Friday, April 3, 2015

மீனவர் பிரச்சினை:"சென்னை செல்லவும் இலங்கை ஜனாதிபதி தயார்"

இந்திய இலங்கை மீனவர்கள் பிரச்சினையை தீர்க்கத், தேவைப்பட்டால் தமிழகம் சென்று அனைத்து தரப்புடனும் பேசத் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா முன்வந்துள்ளார் என சம்பந்தர் கூறுகிறார். இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்படிப்பது தொடர்பில், நீண்ட காலமாக நிலவி வரும் சர்ச்சைகள் குறித்து விவாதிப்பதற்கு இலங்கை ஜனாதிபதி தலைமையிலான உயர்மட்டக் கூட்டம் வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தரின் வேண்டுகோளை அடுத்தே இந்தக் கூட்டம் நடைபெற்றது என அதன் தலைவர் கூறுகிறார்.

இந்தக் கூட்டத்தில் இலங்கை மீனவர்களின் நலன்கள் குறித்து விவாதிக்கப்பட்டது என்றும், வட மாகாண சபையும் தமிழக அரசும் இந்த விஷயம் குறித்து பேசி முடிவெடுக்க வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது எனவும் சம்பந்தர் தெரிவித்தார்.

இந்திய மத்திய அரசுடன் இலங்கை ஜனாதிபதி மீனவர்கள் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்துவார் என்றும், தேவையேற்பட்டால் தமிழகம் செல்லவும் அவர் தயாராக உள்ளார் எனவும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாக கூட்டமைப்பின் தலைவர் கூறுகிறார்.

இழுவைப் படகுகளை பயன்படுத்தி கடல் வளங்களை சுரண்டுவது தொடர்பிலான சட்டங்களிலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து, அதை முழுமையாக அமல்படுத்துவது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதித்து சில முடிவுகள் எட்டப்பட்டன எனவும் சம்பந்தர் தெரிவித்தார்.

இலங்கை-இந்திய மீனவர்கள் பிரச்சினையில் அரசுடன் மீனவர்கள் பிரதிநிதிகள் நடத்தும் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கலந்து கொள்வது இதுவே முதல்முறை.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com