Sunday, July 13, 2014

தமிழரின் பணத்தைத் தண்ணீரில் போட வேண்டாம்! இலங்கையர் அகதியாக செல்ல வேண்டிய நிலை துளியளவும் இல்லை!

உண்மையில் இலங்கையர் எவருக்கும் தற்போது அகதி யாக எந்தவொரு நாட்டிற்கும் செல்ல வேண்டிய நிலை துளியளவும் இல்லை. நாட்டில் தற்போது மிகவும் அமைதியானதொரு சூழல் நிலவி வருகின்றது. கடந்த யுத்த காலத்தில் இந்தியா மற்றும் மேற்கத்தய நாடுகளுக்கு இலங்கைத் தமிழர் பலரும் அகதிகளாகச் சென்றனர். அதில் ஒரு நியாயம் இருந்தது. இப்போது இன்னொரு நாட்டில் புகலிடம் தேடுவது என்பது எவ்வகையிலும் தேவையற் றதும், ஏற்றுக் கொள்ளப்படாததுமானதொரு விடயம்.

அதிலும் இவ்வாறு புகலிடம் கோரிச் செல்லும் நூற்றுக் கணக்கானோரில் தமிழர்களுடன் சிங்கள மற்றும் இளைஞர்கள் மட்டுமல்லாது குடும்பப் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் எனப் பலரும் உள்ளடங்குகின்றனர். இதிலிருந்தே இவர்கள் அகதிகளாகச் செல்லவில்லை, தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த சட்டவிரோதமாகச் செல்கிறார்கள் என்பது தெளிவாகின்றது.

இந்நிலையில் கடந்த வாரம் இந்தியாவிலிருந்து புகலிடம் கோரி அவுஸ்திரேலி யாவிற்குப் படகில் சென்ற இலங்கையர்கள் 152 பேர் படகு பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்தனர். இவர்களை அவுஸ்திரேலிய அரசு ஏற்க மறுத்தது. எனினும் மனிதநேயம் கொண்டு அவர்களைக் காப்பாற்றி ஒரு தொகையினரை இலங்கையிடம் கையளித்தது. ஏனையோரும் இவ்வாறு ஒப்படைக்கப்படவுள்ளனர். இவ்வாறு கள்ளமாகச் சென்றவர்கள் தமக்கு இலங்கையில் வாழ முடியாத பயங்கர சூழல் நிலவுவதாக அவுஸ்திரேலிய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். இதனை அவுஸ்திரேலிய பிரதமர், அந்நாட்டு குடிவரவு குடியகல்வுத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் என எவருமே ஏற்றுக் கொள்ளவில்லை.

அதனால் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். இவ்வாறு இவர்கள் திருப்பி அனுப்படாவிட்டால் இதுவே ஏனைய பலரையும் இதுபோன்ற பயணத்திற்கு ஊக்குவிப்பதாக அமையும் என்பது அவுஸ்திரேலிய தரப்பினரின் கருத்தாக உள்ளது. இப்போது இலங்கையர் பலரே இவ்வாறு படகுகள் மூழ்குவதாகத் தமது நாட்டிற்குள் சட்டவிரோதமாக வருவதால் இலங்கை கடற்பரப்பில் கடலோரக் கண்காணிப் பிற்காக அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு புதிய இரு அதிகவே கடற்படைக் கப்பல்களையும் வழங்கியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் குவின்ஸ்லாந்து கோலட் கடற்கரையில் வந்து சிக்குண்டு தவித்த இளம் திமிங்கிலத்தை கடற்பரப்பில் சேர்க்க முயற்சி எடுத்த அதிகாரிகள், நடுக்கடலில் தத்தளித்த மனிதர்களுக்கு உதவி செய்யவில்லை என்பதாக உள்ளூரில் செய்திகளை வெளியிட்ட பத்திரிகைகள் அந்நாட்டு அரசாங்கம் அம்மக்களுக்குச் செய்த உதவியை முழுமையாக மறைத்திருந்தமை துரதிஷ்ட மான விடயம்.

இலங்கைக்குத் தாம் திருப்பி அனுப்பப்பட்டால் அங்கு துன்புறுத்தப்படுவோம் என அவுஸ்திரேலிய குடிவரவு அதிகாரிகளிடம் புகலிடக்காரர்கள் தெரிவித்தமை முற்றிலும் பொய்யான கூற்றாகும். தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஆட்கடத்தல் காரர்களிடம் பணத்தைக் கொடுத்து சட்டவிரோதமான, ஆபத்தான பயணம் எனத் தெரிந்திருந்தும் துணிந்து செல்லும்போது பிடிபட்டால் திரும்பிவர நேரும் என்பதை இவர்கள் நிச்சயம் முன்கூட்யே அறிந்திருப்பார்கள்.

திருப்பி அனுப்பப்பட்ட அனைவருமே சாதாரண விசாரணைகளுக்கு மட்டுமே உட்படுத்தப்பட்டனர் என்பதே உண்மை. அவுஸ்திரேலிய அரசு விளம்பர எச்சரிக்கையைத் தொடர்ச்சியாக விட்டுவரும் நிலையில் இருநாட்டுச் சட்டங்களுக்கும் மதிப்பளியாது செல்வதனை எவரும் ஊக்குவிக்கக் கூடாது.

இதனால் வரும் ஆபத்துக்களை எடுத்துரைப்பதே இப்போதுள்ள அவசியத் தேவையாகும் என்பதுடன் அரசாங்கம் ஆட்கடத்தல் காரர்களைக் கண்டு பிடித்து அவர்களுக்குச் சரியான தண்டனையை வழங்க வேண்டும்.

பணத்தைத் தண்ணீரில் போட வேண்டாம், ஆபத்தான கடற் பயணத்தை மேற் கொண்டு அவுஸ்திரேலியா வர வேண்டாம், இது அவுஸ்திரேலிய அரசாங் கத்தின் வேண்டுகோள். இது நாம் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும், வானொலிகளிலும் தினந்தினம் பார்த்தும் கேட்டும் வரும் ஒரு விடயமாகும்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com