Friday, March 20, 2015

சித்தாண்டி யுவதியின் சோகக்கதை ! நடந்தது என்ன ?

ஒருநாள் விடுமுறை என்றாலே ஒரு குதுகலம்தான் அதிலும் சுற்றுலா என்றால் சொல்லவா வேண்டும். அதுவும் வேலைத்தளத்தில் ஒன்றாக கடமையாற்றுவோருடன் செல்வதாயின் அந்த நாளையே மறக்கமுடியாது. அந்த நாளை எவ்வாறு மறக்கமுடியாதோ, அதேபோல சென்ற இடங்களை ஞாபகப்படுத்துவதற்காக வாங்குகின்ற ஞாபகசின்னங்களை பார்க்கும் போதெல்லாம். அந்த நாள் நினைவில் ஓடும். சென்ற இடங்களிலும் சிலர் நினைவுகளை பதித்துவிட்டு வருவர். நினைவுத்தடங்கள் நீங்காதவைதான் ஆனால், சில நினைவுகளையும் நினைவு தடங்களையும் எம்மால் மறக்கவே முடியாது. அவ்வாறான சம்பவமொன்றே மட்டக்களப்பு சித்தாண்டி விநாயகர் கிராமத்தைச் சேர்ந்த ஏழை யுவதியான உதயசிறிக்கு இடம்பெற்றுள்ளது. அவர் பதித்த நினைவுத்தடம் இரண்டு வருடங்கள் சிறைவாசத்துக்கு வித்திடும் என்று அவள், தனது கொண்டை பின்னை கழற்றும்போதோ, நாமத்தை பதியும் போதோ நினைத்திருக்கவே மாட்டாள். ஏழை யுவதியான உதயசிறி, அனுராதபுரம் சிறையிலடைக்கப்பட்டு இப்பொழுது ஒரு மாதம் கழிந்து விட்டது. கடந்த மாதம் 14ஆம் திகதி, சிகிரியா அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட உதயசிறி, தம்புள்ளை நீதிமன்றத்தால் 2 வருடம் சிறைத் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் இப்பொழுது அனுராதபுரம் சிறையில் வாடுகின்றாள் மட்டக்களப்பிலுள்ள இரத்தினக்கல் பட்டை தீட்டும் தொழிற்சாலையில் பணிபுரியும் உதயசிறிக்கும் ஏனைய தொழிலாளர்களுக்கும் பெப்ரவரி 14ஆம் திகதி காதலர் தினமான சனிக்கிழமையன்று ஒரு நாள் விடுமுறை வழங்கப்பட்டது.

அந்த விடுமுறை தினத்தில் எங்காவது சுற்றுலா சென்று வரலாம் என்று முடிவெடுத்த தொழிலாளர்களின் தெரிவாக, அன்றைய நாளுக்குள் மட்டக்களப்பிலிருந்து போய்த் திரும்பக் கூடிய இடமாக காணப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க சிகிரியாதான் இருந்தது. காலை 6.40 மணியிருக்கும் அவர்கள் மட்டக்களப்பிலிருந்து கலகலப்பாகப் புறப்பட்டார்கள்.

உதயசிறியும் தனது சொந்த இடமான சித்தாண்டியில் வைத்து நண்பர்களோடு வந்த பஸ்ஸில் எறிக்கொண்டாள்

ஒரு பிஸ்கட் பக்கற்றோடு போகின்றேன் என்று அதைக் கையில் எடுத்து உயர்த்திக் காட்டினார் எனது மகள். வழமையாக போயிற்று வாறனம்மா என்று சொல்லிவிட்டு போவாள். ஆனால், அன்றைய தினம் இந்த பிஸ்கட்டோடதான் போறனம்மா என்று மட்டும்தான் சொன்னாள்.

