் (பின்நாளில் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர்) பேசினார். அக்னியை ஏவும் திட்டத்தில் நாம் எவ்வளவு தூரத்தில் உள்ளோம்? என அவர் கேட்டார்.

என்னுடைய பதிலுக்காக காத்திருக்காமல் தொடர்ந்து பேசிய சேஷன், இந்த ஏவுகணை பரிசோதனையை தாமதப்படுத்துமாறு அமெரிக்கா மற்றும் பன்னாட்டு ராணுவமான ‘நேட்டோ’விடம் இருந்து நமக்கு (இந்தியா) ஏகப்பட்ட நெருக்கடிகள் வந்துகொண்டிருக்கின்றன. இதுதொடர்பாக, ராஜாங்க ரீதியாக ஏகப்பட்ட காய்நகர்த்தல்கள் நடைபெற்று வருகிறது’ என்றார். அக்னியை ஏவும் திட்டத்தில் நாம் எவ்வளவு தூரத்தில் உள்ளோம்?’ என மீண்டும் கேட்டார்.

அடுத்த சில வினாடிகளில் எனது சிந்தனை பல்வேறு நீள,அகலங்களை அகழத் தொடங்கியது. பல விஷயங்களை நான் கணக்கிட்டுப் பார்த்தேன்.

இந்தியாவை குறிவைத்து அமெரிக்கா ஏவுகணைகளை தயார்படுத்தி வருவதாக நமக்கு உளவுத்தகவல்கள் வந்திருந்தன. எனவே, நமது அக்னி ஏவுகணை பரிசோதனையை தாமதப்படுத்தும்படி பிரதமர் ராஜீவ் காந்ந்திக்கு ஏகப்பட்ட நெருக்கடிகள் அளிக்கப்பட்டு வந்ததையும் நான் அறிந்திருந்தேன். எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு மோசமான தகவலாக.., அடுத்த ஓரிரு நாட்களில் சண்டிப்பூர் பகுதியை புயல் தாக்கும் என்ற வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையும் வெளியாகி இருந்தது.

அதேவேளையில், மற்றொரு புறத்தில் இந்த அக்னி ஏவுகணை திட்டத்தை செயல்படுத்த சுமார் பத்தாண்டுகளாக அர்ப்பணிப்பு உணர்வுடன், ஓயாமல், கடுமையாக உழைத்துவரும் இந்த குழுவில் உள்ள ஆண், பெண் நிபுனர்களைப் பற்றியும் ஒருபுறம் எண்ணிப் பார்த்தேன்.

இவர்கள் அனைவரும் பல்வேறு இடையூறுகளை கடந்து இந்த அளவுக்கு அக்னி ஏவுகணை திட்டத்தை முன்னெடுத்து வந்துள்ளனர்.

தொழில்நுட்ப உதவிகள் பற்றாக்குறை, நிதி ஒதுக்கீட்டில் பற்றாக்குறை, இதற்கு முன்னர் போதிய தொழில்நுட்ப உபகரணங்கள் கிடைக்காததால் இதைப்போன்ற பல்வேறு திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டது தொடர்பான முந்தைய கசப்பான அனுபவங்கள், இவை தொடர்பான ஊடகங்களின் சாடல் விமர்சனங்கள் ஆகியவற்றுக்கு இடையிலும் அக்னி ஏவுகணையை வெற்றிகரமாக உருவாக்கி, பரிசோதனையையும் நடத்திவிட வேண்டும் என்பதில் இவர்கள் வெகு தீவிரமாக பணியாற்றியுள்ளனர்.

இவற்றை எல்லாம் சில நொடிகளில் எனது மனக்கண்ணில் ஓடவிட்டு, சிந்தித்துப் பார்த்த நான், எனது குரலை சீர்படுத்திக் கொண்டு, சேஷனிடம் பேசினேன்.

‘சார், இந்த அக்னி ஏவுகணை திட்டம் பின்நோக்கி திரும்பி வரமுடியாத கட்டத்தை கடந்துவிட்டது. இதை பரிசோதிப்பதில் இருந்து பின்வாங்கவே முடியாது. அதற்கான காலம் கடந்து விட்டது’ என நான் தீர்மானத்துடன் தெரிவித்தேன்.

இதுதொடர்பாக, பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் சேஷனிடம் இருந்து கேள்விகள் எழலாம், பெரிய வாக்குவாதத்தில் நாம் ஈடுபட வேண்டி இருக்கும் என நான் எதிர்பார்த்தேன். ஆனால், அதற்குள் அதிகாலை நான்கு மணி நெருங்கி விட்டது. கிழக்கு வானம் மெல்ல,மெல்ல வெளுக்கத் தொடங்கியது.

