Wednesday, July 9, 2014

ஞானசாரர் சொன்னது ஒன்று... செய்தது மற்றொன்று! (நேர்காணல்)

தாங்கள் நிறைவேற்றுகின்ற ஒப்பந்தம் யாருடையது?
யாருடையதாக இருந்தாலும் அன்றிலிருந்து நிறைவேற்றியிருப்பது ஒரே ஒப்பந்தம்தான். அதுபற்றி பொதுமக்கள் நன்கு அறிவர்.

அது என்ன ஒரே ஒப்பந்தம் என்பது?
என்னிடம் ஒப்பந்தம் எதுவும் இல்லை. அன்றிலிருந்து நான் குறித்ததொரு கருதுகோளுடன் எழுந்துநின்றுள்ளேன். எந்தப் பக்கத்தில்தான் நான் இருந்தாலும் என்னுடை கருத்தை நான் வெளிப்படுத்துவேன்.

அமைச்சர் ஒருவர் யாரேனும் ஒருவரைத் திட்டுவாராயின் அவர் ஏதோ ஒரு ஒப்பந்தம் அவருடன் சேர்ந்திருக்கின்றது என்று மக்கள் மனதில் எண்ணப்பாடு தோன்றியுள்ளதே?
ழூ அடுத்தவர்கள் பற்றி எனக்குத் தெரியாது. என்னைத் தெரிந்தவர்களுக்கு தெரியும். 80 களிலிருந்து நான் எப்படி இருக்கிறேன் என்று எல்லோருக்கும் தெரியும். அவர்கள் ஒருபோதும் நான் ஒப்பந்தமொன்றில் அடிப்படையில் செயற்படுவதாக நினைக்கவே மாட்டார்கள்.

ஆனாலும் பொதுபல சேனா அமைப்பு அப்படிக் கருதுமே?
இல்லை. பொது பல சேனா அமைப்பினர் அவ்வாறு கருத மாட்டார்கள். ஞானசார தேரருக்கு என்னைத் தெரியும். நான் யாருடனும் ஒப்பந்தம் செய்துகொள்பவன் அல்ல என்பது அவருக்குத் தெரியும். என்னுடைய கருத்துக்கள் பற்றியும் அவர் அறிவார். கடந்த காலத்தில் சொன்னவை பற்றியும் செய்தவை பற்றியும் நாம் மறந்துவிடுவோம். நாங்கள் ஒன்றிணைவோம் என்றும் அவர் என்னிடம் சொன்னார்.

எப்போது அப்படிச் சொன்னார்?
இரண்டு வருடங்கள் இருக்கும்…

எதிர்பாராதவிதமாக தாங்கள் பொதுபல சேனா அமைப்புக்கு தற்போது கையை உயர்த்துவது ஏன்?
நான் தொடர்ந்து அவ்வமைப்பு எதிர்ப்புக் காட்டினேன் அல்லவா! அனைத்து அடிப்படைவாத அமைப்புக்களையும் எதிர்ப்பவன் நான். நாங்கள் ஜே.வி.பி அடிப்படைவாதிகளுக்கு எதிராக அச்சமின்றி களத்தில் குதித்தோம். எல்.ரீ.ரீ.ஈ அடிப்படைவாதிகளுக்கு எதிராக எழுந்து நின்றோம். அது முஸ்லிமாக இருக்கட்டும், தமிழர்களாக இருக்கட்டும், சிங்களவர்களாக இருக்கட்டும் எல்லோருக்கும் ஒன்றே. இந்த அடிப்படைவாதத்தால் நாடு அழிவுப்பாதையை நோக்கி நகருமே தவிர முன்னேற்றம் காணாது.

