Monday, March 16, 2015

விஜயங்களும் விமர்சனமும்

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியான பின்னர் குறுகியகாலத்தினும் பல அரச விஜயங்களை மேற்கொண்டுள்ளார். காரணம் என்ன? இவை எமக்குச் சொல்வது என்ன? அடுத்து சீனாவுக்கும் பயணம் செய்யவுள்ளார். ஒரு வாரத்துக்குள் இரண்டு முக்கிய விஜயங்களும் அதன் எதிர்வினைகளையும் இன்று பார்வையின் பக்கங்களில் பார்க்க இருக்கிறோம். 1) மைத்திரியின் லண்டனுக்கான அரசவிஜயம் 2) இந்தியப் பிரதமர் மோடியினுடைய இலங்கை விஜயம்.

மைத்திரியின் இந்திய விஜயம்

மைத்திரி ஜனாதிபதியாகிய உடன் இந்திய விஜயமொன்று மேற்கொண்டதை யாவரும் அறிந்ததே. இந்தியா தனது இராஜதந்திர நடவடிக்கைகள், உறவுகளை தம்நலன் கருதி மகிந்தருடன் தாமரையிலைத் தண்ணீர்போல் உறவுகொணடிருந்தார்கள். மகிந்தரின் சீன உறவு இந்தியாவின் அடிவயிற்றைக் காலக்கியது என்பதில் ஐயமேயில்லை. இலங்கைக்கு இறுதிப்போரில் இந்தியா உதவியது கூட மைந்தர் வைத்த செக்கில் அரக்க முடியாமையே. இருபுறமும் அணுவாயுதம் கொண்ட பிராந்திய வல்லரசுகள் எதிராகவும், இலங்கையுடன் பலமான நண்புறவைக் கொண்டிருப்பதும் இந்தியாவின் பாதுகாப்புக்கு என்றும் அச்சுறுத்தலே. இதை முறியடிக்கவே இந்தியாவும், தமது கொள்கை கோட் பாடுகளுக்கு இணங்காத சீனாவைப்புறம்தள்ள மேற்குநாடுகளும் முயன்று மைத்திரியை முன்னிறுத்தி வெற்றிகண்டுள்ளனர். இவை அனைத்தும் சுயநலன்களின் வெளிப்பாடே அன்றி தமிழர்கள், தமிழர்களின் அரசியல், சுயநிர்ணயம், எதிர்காலம், போர்க்குற்றமும் அதன் விசாரணைகளும் என்று எண்ணுவது மிகத்தவறானது. போர்குற்றம் என்பது மகிந்தர் கொம்பனியை வெருட்டிப்பணிய வைக்கும் ஒருகருவியாக மட்டமே உள்ளது.

மைத்திரியும் தன் வெற்றிக்கான நன்றியையும், அடுத்து என்ன செய்யவேண்டும், செய்யப்போகிறேன் என்பன பற்றிய உரையாடல் ஒன்று தேவைப்பட்டது. இதற்கு இந்த விஜயம் முக்கியமானது. அங்கே ஈழத்தமிழர்களுக்கான அரசியல், அரசியல்தீர்வு எதுவுமே பெரிதாகப் பேசப்படவில்லை என்பது கவலைக்குரியது. அதை நாம் எதிர்பார்த்ததும் கூட. மைத்திரி ஒருவிடயத்தை நன்கு கவனத்தில் கொள்வது மிக முக்கியமானது. மேற்குறிப்பிட்ட நாடுகள் இலங்கையைச் சுற்றியுள்ள பிராந்திய அதிகாரத்திலும், புதிய முதலீடுகளிலும், முதலீடுகளின் இலாபத்திலுமே அக்கறையாக இருக்கிறார்கள் என்பதை அறியவேண்டும். இவர்களின் இந்த ஆர்வத்தை இலங்கை நாட்டின் வளர்ச்சி க்கும், இனப்பிரச்சனைத் தீர்வுக்கும் சாதகமாக, இராஜதந்திர முறையில் காய்நகர்த்துவது இன்றை ஜனாதிபதியின் சவாலாக அமைந்துள்ளது. மைத்திரி இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் கருத்தாகவும் இனப்பிரச்சனைத் தீர்வை பக்கவாட்டில் போடுவார் என்றுமே எண்ணத்தோன்றுகிறது