பின்னர், ’சரி’ என்ற ஒற்றை வார்த்தையை உதிர்த்த டி.என்.சேஷன், நீண்ட பெருமூச்சு மற்றும் சில வினாடி மவுனத்துக்குப் பின்னர், ’நடத்துங்கள்’ என்று தெரிவித்தார். அடுத்த சில மணிநேரத்தில் அக்னி ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

இந்த பிரபஞ்சத்தில் எந்த சக்தியாலுமே தடுத்து நிறுத்த முடியாத இளைய விஞ்ஞானிகளின் நம்பிக்கை மற்றும் உத்வேகத்துக்கு கிடைத்த வெற்றியாக அக்னி ஏவுகணையின் அந்த குறிதப்பாத பரிசோதனை அமைந்திருந்தது. அந்த வெற்றியின் மூலம் ஒரு வரலாற்றை நாம் உருவாக்கினோம்.

அதற்கு அடுத்தநாள், சண்டிப்பூரை தாக்கிய புயலால் அங்குள்ள நமது ஏவுகணை பரிசோதனை தளத்தின் ஒருபகுதி நாசமடைந்தது. ஆனால், அதற்கு முன்னதாகவே அக்னி பந்தயத்தில் நாங்கள் வென்று விட்டோம்.

இவ்வாறு அந்த நூலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தன்னம்பிக்கை, விடாமுயற்சி, தேசபக்தி, இந்தியாவை உலகின் மிகப்பெரிய வல்லரசாக உருவாக்க வேண்டும் என்ற உத்வேகம் போன்ற உயரிய அருங்குணங்கள் ஒருங்கே அமையப்பெற்ற அமரர், ”பாரதரத்னா” அப்துல் கலாம் எழுதிய கடைசி நூல் இது என்பது, குறிப்பிடத்தக்கது.

Read more...

கிங்ஸ்லி இராசநாயகம், இராஜன் சத்தியமூர்த்தி போன்றோரின் கொலைகளும் உடனடியாக விசாரிக்கப்படவேண்டும் .

-மீன்பாடும் தேனாடான் - 
2004ஆண்டு ஏப்ரல் மாதம் பொதுத்தேர்தலுக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருந்ததது. இந்த தேர்தலை எதிர்கொள்ள புலிகளின் சிபார்சின் பெயரில் புலிகளது அறிவுறுத்தலுக்கமையவே தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது வேட்பாளர்களை தெரிவு செய்து நிறுத்தியிருந்தது. ஆனால் தேர்தலுக்கு முன்பாகவே மார்ச் மாதம் 4ம் திகதி புலிகளுக்குள் கருணாம்மானின் தலைமையில் கிழக்கு பிளவு உருவானது. பிளவுக்கு முன்புவரை மட்டகளப்பு -அம்பாறை மாவட்டங்களின் விசேட தளபதியாக இருந்த கருணாம்மானே புலிகளின் சார்பில் இந்த வேட்பாளர்களை தேர்வு செய்திருந்த படியால் வன்னிபுலிகள் மட்டகளப்பு வேட்பாளர்கள் பிளவின் பின்னர் கருணாம்மானுக்கு சார்புநிலை எடுப்பார் என அஞ்சி வெற்றிவாய்ப்பை பெறக்கூடிய வேட்பாளர்கள் அனைவரையும் படுகொலை செய்ய திட்டமிட்டனர்.இராஜன் சத்தியமூர்த்தி தேர்தலுக்கு முன்பே கொல்லப்பட்டார்.அவரது புதைக்கப்பட்ட உடலைக்கூட தோண்டியெடுத்து வன்னிபுலிகள் சின்னா பின்னப்படுத்தினர்.கனகசபை என்னும் வேட்பாளரை கொலை செய்ய தயாரான புலிகளை பொதுமக்கள் சுற்றிவளைத்து பிடித்ததால் அவரது உயிர் காப்பாற்றப்பட்டது. தேர்தல் முடிந்தவுடன் வெற்றியடைந்த கிங்ஸ்லி இராசநாயகம் வன்னிபுலிகளால் கொல்லப்பட்டார்.அவரை இராஜினாமா செய்ய வைத்த பின்னர் அவரை கொன்றனர்.அந்த இடத்துக்கே அரியநேந்திரனை புலிகள் நியமித்தனர். அதற்கு பின்னர் அத்தேர்தலில் வெற்றி பெற்றிருந்த ஜோசேப் பரராசசிங்கம் கொல்லப்பட்டார்.

இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களான மூவர் ஏறக்குறைய சுமார் சுமார் ஒன்றரை வருட இடைவெளியில் ஒரே பிரதேசத்தில் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்த கொலைகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் அதிகாரப்போட்டிகளும்இபழிவாங்கல்களும் நிறையவே செல்வாக்கு செலுத்தியிருக்கின்றன.

ஜோசேப் பரராசசிங்கத்தின் கொலையை தவிர மற்றைய இரு கொலைகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பால் மறக்கடிக்கப்பட்டு வருவதிலிருந்து இதனை புரிந்து கொள்ள முடியும்.இன்றுவரை ஒவ்வொரு வருடமும் ஜோசேப் பரராசசிங்கத்தின் கொலையை நினைவு கூருகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பும் அவர்களின் சார்பு ஊடகங்களும் கிங்ஸ்லி இராசநாயகம்இஇராஜன் சத்தியமூர்த்தி போன்றோரின் பெயர்களை மறந்தும் உச்சரிப்பதில்லை.

