Saturday, August 2, 2014

காசா யுத்தக் குற்றங்களும், தேசியவாதத்தின் திவால்நிலையும்! The WSWS International Editorial Board

காசாவின் பாலஸ்தீன பிராந்தியம், இஸ்ரேலிய அரசினால் இழைக்கப்படுகின்ற வார்த்தைகளில் அடங்க மறுக்கும் யுத்தக் குற்றங்களினது காட்சியாக உள்ளது. வடக்கு காசா நகரமான பியட் ஹனோனில் ஐக்கிய நாடுகள் சபையால் நடத்தப்படும் ஒரு பள்ளிக்கூடத்தின் மீதான இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளின் (IDF) குண்டுவீச்சை குறித்து என்ன கூறுவது? அதில் குறைந்தபட்சம் 15 பேர் உயிரிழந்ததோடு 200க்கும் மேற்பட்டவர்கள் கடுமையாக காயமடைந்தனர், இதில் பெருமளவினர் பெண்கள் மற்றும் குழந்தைகள். அந்த இடத்தின் பூகோள விவரக்குறிப்புகள் IDFக்கு வழங்கப்பட்டிருந்ததோடு, முடிவில்லா பீரங்கி குண்டு தாக்குதல்கள் மற்றும் வான்வழித் தாக்குதல்களில் இருந்து தப்பிக்க அடைக்கலம் கோரியிருந்த பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் அந்தப் பகுதியில் தங்கியிருந்தார்கள் என்பதும் பலமுறை தெரிவிக்கப்பட்டிருந்தது. இருந்தபோதினும் அதை பொருட்படுத்தாமல் IDF குண்டுகளை வீசியது—அதுவும் ஒரே வாரத்தில் நான்காவது தடவையாக ஐ.நா முகாம்கள் குறி வைக்கப்பட்டிருந்தன.

ஐ.நா பள்ளிக்கூடத்தின் மீதான குண்டுவீச்சு வெறுமனே சமீபத்திய ஒரு அட்டூழியம் மட்டுமே. பள்ளிக்கூடங்களை போலவே, மருத்துவமனைகள், நீர் நிலையங்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகள், அவசரநேர ஊர்திகள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீதும் IDF தாக்குதல் நடத்தி உள்ளது. இஸ்லாமிய ஹமாஸ் இயக்கத் தலைவர்களுக்கு எதிரான கண்மூடித்தனமான இஸ்ரேலிய படுகொலை முயற்சிகளில், டஜன் கணக்கான அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். வெறும் எட்டு நாட்களில், குறைந்தபட்சம் 800 பாலஸ்தீனியர்கள் -இதில் பிரதானமானவர்கள் அப்பாவிப் பொதுமக்கள்- கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதோடு 5,250 பேர் காயமடைந்திருக்கிறார்கள்.

இஸ்ரேலில் இருக்கும் யூத-பாதுகாப்புவாத ஆட்சியின் சீரழிந்த மற்றும் திவாலாகிப் போன தன்மைக்கு காசா படையெடுப்பு சாட்சியமளிக்கிறது. தனது நிதானத்தை இழந்துவிட்டதோடு தான் முகங்கொடுக்கின்ற நெருக்கடிக்கு நோக்குநிலைதவறிய மற்றும் கொலைபுரியும் வன்முறை தாக்குதலைத் தவிர வேறெந்தப் பதிலும் கொண்டிராத ஒரு தனிமைப்பட்ட மற்றும் அறநெறி இழந்த ஆளும் வர்க்கத்தை பிரதம மந்திரி பெஞ்சமின் நெத்தானியாஹூ தலைமையிலான அரசாங்கம் பிரதிநிதித்துவம் செய்கிறது. நிராதரவான பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இந்தப் பாரியப் படுகொலைத் தாக்குதல், மத்திய கிழக்கிலும், உலகெங்கிலும் மற்றும் இஸ்ரேலில் இருக்கும் யூதத் தொழிலாளர்கள் மத்தியிலும் கூட, யூத-பாதுகாப்புவாதத்தை நோக்கிய வெறுப்புணர்வும் விரோதமும் ஆழமடைவதற்கே சேவை செய்கிறது.