அவளின் வாயிலிருந்து வந்த அந்த கடைசி வார்த்தையும் ஒரு அறிகுறிதான். ஆனால் அதன் அர்த்தம் அவள் திரும்பி வராமல் சிறையில் இருக்கும்போதுதான் விளங்குகின்றது

அந்த பிஸ்கட் பக்கெற்று திறக்கப்படாமலே திரும்பி வந்தது. கூடப்போன பிள்ளைகள் அந்த பிஸ்கட் பக்கெற்றைக் கொண்டு வந்தாங்க. ஆனால் என் மகள் வரவில்லை.

மகளைப் பிடித்து விட்டார்கள் என்று மாலை ஐந்து மணிக்குத் தகவல் வந்தது. எனது மற்ற மகளுடன் உதயசிறி தொலைபேசியில் பேசினார். எனக்குத் தொண்டை வறளுகிறது அக்கா, என்னால் பேச முடியாமல் இருக்கிறது எனக்கு ஐந்து வருடம் சிறையும் ஐந்து இலட்சம் தண்டப்பணமும் விதிக்கப்போகின்றார்களாம் என்று கூறி அழுதாள். தலையிலடித்துக் கதறினாள். நாங்களும் அழுதோம்.’ இப்படி அழுதழுது தனது மகளின் துயரக் கதையை விவரித்தார் பார்வையிழந்து உடலாற்றல் குன்றியுள்ள அந்த ஏழை யுவதி உதயசிறியின் தாய். 61 வயதை கடந்திருக்கும்; அந்த வயோதிப தாயின் பெயர் சின்னத்தம்பி தவமணி.

உதயசிறியின் உயிர்த்தோழி ரவிச்சந்திரன் வனத்தம்மா

எனக்கு உதயசிறியை 2 வருடங்களாக தெரியும். மட்டக்களப்பு கூழாவடியிலுள்ள டயமன்ட் ஆபரணக் கற்கள் வெட்டும் தொழிற்சாலையில் நான் 3 வருடங்களாக வேலை செய்கின்றேன். உதயசிறி இந்த நிறுவனத்தில் 4 வருடங்களாக வேலை செய்கிறாள்.

இந்த நிறுவனத்தில் ஆரம்பச் சம்பளம் மாதமொன்றுக்கு 5,500 ரூபாய் தந்தார்கள். இப்பொழுது 13,000 ரூபாய் தருகிறார்கள். இருவேளைச் சாப்பாடும் தேநீரும் மேலதிகமாகத் தருகிறார்கள். ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் ஓய்வு. சிலவேளை, அந்த நாளிலும் வேலை செய்யச் சொல்வார்கள்.

நான் மலையகத்தின் நாவலப்பிட்டியை சேர்ந்தவள். எனக்கு தந்தை இல்லை. தாயார் மத்திய கிழக்கில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்கிறார். அம்மா போன பிறகு வீட்டில் தனியே இருக்க முடியாது. எனது மாமா முறையானவரின் இம்சை தாங்க முடியாமல் எனக்குக் கடவுளால் கிடைத்த நண்பி நிறோஜியிடம் வந்து சரணடைந்து மட்டக்களப்பு கல்லடியிலுள்ள அவரது வீட்டிலேயே சொந்தப் பிள்ளை மாதிரி தங்கியிருக்கின்றேன்.

இப்படியிருக்கும்போதுதான் உதயசிறியும் எனது துயரக் கதைகளோடு இணைந்து உயிர்த்தோழியானாள். அவளிடம் நல்ல குணமும் சிறந்த பண்புகளும் இருப்பதால் நான் அவளோடு நெருங்கிப் பழகினேன். எங்களுக்கு பெப்ரவரி 14ஆம் திகதி கிடைத்த விடுமுறையில் சிகிரியாவுக்குப் போக முடிவெடுத்தோம்.

எங்களது தொழிற்சாலை மேற்பார்வையாளர் செல்வகுமாரும் அங்கு பணிபுரியும் டிலக்ஷனும் சேர்ந்தே இந்த சுற்றுலாவை ஏற்பாடு செய்து அதற்குத் தலைமை தாங்கி எங்களை அழைத்துச் சென்றார்கள். பகல் 11 மணிக்கெல்லாம் எங்களது பஸ், சிகிரியாவை சென்றடைந்தது. சிகிரியா மலையில் நாம் ஏறும்போது பகல் 12.30 மணியிருக்கும்.

