Thursday, April 9, 2015

வாஷிங்டனின் "மனித உரிமைகள்" ஏகாதிபத்தியம் அம்பலமானது. Joseph Kishore

ஒபாமா நிர்வாகம், 125 டாங்கிகள் செய்வதற்கு தேவையான உட்பொருட்கள், 12 F-16 போர் விமானங்கள், மற்றும் ஏவுகணைகளை அனுப்புவதில் இருந்து தொடங்கி, எகிப்திய இராணுவ சர்வாதிகாரத்திற்கு ஆயுதங்கள் அனுப்புவதை அது மீண்டும் தொடங்கவிருப்பதாக செவ்வாயன்று அறிவித்தது. எகிப்திய ஆட்சியாளர் ஜெனரல் அப்தெல் பத்தாஹ் அல்-சிசி உடனான ஒரு தனிப்பட்ட தொலைபேசி உரையாடலில், இராணுவ உதவியாக ஆண்டுக்கு 1.3 பில்லியன் டாலர் அனுப்புவதை மீண்டும் தொடங்குவதன் மீதும் ஒபாமா வாக்குறுதி அளித்தார்.

எகிப்து "ஓர் உள்ளார்ந்த, ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட படைத்துறைசாரா அரசாங்கத்தை நோக்கி நம்பகமானரீதியில் முன்னேறி" உள்ளதென்று வாதிடுமாறு செய்ய, வெள்ளை மாளிகை எந்த முயற்சியும் செய்யவில்லை, இதுவே அக்டோபர் 2013 இல் கொண்டு வரப்பட்ட இராணுவ உதவி நிறுத்தத்தை, முடிவுக்குக் கொண்டு வருவதற்குரிய சட்டபூர்வ நிபந்தனையாகும். அதற்கு மாறாக, அது இந்த தேவையை நீக்குவதற்காக கடந்த ஆண்டு இறுதியில் காங்கிரஸில் ஒரு விதிவிலக்களிப்பு நிறைவேற்றுவதைக் கையிலெடுத்தது.

இஸ்ரேலுக்கு அடுத்து, அமெரிக்காவிடமிருந்து இராணுவ உதவிகளைப் பெறும் இரண்டாவது மிகப்பெரிய நாடான எகிப்துக்கு மீண்டும் அதுபோன்ற உதவிகளைத் தொடங்கி இருப்பதால், அந்நாடு "அமெரிக்க தேசிய பாதுகாப்பு நலனுக்காக" இருப்பதாக ஒரு வெள்ளை மாளிகை அறிக்கை அறிவித்தது. "அமெரிக்க மற்றும் எகிப்திய நலன்களுக்கு… பொதுவான சவால்களைச் சந்திக்க நமது இராணுவ ஒத்துழைப்பு உறவுகளை சிறந்த இடத்தில் நிலைநிறுத்தும் வகையில் அதை செப்பனிடுவது" எகிப்திற்கும் அமெரிக்காவிற்கும் அவசியமாகுமென ஒபாமா அல்-சிசிக்கு தெரிவித்தார்.

எகிப்து ஜனநாயகத்தை நோக்கி திரும்பியுள்ளதாக ஒரு சாக்குபோக்கை கூட அந்த நிர்வாகம் வழங்கவில்லை. இரத்தத்தில் ஊறிய அல்-சிசி ஆட்சி இம்மியளவிற்கு கூட அதன் கொலைகார ஒடுக்குமுறையை நிறுத்தி இருக்கவில்லை. அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து, அது போராட்டங்களைக் கொடூரமாக ஒடுக்கி உள்ளது. அரசியல் எதிர்ப்பாளர்கள் அடிக்கப்பட்டு, கொல்லப்பட்டு, திரள் திரளாக கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு கணக்கின்படி, 2013 இல் முஸ்லீம் சகோதரத்துவத்தின் ஜனாதிபதி மொஹம்மது முர்சி பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டதற்குப் பின்னர் 41,000க்கும் மேற்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 1,000க்கும் அதிகமான அரசியல் எதிர்ப்பாளர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளன.

