Wednesday, June 17, 2015

பாலியல் வல்லாயுதமும் அதன் வினைத்திறனும்.

பாலியலைப் பெண்களும் ஆண்களும் தம் விருப்புகளை நிறைவேற்றும் ஆயுதமாகப் காலம்பூராக இன்றுவரை பாவித்து வந்திருக்கிறார்கள். ஆனால் இக்கட்டுரையானது மட்டுப்படுத்துப்பட்டு பாலியல் வல்லுறவுக்காக எப்படி? எதற்கு? ஏன் பயன்படுத்தப்பட்டது படுகிறது என்பது பற்றியதே. போரின பின் ஏற்பட்டுள்ள பாலியல் வன்கெடுமைகளை முன்னிறுத்தியே மட்டுப்படுத்தப்பட்டு எழுதப்படுகிறது.


ஒர் உயிர் உலகில் அனாதையாகி விடக்கூடாது என்பதற்காக இந்த புண்ணிய கருமத்தை இருவரின் மகிழ்வுடன், இன்பமாகக் காதலில் கலந்து பகிர்ந்து உயிர்களை உருவாக்கிறது இயற்கை. இனப்பெருக்கமே இயற்கையின் கருதுகோளாக இருந்தாலும் அதில் இன்பம், அன்பு, உறவு என்பனவற்றைஅது ஏற்படுத்தித் தருகிறது. மிருகங்களின் உலகை எடுத்துக் கொண்டால் தன்னுடலுடனான உறவை தெரிவு செய்யும் உரிமை பெண்ணுக்கே கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கான பண்புகளையும், பக்குவத்தையும், வளர்ப்பு முறையையும் இயற்கை வளங்கியுள்ளது. தெரிவை இலகுவாக்க ஆண்ணினத்தை அதிவர்ணம், பலம் கொண்டனவாக அமைத்துள்ளது. மென்மையான பெண்மைக்கு பலத்தின் பாதுகாப்புத் தேவைப்படுவதால் ஆண், பெண் உறவுகள் தங்கிவாழும் தன்மை கொண்டனவாக அமைக்கப்பட்டுள்ளன. அழகில் கவரப்பட்டு காதல் வசப்பட்டாலும் பாதுகாப்பு நம்பிக்கை என்னவே பெண்பாலில் அடிப்படை எண்ணமும் தேவையுமாக இருந்து வந்துள்ளது. உ.ம் மனிதவினத்தில் கூட குடும்பம் உழைப்பு பளக்கவளக்கம் பார்த்து மாப்பிளை தெரிவு நடப்பது இயற்கையின் அடிப்படைக் கொள்கையில் ஒன்றாக அமைந்துள்ளது. மென்மைத் தன்மை கொண்ட பெண்விலங்கு குட்டிபோட்டால் குட்டிக்கு ஆபத்து நேருங்கால் தாய் மிருகத்தின் கோபம் பலமாக வெளிப்படும். இது இயற்கை மூன்று நாலு ஐந்து அறிவுள்ள உயிரினங்களுக்கு இயற்கையாகவே கொடுக்கப்பட்டது. பல மிருகங்களின் உறவுகளையும் பாலியல் பழக்க வளங்கங்களை எடுத்து நோக்கினால் அவை மனிதர்களை விட சிறந்தனவாக சரியான வாழ்வியல் வடிவமைப்புக் கொண்டனவாக இருக்கின்றன.

பெரும்பான்மையான மிருகங்கள், பறவைகள் கேவலங்கெட்ட மனிதர்கள் போல் வன்புனர்வு கொள்வதில்லை. பெண்ணினத்தின் உணர்வுகளுக்குத் மதிப்பழிக்கின்றன. இப்படியான நற்பண்புகள் அற்ற நாம் மனிதர் என்று பெருமைப்பட்டுக் கொள்கிறோம்.