சிகிரியாவைப் பற்றியோ அங்கு நாங்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியோ எங்களுக்கு எதுவிதமான முன்னறிவும் இருக்கவில்லை. அறிவுறுத்தல்களும் வழிகாட்டல்களும் எவரும் தந்திருக்கவுமில்லை. மற்றவர்கள் மலையில் மேலேறும் போது நானும் எனது நண்பியும் கீழிறங்கி வந்து கொண்டிருந்தோம்.

அப்பொழுது ஏற்கெனவே கீறப்பட்டிருந்த நீற்று சுண்ணாம்பு சுவருள்ள இடத்தில் என் நண்பி உதயசிறி தனது பெயரை அவளது கூந்தலில் இருந்த கிளிப்பை எடுத்து ‘உதயா தேங்க்ஸ்’ என்று எழுதி முடியும் தறுவாயில் 4 பேர் படியிலேறி ஓடிவந்தார்கள். நீற்று சுண்ணாம்பு சுவரில் அவள் எழுதி முடிக்கும்வரை அந்த இடத்தில் எந்தக் காவலரும் இருந்திருக்கவில்லை. வந்தவர்களில் இருவர் அவ்விடத்தில் நின்று கொண்டு பொலிஸாருக்கு அழைப்பை எடுத்தனர். இது நடக்கும்போது மாலை 3.30 மணியிருக்கும்.

மற்றவர் கமெராவை சூம் செய்து, இவள் சுவரில் எழுதியவற்றை புகைப்படம் பிடித்தார். உங்களை நாங்கள் பொலிஸூக்கு அழைத்துச் செல்லப் போகின்றோம் உங்களுக்கு ஐந்து வருட சிறைத் தண்டனையோடு நீங்கள் இரண்டரை இலட்சம் ரூபாய் பணமும் செலுத்த வேண்டி வரும் என்று தமிழில் சொன்னார்கள்.

அந்த இடத்தில் நாங்கள் இருவர் மாத்திரமே நின்றிருந்தோம். நண்பி வைத்திருந்த அலைபேசி மற்றும் அவளது கைப்பை என்பவற்றை என்னிடம் ஒப்படைக்குமாறு கூறினார்கள். நான் அவற்றை அவளிடமிருந்து வாங்கி கொண்டு எங்களை அழைத்து வந்த மேற்பார்வையாளர் செல்வகுமாரிடம் அலைபேசி ஊடாக நடந்தவற்றைக் கூறினேன்.

எங்களை கீழே அவர்கள் அழைத்து வரும்போது நான் சாகப்போகின்றேன் என்று மலையிலிருந்து குதிப்பதற்கு அவள் முயற்சித்தாள் அப்பொழுது நான் அவளது கைகள் இரண்டையும் இறுகப் பற்றிப் பிடித்துக் கொண்டேன். என்றாலும் அந்தப் படிகளில் அவள் பாய்ந்து பாய்ந்தே நடந்து கீழிறங்கி வந்து சேர்ந்தாள்.

உங்களை சிகிரியா பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப் போகின்றோம் என்று கூறி, என்னையும் நண்பியையும் பொலிஸ் ஜீப் வண்டியில் ஏற்றிச் சென்றனர். ‘இதைக் கேள்விப்பட்டால் என் அம்மா ஏங்கிச் செத்துவிடுவார் என்று மட்டும் அழுதழுது சொல்லிக் கொண்டு வந்தாள் உதயசிறி. என் குடும்பமே இப்போது என்னால் அவமானப்படப்போகுது என் வாழ்க்கை இனி என்னவாக போகிறதோ? என்று சொல்லி அழுது கொண்டே வந்தாள்.

