Saturday, August 23, 2014

பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ பெரு விழாவின் தீ மிதிப்பு. யு.எம்.இஸ்ஹாக்

ஈழத் திருநாட்டின் எழில் மிகு அழகு பூமியாம் கிழக்கு மாகாணத்தில் மட்டுமாநகரின் தென் கோடியில் மகாபாரத இதிகாச நாயகர்களான பாண்டவர்கள் பதி எனப் போற்றப்படுவதும் அருள் வளமும் திருவளமும் நிறைந்து தெய்வருள் சக்திகளை தன்னகத்தே கொண்டு நாடிவரும் பக்தர்களுக்கு வேப்பமர நிழலில் மகா சக்தியாக விழங்கும் அன்னை ஸ்ரீ வடபத்திரகாளியம்பாளின் வருடாந்த அலங்கார உற்சவப் பெருவிழா ஜய வருஷம் ஆவணித் திங்கள் 10ஆம் நாள் (26.08.2014) செவ்வாய் கிழமை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி ஆவணித் திங்கள் 18ஆம் நாள் (03.09.2014) புதன் கிழமை காலை தீமிதித்தலுடன் அலங்கார உற்சவ நிகழ்வுகள் நிறைவடைகின்றன.

எட்டெட்டு அறுபத்து நான்கு கலையான நீ , ஈசுபதியாகவே வடவையை எரித்த நீ, முட்டவே மதுமாங்கி ஷத்துனியான நீ, மோது மடவேளையும் முன்னே குடித்த நீ, துட்டப் பசாசிகளை வெட்டியே வெண்ற நீ, சுடலையின் பேச்சியுரு வாய் நடனமிட்ட நீ, கட்டழகி யுன்னடியார் செல்வஞ் செழிக்க வரும் வடபத்திர காழியே எம் தாயே என்று போற்றிப் புகழும் தாய் குடி கொண்டுள்ள ஆலயத்தின் திருக்கதவு 26.08.2014 செவ்வாய்க் கிழமை திறக்கப்பட்டு அம்பாள் அழகிய கும்பத்தில் எழுந்தருளி வீதி உலா வருதலுடன் , விசேட ஆலங்காரப் பூஜை,பாண்டிருப்பு ஸ்ரீ அரசயடி அம்பாள் ஸ்ரீ சித்தி வினாயகர் ஆலயத்தில் இருந்து பக்தி பரவசமூட்டும் வாழைக்காய் எழுந்தருளல் பண்ணும் நிகழ்வும் அலங்கார பூஜையும் இடம் பெற்று திங்கட் கிழமை(01) காலை அடியவர்கள் பால்வனியுடன் வந்து அம்பாளின் திரவுருவச் சிலைக்கு அடியவர்களால் பால் வார்க்கும் நிகழ்வும் இடம் பெறும்.

அன்று மாலை வேளை அம்பாள் வீதி தோறும் அழகிய முத்துச் சப்பரத்தில் பவனி வந்து மறுநாள் அதிகாலை நோர்ப்பு நெல்எடுத்து குத்தும் நிகழ்வும் அம்பாளின் மஹாயாகமும், சக்தி பூஜையும் இடம் பெற்று அதனைத் தொடர்ந்து நோர்ப்புக்கட்டும் தீ மிதிக்கும் பக்தர்கள் கடலில் தீர்த்தமாடுதல் நடை பெற்று தீக்குளிக்கு தீ மூட்டும் கிரியைகளும் இடம் பெறும்.

இறுதி நாளான புதன் கிழமை அதிகாலை விசேட பூஜையுடன் காலை 7.00 மணிக்கு தீ மிதிப்பு காணிக்கை நிறைவேற்றப்பட்டு வழிபாடுகள் முடிவடையும். இவ்வருட தீ மிதிப்பு நிகழ்வில் பல பக்த அடியவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக ஆலய பரிபாலகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பாண்டிருப்பு , முனைத் தீவு ஸ்ரீ வடபத்திரகாளி அம்மன் ஆலயங்களின் பிரதம பூசகர் விஸ்வ பிரம்ம சிவஸ்ரீ செ.செல்வக்குமார் பிரதம பூசகராகவும் பொ.கந்தசாமி ,செ.ஸ்ரீதரன் ,பா.ஜதீஸ் ஆகியோர் உதவிப் பூசகர்களாகவும் இருந்து வடபத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த அலங்காரப் பூசை கிரியைகளை நடத்தவுள்ளனர்.

அலங்கார பூசை நிறைவைத் தொடர்ந்து 09.09.2014 செவ்வாய்க்கிழமை எட்டாம் சடங்கும் விசேட வைரவர் பூசையும் இடம் பெறும் என்று ஸ்ரீ அரசயடி அம்பாள், ஸ்ரீ வடபத்திரகாளி அம்பாள் தேவஸ்தானங்களின் பரிபாலன சபையினரும் , விஸவப் பிரம்மகுல இந்து இளைஞ்சர் மன்றத்தினரும் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com