ஆயுதம்
ஆயுதம் வேட்டையில் உணவைத் தேடித் தாக்குவதற்கும், எதிரியை தாக்குவதற்குப் பிரத்தியோகமாகப் பயன்படுத்துப்படும் பொருளாகும். ஆரம்பத்தில் கற்களை ஆயுதமாகப் பாவித்த மனிதன் பின்னர் அக்கற்களை கூர்மையாக வடிமைத்து வெட்டு குத்து ஆயுதமாக்கினார்கள். இக்காலம் கற்காலம் என்று கருதப்பட்டது. கற்கள் தடிகள் மரம் போன்றன கூர்மையாக்கப்பட்டு தாக்கும் கல்லாயுதங்கள் ஆகவும் ஈட்டி போன்ற கூராயுதங்களாகவும் வேட்டைக்குப் பாவிக்கப்பட்டது. இது உணவைத் தேடும் அடிப்படை வாழ்வாதரம் நோக்கிய வளர்ச்சியாக இருந்த போதிலும் தமக்கு விரும்பாதவர்களையும், மிருகங்களையும், எதிரிகளையும் தாக்கவதற்குப் பயன்பட்டது. இதன் பரிணாம வளர்ச்சியில் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டு ஆயுதங்கள் இரும்பில் உருவாக்கம் பெற்றன. இன்று இராக்கெட்டுக்கள் துப்பாக்கிகள் ஏவுகணைகள் என ஒரு செக்கனில் உலகத்தை அழிக்கும் அழிவாயுதங்களாக விரிவடைந்துள்ளன. சுருங்கக் கூறின் ஒருவாழ்வின் அடிப்படைத் தேவையும் காரணியும் மனிதனால் உலக அழிவுக்குக் காரணியாக மாற்றப்பட்டது கவலைக்குரியதே.

இவ்வல்லாயுதங்களுக்கு முதலும் மூத்ததுமானது பாலியலாயுதமான வன்புனர்வாகும். இது பல்வேறு பரிணாமங்களின் கலாசார, உறவுரீதியாக பரிணாம் பெற்றாலும், இவற்றில் சில சமூகவந்தஸ்தைப் பெற்றுள்ளன. மாமன் மச்சான் திருமணங்கள், பேசிச்செய்யும் திருமணங்கள் என்பன சமூகக்கட்டுகோப்பை நாடி நல்நோக்குடன் செயற்பட்டன. இவை வல்லுறவு என்று வட்டத்துக்குள் வராவிட்டாலும் பெண்ணின் பாதுகாப்பு நல்லெதிர்கலம் கருதியதாகவும் ஆனால் இயற்கையின் கட்டுக்கோப்பான பெண்ணின் தெரிவு என்ற வட்டத்துக்கு வெளியேயும் நிற்கிறது. இருப்பினும் இதைத்தழுவும் முகமாக அரசபரம்பரைகளில் சுயம்வரம் என்பது நிகழ்த்தப்பட்டது. இது சதாரண மக்களிடையே மாப்பிளைத் தேர்வு என்ற போதாவில் போட்டிகளாக உருவெடுத்தன. இது சமூக இயற்கைக் கோட்பாட்டுகளுடன் இணைந்து இயங்கத் தொடங்கின. பின்னர் ஆணின் பலம் பரீட்சிக்கப்பட்டு பாதுகாப்பு வல்லமை கொண்ட ஆண்கள் தெரிவு செய்யப்பட்டனர். இங்கே பாலியல் பாதுகாப்புடன் கூடிய குடும்பப்பாதுகாப்பும் உழைப்பும் உறுதிப்படுத்தப்பட்டது.

மேலே குறிப்பிட்ட கற்காலத்திலும் அதற்கு முன்னராகவும் வன்புனர்வுகள் நடந்திருக்கின்றன. ஒரு ஆண் தான்விரும்பியவளை அடையாதபோது தனது உடல் பலத்தை பாவித்து வல்லுறவு கொண்டுள்ளனர். பின்னர் அவை கூட்டுவாழ்வை மேற்கொண்ட காலத்தில் குழுக்களாகக் கூட நடந்திருக்கிறதுன. இக்குழு வடிவமே கூட்டுவன்புனர்வுக் கொலையாக இன்று வரை புங்குடுதீவுவரை நிலைத்து நிற்கிறது. இக்கூட்டு வன்புனர்வானது மனிதன் குழுக்களாக வாழத்தொடங்கியபோதும் அதற்கு முன்னரும் எதிரிக்குழுவை தாக்கி சிறைப்பிடித்து வந்து பெண்களை வன்புனர்வு கொண்டுள்ளனர்.

ஆபிரிக்காவில் இன்றும் ஆடையின்றி அலையும் சமூகங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அங்கே வன்புனர்வுகள் ஏறக்குறைய இல்லை என்றே கருதப்படுகிறது. ஆக மானத்தை மறைக்க மனிதன் என்று உடை உடுத்தானோ அன்றே மாதர் மானமும், மனிதனிதமானமும், மனிதநேயமும் மரணமடைந்தது எனலாமா? தாய்வழிச் சமுகமாக இருந்து வளர்ந்த நாம் தறிகெட்டுப்போனது எப்போது?

