கவுரவக் கொலைகள் இஸ்லாமியக் கொள்கைகளுக்கு எதிரானதாம் - பி.யு.சி
கவுரவக் கொலைகள் இஸ்லாமியக் கொள்கைகளுக்கு எதிரானது என்று பாகிஸ்தானின் இஸ்லாமிய மதகுரு மார்கள் அமைப்பான பாகிஸ்தான் உலேமா சபை (பி.யு.சி) அறிவித்துள்ளது. மேலும் அதற்கு தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பி.யு.சி. வியாழக்கிழமை வெளியிட்ட உத்தரவில்,
'இத்தகைய கொலைகளை சட்டப்படியோ, இஸ்லாமிய கொள்கைகளின்படியோ நியாயப்படுத்த முடியாது. இவை பூமியில் பகைமை உணர்வையே பரவச் செய்யும்' என்று கூறப்பட்டுள்ளது. பி.யு.சி.யின் சாசனத் துறை தயாரித்த இந்த உத்தரவை, பி.யு.சி.யின் தேசிய மாநாட்டில், அதன் தலைவர் தாஹிர் அஷ்ரப் வெளியிட்டதாக டான் நாளேடு தெரிவிக்கிறது.
இந்த மாநாட்டில் வெளிநாட்டுத் தூதர்கள், மத அறிஞர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்தின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில் பி.யு.சி. தலைவர் தாஹிர் அஷ்ரப் பேசுகையில், "சந்தேகம்", ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கவுரவக் கொலைகள் நடக்கின்றன. திருமணம் ஆகாத பெண்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டாலும், சாட்சியங்கள் அவர்களுக்கு எதிராக இருந்தாலும் கூட அவர்களைக் கொல்லக் கூடாது' என்றார்.
குடும்பத்தினரை எதிர்த்து, தான் விரும்பியவரை திருமணம் செய்துகொண்ட 25 வயது பாகிஸ்தானிய பெண் ஒருவர், கடந்த வாரம் அவரது தந்தை மற்றும் சகோதரர்களால் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பாகிஸ்தானில் பரவலாக விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
சிந்து மாகாணத்தில் இந்துமதப் பெண்கள் கட்டாயமாக மதம் மாற்றப்படுவதாக செய்திகள் வெளிவரும் நிலையில், இம்மாநாட்டில் பங்கேற்ற மத விவகாரங்கள் துறை அமைச்சர் முகம்மது யூசூப், 'கட்டாய மத மாற்றம் இஸ்லாமிய கொள்கைகளுக்கு எதிரானது' என்றார். மேலும் அனைத்து சமூகத்தினரிடையே சகிப்புத் தன்மையை அவர் வலியுறுத்தினார்
0 comments :
Post a Comment