Saturday, September 20, 2014

கோட்டாபயவோ, பசிலோ தங்களின் சொந்த பணத்தை எங்களுக்கு தரவில்லை – விக்கி

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செய லாளர் கோட்டாபய ராஜபக்ஷவோ, பொருளாதார அபிவிரு த்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவோ தங்கள் பணத்தை எங்களுக்கு தரவில்லை மாறாக வெளிநாடுகளிலிருந்து எமது மக்களுக்காக தரப்பட்ட பணத்தையே பெற்று தருகின்றார்கள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சாடியுள்ளார்.

நீர்வேலி மகளிர் கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

ஓரிரு தினங்களுக்கு முன்னர் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ எம்முடன் வடமாகாண முதலமைச்சர் முரண்படுகின்றமையால் வடக்கிற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன என்றும் அரசாங்கத்தின் செயற்றிட்டங்களை செயற்படுத்த வேண்டும் என்றால் நகர சபைகள், மாகாணசபைகள் அனைத்தும் நகர அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து செயற்பட வேண்டும்' என்றும் அவர் கூறியிருக்கின்றார்.

இதனையே ஓரிரு வாரங்களுக்கு முன்னர் அவரின் சகோதரர் பசில் ராஜபக்ஷ, இங்கு வந்து கூறிவிட்டு சென்றார். அதாவது வடக்கில் அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்த வேண்டும் என்றால் நாங்கள், தனது அமைச்சுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்று கூறி சென்றார்.

அவர்களிடையே போட்டி, பொறாமை இருக்கின்றதோ அதை நானறியேன். ஆனால் நான் இருவரிடமும் கேட்கும் கேள்வி இது தான். செயற்றிட்டங்களுக்கு பணம் ஹம்பாந்தோட்டையில் இருந்து வரவில்லை அல்லது அமெரிக்காவில் இருந்து சகோதரர்கள் இருவரும் (கோட்டா, பசில்) இங்கு வந்தபோது எடுத்து வரவில்லை.

அவை வெளிநாட்டு பணம். ஐக்கிய நாடுகள், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கிகளிடம் இருந்து கடன்களை பெற்றுள்ளோம். பல்வேறு நாடுகளிடம் இருந்து கொடைகளையும் பெறுகின்றோம். வடக்கு கிழக்கு மாகாணங்கள் போரால் பாதிக்கப்பட்டதை உணர்ந்து, அது தொடர்பில் கருத்திலெடுத்து வெளிநாடுகள் எங்களுக்கு நன்கொடை தந்துள்ளார்கள் அல்லது கடன் தந்துள்ளார்கள். அந்த பணத்தை செலவு செய்வதும் செயற்றிட்டங்களை நிறைவேற்றுவதும் எம்நாட்டு நிறுவனங்களும் எமது மாகாணசபை அலுவலர்களும் தான். இதனை இரு சகோதரர்களும் எமக்கு பெற்று கொடுக்காதிருந்தாலும், நாம் நேரடியாக கோரியும் வெளிநாட்டவர்கள் எங்களுக்கு பணம் தந்திருப்பார்கள்;. கடன்களும் வழங்கியிருப்பார்கள்.

இதில் உங்களுடன் நாங்கள் இணைந்து செயற்பட வேண்டும் என்று ஏன் கருதுகின்றீர்கள்? உங்களை தான் எங்கள் மக்கள் வேண்டாம் என்று விரட்டி விட்டார்களே. ஆகவே செயற்திட்டங்களை எங்களிடம் கையளித்துவிட்டு நீங்கள் எங்களுடன் இணைந்து செயலாற்றலாமே! நாங்கள் ஏன் உங்களுடன் இணைந்து செயலாற்ற வேண்டும்?

போரில் நீங்கள் வென்றபடியாலா அல்லது முழு இலங்கை தேர்தலில் உங்கள் கட்சி வென்றபடியாலா உங்களுடன் இணைந்து செயற்பட சொல்கின்றீர்கள் ஆனால், உங்கள் கட்சி வடமாகாணத்தில் எத்தருணத்திலும் மக்களால் ஏற்றுகொள்ளப்படவில்லை. ஆகவே அன்பார்ந்த சகோதரர் கோட்டாபயவிடம் நான் கேட்பது செயற்றிட்டங்களை எங்களை செய்ய விடுங்கள். நீங்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு தாருங்கள் என்று.

சகோதரர் பசில் அவர்களுக்கு நான் கூறுவது, உங்களை விட எங்களால் செயற்றிட்டங்களை ஊழல் இன்றி, ஊறு இன்றி, உண்மையாக நடைமுறைப்படுத்த முடியும். ஆதலால் அவற்றை எங்களுக்கு வழங்குங்கள் என்று. மேலும், 'தன்னை போல் என்னையும் அரசாங்கத்துடன் சேர்ந்து அவர்களிடம் இருந்து பல நன்மைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு' கொழும்பு நகர பிதா சகோதரர் முஸாமில் என்னை கேட்டிருக்கின்றார். கொழும்பு புதுக்கடையில் அதாவது ஹல்ஸ்டொபில் நான் பிறந்தபடியால் எனக்கு பண்டமாற்று, வணிக, வாணிப அரசியல் பற்றி நன்றாக தெரியும்.