வன்புனர்வுகளும் கலாச்சாரங்களும்

இப்படியான வன்புனர்வுகளுக்கு சில கலாசாரங்கள், சட்டங்கள், மதங்கள், ஊக்கமளித்தன, ஊக்கமளிக்கின்றன. இவற்றை மத்தியகிழக்கில் மத இன கலாசார, சமூகப்பின்னணிகளில் இதைக் காணலாம். இந்தியவின் முதற்குடி தமிழ்குடி என்பது மரபணுப்பரிசோதனையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. பண்டைய நாகரீகப்புரட்சிகள் என்று ஆற்றுப்படுக்கைகளை ஒட்டியே நடந்திருக்கின்றன. இதுபற்றி விபரிப்பதை விடுத்து தமிழர்களின் நாகரீகமும் சிந்துநதிக்கரையோரச் சமவெளியில் நடந்தது என்பது ஆதாராபூர்வமானது. வேட்டையின் ஆபத்தில் இருந்து தன்மைப்பாதுகாத்துக்கோள்ள விவசாயத்தையும் மிருகங்களைப் தேடிக்கொன்று தின்பதை விடுத்து மிருகங்களைப் பிடித்து வளர்ப்பதிலும் ஈடுபட்டனர். இதை வடக்கில் இருந்து வந்து ஆரியர் கூட்டம் கண்டது வியந்தது முயன்றது. இருப்பினும் வேட்டையைக் கைவிடத் தொடங்கிய இனம் பலத்துடன் கூடிய வேட்டையைக் கைக்கொண்ட ஆரியகூட்டத்திடம் நாகரீகம் மண்டியிட்டது. இதன் வடிவத்தை இன்றும் காணலாம். இதன்காரணத்தால் ஆதிகுடி மக்கள் அடிமையாக்கப்பட்டார்கள். சொந்த இடங்களில் இருந்து வந்தேறிகளால் துரத்தப்பட்டார்கள். அக்குடிப்பெண்கள் பாலியல் அடிமைகளாகவும் வன்புனர்வுக்கும் உள்ளானார்கள்.

உடன்கட்டை ஏறுதல்

இந்தியாவை நோக்கிய முகலாயர் படையெடுப்புக்களை உற்றுநோக்குவீர் களானால் இதை இலகுவாகப்புரிந்து கொள்ளலாம். முகலாயர்கள் இந்தியாவை நோக்கிய படையெடுப்புக்களில் அரசனைச் சிறைப்பிடித்துக் கொல்லுவதுடன் நின்று விடவில்லை. அவனுடைய மானம் கௌரவம் அந்த மண்ணில் அடியோடு சிதைக்கப்படவேண்டுமாயின் அரசி அல்லது அரனின் மகளின் கற்பு சூறையாபப்பட வேண்டும். இக்கொடுமையில் இருந்து தப்புவதற்காக அரசி அரசன் இறந்ததும் அரசி தீயில் குதித்து தற்கொலை செய்து கொள்வாள். அரசி கணவனின் அதி அன்பு கொண்டவள் என்பதைப் பறைசாற்றுவதற்கும், பல அரசியரில் தன்னுரிமையை நிலைநிறுத்துவதற்கும், தன்பிள்ளையே பட்டத்துக்குரியவன் என்பதை உறுதியாக்கவும் இந்த உடன்கட்டை ஏறுதல் பயன்படுத்துப்பட்டது. இது பின் சமூகமாக கொடுமையான வன்மையான மனிதநேயமற்ற வளர்ச்சி உடன்கட்டை ஏறுதலாக மாற்றம் பெற்றது. இது பிற்காலத்தில் மனைவியை தீயினுள் தள்ளிவிடும் நிகழ்வாக கௌரவச் செயலாக மதரீதியாகவும் மாற்றம் பெற்றது. இவை அதைத்தும் பாலியல் வன்புனர்வாயுதங்களாலேயே உருவானது.

சட்டமாக்கப்பட்ட வன்புனர்வு

இந்தப்பாலியல் என்பது படுமோசமான ஆயுதமாக மனிதநேயமற்ற முறையில் தண்டிக்கும் ஆயுதமாக, தண்டனையாக இன்றுவரை மதம்சார் கலாச்சாரமாக உருமாற்றம் பெற்றிருப்பது மிக வேதனைக்குரியதே. பெயர் குறிப்பட விரும்பாத நாடுகளில் வன்புனர்வு என்பது சட்டரீதிகாக அனுமதிக்கப்பட்டு அது நடைமுறைப் படுத்தப்படுகிறது என்பது இந்த நாகரீக உலகிலே மிருகங்களே கைக்கொள்ளாத கொடு அரக்கத்தனமான, காட்டுமிராண்டித்துனமான விலங்குகள் மனிதர்கள் என்பதை பறைசாற்றி நிற்கிறது. மனிதநேயம் பேசும் நாடுகளே, அமைப்புகளோ, ஐ.நா. சபையோ இவற்றைக் கண்டும் காணாமல் இருப்பது கண்டிக்கத்தக்கதே.