இந்த நிலையில்தான் இராசநாயகம்இஇராஜன் சத்தியமூர்த்தி போன்றோரின் கொலையின் பின்னணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் இமுக்கியஸ்தர்கள் போன்றோர் இருக்கின்றார்கள் என்கின்ற சந்தேகம் எழுகின்றது. இதுகுறித்து மூத்த தமிழ் தலைவரும் சமாதானத்துக்கான யுனஸ்கோ "மதன்ஜீத்" விருது பெற்றவருமான தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் ஆனந்த சங்கரி கடந்த ஆண்டு (12.08.2014) இலங்கை ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் இந்த சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.அக்கடிதத்தில் அவர் பின்வருமாறு கேள்விகளை எழுப்புகின்றார்.

"2004ம் ஆண்டு தேர்தலில் மட்டக்களப்பு தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் கிங்ஸ்லி இராசநாயகம் வெற்றி பெற்றிருந்தார். அவரின் சகபாடியாகிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் திரு இராசநாயகத்தை பாராளுமன்ற செயலாளரிடம் கூட்டிச்சென்று அவரின் இராஜினாமா கடிதத்தினை கையளிக்க வைத்தார். இதனை தொடர்ந்து திரு இராசநாயகம் அவர்கள் படுகொலை செய்யப்பட்டார். யாரோ சிலரின் மீது கொண்ட அச்சம் காரணமாக இவ்விடயம் இலகுவாக மறக்கப்பட்டுவிட்டது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழரசு கட்சி ஆகிய இரு கட்சிகளின் நிர்வாக சபை உறுப்பினர்கள் சம்மந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்தை நிரப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோர் இக்குற்றவியல் செயல்பாடுகளிற்கு பொறுப்புகூற வேண்டியவர்களாவர். ஆகவே என்னால் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில தரவுகளை வைத்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பொருத்தமான நடவடிக்கை எடுத்து இலங்கையின் நீதி நிர்வாகத்தில் மக்களிற்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

தரவுகள்.
•திரு கிங்ஸ்லி இராசநாயகம் என்பவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியாகிய தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு பிரதிநிதியாக தெரிவானவர்
• திரு கிங்ஸ்லி இராசநாயகம் அவர்கள் பதவியை துறக்குமாறு ஏன் கேட்கப்பட்டார்? யாரால்?
•அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளரால் பதவி விலகும்படி கேட்கப்படாவிட்டால் யாரால் கோரப்பட்டார்?
•இராசநாயகம் என்பவரின் படுகொலை பற்றி அறிந்தவுடன் த.தே.கூட்டமைப்பு கௌரவ சபாநாயகரிடம் ஏன் தெரிவிக்கப்படவில்லை. வெற்றான பதவி ஏன் நிரப்பாது தடுக்கப்படவில்லை.
•யாருடைய வேண்டுதலுக்கமைய த.தே.கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு இராசநாயகம் அவர்களை பாராளுமன்ற செயலாளர் நாயகம் அவர்களிடம் அழைத்து சென்றார்
• இராசநாயகம் படுகொலை செய்யப்பட்ட வேளை இவர்கள் எடுத்த நடவடிக்கைதான் என்ன?
•எவராகிலும் ஒருவர் இது விடயமாக ஏதும் நடவடிக்கை எடுத்தார்களா?
•சட்டம் இடங்கொடுத்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சம்மந்தப்பட்ட உறுப்பினர்கள் இப்பிரச்சினை தீரும்வரை சபை நடவடிக்கைகளினின்றும் இடைநிறுத்த முடியும.;
• பாராளுமன்றம் ஒரு உப குழுவை நியமித்து விசாரணை செய்து சட்ட நடவடிக்கைக்காக சிபார்சு வழங்கலாம.;
•தேர்தல் ஆணையாளர் தமிழ் தேசிய கூட்டமைப்பு , தமிழரசு கட்சி ஆகியவற்றின் மீது விசாரணை செய்ய வேண்டும்.

குறிப்பிட்ட சில முக்கிய பிரமுகர்களிடம் அமரர் கிங்ஸ்லி இராசநாயகம் அவர்களின் படுகொலை சம்மந்தமான தகவல்கள் இருக்கக் கூடிய வாய்ப்பு இருப்பதால் உரிய அதிகாரிகளினால் முறைப்படி விசாரரணை முடக்கிவிடும் பட்சத்தில் வேறும் சில படுகொலைகள் பற்றிய விபரங்கள் துலங்க வாய்ப்புண்டு என தமிழர் விடுதலைக் கூட்டணி கருதுவதாலேயே இவ்வறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் ஏற்பட்டது."

எனவே கிங்ஸ்லி இராசநாயகம், இராஜன் சத்தியமூர்த்தி போன்றோரின் கொலைகளும் உடனடியாக விசாரிக்கப்படவேண்டும்.

நன்றி தேனி

Read more...