எகிப்திற்கு மீண்டும் ஆயுதங்களை வழங்குவது என்ற முடிவு, உக்ரேனிய உள்துறை மந்திரி ஆர்சென் அவகொவ்வின் அறிவிப்புக்கு வெறும் இரண்டு நாட்களுக்குப் பின்னர் வந்தது. அவர், பாசிச அஜொவ் துணை இராணுவப்படை உட்பட கியேவ் ஆட்சியால் ஒழுங்கமைக்கப்பட்ட வலதுசாரி தேசிய பாதுகாப்பு போராளிகள் குழுக்களுக்கு அமெரிக்க இராணுவ படைகள் நேரடியாக பயிற்சியளிக்கத் தொடங்கும் என்பதை அறிவித்திருந்தார். நவ-நாஜிக்களால் ஸ்தாபிக்கப்பட்டு தலைமை கொடுக்கப்படும் அஜொவ் அமைப்பு, ரஷ்ய-ஆதரவு பிரிவினைவாதிகளுக்கு எதிரான கிழக்கு உக்ரேனிய போரில் முன்னணி வரிசையில் இருந்துள்ளது.

இவை அமெரிக்க வெளியுறவு கொள்கையின் "மனித உரிமைகள்" பாசாங்குதனங்களின் வெறும் இரண்டே இரண்டு மிக அதிர்ச்சியூட்டும் வெளிப்பாடுகளாகும். அதிகரித்துவரும் திமிர்தனத்துடன், அமெரிக்கா இராணுவவாதத்தின் மற்றும் உலகெங்கிலுமான மொத்த பிற்போக்குத்தனத்தின் தாக்குமுகப்பாக செயல்படுகிறது. அது உலகளாவிய மேலாதிக்கத்திற்கான அதன் வேலைத்திட்டத்தை இராணுவ பலத்தைக் கொண்டு பின்தொடர, மிக மோசமான ஆட்சிகளை ஆதரிக்க முனைந்துள்ளது.

ஒபாமா நிர்வாகத்தால் ஆதரிக்கப்பட்ட ஏமனுக்கு எதிரான சவூதி அரேபியா தலைமையிலான வான்வழி போரே, எகிப்திற்கு மீண்டும் ஆயுதங்கள் வழங்குவதற்கான உடனடி தூண்டுதலாக உள்ளது. எகிப்தும் சவூதி அரேபியாவும், ஈரானால் ஆதரிக்கப்படும் ஹௌதி படைகளை வெளியேற்றும் இலட்சியத்துடன், குண்டுவீச்சு நடவடிக்கையை தீவிரப்படுத்துவதோடு சேர்ந்து சாத்தியமான ஒரு தரைவழி படையெடுப்புக்கான திட்டங்களையும் அறிவித்துள்ளன. எகிப்திற்கு வாஷிங்டன் அனுப்பும் கூடுதல் இராணுவ தளவாடங்கள் ஐயத்திற்கிடமின்றி அதுபோன்றவொரு தரைவழி தாக்குதலில் பயன்படுத்தப்படும்.

இந்த நடவடிக்கையை முன்னெடுத்து செல்லும் அந்த இரண்டு அமெரிக்க கூட்டாளிகளே, அந்த கூட்டு-முயற்சியின் குணாம்சத்தைத் தொகுத்தளிக்கின்றன. மிகக் கோரமான வழக்கமாக தலை துண்டிப்பை நடத்துகின்ற, இரும்புக்கரம் கொண்டு ஆளுகின்ற மற்றும் சிரியாவில் அமெரிக்க ஆட்சி மாற்ற நடவடிக்கையின் பாகமாக, அல் கொய்தா மற்றும் ஏனைய இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களுக்கு பணத்தைப் பாய்ச்சியுள்ள, சவூதி முடியாட்சியினது காட்டுமிராண்டித்தனத்துடன் எகிப்திய ஆட்சியின் காட்டுமிராண்டித்தனம் பொருந்துகிறது.