பெண்ணிலே மானம் கௌரவம்

இவ்வன்புனர்வுகள் கோவம், குரோதம், பொறாமை, வன்மம், நினைத்ததை அடைமுடியாமை, கௌரவக்கெடுப்பு, அவமதிப்பு என்ற பலநோக்கங்களுக்காக பெண்கள் வதைக்கப்பட்டார்கள், வதைபடுகிறார்கள். இந்த கௌரவ அழிப்பு வன்புனர்வுகள் ஒரு முக்கியமான விடயத்தை சுட்டி நிற்கிறது. மனித சமூகத்தில் கௌரவம், மானம், ரோசம், என்பன பெண்களிலேயே அடக்கப்பட்டிருந்தது என்ற பெருமையையும் சொல்லாமல் சொல்லி நிற்கிறது. பெண்ணைப் போதை பொருளாகக் கருதும் மதங்களும், மார்க்கங்களும் அவள் கௌரவத்துக்குரியவள் என்பதை சொல்லாமலே சொல்லிச் செல்கின்றன. அவள் கௌரவத்துக்குரியவள் என்பதால்தான் கடுமையான கட்டுப்பாடுகள், அடக்கு முறைகள் பெண்ணின் மேல் திணிக்கப்பட்டது என்பதையும் சொல்லாமல் சொல்லி நிற்பதை உணரமுடிகிறது.

ஐரோப்பிய பாலியல் வன்மம்

அன்று ஐரோப்பாவில் இப்பாலியலை போருக்காகப் பயன்படுத்தினார்கள். அதாவது அழகான வல்லமையுள்ள ஆண்குழந்தைகளை அரசின் உத்தரவின் பேரில் பிடித்து வந்து நலமடிக்கப்பட்டு வெறும் போர் இயந்திரமாகவே வளர்த்து வந்தார்கள். இவை ஆண்களுக்கு எதிராக இயற்கைக்கு மாறாக மனிதர்கள் செய்த மனிதநேயமற்ற செயல். வீட்டுக்கு ஒருபிள்ளை போருக்கு என்ற கொள்கையும் ஐரோப்பாவில் பலநாடுகளில் கடைப்பிடிக்கப்பட்டன. இதன் படிமுறை வளர்ச்சியே அனைவருக்குமான தேசியப்பாதுகாப்பு இராணுவப்பயிற்சி என்பதாகும்.

இராணுவத்தில், கிளர்ச்சிக்படைகளில் தற்பாற்சேர்க்ககை வன்புனர்வு சாதாரணமாவே நடந்து வருகிறது. இது கண்டும் காணாமல் பேசாப்பொருளாக்கப்படுகிறது. இதுபற்றி எழுதுவதாயின் இதற்கு என்று இன்னொரு கட்டுரை தேவைப்படும். அதனால் இதை இத்துடன் நிறுத்துகிறேன்

நாட்டின் நன்மை என்று கருதி ஊனமாகப்பிறந்த ஆண்குழந்தைகள் மலைகளில் இருந்து பாதாளத்துக்கு வீசி எறிந்து கொல்லப்பட்டார்கள். நாம் மனிதநேயர்கள் மனிதபுரிசர்கள் என்று வெள்ளையர் நெஞ்சு நிமிர்த்திப் பேசுபதற்கு இலாயக்கற்றவர் களாகவே உள்ளனர். இருப்பினும் அவர்கள் அந்நிலையில் இருந்து மாறிவந்துள்ளனர் என்பதை யாரும் மறுக்க இயலாது.

தெய்வீகக்காமம்.

இக்காமத்தின் வன்மை கெடுவதற்காக அதை புனிமாக்கி, காதலாக்கி, அதைக் கடவுளாக்கிய நடைமுறைகளும் உண்டு. இது பாலியலைப் புனிதமாக்கும் முயற்சியாகவும் பாலியலூடு இறைநம்பிக்கையை வளர்க்கவும் வழிவகுத்தது. எது எப்படியாயினும் பாலியல் என்பது உணர்வு மிக்க வன்மையான ஒன்றாகவே ஆத்மரீதியாகவும் உடல் உளரீதியாகவும் பார்க்கப்படுகிறது. காரணம் இது சிலவேளைகளின் மனிதனின் கட்டுப்பாட்டை மீறிய செயலாகவும் அமைந்துள்ளது.

மனிதன் உருவான காலத்தில் சுயவிருப்புக்கு எதிரான பாலியல் வன்புனர்வானது இன்று வரை நாகரீகம் அடைந்த, மனிதநேயத்துக்கு எதிராக உலகில் நின்று நிலைக்கிறது என்றால் இதன் பின்புலத்தில் ஏதோ ஒரு ஆழமான காரணமும், உணர்வும் இருந்தே ஆகவேண்டும். அது என்ன?