டேவிட் ஐயா: அவருடைய வாழ்க்கையே அவருடைய செய்தியா?- நிலாந்தன்

தனது பல தசாப்த கால அலைந்த வாழ்வின் முடிவில் கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு முன் நாடு திரும்பிய டேவிட் ஐயா கடந்த வாரம் கிளிநொச்சியில் அமைதியாக இறந்து போனார். ஈழத்தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தின் எல்லையோரக் கிராமங்கள் நெடுக மைல் கணக்காக நடந்த கால்கள் கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் தமது பயணத்தை முடித்துக் கொண்டன.

ஒரு செயற்பாட்டாளராக, கைதியாக, நாடு கடந்து வாழ்பவராக முதிய வயதிலும் தேடப்படும் ஒருவராக ஆறுதலின்றி சதா அலைந்த ஒரு பெருவாழ்வு கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் அதிகம் பேருடைய கவனத்தை ஈர்க்காமல் அமைதியாக முடிந்து போயிற்று.

அவருடைய இறுதி நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றது. அது அண்மைத் தசாப்தங்களில் அங்கு நடந்த இறுதி நிகழ்வுகள் எல்லாவற்றிலிருந்தும் வேறுபட்டுக் காணப்பட்டது. கட்சி ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் வேறுபட்டு நிற்கும் எல்லாத் தரப்புக்களும்; பங்குபற்றிய ஓர் இறுதி நிகழ்வு அது. எல்லாக் கட்சிக்காரர்களும், செயற்பாட்டாளர்களும் அந்த நிகழ்வில் போற்றிப் பேசுவதற்கு ஏதோ ஒன்று டேவிட் ஐயாவின் வாழ்க்கை முழுவதிலும் இருந்திருக்கிறது.

பெருமளவில் அரசியல் பிரமுகர்களும் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்ட அந்நிகழ்வில் மிகக்குறைந்தளவு பொது ஜனங்களே பங்குபற்றியிருக்கிறார்கள். இந்நிகழ்வு நடந்து இரண்டு நாட்களின் பின் நடந்த மற்றொரு இறுதி நிகழ்வில் ஒப்பீட்டளவில் கூடுதலான பொதுமக்கள் பங்குபற்றியிருக்கிறார்கள். அதுவும் ஒரு செயற்பாட்டாளரின் இறுதிக் நிகழ்வுதான். தமிழ் ஐயா என்று அழைக்கப்படும் கிளிநொச்சியை மையமாகக் கொண்டு இயங்கிய ஒரு செயற்பாட்டாளரின் இறுதி நிகழ்வு அது. அவர் அந்த ஊரைச் சேர்ந்தவர் என்பதால் அதில் பொதுமக்கள் கூடுதலாகக் கலந்து கொண்டார்கள். ஆனால் டேவிட் ஐயா கிளிநொச்சியில் வசித்திருக்கிறார் என்பது அவர் இறந்தபொழுதே பலருக்கும் தெரியவந்தது.

தனது நாடு திரும்புதலை அவர் பிரசித்தப்படுத்த விரும்பவில்லைப் போலும். கிளிநொச்சியில் உள்ள குருகுலத்தை ஸ்தாபித்த மகா ஆழுமைகளில் ஒன்று. நான்கு மாதங்களாக தங்கள் மத்தியில் சந்தடியின்றி வாழ்ந்து மறைந்திருக்கிறது என்பதை அந்த மக்களுக்கு யார் எடுத்துக் கூறுவது?

அவரது இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட எல்லா அரசியல்வாதிகளை விடவும் அவர் அதிகம் ‘ரிஸ்க்’ எடுத்திருக்கிறார். அதிகம் அர்ப்பணித்திருக்கிறார். அந்த அர்ப்பணிப்புக்களுக்குப் பரிசாக எதையுமே பெற்றுக் கொள்ளவில்லை. திருமணம் செய்யவில்லை. சொத்து எதையும் சேர்த்து வைத்திருக்கவில்லை. யாரோடும் எதற்காகவும் சமரசம் செய்துகொள்ளவில்லை. இப்படிப் பார்த்தால் அவருடைய அஞ்சலி நிகழ்வில் பங்குபற்றிய எல்லா அரசியல்வாதிகளை விடவும் அவர் உயர்ந்து நிற்கிறார்.

அரசியல்வாதிகளுக்கும் செயற்பாட்டாழுமைகளுக்கும் அவர் ஓர் அரிதான முன்னுதாரணம். குறிப்பாக ஜனவரி 08 இற்குப் பின் தமிழ் சிவில் வெளியை செயற்பாட்டு இயக்கங்கள் எவ்வாறு கையாளலாம் என்று சிந்திக்கப்படும் ஓர் அரசியல் சூழலில் அரசியல்வாதிகளும் செயற்பாட்டாளர்களும் அவரிடமிருந்து குறிப்பாக இரண்டு முக்கிய முன்னுதாரணங்களைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

01. ஒரு மெய்யான சத்தியாக்கிரகி எப்படி மெய்யாகவே ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்க வேண்டி வந்தது? என்பது.

