Saturday, June 21, 2014

“முன்கூட்டிகணிக்கவியலா விளைவுகளோடு" கூடிய ஈராக்கிய உள் நாட்டு யுத்தம் குறித்து சவூதி அரேபியா எச்சரிக்கிறது. By Peter Symonds

ஈராக்கில் தீவிரமடைந்து வரும் மோதல்களுக்கு, பாக்தாத்தின் அமெரிக்க ஆதரவிலான ஷியைட் மேலாதிக்க அரசாங்கத்தைக் குற்றஞ்சாட்டி, நேற்று வெளியுறவுத்துறை மந்திரி இளவரசர் சௌத் அல்-பைசல் (Saud al-Faisal) வெளியிட்ட கருத்துக்களோடு, சவூதி அரேபியா மத்திய கிழக்கில் மேலும் குறுங்குழுவாத பதட்டங்களுக்கு எரியூட்டியுள்ளது. ஈராக்கிய கொந்தளிப்பு "அப்பிராந்தியத்தில் முன்கூட்டிகணிக்கவியலா விளைவுகளோடு ஒரு உள்நாட்டு யுத்தத்தை" தோற்றுவிக்குமென அவர் எச்சரித்தார்.

ஜெத்தாவில் இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பின் ஒரு கூட்டத்தில் பேசுகையில், அந்நாட்டின் சுன்னி அரேபிய சிறுபான்மையினருக்கு எதிரான ஈராக்கிய அரசாங்கத்தின் "விலக்கிவைக்கும் குழுங்குழுவாத கொள்கைகளே" வன்முறைக்கு காரணமாகிறதென்று சவூதியின் குற்றச்சாட்டுக்களை அந்த வெளியுறவுத்துறை மந்திரி மீண்டும் எதிரொலித்தார். ஈரானின் ஷியைட் ஆட்சியைக் குறித்த அதிக-மறைப்பில்லாத ஒரு கூற்றில், “அதன் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை, தேசிய ஒருமைப்பாடு மற்றும் அரேபிய அடையாள உணர்வை அச்சுறுத்தும் சூழ்ச்சிகளோடு" ஈராக்கை நோக்கிய "தீய நோக்கங்களை" கொண்டுள்ள நாடுகளை அவர் குற்றஞ்சாட்டினார்.

சவூதி முடியாட்சி நீண்ட காலமாகவே ஈரானை அதன் முதன்மையான பிராந்திய விரோதியாக கருதி வந்துள்ளதோடு, தெஹ்ரானின் பிராந்திய செல்வாக்கைக் குறைக்கும் முயற்சிகளில் ஷியைட்-விரோத மற்றும் பாரசீக-விரோத வெறுப்புகளுக்கு எரியூட்டியுள்ளது. அது ஈரானின் தலையாட்டியாக கருதும் பிரதம மந்திரி நௌரி அல்-மலிக்கியின் ஈராக்கிய அரசாங்கத்தை கடுமையாக எதிர்ப்பதோடு, அதன் சுன்னி எதிர்ப்பாளர்களுக்கு அரசியல்ரீதியாகவும், நிதியுதவிகளோடும் ஆதரிப்பதாக கருதுகின்றது. “அன்னிய தலையீடோ அல்லது வெளி நிகழ்ச்சிநிரலோ" இல்லாமல் ஈராக்கிய "தேசிய நல்லிணக்கத்திற்கு" சவூதி கோரிக்கைவிடுவதை சௌத் அல்-பைசல் மீண்டும் வலியுறுத்தினார்.

முக்கிய பெருநகரங்களையும் சிறுநகரங்களையும் கைப்பற்றிய பின்னர், கடந்த வாரம் பாக்தாத்தை நோக்கி தெற்கில் நகர்ந்து வரும் ஈராக்-சிரியா இஸ்லாமிய அரசு (ISIS) மற்றும் அதனோடு இணைந்த போராளிகளை சவூதி அரேபியா ஆதரித்து வருவதாக குற்றஞ்சாட்டி, மலிக்கி செவ்வாயன்று சவூதியைக் கடுமையாக சாடினார். “இந்த குழுக்களை நிதியியல் ரீதியாகவும், அறரீதியிலும் ஆதரிப்பதற்கும், மற்றும் இனப்படுகொலை அளவிலான குற்றங்கள்: அதாவது ஈராக்கில் இரத்த ஆறு ஓடுவதற்கும், ஈராக்கிய அரசு அமைப்புகள் மற்றும் வரலாற்று மற்றும் மத தளங்கள் சேதப்படுத்தப்படுவதற்கும், இதுபோன்ற விளைவுகளுக்கு" ரியாத்தே "பொறுப்பாகும்" என்று அவர் அறிவித்தார்.

சுன்னி முடியாட்சிகளால் ஆளப்படுகின்ற பல்வேறு வளைகுடா அரசுகளும் கூட, பாக்தாத்தை விமர்சிப்பதில் சவூதி அரேபியாவோடு சேர்ந்துள்ளன. ஞாயிறன்று கட்டாரின் வெளியுறவுத்துறை மந்திரி கலெட் அல்-அட்டியாஹ் (Khaled al-Attiyah) கூறுகையில், 2013 ஏப்ரலிலும் இந்த ஜனவரியிலும் சுன்னி போராளிகள் மீது அது கையாண்ட அடக்குமுறையை மேற்கோளிட்டுக் காட்டி, சுன்னி அரேபியர்களைக் ஓரங்கட்டியதன் மூலமாக சண்டையை மலிக்கி அரசாங்கம் தூண்டிவிட்டிருப்பதாக குற்றஞ்சாட்டினார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) ஈராக்கிற்கான அதன் ராஜாங்க தூதருடன் ஆலோசனை செய்வதற்கு அவருக்கு மறுஅழைப்பு கொடுத்திருப்பதாக நேற்று அறிவித்ததோடு, ஈராக்கிய அரசாங்கத்தின் "குறுங்குழுவாத கொள்கைகளையும்" விமர்சித்தது.