இந்தப்பாலியல் வல்லாயுதத்தை மனிதர்கள் மனிதநேயம் கொண்டவர்கள் அகில உலகில் உள்ள பெண்கள் வெறுத்தாலும் இது நிகழ்கிறது, தொடர்கிறது. தன்குழந்தையைக் காக்க வீறு கொண்டெழும் ஒரு பெண்ணால் இந்த வன்புனர்வுகளில் இருந்து மீளமுடியவில்லை ஏன்?

சுரப்புக்கள்

இயற்கை தன்னைச் சமப்படுத்துவதற்காக தன் செயற்பாடுகளை தொடநிலைத் தானியங்கியாக வைத்துள்ளது. உ.ம் நாம் வழி அசுத்தத்தை ஏற்படுத்தி வழிமண்டல வெப்பத்தை அதிகரிப்போமானால் இயற்கை பூகம்பங்களாக அங்காங்கே வெடித்து தன்னைத் தானே குளிவித்துக் கொள்கிறது. இதேபோன்று இனப்பெருக்கம் என்பது தடைப்படாதிருக்க உயிருள்ள அனைத்திலும் சுரப்புகளை வைத்து தானியங்கு தன்மையுள்ள தாக்கியுள்ளது. இச்சுரப்புக்கள் பிறப்பின் போது இருந்தாலும் இயங்குதன்மையையும் சுரப்பு வேகத்தையும் தம் பருவவயதிலே பெறப்படுகிறது. ஒரு உயிர் அல்லது இனம் தான் அழியப்போகிறேன் என உணரும்போது இப்பாலியல் சுரப்புக்கள் அதிவேகமாகச் செயற்படுகின்றன என்பதை பல மனோவியல் ஆய்வுகள் கூறகின்றன. இவை வல்லுறவுகளாகவும் வெளிப்படுகின்றன.

போர் நடைபெறும் நாடுகளைப்பார்த்தால் அங்கே பிள்ளைப்பெறும் வீதமும் அதிகமாக இருக்கும். அதேபோன்று ஐரோப்பா போன்ற அழிவுகளை 3ம் உலகநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவிட்டு அமைதியாக இருக்கும் நாடுகளில் வெள்ளையினம் அழிந்து கொண்டே வருகிறது. இதற்கு உதாரணம் மே.ஜேமனி, நோர்வே, இரஸ்யா. ஆய்வுக்காக புலி சிங்கம் போன்ற கொடுவிலங்குகள் இல்லாத காட்டில் மான்களை வாழவிட்டார்கள். அந்த இனம் வளர்ச்சியடையவோ பெருகவோ இல்லை. அதே மான்களை கொன்று தின்னும் மிருகங்களுடைய பகுதிகளில் வாழவிட்டபோது அவை தன்னினத்தைப் பெருக்கிக் கொண்டன. ஆபத்து என்று வரும்போது தம்மை அறியாமலேயே சுரப்புக்களின் பாதிப்பால் இனங்கள் பெருகிக்கொள்கின்றன. இதுதான் சுரப்புக்களின் சூட்சுமம்.

இதேபோன்றது தான் போர் நடைபெறும் பிரதேசங்களின் பிறப்புவீதமும் வன்புனர்வுகளும் அதிகரிப்பதற்குக் காரணம். தன்னுயிருக்கு ஆபத்து என உள்ளுணர்வு உணரும் பட்சத்தில் சுரம்பு தன்னையறியாமலேயே செய்பட ஆரம்பிக்கும். போர் எதிரி என்று வரும்போது இப்பாலியல் உணர்வு வன்புனர்வாக வெளிப்படும். எதிரி அவலமும்; அலறலும் திருப்தி தரும் என்பதால் வன்புனர்வு இரண்டையும் சேர்ந்து இரட்டிப்பான திருப்தியாகக் கொடுப்பதால், போர்சூழல் பாலியல் வன்புனர்வற்றது என்று என்றும் கருத இயலாது. மகிந்தர் கூறவதுபோல் எமது சிங்களப்படை கட்டுப்பாடுடையது என்று மார்பு தட்டவும் இயலாது. இங்கே பாலியல் இரட்டைத்திருப்தியுடன் எதிரியை இழிநிலைப்படுத்தும் வல்லாயுதமாக பாலியல் பயன்படுகிறது.