02.ஒரு செயற்பாட்டு இயக்கம் ஆயுதப் போராட்ட இயக்கங்களோடு தொடர்புறுவதால் வரக் கூடிய பின்விளைவுகள் பற்றியது.
இவை இரண்டையும் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

தமிழ் மிதவாதிகள் அடிக்கடி கூறுகிறார்கள் சத்தியாக்கிரகத்தில் ஏற்பட்ட தோல்வியே ஆயுதப் போராட்டத்திற்குக் காரணம் என்று. அது ஒரு முழு உண்மை அல்ல என்பது ஏற்கனவே எனது கட்டுரைகளில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. அகிம்சை என்பது சாகப் பயந்தவர்களின் ஆயுதம் அல்ல. அது சாகத் துணிந்தவர்களின் வாழ்க்கை முறையாகும். காந்தியைப் பொறுத்தவரை அது ஒரு வாழ்க்கைமுறையாக இருந்தது. அதனால்தான் அவர் “எனது வாழ்க்கையே எனது செய்தி” என்று கூறத் தக்கதாக இருந்தது. ஆனால் எமது மிதவாதிகளைப் பொறுத்தவரை அகிம்சை எனப்படுவது ஒரு வாழ்க்கை முறையாக இருக்கவில்லை. அது ஒரு போராட்ட உத்தியாகத்தான் காணப்பட்டது. கடந்த ஆறாண்டுகால அனுபவமும் அத்தகையதே. அதாவது சாகப் பயந்தவர்களின் போராட்ட உத்தியாகவே சத்தியாக்கிரகம் கையாளப்பட்டு வருகிறது.

இத்தகைய ஒரு பின்னணியில் ஈழத்தமிழர்கள் மத்தியில் அகிம்சையை ஒரு வாழ்க்கை முறையாக வாழ்ந்து காட்டிய ஆளுமைகள் மிக அரிதாகவே தோன்றியிருக்கிறார்கள். டேவிட் ஐயா அத்தகைய ஒருவர். மற்றொருவர் மு. தளையசிங்கம். டேவிட் ஐயா ஒரு சமூக அரசியல் செயற்பாட்டாளார். தளையசிங்கம் ஓர் ஆன்மீக மற்றும் சமூக அரசியல் செயற்பாட்டாளர். இருவரும் சத்தியாகிரகத்தை தமது நடைமுறை வாழ்வில் விசுவாசமாகக் கடைப்பிடிக்க முற்பட்டார்கள். டேவிட் ஐயா காந்தியம் என்ற பெயரிலேயே அமைப்பினை உருவாக்கினார்.

தளையசிங்கம் பூரண சர்வவோதயம் என்ற ஒரு அமைப்பைக் கட்டி எழுப்ப முற்பட்டார். காந்திய இயக்கம் அதன் ஆரம்பக் கட்டங்களில் வெளியிட்ட ஒரு அரிதான சிறிய நூலை அதன் ஆரம்பகாலச் செயற்பாட்டாளர்களில் ஒருவரும் பின்னாளில் புளொட் இயக்கத்தில் இணைந்து செயற்பட்டவருமாகிய ஒருவர் வைத்திருந்தார். . GANDHIYAM : VAVUNIYA-SRILANKA என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அந்நூலில் காந்திய இயக்கத்தின் குறிக்கோள்களும் செயற்திட்டங்களும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.ஒருங்கிணைந்த பண்ணைகளுக்கூடாக காந்திய விழுமியங்களை கட்டி எழுப்புவதே டேவிட் ஐயா, மற்றும் மருத்துவர் ராஜசுந்தரம் ஆகியோரின் அடிப்படை இலக்குகளாக அந்நூலில் கூறப்பட்டுள்ளது.

வாகன வசதிகள் குறைந்த அந்நாட்களில் டேவிட் ஐயா கென் பாம் டொலர் பாம் போன்ற பகுதிகளை நோக்கி கிட்டத்தட்ட பதினைந்து மைல்களுக்கு மேலாக நடந்து சென்று பணிபுரிந்ததாக காந்தியச் செயற்பாட்டாளரகள் கூறுகிறார்கள்.

கிட்டத்தட்ட 45000 பேர்களையாவது இவ்வாறு எல்லைப்புறங்களிலும் வவுனியா மற்றும் கிழக்குப் பிரதேசங்களிலும் காந்தியம் குடியேற்றியது என்று கூறப்படுகிறது. திருமலையில் உருவாக்கப்பட்ட குடியேற்றங்கள் பின்நாட்களில் அகற்றப்பட்டுவிட்டன. மட்டக்களப்பில் சில குடியிருப்புக்கள் மிஞ்சியிருப்பதாகக் கூறப்படுகிறது. வவுனியா மாவட்டத்தில் குறிப்பிடத்தக்களவு குடியிருப்புக்கள் தப்பிப்பிழைத்துள்ளன.

