Saturday, June 21, 2014

எங்களை இனவாதி என்றால் பரவாயில்லை! அளுத்கம பிரச்சினை தொடர்பில் கருத்து தெரிவிக்கின்றார் ஞானசார தேரர்!

தென்னிலங்கையில் அளுத்கம பிரதேசத்தில் கடந்த ஞாயி றன்று வெடித்த முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை களைத் தூண்டியதாக பௌத்த கடும்போக்கு அமைப்பான பொது பல சேனா மீது ஆளும்கட்சி எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சூழ்நிலையில், ஞானசார தேரரிடம் கேள்வி எழுப்பியபோது,

இந்த நாட்டில் கடும்போக்கு தீவிரவாத, அடிப்படை வாத, இனவாத குழுக்கள் இயங்குகின்றன என்பதை சுட்டிக்காட்டும் எங்களை இனவாதி என்றால் பரவாயில்லை. எங்களை இனவாதி என்றே வைத்துக்கொள்ளுங்கள் என்று தான் நான் கூறினேன்´ என்றார் ஞானசார தேரர்.

இந்த தீவிரவாதக் குழுக்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்காவிட்டால், ஜனநாயக வழிமுறையில் முஸ்லிம் வியாபார நிலையங்களை புறக்கணிக்குமாறு மக்களை கேட்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்று தான் கூறினேன். அப்படி மக்கள் புறக்கணித்தால் பேருவளை மற்றும் அளுத்கமையில் உள்ள கடைகளுக்கு அதோ கதிதான் என்றும் நாங்கள் கூறினோம்´ என்றும் கூறினார் அவர்.

தான் கூறிய கருத்தை, முஸ்லிம் கடைகளைத் தாக்கும்படி கூறியதாக அர்த்தம் கொள்ளக்கூடாது என்றும் ஞானசார தேரர் கூறினார்.

முன்னதாக அளுத்கமையில் பௌத்த பிக்கு ஒருவர் தாக்கப்பட்டதாக வெளியான சம்பவத்தை தொடர்ந்து இரண்டு சமூகங்களுக்கும் இடையே மோதல் வெடிக்கும் சூழ்நிலை நிலவியதாகவும், அதனைத் தடுக்கும் விதத்தில் பௌத்த மக்களுக்கு தெளிவூட்டும் விதமாகவே நகரில் பெரிய அளவில் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் ஞானசார தேரர் கூறினார்.

இரண்டு சமூகங்களுக்கும் இடையில் பிரச்சனை வெடிக்கும் என்ற நிலை இருந்தால், அந்தக் கூட்டத்தை நடத்தி மேலும் மோதலை வளர்க்காமல், தனிப்பட்ட ரீதியில் சமூகத் தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம் அல்லவா என்று வினவிய போது,

நீங்கள் சொல்லுகின்ற எல்லாப் பேச்சுவார்த்தைகளும் நடந்துதான் இருந்தன. பள்ளிவாசல்களில் நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் முஸ்லிம் இளைஞர்கள் கூடியிருந்தமை பற்றி பௌத்த அமைப்புகள் மீது விரல் நீட்டும் எவரும் பேசுவதில்லையே. அதுபற்றி யாரும் பேசுவதில்லை. எங்கள் மீது மட்டும் குற்றம் சாட்டவேண்டாம்´ என்றார் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com