உக்ரேனைப் பொறுத்த வரையில், பாசிச சக்திகளுக்கு பகிரங்கமாக ஒத்துழைப்பு அளித்து, தேர்ந்தெடுக்கப்பட்ட ரஷ்ய-ஆதரவு ஜனாதிபதியை பதவியிலிருந்து வெளியேற்றியமை கடந்த பெப்ரவரியில் தொடங்கிய அமெரிக்க தலைமையிலான நடவடிக்கையில் தனித்தன்மையாகும். ரஷ்யாவைத் தனிமைப்படுத்த, பலவீனப்படுத்த மற்றும், இறுதியாக, உடைக்க அதன் இராணுவ-பொருளாதார இராஜாங்க முனைவின் பாகமாக, அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பா எங்கிலும், வலதுசாரி, தேசியவாத, இனவாத மற்றும் யூதவிரோத இயக்கங்களையும் அரசாங்கங்களையும் சார்ந்துள்ளது.

உலகின் மறுபக்கத்தில் ஹோண்டுராஸில், அமெரிக்க-ஆதரவு ஜூவான் ஓர்லாண்டோ ஹெர்னான்டெஸின் அரசாங்கத்துடன் தொடர்புபட்ட கொலைப் படைகள், படிப்புதவி மீதான வெட்டுக்களுக்கு எதிராக போராடிவரும் மாணவர்களுக்கு எதிராக அச்சுறுத்தும் ஆட்சிமுறையை நடத்தி வருகிறது. கடத்தல், சித்திரவதை, மற்றும் குறைந்தபட்சம் நான்கு இளைஞர்களின் படுகொலை ஆகியவையும் அதில் உள்ளடங்கும். 2009 இல் அமெரிக்க ஆதரவிலான ஆட்சிக்கவிழ்ப்பு சதியைத் தொடர்ந்து அதிகாரத்திற்கு வந்த ஜனாதிபதி போர்ஃபிரியோ லோபோவுக்கு (Porfirio Lobo) அடுத்து தான் ஹெர்னான்டெஸ் அதிகாரத்திற்கு வந்தார்.

சமீபத்தில் Foreign Policy இதழால், “அரசாங்கத்தின் உயர்மட்டங்கள் பின்னிப் பிணைந்துள்ள ஊழல் மற்றும் திட்டமிட்ட குற்றங்களின் ஒரு சேற்றுக்குளமாக" வர்ணிக்கப்பட்ட ஓர் ஆட்சியால் வழிநடத்தப்படும் ஹோண்டுராஸ் பொலிஸ் மற்றும் இராணுவத்திற்கு அமெரிக்கா ஆண்டுதோறும் பத்து மில்லியன் கணக்கான டாலர்களை வழங்குகிறது. ஹெர்னான்டெஸ் மற்றும் லோபோ இருவருமே போதை கும்பல்களுடன் தொடர்புபட்ட பொலிஸ் போராளிகளை ஸ்தாபிப்பதை மேற்பார்வை செய்துள்ளதோடு, உள்நாட்டு ஒடுக்குமுறையில் நேரடியாக இராணுவத்தை தலையிட செய்துள்ளனர்.