வியட்னாம் போரில் உலகின் சிறந்த கட்டுப்பாடான ஒழுக்கமான அவுஸ்ரேலிய இராணுவம் அமைதிப்படையாக நின்றது. போர் முடிந்து அவுஸ்ரேலியப்படை வெளியேறிய பின்னர்தான் தெரிந்தது பல இலட்சம் அவுஸ்திரேலிய கலப்புப்பிள்ளைகள் வியட்னாமில் உருவாக்கப்பட்டிருந்தார்கள் என்பது. சரி காந்தியின் மைந்தர்கள் ஈழத்துக்கு சமாதானப்படை என்று வந்தார்களே காந்திமாதிரியா நடந்தார்கள். காமம் ஆயுதம் தாங்கி நின்றிருந்தது. எதிரியாகப் பார்க்கப்பட்ட ஈராக்கியருடன் அமெரிக்கப்படை வீரர்கள் படைவீரிகள் எப்படி நடந்து கொண்டார்கள். போருக்கும் நிர்வாணத்துக்கும் என்ன தொடர்பு? வட்டுக்கோட்டைக்கும் கொட்டைப் பாக்குக்கும் உள்ள தொடர்புதான்.

போரின் பின்விளைவுகள்

மழைவிட்டபின்னரும் தூவானம் விடாது என்பதுபோல் போர் முடிந்தபின்னரும் வல்லுறவுகள் முடிந்துவிடும் என்று எதிர்ப்பது தவறானது. போரின்போது ஓழுக்கமாக இருந்த சமூக, சமய, கலாசார, ஒழுக்க நெறிமுறைகள் முற்றிலும் சிதைக்கப்பட்டு வன்மம், கொலை, கொள்ளை, அதிகாரம், தான்மட்டும் தப்பிவாழும் எண்ணம், வன்புனர்வு போன்றன தலைவிரித்தாடும். ஒரு சமூகமோ இனமோ மனநோய்க்கு உட்பட்டிருக்கும். இது போர் முடிந்த பின்னரும் தொடரும் என்பதில் ஐயமில்லை. 2 ஆவது உலகயுத்தம் முடிந்தபின்னர் ஐரோப்பாவை எவ்வளவோ சிரமப்பட்டே மனோவியல் மாற்றங்களை எற்படுத்தி பின் பொருளாதாரரீதியில் கட்டி எழுப்பினார்கள். இன்று இலங்கையில் நடைபெறும் பாலியல் வன்புனர்வுகளும், வன்கொடுமைகளும் போரின் பின்விளைவுகளே. இது புலிகள் இருந்தாலும் அங்காங்கே நடந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. என்றும் ஒரு சமூகத்தை ஆயுதமுனையில் தொடர்ந்து வைத்திருத்தல் இயலாது. மனனோவியல் மாற்றத்தை ஒழுங்கை ஏற்படுத்தினால் மட்டுமே வன்புனர்வ வன்கொடுமைகளில் இருந்து சமூகத்தைக் காப்பாற்ற முடியும்.

சட்டங்களால் நிலைநிறுத்த முடியாத சீர்திருந்தங்களை அன்று மதங்கள் நம்பிக்கை எனும் மனோவியல் கொண்டு செய்தன. இதனால் ஐரோப்பா மட்டுமல்ல உலகெங்கும் அரசுக்கு நிகரான அதிகாரம் மதங்களுக்கு இருந்தது. அரசன் கூட நம்பிக்கையிலஇ உறுதியான மனநிலை கொண்டு சட்டவாக்கங்களை உருவாக்கினான். இதனால் பிராமணியர் எனும் பாப்பணர் தம்மை உயர்ந்தவர்களாக கடவுளுக்கு அருகிலுள்ளவர்களாக காட்டிக்கொள்ள முடிந்தது. இது உலகெங்கும் நடந்த நிகழ்வே.

ஒவ்வொரு குற்றவாளியும் நான் செய்வது குற்றச்செயல் என்பதை அறிந்தே இந்த வன்புனர்வுகளில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் தான் பிடிபடமாட்டோம் என்ற எண்ணத்துடனே இவற்றைச் செய்கிறார்கள். இதை எந்த அரசு ஆயுதக்கெடுபிடி களுடன் நின்றாலும் இப்படியான வன்புனர்புகளை முற்றிலும் உடனடியாகத் தடுக்க இயலாது. இதற்கு காலம், மனமாற்றம், சமூகமாற்றம், சமூகசீர்திருத்தம், பொருளாதார உயர்வு, தீயபழக்கவளக்கங்கள் எனப்பல காரணிகள் தீர்மானிக்கின்றன.

புங்குடுதீவும்...!

