Sunday, October 18, 2015

கிங்ஸ்லி இராசநாயகம், இராஜன் சத்தியமூர்த்தி போன்றோரின் கொலைகளும் உடனடியாக விசாரிக்கப்படவேண்டும் .

-மீன்பாடும் தேனாடான் - 
2004ஆண்டு ஏப்ரல் மாதம் பொதுத்தேர்தலுக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருந்ததது. இந்த தேர்தலை எதிர்கொள்ள புலிகளின் சிபார்சின் பெயரில் புலிகளது அறிவுறுத்தலுக்கமையவே தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது வேட்பாளர்களை தெரிவு செய்து நிறுத்தியிருந்தது. ஆனால் தேர்தலுக்கு முன்பாகவே மார்ச் மாதம் 4ம் திகதி புலிகளுக்குள் கருணாம்மானின் தலைமையில் கிழக்கு பிளவு உருவானது. பிளவுக்கு முன்புவரை மட்டகளப்பு -அம்பாறை மாவட்டங்களின் விசேட தளபதியாக இருந்த கருணாம்மானே புலிகளின் சார்பில் இந்த வேட்பாளர்களை தேர்வு செய்திருந்த படியால் வன்னிபுலிகள் மட்டகளப்பு வேட்பாளர்கள் பிளவின் பின்னர் கருணாம்மானுக்கு சார்புநிலை எடுப்பார் என அஞ்சி வெற்றிவாய்ப்பை பெறக்கூடிய வேட்பாளர்கள் அனைவரையும் படுகொலை செய்ய திட்டமிட்டனர்.இராஜன் சத்தியமூர்த்தி தேர்தலுக்கு முன்பே கொல்லப்பட்டார்.அவரது புதைக்கப்பட்ட உடலைக்கூட தோண்டியெடுத்து வன்னிபுலிகள் சின்னா பின்னப்படுத்தினர்.கனகசபை என்னும் வேட்பாளரை கொலை செய்ய தயாரான புலிகளை பொதுமக்கள் சுற்றிவளைத்து பிடித்ததால் அவரது உயிர் காப்பாற்றப்பட்டது. தேர்தல் முடிந்தவுடன் வெற்றியடைந்த கிங்ஸ்லி இராசநாயகம் வன்னிபுலிகளால் கொல்லப்பட்டார்.அவரை இராஜினாமா செய்ய வைத்த பின்னர் அவரை கொன்றனர்.அந்த இடத்துக்கே அரியநேந்திரனை புலிகள் நியமித்தனர். அதற்கு பின்னர் அத்தேர்தலில் வெற்றி பெற்றிருந்த ஜோசேப் பரராசசிங்கம் கொல்லப்பட்டார்.

இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களான மூவர் ஏறக்குறைய சுமார் சுமார் ஒன்றரை வருட இடைவெளியில் ஒரே பிரதேசத்தில் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்த கொலைகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் அதிகாரப்போட்டிகளும்இபழிவாங்கல்களும் நிறையவே செல்வாக்கு செலுத்தியிருக்கின்றன.

ஜோசேப் பரராசசிங்கத்தின் கொலையை தவிர மற்றைய இரு கொலைகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பால் மறக்கடிக்கப்பட்டு வருவதிலிருந்து இதனை புரிந்து கொள்ள முடியும்.இன்றுவரை ஒவ்வொரு வருடமும் ஜோசேப் பரராசசிங்கத்தின் கொலையை நினைவு கூருகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பும் அவர்களின் சார்பு ஊடகங்களும் கிங்ஸ்லி இராசநாயகம்இஇராஜன் சத்தியமூர்த்தி போன்றோரின் பெயர்களை மறந்தும் உச்சரிப்பதில்லை.

இந்த நிலையில்தான் இராசநாயகம்இஇராஜன் சத்தியமூர்த்தி போன்றோரின் கொலையின் பின்னணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் இமுக்கியஸ்தர்கள் போன்றோர் இருக்கின்றார்கள் என்கின்ற சந்தேகம் எழுகின்றது. இதுகுறித்து மூத்த தமிழ் தலைவரும் சமாதானத்துக்கான யுனஸ்கோ "மதன்ஜீத்" விருது பெற்றவருமான தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் ஆனந்த சங்கரி கடந்த ஆண்டு (12.08.2014) இலங்கை ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் இந்த சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.அக்கடிதத்தில் அவர் பின்வருமாறு கேள்விகளை எழுப்புகின்றார்.

