Friday, January 30, 2015

தலைமை நீதியரசராக கே. ஸ்ரீபவன் பதவியேற்றார்.

இலங்கையின் 44 வது தலைமை நீதியரசராக கே.ஸ்ரீபவன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க ஒய்வு பெற்றுள்ள நிலையிலேயே கே. ஸ்ரீபவன் புதிய தலைமை நீதியரசராக நியமனம் பெற்றுள்ளார்.

யாழ். இந்துக் கல்லூரியில் கல்வி பயின்ற கே. ஸ்ரீபவன் 1974 ம் ஆண்டு சட்டக் கல்லூரியில் இணைந்து கொண்டார். அதன் பின்னர் 1978 ம் ஆண்டு சட்டத்தரணியாக சத்தியபிரமாணம் செய்துகொண்ட ஸ்ரீபவன், 1979-ம் ஆண்டில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் அரசதரப்பு வழக்கறிஞராக இணைந்துகொண்டார்.

24 ஆண்டுகள் சட்டமா அதிபர் திணைக்களத்தில் கடமையாற்றிய ஸ்ரீபவன், 2002 ம் ஆண்டு மேன்முறையிட்டு நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.

2008-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதியரசராக பதவியேற்ற கே. ஸ்ரீபவன் 2013 ம் ஆண்டு பதில் தலைமை நீதியரசராகவும் பணியாற்றியிருந்தார்.

இலங்கையில் 1991-ம் ஆண்டில் 39-வது தலைமை நீதியரசராக ஹேர்பட் தம்பையா பணியாற்றியிருந்தார்.

அதற்கு முன்னதாக, 1984-ம் ஆண்டு முதல் 1988ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தலைமை நீதியரசராக பணியாற்றிய சுப்பையா சர்வானந்தா இந்தப் பதவியில் இருந்த முதல் தமிழர் ஆவார்.

43-வது தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பதவியகற்றும் தீர்மானம் சட்டமுரணானது என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தீர்ப்பு வழங்கிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழுவில் நீதியரசர் கே.ஸ்ரீபவன் அங்கம் வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com