தமிழர்கள் பிரச்சனை என்றும் தீர்க்கப்படாது இருப்பதே இந்தியாவிற்கு நன்மை பயக்கும். இலங்கையரசு இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் நிற்கத்தவறித் திமிறும் போது தமிழர்களின் பிரச்சனை துரும்புசீட்டு மேசையில் அடிக்கப்படும். ஆதலால் தமிழர்களின் பிரச்சனை தீர்வுக்கு வருவதை இன்றல்ல என்றுமே இந்தியா விரும்பாது. ஆனால் இந்தியாவைத் தாண்டி ஒரு தீர்வையோ தீர்மானங்களையோ எடுக்க மற்றநாடுகளும் விரும்பாது. இதுவே இற்றைவரை தமிழர்களின் பிரச்சனை ஆண்டாண்டு காலமாகத் தீர்க்கப்படாமல் இருப்பதற்கான காரணம். இது போன்றதே மத்திய கிழக்கில் அமெரிக்காவின் நடவடிக்கைகள். இந்திய ஈழத்தமிழர்கள் பிரச்சனையைத் தீர்த்து வைக்கும் என்று எதிர்பார்ப்பது முழு முட்டாள்தனமாகும்.

மைத்திரியின் இலண்டன் விஜயம்

சென்றவாரம் பொதுநலவாய நாடுகளின் வரவேற்பு வைபவத்தில் கலந்து கொள்வதற்காக மைத்திரி இலண்டன் வந்ததும், தமிழர்கள் ஆர்ப்பாட்டம் செய்ததும், பிரித்தானியப்பிரதமர் கமரூண் மைத்திரிக்கு " தீர்வுகள் பேச்சளவில் இல்லாமல் செயலள வில் இருக்கவேண்டும்" என்று வலியுத்தியதும் அனைவரும் அறிந்ததே. இந்த வலியுறுத்தலூடாக தமிழர்களுக்குச் சொல்வது என்ன? நாங்கள் சொல்லியிருக்கிறோம் அவர் செய்வார் நீங்கள் அமைதியாக இருங்கள் என்பதே. இதுவேதான் இறுதிப்போர் காலத்திலும் நடந்தது. முடிவு என்னவாக இருந்தது? இது முழுமையான வெறும் கண்துடைப்பு அறிக்கை மட்டுமே. இவர்களின் அரசியல் உரையாடல்களில் தமிழர்களின் அரசியல் எதிர்காலம் ஆளமாக அலசப்பட்டிருக்கும் என்பது சந்தேகமே. போர்க்குற்ற விவகாரத்தில் ஊடகங்கள் கொடுத்த , கொடுக்கிற அழுத்தத்துக்கு நிகரான எந்த அழுத்தத்தையும் பிரித்தானிய அரசு கொடுத்திருக்கவில்லை.

பிரித்தானியாவில் மைத்திரிக்கெதிரான போராட்டம் சரியா? பிழையா?