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் பாலியல் வன்புனர்வுக் கொலை பாரிய எதிர்வினைகளை உருகாக்கிய பின்னரும் பலவன்புனர்வுகள் இடம் பெற்றிருப்பது எமக்கு எதைச் சுட்டிக்காட்டுகிறது? எதிர்வினைகள் எதுவுமே மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்பதையே. மக்களின் எதிர்ப்புகள் பேரணிகளைக் கட்ட பின்னரும் இப்படியான வன்வுனர்வு தொடர்ந்து நடக்கிறது என்றால் இதைத் தடுப்பதற்கு என்ன செய்யவேண்டும் என்பதை சட்ட சமூகவல்லுணர்களை முடுக்கிவிடுவதே சாத்தியமான செயலாகும். இறுக்கமான சட்ட உருவாக்கம், போதைப்பொருள் தடுப்பு போன்றன பக்கக் காரணிகளாக அமைந்தாலும் சமூகச்சீரமைப்பே இப்படியான வன்செயல்களை வெல்வவைக்கும் என்பது திண்ணம். இவ்வன்செயல்கள் அனைத்தும் போரினால் ஏற்பட்ட மனோவியல், சமூகவியல் மனநிலைப் பாதிப்பாகும். இறுக்கமான சட்வன்செயல்கள் நிறைந்த, மலிந்த இருந்த சமூகம் உடனடியாக சீர்திருத்தமுள்ள சமூகமாக மாற்றமடைவது கடினம். இதற்கு மாற்றுவழி என்ன? உடனடி நடவடிக்கைகள் என்ன?

போர் வெற்றி என்பது ஆயுதங்களால் மட்டும் கிளர்தெழுந்த சமூகத்தை அடக்கிப் பணியவைப்பது அல்ல. எழுச்சியுற்ற சமூகத்தின் மனங்களை வென்றால் மட்டுமே போரை வெற்றி கொண்டுதாகக் கருதமுடியும். போரின் பின்னர் பாதிக்கப்பட்ட
சமூகம் பாலியல்வன்புனர்வுக்கு, சட்டம் நடைமுறைகளுக்கு எதிராகவும், சமூகக் கட்டுப்பாடுகள் செயலிழந்தும் இருக்குமாயின் போர்வெற்றி என்பது வெறும் பகடையே. உளநல மருத்துவத்தின் விஸ்தரிப்பும், விரிவாக்கமும், அடிப்படை வாழ்வாதரா உதவிகளும் போர்நடந்த சமூகத்துக்கு அத்தியாவசியமானது. இதை கொடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. சட்டங்களை இறுக்குவதால் மட்டும் சமூக சீர்திருத்தங்களை ஏற்படுத்திவிட முடியாது. போதை வஸ்துக்களைக் குற்றம் சாட்டிக் கொண்டு தமது பொறுப்பில் இருந்த அரசு தவறிவிட முடியாது. ஐக்கிய இலங்கை எனும்போது தமிழர்களும் அந்நாட்டுப்பிரஜைகளே. பாரபட்சம் கொண்ட பாகுபாடு காட்டும் அரசு ஐக்கிய இலங்கையைப் பற்றிப் பேசுவதற்கு அருகதையற்றது.

வித்தியாவின் சம்பவத்தை வைத்து நாம் பலவிடயங்களை உய்துணர முடிகிறது. ஜனநாயகத்துக்குப் புத்துயிர் கொடுக்க முயல்வது தெரியவருகிறது. காரணம் ஜனநாயக வெளிபடுத்து யுத்திகளான கருத்துரிமை பேரணிகள், ஊர்வலங்கள் எதிர்புகள் இன்றி இயங்க முயல்கின்றன.

ஒரு அப்பாவி மாணவியின் கொலையை வைத்து தம்மரசியல் இலாபம் தேட முயலும் போக்கிலித்தனமான அரசயல் சுயநலங்கள் தலைகாட்டுகிறது. முக்கியமாக தமிழர் தரப்பில் தமிழரின் பிரதிநிதிகளாக உள்ளவர்கள் இப்படியான விடயங்களில் மூக்கை நுளைத்து தமிழ் இனத்தின் பெயருக்கே களங்கம் கற்பிக்க விளைகிறது. இது உடனடியாக தடுக்கப்பட வேண்டும். தமிழினத்தைப் பிரதிபலித்தவர்கள் செய்த சிறு சீர்கேடுகள் கூட எம்முழுச்சமூகத்தையும் எதிர்காலத்தையும் எப்படிப்பாதித்தது என்பதை நாம் நன்கு உணர்ந்திருக்கிறோம். இப்படியான அரசியல்வாதிகள் இன்னும் உணராது இருந்தால் தயவு செய்து அரசியலில் இருந்து விலகிக் கொள்வதே எம்மினத்துக்குச் செய்யும் சிறந்த தொண்டாகும்.