"2004ம் ஆண்டு தேர்தலில் மட்டக்களப்பு தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் கிங்ஸ்லி இராசநாயகம் வெற்றி பெற்றிருந்தார். அவரின் சகபாடியாகிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் திரு இராசநாயகத்தை பாராளுமன்ற செயலாளரிடம் கூட்டிச்சென்று அவரின் இராஜினாமா கடிதத்தினை கையளிக்க வைத்தார். இதனை தொடர்ந்து திரு இராசநாயகம் அவர்கள் படுகொலை செய்யப்பட்டார். யாரோ சிலரின் மீது கொண்ட அச்சம் காரணமாக இவ்விடயம் இலகுவாக மறக்கப்பட்டுவிட்டது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழரசு கட்சி ஆகிய இரு கட்சிகளின் நிர்வாக சபை உறுப்பினர்கள் சம்மந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்தை நிரப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோர் இக்குற்றவியல் செயல்பாடுகளிற்கு பொறுப்புகூற வேண்டியவர்களாவர். ஆகவே என்னால் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில தரவுகளை வைத்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பொருத்தமான நடவடிக்கை எடுத்து இலங்கையின் நீதி நிர்வாகத்தில் மக்களிற்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

தரவுகள்.
•திரு கிங்ஸ்லி இராசநாயகம் என்பவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியாகிய தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு பிரதிநிதியாக தெரிவானவர்
• திரு கிங்ஸ்லி இராசநாயகம் அவர்கள் பதவியை துறக்குமாறு ஏன் கேட்கப்பட்டார்? யாரால்?
•அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளரால் பதவி விலகும்படி கேட்கப்படாவிட்டால் யாரால் கோரப்பட்டார்?
•இராசநாயகம் என்பவரின் படுகொலை பற்றி அறிந்தவுடன் த.தே.கூட்டமைப்பு கௌரவ சபாநாயகரிடம் ஏன் தெரிவிக்கப்படவில்லை. வெற்றான பதவி ஏன் நிரப்பாது தடுக்கப்படவில்லை.
•யாருடைய வேண்டுதலுக்கமைய த.தே.கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு இராசநாயகம் அவர்களை பாராளுமன்ற செயலாளர் நாயகம் அவர்களிடம் அழைத்து சென்றார்
• இராசநாயகம் படுகொலை செய்யப்பட்ட வேளை இவர்கள் எடுத்த நடவடிக்கைதான் என்ன?
•எவராகிலும் ஒருவர் இது விடயமாக ஏதும் நடவடிக்கை எடுத்தார்களா?
•சட்டம் இடங்கொடுத்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சம்மந்தப்பட்ட உறுப்பினர்கள் இப்பிரச்சினை தீரும்வரை சபை நடவடிக்கைகளினின்றும் இடைநிறுத்த முடியும.;
• பாராளுமன்றம் ஒரு உப குழுவை நியமித்து விசாரணை செய்து சட்ட நடவடிக்கைக்காக சிபார்சு வழங்கலாம.;
•தேர்தல் ஆணையாளர் தமிழ் தேசிய கூட்டமைப்பு , தமிழரசு கட்சி ஆகியவற்றின் மீது விசாரணை செய்ய வேண்டும்.

குறிப்பிட்ட சில முக்கிய பிரமுகர்களிடம் அமரர் கிங்ஸ்லி இராசநாயகம் அவர்களின் படுகொலை சம்மந்தமான தகவல்கள் இருக்கக் கூடிய வாய்ப்பு இருப்பதால் உரிய அதிகாரிகளினால் முறைப்படி விசாரரணை முடக்கிவிடும் பட்சத்தில் வேறும் சில படுகொலைகள் பற்றிய விபரங்கள் துலங்க வாய்ப்புண்டு என தமிழர் விடுதலைக் கூட்டணி கருதுவதாலேயே இவ்வறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் ஏற்பட்டது."

எனவே கிங்ஸ்லி இராசநாயகம், இராஜன் சத்தியமூர்த்தி போன்றோரின் கொலைகளும் உடனடியாக விசாரிக்கப்படவேண்டும்.

நன்றி தேனி

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com