பொது பல சேனாவிற்கு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ரவி கருணாநாயக்க பண உதவி செய்தார் என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?
அது உண்மையா இல்லை பொய்யா என்று ரவி கருணாநாயக்கவிடம் கேளுங்கள். வேறுமுறையில் சொல்வதற்கு சான்று இல்லை. ரவி கருணாநாயக்க என்னிடம் எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறார். அது பொய்யென்று இதுவரை யாரும் வாய்திறக்கவில்லையே? தேரரும் வெவ்வேறான கருத்துக்கள்தான் சொல்லியிருக்கிறார்.

அது எந்தக் காலப் பகுதியில்?
தொடராக ரவி கருணாநாயக்கதான் பண உதவி செய்தார்.

எதிர்க்கட்சி என்பதனால்தான் தாங்கள் அவ்வாறு சொல்கிறீர்களா?
இல்லவே இல்லை. தற்போது இவர்கள் நாட்டுப் பற்றோடு கதைக்கிறார்கள். நாட்டின் மீது அவ்வளவு அன்புடையவர்கள் யுத்தக் காலப் பகுதியில் எங்கிருந்தார்கள்? சென்ற ஜனாதிபதித் தேர்தல் காலப்பிரிவில் யாருடன் இருந்தார்கள்? முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவுடன்தான்.

அவ்வமைப்பில்தானா?
ஆம்….ஆம்…. அந்த பொதுபல சேனா அமைப்பின் முக்கிய உறுப்பினர் டிலன்த விதானகே சரத் பொன்சேக்காவிற்காக பாடுபட்டார். யுத்தக் காலப் பகுதியில் ஞானசாரர் முழுமையாக ஐக்கிய தேசியக் கட்சியுடன்தான் இருந்தார். இவர்களைப் பார்த்து எப்படி தேசாபிமானிகள் என்று சொல்வது?

இன்றும்கூட ரவி கருணாநாயக்க பொதுபல சேனாவுக்கு பண உதவி செய்கின்றாரா?
கொஞ்சம் நாட்கள் முன்புவரை அப்படித்தான் உதவி செய்தார். அண்மையில்தான் அவர்கள் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதைக் காட்ட முயன்றுவருகின்றார்கள்.

ஆளும் கட்சியினருடன் இருப்பது ஒருபக்கம் இருக்க.. தற்போது ஜனாதிபதியிலிருந்து உயர் மட்டக் குழுவினர் வரை அனைவருடனும் சிநேகிதம் பாராட்டுகிறார்களே…?
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் இவர்களுக்கு எந்தக் கொடுக்கல் வாங்கலும் இல்லை. அரசாங்கத்தின் ஒரு சிலருடன் இவர்களுக்கு தொடர்பு இருக்கின்றது என்று சொல்லத் தெரியவுமில்லை. அதுவரை அவர்கள் ஜனாதிபதியைத் தோற்கடிக்கவே முயன்றார்கள்.

ஜனாதிபதியுடன் தொடர்பில்லை என உறுதியாகத்தான் சொல்கிறீர்களா?
ஆம். தெளிவாகச் சொல்கிறேன். ஜனாதிபதியின் எண்ணப்பாடு பற்றி எனக்கு நன்கு தெரியும். அவர் அவ்விடயம் தொடர்பில் என்னுடன் தனியாகக் கதைத்திருக்கிறார்.

அரசாங்கத்தின் ஒரு சிலர் என்று யாரைத்தான் சொல்கிறீர்கள்? எனக்கு சொல்லத் தெரியவில்லை.

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவா?
இல்லை. அவருக்கும் பொதுபல சேனாவுக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை என அவர் தெளிவாகச் சொல்லியிருக்கின்றார்தானே. பொதுபல சேனாவிடமும் அதனைச் சொல்லியிருந்தார்தானே.