முக்கியமாக ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவின் யாழ்விஜயமும் அதன் நோக்கமும் தமிழர் மத்தியிலும், வெளிநாடுகளிலும் நற்பெயரை ஏற்படுத்தியுள்ளதுடன். நம்பிக்கைத் துளிகளுக்கு வித்திட்டுள்ளது என்பதை யாரும் மறுக்க இயலாது. மாறி மாறிவந்த சிங்கள அரசுகளால் ஏமாற்றப்பட்ட தமிழினம் இதை மறுதலித்தாலும் எதிரிகூட நல்வனாக இருப்பது சாத்தியம் என்பதையும் உணர்வது அவசியம். புலத்திலுள்ள சில அமைப்புக்கள் சுயநலங்களுக்காக நிலத்தில் சீரற்ற நிரந்தமற்ற அரசியல் நிலமைகளை விருப்புவது மிகத் தெட்டத்தெழிவாகப் புலனாகிறது. புலத்துத் தமிழர்கள் உதவி செய்யாவிட்டாலும் உபத்திரகம் கொடுக்காது இருப்பது இன்றைய தேவையாகி உள்ளது. புலத்துத்தமிழர்களின் ஒரே ஒரு செயல் மட்டுமே உரிமைக்குரியது. நிலத்துத்தமிழனுக்கு என்ன தேவையோ அதை இயற்றவரை அவர்களுக்கு வளங்குவது மட்டுமே. புலத்திலுள்ளவர்களின் அரசியல் முடிவுகளையும் தீர்மானங்களையும் நிலத்தில் வாழும் போரினால் காயப்பட்ட எம்மக்களின் மேல் திணிப்பதற்கு எந்த உரிமையும் கிடையாது. இப்படியான அமைப்புகள் இனங்கண்டு அகற்றப்படவேண்டும். நிலத்துத்தமிழர்களின் கழிவிரக்கத்தின் பால் பணம் சேர்த்து தாம் பருக்;கும் நிலை இன்னும் மாறவில்லை என்பதை அனைவரும் அறிவதும் உணர்வதும் அவசியமாகிறது.

எதையும் கறுப்புக்கண்ணாடி போட்டுப் பார்க்காது. நிதர்சனங்களைக் கிரகிப்பதும், மேலும் தமிழினம் மட்டும்தான் இலங்கையில் ஒரு இனமல்ல என்பதை உணர்வதும் அரசின் கொள்ளவு என்பதை அறிந்து இயன்றவரை இராஜதந்திர ரீதியாக எம்மக்களின் உரிமைகளை மீட்டெடுப்பதே இன்றை தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களின் கடமையாக இருந்தல் வேண்டும். அதனால் பெரும்பான்மை இனத்தின் தேவைகளை உதறி எறிந்து விட்டு சிறுபான்மையை மட்டும் கவனிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் தவறாகும்.
ஒரு ஜனநாயக அரசியில் கட்டமைப்பை பார்த்தால் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யமுடியாது. ஒரு திட்டமானது பல வகையான அரசியல் இராஜதந்திர செயற்திட்டங்களின் ஊடாகவே வெளிகொணரமுடியும் என்பதை அறிதலும் அவசியமாகிறது.

ஈழத்தமிழனை புலத்துத் தமிழனின் இருந்து இந்தியத் தமிழன் ஈறாக விற்றே இன்றை அரசியல் வியாபாரமும், பணக்கொள்ளையும் நடக்கிறது. நாம் அங்கு அதைச் செய்கிறோம் இதைச் செய்கிறோம் என்று புலுடாவிட்டு தமது பணப்பைகளை நிரப்புவதற்கும், தேனெடுத்துவன் விரல் நக்குவதற்கும் புலத்தாரே நீங்கள் முறிந்துளைத்த பணத்தையா கொடுக்கப்போகிறீர்கள்? நீங்களே இவற்றை நேரடியாகவே செய்யலாம். நிச்சயமாக உங்களின் உறவுகள், தெரிந்தவர்கள் போரினால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் என்பது திண்ணம். அவர்களுக்கு உங்கள் பங்களிப்பைச் செய்வதனூடாக எம்மிடையே உள்ள கேடிகள் உங்களை ஏமாற்றாது பார்த்துக் கொள்ளலாம். கோடிக்கணக்கில் இறுதிப்போருக்குச் சேர்த்த பணங்களுக்கான கணக்குக்களோ காரணங்களோ கூறப்படாமலேயே மீண்டும் பணம் சேர்ப்ப நடப்பதை அனுமதிக்கப் போகிறீர்களா? தொடர்ந்தும் ஏமாளியாகத்தான் வாழப்போகிறோம் என்கிறீர்களா? கெடுகிறேன் பிடி பந்தயம் என்றால் அது உங்களின் முடிவே.

நேர்மையுடன்
நோர்வே நக்கீரா

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com