மைத்திரிக்கு எதிராக புலிப்பின்னணி கொண்ட அமைப்பின் ஆதரவில் இந்த எதிர்ப்புப் போராட்டம் நடந்தது. இது எதற்கு? அவசியமா? எட்டியது என்ன? இதன் எதிர்கால தாக்கம் என்ன என்பதையும் பார்க்க வேண்டியவர்களாக உள்ளோம். இதற்கு ஒழுங்க மைப்பாளர்கள் சொல்லும் காரணங்கள் பலவாக இருந்தாலும் அவற்றில் சில
1)சிங்கள அரசுகள் தமிழர்களுக்கு எந்த ஒரு நல்லதீர்வையும் தரமாட்டார்கள்.
2) தமிழர்கள் மைத்திரியை ஏற்றுக் கொண்டார்கள் என்ற மாயையை உடைக்கவேண்டும்.
3) ஜனாதிபதியாகி இவ்வளவு நாட்களாகியும் தமிழர்களுக்கே தமிழர் பகுதிகளிலோ எதையும் செய்யவில்லை
4)ஆட்கடத்தல் கைது போன்றவை தொடர்ந்து நடக்கின்றன.
5) சிறைக்கைதியகள் இன்னும் விடப்படவில்லை.

முதலாவது தமிழர்களுக்கு நல்ல தீர்வும் கிடைக்காது என்பது ஊகமானாலும் அதற்கே சாத்தியம் அதிகம் உள்ளது? அடுத்துச் செய்யவேண்டியது என்ன? இந்தவகை எதிர்ப்பார்ப்பாட்டங்களை காலம் பூராய் செய்து வந்துள்ளீர்கள். அப்போது கிடைக்காத பலன் இப்போ கிடைத்துவிடுமா? ஈழத்தமிழர் அரசியல்வாதிகள் ஆரம்பங்களில் இணக்கவரசியலைக் கைக்கொண்டனர் சேர் பொன் இராமநாதன், அருணாசலம், மகாதேவன் போன்றோர். இவர்கள் கொழும்பு ரோயல்கல்லூரி மாணவர்கள், சிங்கள அரசியல் குடும்பங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள். முதலாளித்துவ அரசியல் கொள்கை உடையவர்கள், அனைவரும் ஒரே குடும்பத்தினர். இந்த இணக்கவரசியலின் ஏமாற்றமும், எதிர்வினையுமே இன்று எதிர்பரசியலாக மாறி தமிழினத்தை இந்நிலையில் கொண்டுவந்து விட்டுள்ளது. இனி எதிர்பரசியல்தான் எமது அரசியல் என்று பிரகடனப்படுத்தப் போகிறீர்களா? எதிப்பரசியலில் விளைவை நாம் நேரியாக் கண்டுள்ளோம். இணக்கவரசியிலும் சாத்தியம் இல்லை. இது துரோகவரசியலாகவே முத்திரை குத்துப்படும்.

எதிர்பரசியல் பல துரோகவரசியலை உருவாக்கியது. சுருங்கச் சொல்லின் சோறா சுதந்திரமா? என்பதில் சோறு என்பது துரோகமாகக் கருதப்பட்டது. அதை ஆதரித்தவர்கள் துரோகியிகளாகக் கருதப்பட்டனர். வேறுவளியின்றி இவர்கள் இரண்டும் கெட்ட நிலையில் தமிழ்மக்களுக்கான துரோகவரசியலை நடத்தினர் என்று கருதப்பட்டனர். உ.ம் துரையப்பா

டக்லஸ் தேவா, கருணா போன்றவர்களின் அரசியலை இணக்க அரசியலாகப் பார்க்க முடியாது. சுதந்திரம்தான் வேண்டும் என்ற பக்கத்தினர் தமக்கும் தமது சுயநலங்களுக்கு எதிரான அனைவரையும் துரோகிகள் எனக்கருதத்தொடங்கி இளைஞர்களை உசுப்பி விட்டு தம்மைத் தமிழ்மக்களின் பிரதிநிதிகளாகக் காட்டிக் கொண்டு தமிழினத்துக்கான துரோக அரசியலையே நடத்தினர். ஆனால் இவர்களே தமிழர்களின் தானைத்தளபதிகளாக வலம்வந்தனர். இதன் படிமானங்களைப் புலிகளிலும் காணக்கூடியதாக இருந்தது. தமிழர்களுக்கு எதிரானவர்கள் அல்ல புலிகளுக்கு எதிரான நல்ல தேவையான கருத்துக்களைக் கூறியவர்களும் துரோகிகளாகவே கருதப்பட்டனர். இதனால் நற்கருத்துக்களும் தேவையான அறிவுரைகளும் கேட்கப்படாமல் போனதன் விளைவே முள்ளிவாய் முடிந்தது. உ-ம் ஒஸ்லோ உடன்படிக்கை