1977 இல் நிகழ்ந்த இன வன்முறையின் விளைவாக தமிழ்ப்பகுதிகளை நோக்கி வந்த மக்களை குடியமர்த்தும் நோக்கத்தோடு ஒருங்கிணைந்த பண்ணைகள் உருவாக்கப்பட்டதாக மேற்சொன்ன நூலில் கூறப்பட்டுள்ளது. அப்படிப் பார்த்தால் காந்தியம் உருவாக்கிய ஒருங்கிணைந்த பண்ணைகளில் அநேகமானவை இன வன்முறையின் விளைவுகளே எனலாம். அவை ஒருங்கிணைந்த பண்ணை வடிவிலான குடியேற்றங்கள் மட்டுமல்ல. அரசாங்கத்தால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட குடியேற்றங்களுக்கு எதிரான ஒருவித தற்காப்புக் கவசங்களும் தான்.

நாட்டின் பல்லினத் தன்மையை உறுதி செய்வதற்காகவே அரசின் ஆதரவுடனான குடியேற்றங்கள் செய்யப்படுவதாக தென்னிலங்கையில் இருப்பவர்கள் விளக்கம் கூறுவார்கள். இலங்கை தீவின் எல்லா மாவட்டங்களையும் பல்லினத் தன்மைமிக்கவைகளாக உருவாக்க வேண்டும் என்று நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளிலும் கூறப்பட்டிருக்கிறது. ஆகப்பிந்திய கணக்கெடுப்புக்களின்படி இப்பொழுது இலங்கைததீவின் எல்லா மாவட்டங்களுமே பல்லினத்தன்மை மிக்கவைகளாக ஆக்கப்பட்டுவிட்டன.

ஆனால் மெய்யான பொருளில் பல்லினத்தன்மை மற்றும் பன்மைத்துவத்தை ஸ்தாபிப்பது என்பது ஒரு மக்கள் கூட்டத்தின் தனித்துவமான இருப்பை ஏற்றுக் கொள்வதில் இருந்தே தொடங்குகிறது. ஒரு மக்கள் கூட்டத்தின் தனித்துவமான இருப்பை கரைப்பதில் இருந்து அல்ல. அரசாங்கத்தால் திட்டமிட்டுச் செய்யப்படும் குடியேற்றங்கள் ஒரு மக்கள் கூட்டத்தின் தனித்துவமான இருப்பை நீர்த்துப் போகச் செய்து கரைத்துவிடும் உள்நோக்கம் உடையவை. நிச்சயமாக அது பல்லினத்தன்மை மிக்க ஒரு சமூகத்தை உருவாக்காது. மாறாக அது எல்லாவற்றையும் ஒன்றாகக் கரைத்துவிடும் அதாவது பெரிய இனத்துள் சிறிய இனத்தை கரைத்தழித்துவிடும் உள்நோக்கம் உடையது.

காந்தியம் கட்டி எழுப்பிய ஒருங்கிணைந்த பண்ணைகள் மேற்சொன்ன அரசின் உதவியுடனான குடியேற்றங்களுக்கு எதிரான ஒருவித தற்காப்புப் பொறிமுறைதான். இவ்வாறு காந்திய விழுமியங்களுக்கூடாகச் சிந்தித்த டேவிட்ரும் ராஜசுந்தரமும் எப்படி ஆயுதப் போராட்டத்தின் ஆதரவாளர்கள் ஆயினர்? அவர்கள் மட்டுமல்ல. மு. தளையசிங்கம் அணியினரும் கூட பின்னாளில் ஆயுதப் போராட்டத்தை ஆதரிப்பவர்களாகவே மாறினர். ஆயின் ஈழத்தமிழர்கள் மத்தியில் தோன்றிய மெய்யான சத்தியாக்கிரகிகள் ஏன் ஒரு கட்டத்திற்குப் பின் அதற்கு முற்றிலும் மாறான ஒரு வழிமுறையை தெரிந்தெடுத்தார்கள்?. அவர்கள் தமது நம்பிக்கைகளை மாற்றிக்கொள்ளவில்லை. போராட்ட வழிமுறைகளைத்தான் மாற்றிக் கொண்டார்கள். ஆனால் தமிழ் மிதவாதிகளில் எத்தனைபேர் அவ்வாறான ஒரு இறந்தகாலத்தைக் கொண்டிருக்கிறார்கள்? காந்தி சொன்னது போல “எனது வாழ்க்கையே எனது செய்தி” என்று கூறத்தக்க எத்தனை மிதவாதிகள் தமிழ் மக்கள் மத்தியில் உண்டு.? இது முதலாவது. குறிப்பாக தமிழ் அரசியல்வாதிகள் டேவிட் ஐயாவிடம் இருந்து கற்றுக் கொள்ளவேண்டியது.