ஆயினும், பொதுபல சேனாவோடு ஏதோவொரு பெரிய சக்தி உள்ளதை அண்மைய செயற்பாடுகளைக் கொண்டு கண்டுகொள்ளலாம் அல்லவா?
பாதுகாப்புப் பிரிவில் ஒருசிலர் இருக்கின்றார்கள்தானே. இவர்களிடம் உத்தரவு பெற்றுக் கொண்டுதான் இப்படிச் செய்கிறார்கள் போலும். பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவர்களின் உதவி கிடைப்பதனாற்றான் போலும் பாதுகாப்புச் செயலரின் பெயரும் இதனோடு இணைக்கப்படுகிறது.

நன்றாக இருக்கிறது. பொது பல சேனா பாதுகாப்புப் பிரிவினருக்கு கட்டளையிடுகிறார்கள்… அவ்வாறாயின்…

பொது பல சேனாவுக்குப் பயந்த நிலை. அவர்கள் சொல்வதைக் கேட்க்க் கூடியவர்கள் பாதுகாப்புப் பிரிவில் இருக்கிறார்கள்.

ஏன் அப்படி? அது எவ்வாறு ஏற்பட்டிருக்கிறது? அவர்களும் அடிப்படைவாதிகள் என்பதனாற்றானா?

அவர்கள் அடிப்படைவாதிகள் அல்லர். தங்கள் பதவியைத் தக்க வைத்துக்கொள்வதற்காக. தேர்ர்களிடம் தங்களுக்கு நல்ல பெயர் வாங்கிக் கொள்ள. பட்டம் பதவி பெற்றுக் கொள்ள இவ்வாறு செய்கிறார்கள் போலும்.
அப்படியென்றால், பொது பல சோனாவினர் புலம் பெயர் தமிழ் தலைவர்களுடன் கொடுக்கல் - வாங்கலில் ஈடுபடுகின்றனர் என எப்படிச் சொல்ல முடியும்?
இணையத்தளங்களிற்குச் சென்றால் அதன் உண்மைத் தன்மையைக் காணலாம். அங்கு தமிழ் தலைமைகளுடன் எடுத்த படங்கள் உள்ளனவே.

அது உண்மை என்று எப்படி நீங்கள் உறுதிப்படுத்துவீர்கள்?
எனது நண்பன் ஆனி பியோடொப் மூலமாகத்தான் நாங்கள் அவர்களுடன் தொடர்புகொண்டுள்ளேன். ஆறு நாட்கள் புலம் பெயர் தமிழர்களுடன் உண்டு - பருகி இருந்தேன். நோர்வே அரசாங்கம் தான் அதற்கான தேவைகளை நிறைவு செய்தது.

யார் அந்த ஆனி பியோடொப்?

அவர்தான், என் கீழுள்ள சீனோர் நிறுவனத்தை இலங்கையில் கட்டியெழுப்பியவர். அவர்தான் அந்நிறுவனத்தின் முதல் தலைவர். அவர் நோர்வே நாட்டு முன்னாள் லிபரல் கட்சியின் தலைவர். அதேபோல முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர். அந்நாட்டில் அவருக்கு பெருமதிப்புள்ளது. டிலன்த விதானகே தான் இந்த உறவை ஏற்படுத்தியுள்ளார். அவர் ஒருநாள் என்னிடம், ஞானசார என்னைச் சந்திப்பதற்கு விரும்புகின்றார் எனச் சொன்னார். எந்தவொரு நபருக்கும் என்னைச் சந்திக்க முடியும் என நான் சொன்னேன். அவ்விடத்தில்தான், ஞானசார தேரர், நானும் இப்போது உங்கள் எண்ணப்பாட்டிலேயே இருக்கின்றேன் எனச் சொன்னார். நோர்வே போய் வந்த்தன் பின்னர்தான் அவர் ஆனி பியோடொப்புடன் வந்து என்னைச் சந்தித்தார்.

