Saturday, September 27, 2014

புலிகள் மீது தடை: தீர்ப்பாய விசாரணையில் சாட்சியிடம் வைகோ கேள்வி

புலிகள் தடை மீது அமைக்கப்பட்ட தீர்ப்பு ஆயத்தின் நீதிபதி, டெல்லி உயர்நீதிமன்ற நீதி அரசர் மிட்டல் அவர்களின் தீர்ப்பு ஆய விசாரணை, இன்று (27.9.2014) இரண்டாவது நாளாக சென்னை எம்.ஆர்.சி.நகர் இமேஜ் அரங்கத்தில் நடைபெற்றது.

இந்த விசாரணையில் தமிழ்நாடு அரசு ‘கியூ பிராஞ்ச்’ காவல்துறை கண்காணிப்பாளர் புவனேஇவரி அவர்கள் சாட்சியம் அளித்தார். அப்போது, ‘புலிகளின் சுதந்திரத் தமிழ் ஈழத்திற்கானதனிநாடு கோரிக்கை, தமிழ்நாட்டை, இந்தியாவின் ஒரு பகுதியை இணைத்து உருவாக்கும் திட்டம் கொண்டதால், அது இந்தியாவின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் மிகவும் ஆபத்தானது. எனவே, புலிகள் மீதான தடையை நீடிக்க வேண்டும்’ என்று தமது சாட்சியத்தைப் பதிவு செய்தார்.

இதுகுறித்து, நீதிபதி மூலமாக வைகோ சாட்சியிடம் விளக்கம் கோரிப் பேசியதாவது:–

‘சுதந்திரத் தமிழ் ஈழம் என்பது, இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை மட்டுமே உள்ளடக்கியது. இதுதான் அடிப்படை உண்மை ஆகும். இந்தியாவின் எந்தப் பகுதியையும், தமிழ்நாட்டின் ஒரு பிடி மண்ணைக் கூடச் சேர்க்க வேண்டும் என்று விடுதலைப்புலிகள் கற்பனை செய்ததுகூடக் கிடையாது. சுதந்திரத் தமிழ் ஈழத்திற்காக ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று, ஓராண்டுக்கு முன்னர் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு இன்றைய ஆளுங்கட்சி ஒருமனதான தீர்மானத்தை நிறைவேற்றியது. தமிழ்நாட்டின் ஒரு பகுதியையும் தமிழ் ஈழத்தில் சேர்க்கப் புலிகள் திட்டமிட்டு இருந்தால், இப்படி ஒரு தீர்மானத்தைத் தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றுமா? சாட்சி இதுபற்றி அறிவாரா?’ என்று கேட்டார்.

இதற்கு சாட்சி எந்த பதிலும் கூறவில்லை.

‘தமிழகத்தின் ஒரு பகுதியைச் சேர்க்க வேண்டும் என்று விடுதலைப் புலிகள் திட்டமிட்டதற்கு வேறு என்ன ஆதாரத்தைத் தாக்கல் செய்து இருக்கின்றீர்கள்?’ என்று கேட்டபோது, ‘விடுதலைப்புலிகளின் மக்கள் முன்னணி என்ற அமைப்பின் வரைவுச் சட்டத்தைத் தாக்கல் செய்து இருக்கின்றோம்’ என்று சாட்சி கூறினார்.

அதற்கு வைகோ, ‘விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி என்பது 1990 ஆம் ஆண்டு இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காகத் தற்காலிகமாக அமைக்கப்பட்ட ஒரு அமைப்பு. அது பின்னர் கலைக்கப்பட்டு விட்டது சாட்சிக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்.

‘அந்த அமைப்பு கலைக்கப்படவில்லை. இன்னமும் இருக்கின்றது; தமிழ்நாட்டில் தமிழர் பாசறை, தமிழ்நாடு விடுதலைப்படை, தமிழ்நாடு விடுதலை இயக்கம் என்ற பல அமைப்புகள், தமிழ்நாட்டையும் ஈழத்தையும் சேர்த்து அகன்ற தமிழ்நாடு கேட்கின்றார்கள்’ என்று சாட்சி கூறினார்.

அதற்கு வைகோ, ‘ஒவ்வொரு அமைப்பும் தங்களுக்கு என்று ஒரு கொள்கை வைத்து இருக்கலாம். அதற்கும் விடுதலைப்புலிகளுக்கும் என்ன தொடர்பு? இந்த அமைப்புகளுடைய கொள்கைக்கு விடுதலைப் புலிகள் எப்படிப் பொறுப்பு ஆவார்கள்? விடுதலைப் புலிகள் என்று சிலரைக் கைது செய்ததாக நீங்கள் கூறுகின்றீர்களே, அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்களா? அப்படிக் கொடுத்து இருந்தால், நீதிபதியின் முன் கொடுத்தார்களா? அல்லது போலீசாரே வாக்குமூலத்தை எழுதிக் கொண்டார்களா? என்று கேட்டார்.

இதற்கு நீதிபதி, ‘இந்தக் கேள்விகளை நீங்கள் விசாரணை அதிகாரியிடம் கேட்கலாம்’ என்றார். அத்துடன், ‘வழக்கு விசாரணை அடுத்த மாதம் 26, 27 தேதிகளில் குன்னூரில் நடைபெறும்’ என்று நீதிபதி அறிவித்து ஒத்தி வைத்தார்.

வைகோவுடன், ம.தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர் தேவதாஸ், செய்தித் தொடர்பாளர் நன்மாறன், சட்டத் திருத்தக்குழுச் செயலாளர் அருணாசலம், வழக்கறிஞர் நடராஜன், வழக்கறிஞர் தவசி, வழக்கறிஞர் சுப்பிரமணியம், வழக்கறிஞர் சுப்பையா உள்ளிட்ட பலர் பங்கு ஏற்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com