இந்த அரசியல் வியாபாரத்தில் பல அரசியல் வடிவங்கள் இருந்தாலும் வெற்றிகரமானதும் உறுதியானதும் இராஜதந்திர அரசியல் ஆகும். நோர்வே போன்ற தந்திரோபாயம் கொண்ட நாடுகள் தமது விடுதலையைக் கூட கத்தி இரத்தம் இன்றி வென்றெடுத்தன.

இராஜதந்திர அரசியல்

அப்படி என்றால் என்ன? தந்திரோபாயம் என்பதால் ஏமாற்றுவதா? உறவாடிக் கெடுப்பதா? இதை சரியான தமிழில் சொல்வதாயின் சாதுரியம், அரசியல் தந்திரம்> அரசியல் விவகாரங்களை நடத்தும் சாமர்த்தியம். எதிரிக்கும் நோகாமல் எமக்கும் நோகாமல் தந்திரமாக எமது அரசியல் தேவைகளை, அபிலாசைகளைப் பூர்த்தி செய்தல் எனவும் கொள்ளலாம்.

இதற்கு அரசியல் தெளிவு, ஞானம், அணுகுமுறை, விட்டுக் கொடுத்தல், விட்டுப்பிடித்தல், எதிரியை அனுபவிக்கவிடுதல், போக்குக் காட்டல், காலம்கனியும் வரை காத்திருத்தல், உரிமை நோக்குக்காக இணக்க உடன்பாடுகள், நோக்கில், கருத்தில் எதிர்கால முடிவில் தெளிவாகவும் உறுதியாகவும் இருத்தல் போன்ற பலகாரணிகளில் இது தங்கியிருக்கும். எமது அரசியல் தலைவர்களில் இராஜதந்திர அரசியலைச் செய்தவர் ஜி ஜி பொன்னம்பம் எனக்கொள்ளலாம். இவரின் அரசியலும் முழுமையாக வெற்றியடையாது போனதற்கு மற்றைய தலைவர்களின் பாராளுமன்ற ஆசன ஆசைகளும் உணர்ச்சி அரசியலுமே. இவ்வாசனங்களுக்காக எதிர்பரசியல் கையில் எடுக்கப்பட்டு, உணர்ச்சியரசியல் பேசப்பட்டு பாராளுமன்றத் தளபதிகளாய் தங்களைத் தாமே பிரகடனப்படுத்திக் கொண்டு தமிழ்மக்களின் உரிமைகள், தேவைகள் அனைத்தும் அரசியில் சந்தையில் விற்கப்பட்டன.

எல்லோரையும் கூட்டிவைத்து முளங்குவதல்ல இராஜதந்திர அரசியல். எதையும் சொல்லியபின் செய்வது இராஜதந்திரமே ஆகாது. இதை மாகாபாரதத்தில் அழகாகக் காணலாம். கிருஸ்ண அவதாரத்தின் நோக்கமே பூமியின் பாரம் குறைப்பது. ஆனால் அதுபற்றி எந்தப்பேச்சும் இன்றி அவரின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் அதை நோக்கியே இருந்தது. பெரும் தொகைமக்கள் அழியவேண்டும் என்றால் அதற்கெதிராக கிருஸணர் இருக்கவேண்டும். பலமானது தொகையில் குறைந்தவர்களுக்கு அதிகம் சேரவேண்டும். தனது பெரும்படையையும் கெளரவர்பக்கம் கொடுத்துவிட்டு தான்மட்டும் தனியாக பாண்டவர் பக்கம் நின்றார் பரமாத்மா. எத்தனை பலவான்கள், சிறந்த வீரர்கள் இருந்தும் கிருஸ்ணரின் இராஜதந்திரத்தின் முன் தவிடுபொடியாயினர். பரமாத்மாவான கிருஸ்ணர் கெளரவருடன் என்றும் எதிரிபோல் நடந்துகொள்ளவில்லை. எம்தமிழ் எமக்கு இப்படியான பல படிப்பனைகளைத் தந்தும் நான் எதைப் பயன்ப டுத்தினோம்?

