Thursday, June 5, 2014

இலங்கை விவகாரம் தொடர்பில் முழு விளக்கமும் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது........

மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடி யாது என்ற அரசாங்கத்தின் நிலைப்பாடு இந்தியப் பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசாங்கத்துக்குத் தெளிவாக விளக்கிக் கூறப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் பேரா சிரியர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்தியப் பிரதமராக நரேந்திரமோடி பதவி யேற்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்கு புதுடில்லி சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், மோடியைச் சந்தித்துக் கலந்து ரையாடிய போது இது தொடர்பான விளக்கத்தை அளித்திருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

23/2 நிலையியல் கட்டளையின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே வெளிவிவகார அமைச்சர் மேற் கண்டவாறு கூறினார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், நரேந்திர மோடியுடனான சந்திப்பில் இரு நாட்டு உறவுகள் குறித்து பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை விஸ்தரித்தல் மற்றும் இரு நாட்டு மீனவர் பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இச்சந்திப்பில் ஆராயப்பட்டது.

இந்தப் பேச்சுவார்த்தை நட்பு ரீதியில் சுமுகமான முறையில் நடைபெற்றிருந்தது. அரசியலமைப்பு விவகாரம் தொடர்பான எமது நிலைப்பாட்டை இதன்போது ஜனாதிபதி தெளிவாக முன்வைத்தார். 13வது அரசியலமைப்புத் திருத்த விவகாரம் புதிய விடயமல்ல. இது கால்நூற்றாண்டுக்கு மேல் எமது அரசியலமைப்பின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. ஐந்து அரசாங்கங்கள் ஆட்சிக்கு வந்தபோதும் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை. இதிலுள்ள அடிப்படை விடயங்கள் தொடர்பில் குறைந்தபட்ச இணக்கப்பாடாவது இல்லாமல் இதனை முறையாக அமுல்படுத்த முடியாது.

எந்த அரசாங்கத்தாலும் இது தொடர்பில் இணக்கப்பாடொன்றை எட்ட முடிய வில்லை. எமது அரசாங்கம் இது தொடர்பில் இணக்கப்பாடொன்றை ஏற்படுத்த முன்னெடுத்த முயற்சிகள் குறித்து இந்தியத் தரப்புக்கு தெளிவு படுத்தப்பட்டது. அரசியலமைப்பு திருத்தத்துடன் தொடர்புடைய விடயங்களுக்கு பாராளுமன்றத் தெரிவுக்குழுவே பொருத்தமான இடமாகும். அமைச்சர் நிமல் சிறிபால.டி.சில்வா தலைமையிலான குழு இது தொடர்பில் செயற்பட்டு வருகிறது.

பல்வேறுபட்ட கருத்துக்களும் நிலைப்பாடுகளும் இருந்தாலும் நாம் பொதுவான இணக்கப்பாடொன்றை தெரிவுக்குழுவின் மூலம் எட்ட முடியும். இந்தியாவின் தற்போதைய வெளிவிவகார அமைச்சராகவிருக்கும் சுஷ்மா சுவராஜ், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இவரது இலங்கை விஜயத்தின் போது பாராளுமன்றத் தெரிவிக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பங்கேற்க வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தோம். அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கான அடித்தளமொன்றை ஏற்படுத்தத் தயார் என்ற விடயத்தையும் நாம் அவரிடம் எடுத்துக்கூறியிருந்தோம்.

இந்திய பிரதமர் அடங்கலான குழுவினருடனான பேச்சுவார்த்தையில் பொலிஸ் அதிகாரங்கள் குறித்து ஆராயப்பட்டது. மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்குவது நடைமுறைச்சாத்தியமற்றது. எந்த மாகாணசபைக்கும் பொலிஸ் அதிகாரம் வழங்கப்படாது என்ற எமது நிலைப்பாட்டை நாம் இதன்போது தெளிவாகக் கூறியிருந்தோம்.

அரசியல் நிலைமைகளுக்கு அப்பால் இருந்து இந்த விவகாரம் குறித்து பார்க்கவேண்டும். பாராளுமன்றத் தெரிவுக்குழுவினூடாக இணக்கப்பாடொன்றை ஏற்படுத்தி அதனூடாக அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்த முடியுமென நாம் நம்புகிறோம் எனத் தெரிவித்தார். இதேவேளை, 13வது திருத்தம் தொடர்பாக இந்தியாவுக்கு எந்தவொரு வாக்குறுதியையும் அரசாங்கம் வழங்கவில்லையென நம்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com