என் அம்மா என்னை நம்பித்தானே இருக்கின்றார் என் வாழ்க்கையில் நான் இதுவரை பொலிஸ் நிலையத்துக்குப் போனது கிடையாதே. எனக்கு ஐந்து வருடங்கள் சிறை என்றால் என் அம்மாவின் நிலைமை என்னவாகுமோ என்று கலங்கியவாறே இருந்தாள். பின்னர் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தாள்.
பொலிஸ் நிலையத்துக்குள் விழுந்து புரண்டு புரண்டு அழுதாள். பொலிஸார் பயப்பட வேண்டாம் என்று சொன்னவுடன் சிறிது நேரம் அமைதியானாள்.

அவளின் சகோதரி தொலைபேசி அழைப்பு எடுத்தவுடன் இங்கு எனக்கு நடக்கும் ஒன்றையும் அம்மாவிடம் சொல்லாதே என்று அலறினாள்.
எங்களைப் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்ற பின்னரே, எங்களது மேற்பார்வையாளர் செல்வகுமார் அங்கு வந்து சேர்ந்தார்.

மாலை ஆறு மணியாகும்போது உதயசிறியை சிறையில் வைக்க போகின்றோம் என்று கூறி அவளுடன் என்னை இருக்க விடாது பொலிஸார் வெளியே அனுப்பி விட்டனர். பின்னர் மாலை ஆறரை மணியளவில் பொலிஸார் என்னை அழைத்து அவளோடு தங்குமாறு கூறினர்.

சிங்கள மொழியில் வாக்குமூலம் எழுதிய பின்னர். என்னை சாட்சிக்கு கையெழுத்துச் போடச் சொன்னார்கள். எங்களோடு வந்தவர்கள் இரவு எட்டரை மணிக்குத் திரும்பி விட்டார்கள். நான் மட்டும் அன்றிரவு அவளோடு பொலிஸ் நிலையத்திலேயே தங்கி இருந்தேன். எங்களோடு ஒரு பாட்டியையும் தங்க வைத்தார்கள்.

உதயசிறி தனக்கு தலையிடி என்று கூறி கண்ணயர்ந்து விட்டாள். எங்களது நண்பர்கள் வாங்கித் தந்த சோற்றை நான் அவளுக்கு ஊட்டி விட்டு விழித்திருந்து அவளைக் கவனித்துக் கொண்டேன். அதிகாலை ஐந்து மணிக்கு அவள் விழித்துக் கொண்டு மீண்டும் ஓவென்று அழ ஆரம்பித்தாள். அழாதே விட்டுவிடுவார்கள் என்று சொன்னவுடன் சிரித்தாள்.

காலையில் பொலிஸார் சோறு தந்தார்கள். அதையும் நான் அவளுக்கு ஊட்டி விட்டேன். காலை 10 மணியளவில் அவளது சகோதரி, சித்தாண்டியிலிந்து சிகிரியா பொலிஸ் நிலையம் வந்து சேர்ந்தாள். தனது சகோதரியைக் கண்டதும் மீண்டும் அழ ஆரம்பித்தாள் உதயசிறி.

பின்னர் நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றனர். 12 மணிவரை அங்கே இருந்தோம். நீதிபதி இல்லை என்பதால் பதில் நீதிபதி, விசாரணையை 18ஆம் திகதி வரைத் ஒத்திவைத்தார்.

18ஆம் திகதியும் பதில் நீதிவான்தான் கடமையிலிருந்தார். அன்றைய தினம் தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களத்திடமிருந்து அறிக்கை பெற வேண்டும் என்று நீதிபதி பொலிஸரிடம் கூறினார். அதனால், அடுத்தநாள் 19ஆம் திகதிக்கு விசாரணை பிற்போடப்பட்டது. 19ஆம் திகதியும் பதில் நீதிபதிதான் கடமையிலிருந்தார். தொல்பொருள் திணைக்களத்திடமிருந்து பெக்ஸ் மூலமாகத்தான் அறிக்கை வந்திருந்தது. ஆயினும் புராதன சின்னத்துக்கு ஏற்பட்ட சேதத்தை மீளமைப்புச் செய்ய முடியுமா முடியாதா என தொல்பொருள் திணைக்களத்திடமிருந்து அறிக்கை பெற்று அதனை மன்றுக்குச் சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டு தீர்ப்பு மார்ச் மாதம் 02ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டது.