எதிர்ப்பரசியில்

மக்களின் அபிலாசைகள், கோரிக்கைகள், எதிர்பார்ப்புக்கள், அரசியல் எதிர்காலம் என்ன என்பதை வைத்தே இணக்கவரசியில் தீர்மானிக்கப்படும்.

இராமநாதன் காலத்து இணக்கவரசியலின் தோல்வி எதிர்பரசியலை வளர்ந்து உணர்ச்சியரசியல் மேலோங்கியது. இது இராஜதந்திர அரசியலையும் சேர்த்தே புதைத்தது. எதிர்பரசியலால் உணர்ச்சியரசியல் வெகுவேகமாக வளர்ந்தது. இது துவேசத்தை இன பாகுபாட்டை வகுத்தது. இந்த உணர்ச்சியரசியலில் வளர்தவர்கள் நிதானத்தை மறந்தனர். அரசியல் படங்காட்டல்கள் இறுதியில் ஆயுதங்களுடன் அக்கசன் படங்களாக, ஸ்டண் படங்களாகி முள்ளிவாய்காலில் முடிந்தது. ஐக்கிய இலங்கையை நோக்கிய அரசு இப்படியான தமிழரசியலை தடுத்திருக்க முயன்றிருக்க வேண்டும் அவர்களும் தமது பங்குக்கு பெளத்த இனவாத உணர்ச்சியரசியலில் இறங்கினார்கள். விளைவு காலம்பூராக நடந்து கலவரங்கள், இலங்கைக் பொருளாதாரத்தைத்தின்ற போர்.

முக்கிய குறிப்பு:- ஆயுதம், ஆயுதப்போராட்டங்கள் வெறும் கருவியே தவிர அது அரசியலாக முடியாது. அரசியலை வென்றெடுக்க ஆயுதம் என்ற கருவி பாவிக்கப்படலாம். அரசியலே ஆயுதத்தை வழிநடத்து வேண்டுமே தவிர ஆயுதம் அரசியலை வழி நடத்தினால் முடிவு புலிகளைப் போன்றே அமையும். இதுவரலாற்று உண்மை

அரசியல்கட்டமைப்புகள்

அரசியல் விஞ்ஞானம் படித்தவர்களுக்கு இக்கட்டமைப்புகள் பற்றிய அறிவு இருக்கும். தேர்தலில் மக்களுக்குக் கொடுக்கும் வாக்குறிதிகளை பலகட்சிகள் நிறைவேற்ற முடியாது போவதற்கு இக்கட்டமைப்போ காரணம். வெளியில் சொல்வது மிக மிகச்சுலபமானது. ஆனால் இலங்கையைப் போல் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி உலகில் எங்கும் கிடையாது. இது தமிழ்மக்களை அடியோடு அழிப்பதற்கு உருவானது என்பதை யாரும் மறுக்கவும் இயலாது. நிறைவேற்று அதிகாரம் கையில் இருந்தாலும் அதை ஒழிப்பேன் என்று கூறி வந்தவர் அதை உடனடியாக நீக்காது இருப்பதற்கும் காரணம் உண்டு. நிறைவேற்ற அதிகாரத்தை நீக்கிவிட்டால் எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தல் சறுக்கினால் இந்த அதிகாரத்தை மைத்திரி பயன்படுத்தலாம் அல்லவா. சர்வதியாரம் கொண்ட ஜனாதிபதியின் முன்னால் பாராளுமன்றம் ஆடுபொமமையே. தன் அரசியல் எதிர்காலம் கருதி மைத்திர ஜனாதிபதி முறைமையை 100 நாட்களினுள் நீக்கமாட்டார் என்பது திண்ணம்.