அமெரிக்க பணத்தைக் கொண்டு நிதியுதவி வழங்கப்பட்ட வலதுசாரி கொலை படைகள் மற்றும் போதைப்பொருள் கும்பல்களுடன் பொலிஸ் மற்றும் இராணுவம் ஒருங்கிணைந்து வருவதானது, அதேபோல ஏனைய இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும், மிக குறிப்பாக மெக்சிக்கோவிலும், நடக்கிறது. கடந்த ஆண்டு 43 மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டதில் ஒட்டுமொத்த மெக்சிக்கன் அரசும் உடந்தையாகும், மேலும் சித்திரவதைகளுக்கான ஐநா சிறப்பு தூதர் இம்மாத தொடக்கத்தில் அறிவிக்கையில், சித்திரவதை பிரயோகம் அந்நாட்டில் "பொதுவான" ஒன்றாகிவிட்டதாக தெரிவித்தார். இவற்றில் எதுவுமே மெக்சிக்கன் ஜனாதிபதி பெனியோ நியாட்டோ அரசாங்கத்திற்குப் பொருந்திய ஒபாமா நிர்வாகத்தினது முழு ஆதரவில் எந்த பாதிப்பையும் கொண்டிருக்கவில்லை. அந்த அரசாங்கமோ வெளிநாட்டு மூலதனத்திற்காக எரிசக்தி துறையைத் திறந்துவிடும் நோக்கில், பொருளாதார "சீர்திருத்தங்களை" உந்தி வருகிறது.

இத்தகைய போக்குகளுக்கு இணைந்த விதத்தில் ஒருவரால் டஜன் கணக்கான சான்றுகளைக் காட்ட முடியும். அமெரிக்க நிதியியல் பிரபுத்துவம் அது எங்கெல்லாம் மேலாதிக்கம் கொள்வதற்கும் கட்டுப்பாட்டைப் பெறுவதற்கும் முயல்கிறதோ —இந்த உந்துதலில் இருந்து உலகின் எந்த பகுதியும் விதிவிலக்காக இல்லை என்பதுடன்— அதன் சமூக இருப்பிலேயே கலந்துவிட்ட இரத்தம், வெறுக்கத்தக்க தீமைகள், குற்றகரதன்மைகளை அது ஏற்றுமதி செய்கிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உயர்வு தொடங்கியதில் இருந்தே, அதன் ஆளும் வர்க்கம் "சுதந்திரம்,” “மனித உரிமைகள்" “அமெரிக்க மதிப்புகள்" என்ற மொழியில் தான் சூறையாடும் அதன் அபிலாஷைகளை அரங்கேற்ற முனைந்துள்ளது. 1924 இல் டிரொட்ஸ்கி குறிப்பிட்டதைப் போல, “அமெரிக்கா எப்போதும் யாரையாவது விடுதலை செய்து கொண்டே இருக்கிறது. அது தான் அதன் தொழில்,” என்றார். ஆனால் ஆக்ரோஷதிற்கான சித்தாந்த நியாயப்பாடுகள் இந்தளவிற்கு ஒருபோதும் கிழிந்து போனதில்லை.

ஒரு இறுதி புள்ளி. அமெரிக்க ஏகாதிபத்திய குற்றகரதன்மையின் முன்பினும் கூடுதலான அப்பட்டமான வெளிப்பாடு, தனிச்சலுகை கொண்ட மத்தியதர வர்க்க அமைப்புகள் —ஒபாமா நிர்வாகத்தின் தாராளவாத மற்றும் போலி-இடது ஆதரவாளர்கள்— மேற்கொண்டு வலதிற்குத் திரும்புவதுடன் பொருந்தி உள்ளது.

ஒருகாலத்தில் தங்களைத்தாங்களே "போர்-எதிர்ப்பாளர்களாக" காட்டிக்கொண்ட அவர்கள், லிபியா, எகிப்து, சிரியா, உக்ரேன் மற்றும் ஈராக், ஏனையவற்றிலும் நடத்தப்பட்ட அமெரிக்க-தலைமையிலான நடவடிக்கைகளை ஆதரித்து, நேரடியாக அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்குப் பின்னால் அணிதிரள, ஒபாமாவைத் தேர்ந்தெடுப்பதை வாய்ப்பாக பற்றி இருந்தனர். அமெரிக்க மக்கள் மற்றும் ஒட்டுமொத்த உலக மக்களின் முன்னால் தீர்க்கமாக அது அம்பலப்பட்டு நிற்கின்ற புள்ளியில், துல்லியமாக அவர்கள் "மனித உரிமைகள் ஏகாதிபத்தியத்தின்" முழக்கங்களுக்குள் குதித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com