Tuesday, September 16, 2014

இலங்கையில் இந்திய துணைத் தூதுவர் தெரிவித்த கருத்து தொடர்பில் விளக்கம் கோரப்படும் - இந்திய வெளிவிவகார அமைச்சு!

யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கைக்கான இந்திய துணைத் தூதர எஸ். டி. மூர்த்தி வடக்கு மாகாண மக்கள் சிங்களம் கற்க வேண்டும் என்று தெரிவித்த கருத்து தொடர்பில் விளக்கம் கோரப்படும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான இந்திய துணைத் தூதரின் கருத்து தொடர்பில் தொடர்பில் வெளியிட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, 'மொழி என்பது ஒரு நாட்டின் கொள்கை பிரச்சினை. அதில் தூதரக அதிகாரிகளின் தலையீடு இருக்கக் கூடாது. இது குறித்து இந்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்' என்று கோரியிருந்தார்.

இந்நிலையில், டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீனிடம் இது குறித்து கேட்டதற்கு, 'இந்த பிரச்சினை பற்றி இன்னும் எங்களுக்கு முழுமையான தகவல் கிடைக்கவில்லை. எனினும், இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் துணைத் தூதர் எந்தக் கண்ணோட்டத்தில் அத்தகைய கருத்தை வெளியிட்டார் என்பது பற்றி விளக்கம் கேட்கப்படும்' என்று கூறினார்.

மேலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அண்மையில் ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டி தொடர்பில் அக்பருதீனிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது இதற்கு பதிலளித்த அவர், 'இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை. இலங்கை அரசிடம் அதையே இந்திய அரசும் தொடர்ந்து வலியுறுத்தும்.

இந்த விடயத்தில் இந்தியாவின் கோரிக்கையை இலங்கை அதிகாரப்பூர்வமாக நிராகரிக்கவில்லை. எனவே, இலங்கை அளித்த உறுதிமொழி நிறைவேற்றப்படும் என நம்புகிறோம்' என்றார்.

இந்தியாவில் வட, கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்கள், ஹிந்தி மொழியை தொடர்பு மொழியாக பேச கற்றுக்கொண்டுள்ளனர். நீங்களும், சிங்கள மொழியை பேச கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com