ஞானசார தேரரிடம் தாங்கள் என்ன சொன்னீர்கள்? உங்களுடன் எனக்கு எவ்வித தனிப்பட்ட பிரச்சினையும் இல்லை என நான் சொன்னேன். அரசியல் பிரச்சினைதான் இருக்கின்றது. தாங்கள் என்னுடைய கருத்தை ஏற்றுக்கொண்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றேன். அவ்வாறு கதைத்துவிட்டு 9 மாதங்கள் உருண்டோடிய பின்னர்தான் அந்த முஸ்லிம் அடிப்படைவாதம் தோற்றம் பெற்றது.

எப்படி ஒரேயடியாக அந்த மாற்றம் ஏற்பட்டது?
நானும் ஆனி பியோடொப்பிடம் அதனைத்தான் வினவினேன். தற்போது அவர் நோர்வே ஆதரவுடன் மியன்மாரில் செயற்றிட்டமொன்றை மேற்கொண்டுள்ளார். தானும் இதுதொடர்பில் மிகவும் குழம்பிப் போயுள்ளதாக அவர் என்னிடம் சொன்னார். ஞானசார தேரர் தொடர்பாக அல்ல. டிலன்த என்பவர் தொடர்பில்தான் குழப்பமே உள்ளது என்றார்.

உங்களுக்கும், டிலன்த விதானகேவுக்குமிடையில் நெருங்கிய தொடர்பிருந்ததுதானே…? ஆம். அவரின் அனைத்து நிகழ்வுகளுக்கும் விசேட அதிதியாக நான்தான் அழைக்கப்பட்டேன். நாங்கள் இவரை நோர்வே அழைத்துச் சென்றமை தொடர்பில் நோர்வே அரசாங்கமும் திருப்தியற்றிருக்கின்றது. அதனால் தற்போது டிலன்த போன்றோருடன் தனக்கு எவ்வித தொடர்பும் இல்லை என பியோடொப் பின்னாளில் என்னிடம் சொன்னார்.

டிலன்த உங்களிடமிருந்து ஏன் விலகினார் என்ற என் வினாவுக்கு விடை கிடைக்கவில்லையே? அவருக்குள்ள அரசியல் ஒன்றுமில்லை. அவர் சாதாரண அரச உத்தியோகத்தர் மட்டுமே. தாரா த மெல்லின் கீழ் அவர் இருந்தார். அதனால்தான் அவர், “நான் கல்விக்காக பெரும் பங்களிப்புச் செய்திருக்கிறேன்” என்று தம்பட்டமடிக்கிறார். தாரா த மெல்லின் கல்விச் சிந்தனைக்கு எதிராக பல்லாயிரக் கணக்கான மாணவர்கள் வீதிக்கு இறங்கினார்கள். இன்று முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசுகின்ற இவர்கள்தான் ஆனந்த, நாலந்த போன்ற பாடசாலைகளுக்கு முஸ்லிம் மாணவர்களும் உள்வாங்கப்பட வேண்டும் எனக் கூறினார்கள். நான் அதுபற்றி விமர்சிக்க விரும்பவில்லை. அவ்வாறு முன்பின் முரணாக செயற்படுபவர்கள்தான் இவர்கள். அதற்குத்தான் ஒப்பந்தம் என்று சொல்ல வேண்டும். ஞானசார தேரரின் வழிகாட்டலின்கீழ் சிறந்ததொரு ஒப்பந்தம் இவர் செய்திருக்கின்றார் என்று சொல்லத்தான் தோன்றுகின்றது.

அதாவது, ஞானசாரருக்கு இவை எதுவும் தெரியாது. அவர் வழிகாட்டியாக மட்டுமே இருக்கின்றார்… என்று சொல்கிறீர்களா? நான் அவ்வாறுதான் நினைக்கிறேன். இல்லாவிட்டால் ஞானசாரர் என்னிடம் ஒன்றைச் சொல்லிவிட்டு வேறொன்றைச் செய்வாரா?