மைத்திரி நிலை

மைத்திரியின் நகர்வுகளில் இராஜதந்திரம் தென்பட்டாலும், அது தமிழ்மக்களுக்குச் சாதகதமாக அமையும் என்று எதிர்பார்க்க முடியாது. இருப்பினும் எதிர்பரசியலை உடனடியாக முன்னிறுத்தாது "நம்பநட நம்பிநாடவாதே" என்ற தமிழ்பழமொழிக்கிணங்க நாம் நடந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. மைத்திரி இலண்டன் வந்த போது எதிர்ப்பைக் காட்டியது சரியா என்ற கேள்வியும் எழுகிறது. இது எந்தவித அரசியலுக்கு இழுத்துச் செல்லப்போகிறது என்பது கேள்விக்குறியே.

படுதோல்வி அரசியல்வாதியான இரணில் தனது அரசியல் வாழ்வை ஸ்திரப்படுத்திக் கொள்வதற்கான முன்நடவடிக்கைகளில் பலமாக ஈடுபட்டு வருகிறார். இது இவர்களின் கூட்டமைப்புக்குள் முறிவுகளை ஏற்படுத்தி முடமாகும் நிலையை உருவாக்கலாம். இங்கே த.தே.கூ நிலை என்ன என்பது பற்றியும், அதற்கான முன்னநடவடிக்கைகள் என்ன என்பது பற்றியும், இப்போதே தீர்மானிக்க வேண்டியவர்களாக உள்ளார்கள். இப்படியான முடநிலை நாளை மகிந்தரை மிக இலகுவாக துாக்கிவந்து அரசியலில் முன் நிறுத்தும். இனியும் மகிந்தர் தமிழ்பேசி தமிழர்களைத் தாஜா பண்ணும் அரசியலை கடசிவரை நடத்தமாட்டார். சூடுகண்ட பூனை அடுப்பங்கரை நாடாது. இந்நிலையைத் தடுப்பதற்காக ஊழல்குற்றச்சாட்டு, போர்குற்றம் போன்ற சுத்தியல்களால் தலையில் அடித்தாலும் ரணிலின் நரித்தன அரசியில் துணைபோகிறது போன்ற உருவப்பாடு தென்படுகிறது. மைந்தர் கொம்பனியை வைத்தே பாராளுமன்றத் தேர்தல் அசையவிருக்கிறது

இன்று மைத்திரியின் அரசின் அசைவுகளை நாம் நோக்கும் போது ஏதோ ஒரு பொறிக்குள் இவர்கள் அகப்பட்டவர்கள் போலவே உள்ளார்கள். இதற்கான காரணங்கள் பலவாக இருந்தாலும் இது அடுத்துவரும் பாராளுமன்றத் தேர்தலை நோக்கியதாகவே இருக்கிறது. அத்துடன் வாக்களிக்கும் மக்களுக்கான முன்னெடுப்புக்கள் எதுவுமே இல்லாமல் பிராந்திய நலன்சார்ந்த, முதலீடுகள் சார்ந்த விடயங்களே பலமாக முன்னெடுக்கப்படுகிறது. இதைத்தான் மேற்குலகமும் இந்தியாவும் எதிர்பார்க்கிறது. இதன் விளைவுகளை தேர்தலின் பின்புதான் எம்மால் வெளிச்சத்தில் பார்க்க முடியும். மகிந்தகொம்பனியின் ஊழல்கள் அப்பட்டமானவையாக இருந்தாலும் இது வரை அதற்கெதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படாமைக்கும் காரணங்களுண்டு. இதை செயற்படுத்தும்போது மகிந்தர்கொம்பனியின் எதிர்ப்புகளால் இரக்கவாக்குக்களை இழக்க நேரலாம் என்ற பயமும் இவர்களுக்கு உண்டு. காரணம் இவர்கள் சிங்களவர்களின் பகுதியில் உண்மையில் தோற்றவர்களே.