உதயசிறியின் மற்றொரு நண்பியான ராஜ்குமார் நிறோஜின் கூறுகையில், 21ஆம் திகதி, அனுராதபுரம் சென்று உதயசிறியைப் பார்த்தோம் எலும்புந்தோலுமாகி மெலிந்திருந்தாள். சிறைக்கூட ஜன்னல் கம்பியில் தலையைச் சாய்த்து எங்களைக் கண்டதும் தேம்பித் தேம்பி அழுதாள்.
பரிதாபமாக இருந்தது. நானும் உதயசிறியின் அம்மாவும் வனத்தம்மாவுமாக நாங்கள் மூன்று பெண்கள் மட்டும்தான் அங்கு போனோம். எங்களுக்கு சிங்கள மொழியே தெரியாது.

பின்னர் மார்ச் மாதம் 02ஆம் திகதி விசாரணைத் தீர்ப்பன்று சென்றோம். அன்றைய தினம் இறுதியாகதான் இவளது விசாரணை இடம்பெற்றது. கடவுளை மன்றாடிக் கொண்டிருந்தோம் அங்கு என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள எமக்கு மொழி தெரியாது.

சட்டத்தரணி அஸ்மி, 2 வருடங்கள் சிறை என்று சொன்னார். நாங்கள் நிலைகுலைந்து போனோம். அந்த நீதிமன்றத்துக்கு அன்று வந்திருந்த அத்தனை சிங்கள மக்களும் துயரப்பட்டு வாயடைத்துப் போய் நின்றார்கள்.

நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே நண்பி தலையிலடித்துக் கொண்டு உருண்டு புரண்டு அழுதாள். என்ன செவ்வதென்றே எங்களுக்குப் புரியவில்லை நாதியற்றுப் போய் நின்றிருந்தோம். அவர்கள் எல்லோரும் ஏதேதோவெல்லாம் பேசினார்கள் மொழி தெரியாததால் எமக்கு எதுவுமே புரியவில்லை.
‘சிறைக்குள்ளே இருந்தால் எனது வாழ்க்கை, எனது எதிர்காலம் எல்லாமே பாழாய்ப் போய்விடும் என்னை விடுதலை செய்யப்பாருங்கள் என்று கட்டிப்பிடித்து அழுதாள். மனத்தளவில் அவள் முழுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறாள். அப்படியான வார்த்தைகள்தான் அவளது வாயிலிருந்து வெளிப்பட்டன.

அவளது குடும்பத்தில் ஐந்து பேரும் பெண் பிள்ளைகள். அவர்களது குடும்ப நிலைமையைக் கருத்திற்கொண்டு ஜனாதிபதி, உதயசிறிக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும். நடந்த சம்பவம் பற்றி நாங்கள் எல்லோரும் வருந்துகின்றோம். இது அறியாமையால் நடந்த தவறு.

சட்டத்திட்டங்களும் தண்டனைகளும் பற்றி முன் கூட்டியே தெரிந்திருக்குமாக இருந்தால் பெரும்பாலானவர்கள் அந்தத் தவறைச் செய்ய மாட்டார்கள். அப்படித்தான் இதுவும் நடந்தது. தன் தவறை அவள் பின்னர்தான் விளங்கி அதனை ஒப்புக் கொண்டுள்ளாள். அதற்கு இருக்கும் ஒரேயொரு வழி மன்னிப்புத்தான்.

இனிமேல் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குச் செல்வோர் அவர்கள் எந்த மொழி பேசுபவர்களாக இருந்தாலும் இவ்வாறான துயரத்திற்கு முகம் கொடுக்கக் கூடாது. இது எல்லோருக்கும் ஒரு பாடமாக இருக்க வேண்டும். எங்களது நண்பி சிறைக்குள் இருக்கும்போது நாங்கள் இங்கே படும் துயரத்தை போன்று இனி இந்த நாட்டில் யாருக்கும் நேர்ந்து விடக் கூடாது.