இரண்டாவது தமிழ் செயற்பாட்டாளர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது.
1998 ஆம் ஆண்டு ஜெயசிக்குறு படைநடைவடிக்கையின் போது வவுனியாவில் பாலமோட்டைக் கிராமத்திற்கு ஊடாக இடம்பெயர்ந்துகொண்டிருந்தோம். அப்பொழுது மூத்த அசியல் செயற்பாட்டாளர் ஒருவர் பாலமோட்டையில் இருந்த காந்தியப் பண்ணையைக் சுட்டிக்காட்டி பின்வருமாறு சொன்னார். “காந்திய இயக்கத்தை அதன் போக்கிலேயே விட்டிருக்கலாம். ஆயுதப் போராளிகள் அதற்குள் நுழைந்திருக்கக் கூடாது. காந்தியமும் அதற்கு இடம்விட்டிருக்கக் கூடாது. இப்பொழுது அந்த இயக்கமும் இல்லை. காந்தியப் பண்ணைகளும் இல்லை. ஆனால் ஆயுதப் போராட்டத்தோடு நேரடியாக சம்பந்தப்படாது விட்டிருந்திருந்தால் காந்தியப் பண்ணைகள் தனித்துவமான ஒரு வளர்ச்சியைப் பெற்றிருந்திருக்கும்” என்று.

இது தொடர்பில் காந்தியச் செயற்பாடுகளோடு அதிகம் தொடர்புபட்டிருந்த புளொட் இயக்க உறுப்பினர்கள் சிலரோடு உரையாடினேன். அவர்களிடம் இருந்து பெற்ற தகவல்களின் அடிப்படையிலும் டேவிட் ஐயா ‘எழுநா’ இதழுக்கு வழங்கிய நேர்காணலின் அடிப்படையிலும் ஒரு தொகுதி தகவல்களைத் திரட்டமுடிந்தது. ஆனால் அவை முடிந்த முடிவுகள் அல்ல. காந்திய இயக்கத்தின் வரலாற்றின் ஒரு பகுதியும் புளொட் இயக்கத்தின் வரலாற்றின் ஒரு பகுதியும் ஓரிடத்தில் சந்திக்கின்றன. எனவே இதில் சம்பந்தப்பட்ட இந்த இரண்டு இயக்கங்களையும் சேர்ந்தவர்கள் வெளிப்படையாகப் பேசும்போது கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்படும் ஒரு வரலாறே ஒப்பீட்டளவில் முழுமையானதாக இருக்க முடியும்.

டேவிட் ஐயா கூறுகிறார். புளொட் இயக்கத்தைச் சேர்ந்த சந்ததியாருக்கும் தனக்கும் இடையிலிருந்த தனிப்பட்ட உறவு காரணமாகவே காந்தியத்துக்கும் புளொட்டுக்கும் இடையே நெருக்கம் உண்டாகியது என்று. ஆனால் டேவிட் ஐயாவை விடவும் மருத்துவர் ராஜசுந்தரமே புளொட் இயக்கத்தோடு அதிகம் நெருங்கிப் பழகியதாகக் கூறப்படுகிறது. டேவிட் ஐயா அதிகபட்சம் திட்டமிடல் பணிகளையே மேற்கொண்டதாகவும் மருத்துவர் ராஜசுந்தரம்தான் அதிகபட்சம் பண்ணைகளில் களத்திலிறங்கி வேலை செய்ததாகவும் கூறப்படுகிறது.

தமிழ் மிதவாதிகளிடம் அதிருப்தி அடைந்த இளைஞர்கள் குறிப்பாக இளைஞர் பேரவையைச் சேர்ந்தவர்கள் காந்தியத்தில் தொண்டர்களாக இணைந்தார்கள். இவர்களில் பலர் சந்ததியாரின் தொடர்பு காரணமாக பின்னாளில் புளொட்டில் இணைந்ததாகக் கூறப்படுகிறது. புளொட் இயக்கத்தைச் சேர்ந்த சுந்தரத்தால் வெளியிடப்பட்ட “புதியபாதை” என்ற பத்திரிகையை காந்தியத் தொண்டர்கள் விநியோகித்திருக்கிறார்கள். சுந்தரம் பிந்நாளில் சித்திரா அச்சகத்தில் வைத்து புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். சுந்தரம் கொல்லப்பட்டதை அடுத்து காந்தியத்துக்கும் புளொட்டுக்கும் இடையிலான உறவு ஓரளவுக்கு வெளியரங்கமாகியது என்று ஒரு மூத்த புளொட் உறுப்பினர் சொன்னார்.

ஆனால், தமது இயக்கத்தில் வினைத்திறன்மிக்க தொண்டர்களாக உள்ள பலரும் புளொட் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்பது டேவிட்டுக்கும் ராஜசுந்தரத்துக்கும் நன்கு தெரிந்திருந்தது என்று நம்ப இடமுண்டு. இக்கட்டுரைக்காக நான் சந்தித்த மூத்த புளொட் உறுப்பினர் ஒருவரிடம் கேட்டேன். காந்தியத்தில் புளொட் சம்பந்தப்பட்டிராவிட்டால் காந்தியம் எப்படிப்பட்ட ஒரு வளர்ச்சியைப் பெற்றிருக்கும்?என்று. அவர் சொன்னார் – “காந்தியத்தின் வினைத்திறன்மிக்க தொண்டர்களாக இருந்தவர்களில் பலர் எமது இயக்கத்தோடு தொடர்புடையவர்கள்தான். அவர்கள் இல்லை என்றால் காந்தியம் அப்படி ஒரு வளர்ச்சியைப் பெற்றிருக்காது. தவிர எமது இயக்கத்தோடு சம்பந்தப்பட்டிருக்காவிட்டாலும் அரசாங்கம் காந்தியத்தை நீண்ட காலத்துக்கு அனுமதித்திருக்காது” என்று.