தற்போது தமிழ்கைதிகளை விடுதலை செய்வதாலும், தமிழர் நலன்சார்ந்த விடயங்களில் ஈடுபடுவதாலும் சிங்களப் பகுதியிலுள்ள தமது வோட்டுக்களையே தக்கவைக்க முடியாது போகலாம். அடுத்து ஐநாவில் வெளியாக இருந்து அறிக்கையையும் நாட்டுக்குள்தான் போர்குற்றவிசாரணை என்பதும் மகிந்தகொம்பனிக்கு விடுமெச்சரிக்கையே. இது மகிந்த கொம்பனியின் ஆவேசமான அரசியலை தடுக்கும் என்பது உறுதி. அத்துடன் மைத்திரியின் கூட்டும் கூட ஸ்திரத்தன்மை அற்றது என்பதே இதற்கு முக்கிய காரணமாம். சர்வஅதிகாரம் கொண்ட அல்லது சர்வாதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறைமையை 100 நாட்களுக்குள் மைத்திரி செய்யவே மாட்டார் என்பது உறுதி. தற்போது தன்னைக்காக்க வைத்திருக்கும் துரும்பு வீணாக்க மைத்திரி விரும்பமாட்டார் முடிந்தவரை தனது இறுதிநாள்வரை இந்த அதிகாரத்தை மைத்திரியே வைத்திருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

மோடியின் இலங்கை விஜயம்.

இது ஒரு வரலாற்றுச் சிறப்புவாய்ந்ததாக இருந்தாலும் மோடி தனது நிலையை சொல்லாமல் சொன்னார். அதுவும் சுப்பிரமணியபாரதியார் பாடலாகச் சொன்னார். "சிங்களத் தீவினிற்கோர் பாலமைப்போம்" இதன் பிரகாரம் இலங்கை சிங்களத்தீவு என்பதை சொல்லாமல் சொல்வதுடன் எமது உறவு உதவி என்றும் சிங்கள அரசுக்கு இருக்கும் என்றும் கூறியிருக்கிறார். தமிழ்கவிஞனை தன்பேச்சில் இழுப்பதனூடாக தமிழர்களை தாஜாப்படுத்தாலாம் என்றும் எண்ணியிருக்கலாம். இப்படிப்பட்ட சின்னச்சின்ன இராஜதந்திரநடவடிக்கைளால் தமிழினம் காலம்பூராக ஏமாற்றப்பட்டு வந்ததை இவர்கள் நன்கு அறிவது. அதை இன்றும் பாவிக்க முயல்கின்றனர். இப்பாடலின் கருத்தை சரியாகப் புரிந்து உணர்ந்துதான் மோடி பேசியிருந்தால் இது எமக்கு எந்தச்சாதகமான தீர்வையும் எமக்குத்தராது.

சிங்களத்தீவினுக்கோர் பாலமமைப்போம் தமிழர்கள் நாம் தூணாக இருப்போம் என்ற மோடியின் கருத்துப்படியே இன்றுவரை இந்திய-இலங்கை அரசியல் நடந்தது. இதுதான் தொடரப்போகிறது என்பதை இந்தப்பேச்சு குறிகாட்டியது. இது தமிழர்களின் எதிர்கால அழிவையே குறி கூறி நிற்கிறது.

வேதனையுடன் விடைபெறும்
நோர்வே நக்கீரா 14.02.2015

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com