யூத-பாதுகாப்புவாதத்தை நியாயப்படுத்துகின்ற அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளும் அதே அளவுக்கு மதிப்பிழந்து கொண்டிருக்கின்றன. ஜனாதிபதி பராக் ஒபாமா, வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி மற்றும் ஐரோப்பிய அரசியல்வாதிகள் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது குறித்து தங்களது “கவலை”களை அறிவித்துக் கொள்கிற அதேநேரத்தில் "இஸ்ரேலுக்குத் தன்னை பாதுகாத்துக் கொள்ளும் உரிமை இருக்கிறது" என்ற போர்க்குற்றங்களுக்கான இழிவானதொரு நியாயப்படுத்தலை திரும்பத் திரும்பக் கூறும் ஒவ்வொருமுறையும் கோபம் பெருக்கெடுக்கிறது. எகிப்திய ஆட்சியும், மத்திய கிழக்கு முழுவதிலும் உள்ள ஏனைய அரபு அரசுகளும், இஸ்ரேலுடன் ஒத்துழைத்து வருவதால் அவற்றின் சொந்த மக்களிடம் வெறுப்புக்கு ஆளாகியுள்ளன.

கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குக் கரையில் இரண்டு வாரங்களாக அதிகரித்து வந்திருக்கின்ற ஆர்ப்பாட்டங்களும், கிளர்ச்சிகளும், நெத்தானியாஹூ அராசாங்கத்திற்கு எதிராகவும் மற்றும் ஒவ்வொரு இஸ்ரேலிய அட்டூழியத்திற்கும் இசைந்து செல்லும் ஜனாதிபதி மஹ்மொத் அப்பாஸின் கைக்கூலி பாலஸ்தீன அதிகாரத்துக்கு (PA) எதிராகவுமான இன்னொரு பாலஸ்தீனக் கிளர்ச்சியின் (intifada) வெடிப்பிற்கு —பாலஸ்தீன மக்களின் பொதுமைப்பட்ட எழுச்சி— முன்னறிவிப்பு வழங்குகின்றன. மேலும் மேலும் அதிகமான இஸ்ரேலியர்கள் தமது சொந்த அரசாங்கத்தால் கிளர்ச்சிக்குள் தள்ளப்படுகிறார்கள்.

எவ்வாறிருந்த போதினும், இந்த சீற்றங்களோ, கண்டனங்களோ, போராட்டங்களோ ஒரு போதுமான விடையிறுப்பு ஆகிவிடாது. சோசலிச சர்வதேசியவாதத்திற்கான ஒரு பொதுவான போராட்டத்தில் அனைத்து மத மற்றும் இன பின்புலங்களைக் கொண்ட தொழிலாள வர்க்கத்தையும் ஐக்கியப்படுத்துகின்ற ஒரு அரசியல் முன்னோக்கு தான் அவசியமாக இருக்கிறது.

இஸ்ரேல் ஸ்தாபிக்கப்பட்டு அறுபத்தி ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர், மற்றும் 1967இன் விஸ்தரிப்புவாத யுத்தம் மற்றும் ஆக்கிரமிப்பு பிராந்தியங்கள் கைப்பற்றப்பட்டமை ஆகியவற்றின் 47 ஆண்டுகளுக்குப் பின்னர், ஒட்டுமொத்த யூத-பாதுகாப்புவாத திட்டமும் —அதாவது மத்தியக் கிழக்கில் ஒரு குறுங்குழுவாத யூத முதலாளித்துவ அரசை செதுக்கும் ஒரு பிற்போக்குத்தனமான முன்னோக்கு— வெளிப்படையாக தோல்வி அடைந்துள்ளது.

1948இல் முதலிலும் மற்றும் அதைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு பிராந்தியங்களில் யூதக் குடியமர்வை விரிவாக்கியதன் மூலமாகவும் உடைமை இழக்கச் செய்யப்பட்டிருந்த பாலஸ்தீன மக்களின் எதிர்ப்பை தசாப்தகால ஒடுக்குமுறைகளும் படுகொலைகளும் முறித்துவிடவில்லை.