கற்றறிந்த நிபுணர்கள்தான் சிகிரியா மலைக்குன்றையும் ஓவியங்களையும் பார்வையிட வருவார்கள் என்றில்லை. பாமர மக்களும் அந்த இடத்திற்கு வருகிறார்கள் என்பதால் குறித்த பகுதியின் சரித்திர முக்கியத்துவத்தைப் பாதுகாக்க, பாதுகாப்பு அதிகாரிகள் உரிய இடத்தில் எந்நேரமும் கடமையில், கண்காணிப்பில் இருந்திருக்க வேண்டும்.

அறிவித்தல்களையும் மீறி அந்த சரித்திர இடங்களை அறியாத்தனமாக சேதப்படுத்தி விடுவார்கள் என்பதற்காக அந்தந்த இடத்திலேயே பாதுகாப்பு அதிகாரிகள் கடமையில் நிற்க வேண்டும்.

அறிவித்தல்களை வாசித்தறிந்து கொள்ள முடியாத எத்தனையோ பேருக்கு இது காவலர்கள் அங்கே நிற்பது உதவியாக அமையும். இவள் தனது பெயரையும் தேங்க்ஸ் என்ற சொற்களை எழுதி முடியுமட்டும் காவலர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்ற கேள்வி எழுகிறது.

உரியவர்கள் அந்த இடத்திலே இருந்திருந்தால் இவள் எழுதுவதற்கு கை வைக்குமுன்பே தடுத்திருக்கலாம்’ என்று சோகம் தழும்ப கூறுகின்றாள் உதயசிறியின் மற்றொரு நண்பியான ராஜ்குமார் நிறோஜினி.

வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் இலங்கையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களில் ஒன்று சிகிரியா. இது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய இடங்களின் பட்டியலிலும் இடம்பிடித்திருக்கின்றது. இந்த இடத்தைப் பாதுகாப்பதற்கென நாடாளுமன்ற சட்டமூலமும் இருக்கிறது.

தொல்பொருள் திணைக்களத்தில் பணியாற்றும் ஐத் என்பவர் பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி பிற்பகல் 3.45 மணியளவில் தொலைபேசியூடாக அழைத்து, யுவதி ஒருவர் சிகிரிய ஓவியத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் 6 ஆங்கில எழுத்துக்களை எழுதியதாக கூறியதன் அடிப்படையிலேயே சிகிரிய தொல்பொருள் அபிவிருத்திக் காரியாலயத்தின் அலுவலரான கே. நிரஞ்சலா சறோஜினி, பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

அதற்குச் சாட்சியாக கிறுக்கியதற்குப் பயன்படுத்திய கொண்டை கிளிப் (கவ்வி) கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் பதியப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே சின்னத்தம்பி உதயசிறி (வயது 27) என்பவர் சிகிரிய பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் கருணாதிலக்க, சார்ஜன் நவரெத்தின ஆகியோரால் கைது செய்யப்பட்டார்.

இந்த விடயத்தில் தனது கட்சிக்கார் தரப்பில் பரிந்து பேசிய சட்டத்தரணி அஸ்மி, ‘எனது கட்சிக்காரர் 27 வயதுடையவர். தொழிற்சாலையொன்றில் பணிபுரிகின்றார். அவர் உழைக்கும் அந்த ஊதியமே அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் வாழ்வாதாரமாக உள்ளது.

அவருக்குத் தந்தையும் இல்லை. வதியோதிபத் தாயோடு காலம் கழிக்கும் அவருக்கு குடியிருக்க வீடும் இல்லை. அடுத்த மாதம் திருமண பந்தத்தில் இணையவிருக்கின்றார். நடந்த சம்பவம் பாரதூரமானது என்பதை அவர் ஏற்றுக் கொள்கின்றார்.