அப்படியென்றால், பொதுபல சேனா அமைப்புக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்குமிடையே உள்ள தொடர்புதான் என்ன?
அவ்வாறான ஒரு விடயம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஐக்கிய நாடுகள் சபை எங்களுக்கும் சொந்தமானதுதான். எங்கள் நாடும் அதில் அங்கத்துவம் வகிக்கின்றது.

அவ்வாறாயின், ஐக்கிய நாடுகள் சபையின் வாகனத்தை பொதுபல சேனா உபயோகிக்கின்றதே. ரவி கருணாநாயக்க பண உதவி செய்தார் என்பதை தெரிந்து வைத்துள்ள தங்களுக்கு இதுபற்றித் தெரியாதா?
அந்த ஐக்கிய நாடுகள் விவகாரம் பற்றி ஒருவர் என்னிடம் சொன்னார். அந்த டிலன்த ஐக்கிய நாடுகள் சபையின் செயற்றிட்டமொன்றை பொறுப்பேற்றுச் செய்கின்றார். அந்த செயற்றிட்டத்திற்காக அவர்களின் வாகனத்தை உபயோகிக்கின்றார் போலும். அவ்விடயம் ஐக்கிய நாடுகள் அமையத்திற்கு தெரியாதிருக்கலாம்.

இது தொடர்பில் அங்கத்துவ நாடு என்ற வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லவா?
ஆம்

ஏன் நீங்கள் ஞானசாரரை பட்டை தீட்ட முனைகிறீர்கள்?
அப்படியொன்றும் இல்லை. ஞானசாரர் வெளிப்படையானவர். டிலன்த போன்று மறைந்துள்ள பாத்திரங்கள் தொடர்பில் அரசாங்கமும் ஏனையோரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். விசப் பாம்பு எது என்பது பற்றி சரிவரத் தெரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் பணத்திற்காக, பதவிக்காக எதனையும் செய்வார்கள்.

அதாவது, டிலன்த பகுதியினருக்கு அதிக பலம் இருக்கின்றது அல்லவா?
அப்படி ஒரு பலமும் அவர்களிடத்தில் இல்லை.

அவ்வாறாயின், ஞானசாரர் உள்ளிட்ட அமைப்பை நிருவாகிப்பது, போசிப்பது….?
அந்த அமைப்பை வழிநடாத்துவதும், எல்லாப் பிரச்சினைகளையும் ஏற்படுத்துவதும் இந்த டிலன்த என்று அவர்களின் கூட்டத்தார்களே சொல்கிறார்கள். அதற்காக அவர் பெரும் பணத்தை செலவு பண்ணுகின்றாராம். இந்த நபருக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வருகின்றது என்று நான் ஆனி பியோடொப்பிடம் கேட்டேன். அதற்கு அவர், “எங்கிருந்து வருகின்றது என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் உண்மை. முதலில் அவரிடம் அவ்வளவு பணம் இருக்கவில்லை.” எனச் சொன்னார்.

பொதுபல சேனா அமைப்பு உங்கள் வீட்டைத் தகர்ப்பதற்காக வருகிறது என்றொரு செய்தி பரவியது.. அப்படியொன்றும் ஆகவில்லையே?
அதில் எவ்வித உண்மையும் இல்லை என பொதுபல சேனா அமைப்பின் விதாரன்தெனியே நந்த தேரர் எங்களுக்கு அறியத் தந்தார். எங்கள் இரு தரப்பினருக்குமிடையே பிரச்சினையை ஏற்படுத்த சோடிக்கப்பட்ட வதந்தி என்றும் அவர் சொன்னார்.

யார்தான் அந்தக் கதையை கட்டவிழ்த்து விட்டார்கள்?
எனக்குத் தெரியாது. யாருக்கேனும் அதற்கான தேவை இருக்கின்றது போலும்.

நன்றி - மவ்பிம நேர் கண்டவர் - சாலிக்க விமலசேன (ශාලික විමලසේන) தமிழில் - கலைமகன் பைரூஸ்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com