குர்ஆன் மனனப் போட்டியில் வெலிகம ஸலாஹியா மாணவன் முதலிடம்!
வெலிகம பாரி அறபுக் கல்லூரியின் 130 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அகில இலங்கை ரீதியாக நடாத்திய பகுதி நேர மத்ரஸா மாணவர்களுக்கான 5 ஜுஸ்உ மனனப் போட்டியில் வெலிகம ஸலாஹியா சர்வதேச பாடசாலை மாணவன் M N M ஷஹீம் அஹமட் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
திக்குவல்லை முஹமட் நுஃபைல் தம்பதியினரின் புதல்வனான ஷஹீம் அஹமட் (தரம் 05) பாடசாலை மற்றும் ஏனைய வெளிக்களப் போட்டிகள் பலவற்றிலும் வெற்றிபெற்றுவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டியில் முதலிடம் பெற்ற ஸலாஹியா சர்வதேச பாடசாலை மாணவன் ஷஹீம் அஹமட் உம்ராவுக்குச் செல்வதற்கான விமானப் பயணச் சீட்டைப் பரிசாகப் பெறவுள்ளார்.
இதே பாடசாலை மாணவன் M M ஸும்ரி மொஹமட் 10 ஜுஸ்உ பிரிவில் பாராட்டுக்குரிய அறுவரில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். தனது வெற்றியின் இரகசியம் பற்றி M N M ஷஹீம் அஹமட்டை அணுகி வினவியபோது, இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் தனது ஹிப்ழ் பிரிவு பயிற்றுவிப்பாளர் மௌலவி அல்ஹாபிழ் A R M அப்துல்லாவின் அயராத ஊக்குவிப்பும் முயற்சியும், தனது விடாமுயற்சியும் என்றார். அத்துடன் தான் வெற்றி பெறுவதற்காகத் தன்னைத் தட்டித் தந்த பாடசாலை அதிபர், ஆசிரியர்களுக்கும், உஸ்தாத்மார்களுக்கும் தனது நன்றியைத் தெரிவிப்பதாகவும், தான் வெற்றிபெற அருள்பாலித்த எல்லாம் வல்ல இறைவனுக்கு தனது நன்றியைத் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.
(கலைமகன் பைரூஸ்)
0 comments :
Post a Comment