வடக்கு கிழக்கு மாகாண மக்கள் வாணிப அடிப்படையில் அரசியல் செய்ய முன்வந்தவர்கள் அல்ல. அப்படியிருந்திருந்தால் ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் அண்மை காலத்தில் சென்ற வழியில் எமது கட்சியும் சென்றிருக்கும்.

நாங்கள் அபிவிருத்தி என்ற மாயையை விட எங்கள் பிறப்போடு ஒட்டிய பிறப்புரிமையை வென்றெடுக்க விழைபவர்கள் என்பதை என் முஸ்லிம் சகோதரர் தம் மனதில் நிலை நிறுத்தி கொள்ள வேண்டும். எப்படியாவது வாழலாம் என்பது எமது குறிக்கோள் அல்ல. இப்படித்தான் வாழ்வோம் என்று அறவழி வரம்புகளை ஆழமாக பதித்து முன் செல்பவர்கள் எம் மக்கள் என்பதை சகோதரருக்கு கூறி வைக்கின்றேன்.

எங்களுடைய ஒத்த கருத்துடைய ஒரு முஸ்லிம் கட்சி நல்லாட்சிக்கான தேசிய முன்னணி. எங்களுடன் தோளோடு தோள் நின்று இன்று முன்னேறுவது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றது. அவர்களும் வணிக, வாணிப அரசியலை ஒதுக்கிவிட்டு நல்லாட்சிக்கான நடைபாதையில் எம்மோடு நடந்துவர நலமான நடவடிக்கைகளில் இறங்கியவர்கள்.

போராட்டங்களே எமது மனக்கிடக்கைகளையும் மனத்தாக்கங்களையும் மனக்கிலேசங்களையும் உலகத்திற்கு எடுத்தியம்புகின்றன. உலகத்திற்கு கொடுத்த வாக்குறுதிகள் யாவும் இலங்கை அரசாங்கத்தால் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன. அபிவிருத்தி என்ற போர்வையில் அடக்கு முறை கட்டவிழ்க்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை (17) எனக்கு கடிதம் ஒன்று கிடைத்தது. அதாவது ஒக்டோபர் 13 ஆம் திகதி அன்று யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் இணைந்த விசேட மாவட்ட அபிவிருத்திக்கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதென்றும் அதற்கான பூர்வாங்க கலந்துரையாடல் ஒன்று வெள்ளிக்கிழமை (19) காலை 9 மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடத்தப்படும் என்றும் என்னை அதற்கு வருமாறும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த அறிவித்தல் யாழ்.மாவட்ட செயலாளரால் எனக்கு விடுக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதி, திடீரென்று அப்படியானதொரு அபிவிருத்தி கூட்டத்திற்கு முடிவெடுத்ததன் காரணம் என்ன? எமக்கு இரண்டு நாள் அவகாசத்தில் பூர்வாங்கக் கூட்டத்தைக கூட எத்தணிப்பதன் உள் அர்த்தம்; என்ன? இவ்வாறான கூட்டங்கள் முன்னர் நடைபெற்றிருந்தால் - நடைபெற்றுள்ளதாக கேள்வி எழும்புகிறது.

வட மாகாண சபை வந்ததன் பின்னர் இச்சபையுடன் கலந்தாலோசித்தல்லவா வட மாகாண அபிவிருத்திக் கூட்டம் நடைபெற வேண்டும். ஜனாதிபதியின் கட்சியை எம் மக்கள் நிராகரித்து விட்டார்கள். அப்படி இருக்கையில் தான்தோன்றி தனமாக அபிவிருத்திக் கூட்டம் ஒன்றினை தன் தலைமையின் கீழ் ஆயத்தம் செய்து வருவது எதற்காக?

தாம் நடத்தும் கூட்டத்திற்கு எம்மை பார்வையாளர்களாக அழைப்பதன் மர்மம் என்ன? எந்த மொழியில் நடவடிக்கைகளை நடத்தஇருக்கின்றார் ஜனாதிபதி? தான் கற்றிருக்குந் தவழ்த் தமிழிலா அல்லது தன் தாய் மொழியிலா? பல கேள்விகள் பதில் இல்லாமல் இருக்கின்றன. எனினும், நான் என் செயலாளரை கூட்டத்திற்கு சென்று வருமாறு அனுப்பியிருந்தேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

கோப்பாய் கோமகன் வன்னியசிங்கம் 55ஆவது நினைவு தினமும் இலங்கை தமிழரசு கட்சியின் புதிய நிர்வாகிகளுக்கான வரவேற்பு விழாவும் நீர்வேலி மகளிர் கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com