எனவே அவரது எதிர்காலம், அவரது வயோதிபத் தாயின் நிலைமை என்பனவற்றைக் கருத்திற் கொண்டு அவரது எதிர்காலம் பாதிக்காத வகையில் அவரை மன்னித்து கருணைகாட்டி தீர்ப்பை வழங்குமாறு மன்றை வேண்டி நிற்கின்றேன்’ என்று வாதாடியிருந்தார்.

இந்நிலையிலேயே விசாரணை முடிவில் தம்புள்ளை நீதிவான் சஞ்ஜீவ ரம்யகுமாரவினால் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. உதயசிறிக்கு நீதிபதி வழங்கிய தீர்ப்பில், ‘விஷேடமாக வழக்கொன்றில் தீர்ப்பு வழங்கும்போது பிரதிவாதியின் குடும்ப நிலைமை, அவர் தவறு செய்யத் தூண்டிய காரணிகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படல் வேண்டும். பிரதிவாதியால் செய்யப்பட்ட குற்றத்தின் பாரதூரம் கருத்திற்கொள்ளப்படல் வேண்டும்.
இந்தப் பிரதிவாதியால் செய்யப்பட்டுள்ள குற்றமானது உலக பாரம்பரிய சின்னமான சிகிரியாவின் கவி வரிகள் மீது கொண்டைப் பின்னால் கிறுக்கியமையாகும். புராதன முக்கியத்துவம் மிக்க நாட்டின் கடந்த காலம் தொடர்பில் சாட்சி சொல்லும் விலைமதிக்க முடியாத இடத்திலேயே இவர் இவ்வாறு நடந்து கொண்டு அச்சின்னங்களுக்குச் சேதம் விளைவித்துள்ளார்.

இது தொடர்பில் தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளரிடமிருந்து மன்று பெற்றுக் கொண்டுள்ள அறிக்கையில் அந்த சேதத்தை மீளமைக்க முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், எந்தவொரு சேதத்தையும் அதன் பழைய நிலைமைக்குக் கொண்டு வருவது சாத்தியமற்றது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குற்றவாளி தொடர்பாகத் தண்டனை அளிக்கும்போது அவரை புனர்வாழ்வளிக்கும்முகமாக தண்டனையளிப்பது ஒரு முறையாகும். குற்றத்தின் பாரதூரத்தினை உணர்த்துவது அவ்வாறான குற்றங்களைத் தடுக்கும் வகையில் தண்டனை வழங்குவது இன்னொரு முறையாகும். அதனால் இவ்வாறான அனைத்து நடவடிக்கைகளையும் கருத்திற்கொண்டே இந்தப் பிரதிவாதிக்கு தண்டனையை நாம் நிர்ணயம் செய்கின்றோம்.

இந்த வழக்கைப் பொறுத்தவரை மன்றுக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைகளின் பிரகாரமும் சட்டத்தரணிகளால் மன்றுக்குச் முன்வைக்கப்பட்ட விடயங்கள் ஊடாகவும் பிரதிவாதியான யுவதி, கட்டிளம் பருவத்தை உடையவர் என்பதைக் கருத்திற் கொண்டும் குற்றத்தின் பாரதூரத்தைக் கருத்திற் கொண்டுமே தீர்ப்பு வழங்கப்படுகின்றது.

அதன்படி குறித்த குற்றம் தொடர்பில் 1988ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க தொல்பொருள் திருத்தச் சட்டத்தின் (15) ஆ அத்தியாயத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்சத் தண்டனையை வழங்கத் தீர்மானிக்கின்றேன். அதன்படி குற்றவாளிக்கு 2 வருட சிறைத் தண்டனையை விதித்துத் தீர்ப்பளிக்கின்றேன்.’ எனத் தனது தீர்ப்பை அறிவித்தார்.

இவ்வேளையில் யுவதி தலையில் அடித்துக் கொண்டு நீதிமன்ற வளாகத்தில் ஓலமிட்டு உருண்டு புரண்டு அழுதார். இதனடிப்படையில் உதயசிறி அனுராதபுரம் சிறைச்சாலையில் இரண்டு வருடம் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றார்.

-ஹூஸைன்-

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com