சிறையுடைப்பில் தப்பிச் சென்ற பின் இந்தியாவில் டேவிட் ஐயா புளொட் இயக்கத்தின் தலைமைத்துவத்தோடு முரண்படத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் புளொட் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்ற தீப்பொறி அணியோடு அவர் சேர்ந்து இயங்கத் தொடங்கினார். அதன் பின் புளொட் இயக்கத்தால் அவருக்கு வழங்கப்பட்ட உதவிகள் எதையும் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். நான்கு மாதங்களுக்கு முன் நாடு திரும்பிய போதும் அந்த இயக்கத்திற்கு அறிவித்திருக்கவில்லை. ஆனால் அவருடைய இறுதி நிகழ்வை அந்த இயக்கமே ஒழுங்கு செய்தது.

ஒரு செயற்பாட்டு இயக்கத்தின் ஒழுக்கத்திற்கும் ஆயுதப் போராட்ட ஒழுக்கத்திற்கும் இடையே வேறுபாடுகள் உண்டு குறிப்பாக மக்கள் மயப்பட்ட செயற்பாடுகளில் ஈடுபடும் ஒரு இயக்கமானது ஆயுதப் போராட்ட இயக்கத்தோடு நேரடியாக தொடர்புறுகையில் அந்த ஆயுதப் போராட்ட இயக்கத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் அந்த செயற்பாட்டு இயக்கத்தின் போக்கையும் தீர்மானிக்கின்றன. அந்த ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்படுமாக இருந்தால் அந்த செயற்பாட்டு இயக்கமும் தோற்கடிக்கப்படுகிறது.

ஈழத்தமிழ் வரலாற்றில் காந்தியம் இயக்கத்தைப் போலவே மற்றொரு உதாரணமும் உண்டு. யாழ். பல்கலைக்கழகத்தை மையமாகக் கொண்டு எழுந்த பொங்தமிழ் என்று அழைக்கப்படும் ஒரு பேரரங்கச் செயற்பாடு அது. இலங்கைத்தீவின் வரலாற்றிலேயே முன்னுதாரணமற்ற ஒரு பேரரங்கச் செயற்பாடு அது. முதலிரு பொங்குதமிழ் நிகழ்வுகளும் ஒப்பீட்டளவில் சுயாதீனமானவை என்று கூறப்படுகின்றது.

ஆனால் அதன் பின் நிகழ்ந்தவை ஆயுதப் போராட்டத்தின் அதிகரித்த செல்வாக்குக்கு உட்பட்டுவிட்டதாக ஒரு விமர்சனம் உண்டு. ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின் கடந்த சுமார் ஆறு ஆண்டுகளிலும் பொங்குதமிழை ஒத்த ஒரு பேரரங்க நிகழ்வை பல்கலைக் கழகத்தை மையமாகக் கொண்டு உருவாக்க முடியாமல் போயிற்று. ஒரு செயற்பாட்டு இயக்கமானது ஆயுதப் போராட்டத்துடன் தொடர்புறுகையில் அதன் தனித்துவம் மிக்க அடிப்படை ஒழுக்கத்தை இழக்காமல் இருப்பது அவசியம். இல்லையென்றால் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்படும் போது அந்த செயற்பாட்டு இயக்கமும் பின்தள்ளப்பட்டுவிடும்.

தமிழ் சிவில் இயக்கங்கள் டேவிட் ஐயாவின் வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய முக்கிய பாடம் இது.

ஆயுதப்போராட்டம் கருக்கொண்ட அதே தசாப்தகாலப்பகுதியில் உருவாகிய ஒரு மகத்தான செயற்பாட்டியக்கம் இடையிலேயே தடைசெய்யப்பட்டடு விட்டது. இப்பொழுது ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து ஆறு ஆண்டுகளான பின்னரும் அப்படியொரு செயற்பாட்டியக்கத்தை கட்டியெழுப்ப முடியவில்லை. ஜனவரி எட்டுக்குப் பின் அதிகரித்து வரும் தமிழ் சிவில் வெளியை வெற்றிகரமாகக் கையாளத்தக்க செயற்பட்டியக்கங்கள் எதையும் அரங்கில் காணமுடியவில்லை. தமிழ்மக்கள் செயலுக்குப் போகாமல் கூடுதலாகக் கதைத்துக் கொண்டிருக்கிறார்களா? இறந்தகாலத்திலிருந்து எதையுமே விரைவாகக் கற்றுத்தேற மாட்டார்களா?


Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com