பாலஸ்தீனியர்களின் உடைமை பறிப்பானது, யூத இனப்படுகொலை மற்றும் யூத மக்களுக்கு ஒரு பாதுகாப்பான புகலிடத்தை ஸ்தாபிப்பதற்கான அவசியம் ஆகியவற்றால் நியாயம் பெறுவதாக யூத-பாதுகாப்புவாத கருத்தியல் பராமரித்து வருகிறது. நாஜிக்களின் குற்றங்களை மேலும் மேலும் ஒத்திருக்கும் குற்றங்களை இன்று இஸ்ரேலிய அரசாங்கம் நடத்துகின்றது. காசாவில் உள்ள 1.8 மில்லியன் மக்கள், பூமியில் ஒரு நரகத்தைச் சகித்துக் கொண்டு, சுத்தமான குடிநீர், போதுமான உணவு, மின்சாரம் மற்றும் சுகாதார சேவைகள் திட்டமிட்டு பறிக்கப்பட்ட நிலையில், நவீன கால சேரிப் பிரதேசத்தில் (ghetto) அடைக்கப்பட்டுள்ளனர், அவற்றை ஒரு இனப்படுகொலைக்கான கொள்கையாக மட்டுமே வர்ணிக்க முடியும்.

யூத-பாதுகாப்புவாத அரசு அனைத்து யூத நம்பிக்கைகளையும் பிரதிநிதித்துவம் செய்கிறது என்று இஸ்ரேலில் நடைபெறுகின்ற தேசியவாதப் பிரச்சாரமானது, அது வர்க்கங்களாகப் பிளவுபட்டு சமூகக் குரோதங்களால் உடைந்து போயிருக்கும் ஒரு முதலாளித்துவ சமூகமாகும் என்ற யதார்த்தத்தை எளிதாக மறுத்துவிட முடியாது. முதலாளித்துவ பில்லியனர்கள் மற்றும் மில்லியனர்களின் ஒரு சிறு எண்ணிக்கையிலான செல்வந்த தட்டும் மற்றும் முற்றிலும் ஊழல்பீடித்த அரசியல் ஸ்தாபகமுமே யூத-பாதுகாப்புவாதத்தால் ஆதாயமடைந்தவைகளாக உள்ளன. இஸ்ரேலின் 500 மிகப் பெரிய பணக்காரர்களின் செல்வம் கடந்த 12 ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது, அதேவேளையில் உலகச் சந்தையில் இஸ்ரேலிய பெருநிறுவனங்களின் போட்டித்திறனை பராமரிக்க தொழிலாளர்களின் ஊதியங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாட்டிலும் நடப்பதைப் போலவே, நெத்தானியாஹூ அரசாங்கமும் அமைப்பார்ந்த பூகோளமயப்பட்ட பொருளாதார முறிவுக்கான விடையிறுப்பில், ஏழைகளைக் கடுமையாக பாதிக்கும் கடுமையான சிக்கன வெட்டுக்கள் மற்றும் வரி உயர்வுகளைத் திணித்து, தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒரு வர்க்க யுத்தத்தை நடத்தி வருகிறது. காசா மீதான தாக்குதலானது பெருமளவில், இஸ்ரேலிய சமூகத்திற்குள் நிலவும் தீர்க்கவியலாத நெருக்கடிகளை அரபு-விரோத பேரினவாதத்திற்குள்ளும் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான யுத்தத்திற்குள்ளும் திசைதிருப்புவதற்காக இஸ்ரேலிய முதலாளித்துவ வர்க்கத்தின் பெரும்பிரயத்தனத்தால் உந்தப்பட்ட நடவடிக்கையாகும்.

இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலை, ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்புமுறையின் ஒரு பரந்த நெருக்கடியினது வெறுமனே ஒரேயொரு வெளிப்பாடு மட்டுமே என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். முதலாம் உலக யுத்தம் வெடிப்பதற்கு முந்தைய ஆண்டுகளில் கண்டதைப் போலவே, பூமியை போட்டி தேசிய-அரசுகளாகப் பிளவுபடுத்துவதும் பொருளாதார வாழ்க்கை ஒரு முதலாளித்துவ சிறுபான்மையினரின் இலாபத் திரட்சிக்காய் கீழ்ப்படியச் செய்யப்படுவதும் உலகப் பொருளாதாரத்தின் ஒருங்கிணைவு மற்றும் அவை ஒன்றையொன்று சார்ந்திருக்கும் யதார்த்தத்துடன் இயைந்து செல்ல முடியாது. கடந்த மூன்று தசாப்த காலத்தின் உற்பத்தி பூகோளமயமாக்கமானது, 1914 மற்றும் 1939இன் உலக யுத்தங்களுக்கு இட்டுச் சென்ற முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த முரண்பாடுகளை ஒரு புதிய அளவிற்குத் தீவிரப்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் ஆளும் வர்க்கம் மட்டுமல்லாது அத்தனை ஏகாதிபத்திய சக்திகளின் ஆளும் வர்க்கங்களும், பூகோள வளங்கள் மற்றும் சந்தைகளை தமது குறுகிய தேசிய நலன்களுக்கு அடிபணியச் செய்வதற்கான ஒரே கருவிகளாக இராணுவவாதம் மற்றும் யுத்தத்தை மட்டுமே இப்போது பார்க்கின்றன. காலனித்துவத்தை ஒழிப்பது என்பதாய் அழைக்கப்பட்ட நடவடிக்கைகள் கொண்டு உருவாக்கப்பட்ட செயற்கையான தேசிய-அரசுகளில் தங்கியிருக்கும் பல்வேறு சொத்துடைமைக் கும்பல்களும், அவற்றின் விரோதிகளுக்கு எதிராக செல்வ வளம் மற்றும் தனிச்சலுகைகளில் அவற்றின் உரிமைகோரல்களின் பங்கைப் பெற முயல்வதற்காக, உலகளவில் குறுங்குழுவாத அல்லது இனவாத அடிப்படையில் பிரிவினைகளை ஊக்குவித்து வருகின்றன.

அடுத்தடுத்ததாக ஒவ்வொரு நாட்டிலும் மனிதப் படுகொலைகளும், உள்நாட்டு யுத்தமும் மற்றும் ஏகாதிபத்திய சூழ்ச்சிகளும் நடந்தேறி வருவதற்கு மத்தியில், ஒரு மூன்றாம் உலக யுத்தத்தின் பெருகும் அபாயங்களைக் குறித்து நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு, “சோசலிசமும் ஏகாதிபத்திய யுத்தத்திற்கு எதிரான போராட்டமும்" என்ற அதன் தீர்மானத்தில் எச்சரித்துள்ளது. எவ்வாறிருப்பினும், அதே நிகழ்முறைகள் தொழிலாள வர்க்கத்தை சோசலிசப் புரட்சியை நோக்கி உந்தித் தள்ளிக் கொண்டிருக்கின்றன.

இந்தப் போக்கு சக்திவாய்ந்த முறையில் 2011 எகிப்திய புரட்சியில் காணப்பட்டது. அந்தப் புரட்சி கருக்கலைக்கப்படாமல் இருந்திருந்தால், மத்திய கிழக்கில் நிலைமை இன்றிருப்பதிலிருந்து மிகவும் மாறுபட்டதொரு விதத்தில் இருந்திருக்கும். எகிப்திய ஆளும் வர்க்கமும் மற்றும் அதற்குப் பின்னால் நிற்கும் ஏகாதிபத்திய சக்திகளும் கட்டுப்பாட்டை கையில் வைத்திருக்க இயலுவதானது, மத்திய கிழக்கிலும் மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தின் மையமான வரலாற்றுப் பிரச்சினையை —அதாவது, முன்னோக்கு மற்றும் தலைமைக்கான நெருக்கடி— அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

ஒவ்வொரு நாட்டு சம்பவங்களும் முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிரான பாரிய போராட்டங்களுக்கான நிலைமைகளை உருவாக்கி வருகின்றன என்ற நம்பிக்கையுடன், அந்த நெருக்கடியை தீர்ப்பதற்கே உலக சோசலிச வலைத் தளமும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அன்றாடம் போராடி வருகின்றன.

தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியம் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டத்தின் அவசியமானது, மத்திய கிழக்கின் அளவிற்கு வேறெங்கும் இந்தளவிற்கு கூர்மையாக இருக்க முடியாது. உலக சோசலிசப் புரட்சிக்கான போராட்டத்தின் பாகமாக, மத்திய கிழக்கின் ஐக்கிய சோசலிச அரசுகளை ஸ்தாபிப்பதன் மூலமாக முதலாளித்துவம் மற்றும் தேசிய-அரசு அமைப்புமுறை இரண்டையும் ஒழிப்பதே அவற்றால் உருவாக்கப்பட்டு விட்டிருக்கும் பேரழிவுக்கான தீர்வு ஆகும்.

தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் புதிய தலைமையாக உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளைக் கட்டியெழுப்புவதற்கான போராட்டமே இந்த மணித்துளியின் மூலோபாயப் பணியாக இருக்கிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com