அப்பிராந்தியம் முழுவதிலும் தீவிரமடைந்து வரும் சுன்னி-ஷியைட் பகைமைகள், ஒரு தசாப்த காலமாக ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் மற்றும் ஆத்திரமூட்டல்களுக்கு பின்னரும், மற்றும் மிக சமீபத்தில் ஈரானின் ஒரு கூட்டாளியான சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத்திற்கு எதிராக அமெரிக்க ஆதரவிலான ஆட்சி மாற்ற நடவடிக்கையை தொடர்ந்தும், 2013இல் அமெரிக்க தலைமையிலான குற்றகரமான ஈராக்கிய படையெடுப்பினது நேரடி விளைபொருளாகும்.

வாஷிங்டன் அந்த ஒட்டுமொத்த நாட்டையும் ஆழமாக ஸ்திரமின்மைப்படுத்தி, அதன் ஆக்கிரமிப்பிற்கு உதவும் ஒரு கருவியாக ஈராக்கில் குருதி கொட்டும் குறுங்குழுவாதத்தைத் திட்டமிட்டு தூண்டிவிட்டுள்ளது. சிரியாவில், அசாத்திற்கு எதிரான கிளர்ச்சிக் குழுக்களுக்கு அமெரிக்கா நிதியுதவி வழங்கி ஆதரித்ததோடு, அதன் மத்திய கிழக்கு கூட்டாளிகளை குறிப்பாக சவூதி அரேபியா மற்றும் கட்டாரையும் அவ்வாறே செய்ய ஊக்குவித்தது. அதன் விளைவு ஷியைட் அலாவைட் பிரிவைச் (Shiite Alawite sect) சேர்ந்தவரான அசாத்திற்கு எதிராக சிரியாவில் ஒரு குழுங்குழுவாத உள்நாட்டு போராகும், அது இப்போது அதன் எல்லையையும் தாண்டி ஈராக்கிற்குள் பரவியுள்ளது.

முன்னர் அல் கொய்தாவோடு இணைப்பு பெற்றிருந்ததும், சவூதியின் ஊழல் ஆளும் மேற்தட்டுகளுக்கு எதிரான குழுக்களோடு விரோதங்களைப் பகிர்ந்து கொள்வதுமான ISISஇன் சுன்னி தீவிரவாதிகளிடமிருந்து சவூதி முடியாட்சி தன்னைதானே விலக்கி வைக்க முனைந்துள்ளது. சவூதி அரேபியா முன்னர் ISISக்கு தடை விதித்திருந்தது, ஆனால் இது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அதற்கு அது ஆதரவு வழங்கவில்லை என்பதை அர்த்தப்படுத்தவில்லை.

ரியாத்தின் இரட்டை நிலைப்பாடு சவூதி பத்திரிகை Asharq Al Awsat இல் தொகுத்தளிக்கப்பட்டது, அதன் கட்டுரையாளர் கடந்த வாரம் அறிவித்தார்: “நௌரி அல்-மலிக்கி, ISIS மற்றும் [அல்] கொய்தாவை விட மிகவும் மோசமானவரும், மிகவும் அபாயகரமானவரும் ஆவார்.”

சவூதி அரேபியா கடந்த செப்டம்பரில் சிரியா மீதான அதன் வான்வழி போரைக் கைவிடுவதென்ற அமெரிக்காவின் முடிவிற்கும், அத்தோடு ஈரானை நோக்கிய வாஷிங்டனின் ஒரு சமரச நகர்வுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. ஈராக்கை நோக்கிய சமீபத்திய அமெரிக்க-ஈரானிய பேச்சுவார்த்தைகள் பாக்தாத்தில் மலிக்கி அரசாங்கத்திற்கு முட்டு கொடுக்கும் ஒரு கூட்டு முயற்சிகளில் போய் முடியுமென்பது ரியாத்தின் கவலையாகும். “நமக்கு ஈராக்கை நோக்கிய ஒரு பிராந்திய ஒருங்கிணைப்பு அவசியப்படுகிறதே ஒழிய, ஒரு அமெரிக்க-ஈரானிய பேச்சுவார்த்தைகள் அல்ல,” என்று சவூதி ஆய்வாளர் அப்தெல் அஜிஜ் அல்-சாக்ர் Agence France Presseக்கு தெரிவித்தார்.

சவூதி அரேபியா வாஷிங்டன் உடனான உறவுகளை முறிக்கும் நிலையில் இல்லை. சிரியா மீது அமெரிக்கா குண்டுவீச தவறியதைத் தொடர்ந்து அமெரிக்காவிடமிருந்து விலகும் ஒரு "முக்கிய திருப்பம்" குறித்து எச்சரிக்கை விடுத்த அவரது கருத்துக்களுக்காக வெளிப்படையாக உளவுத்துறை தலைவர் இளவரசர் பண்தார் பில் சுல்தான் அவரது பதவியிலிருந்து ஏப்ரலில் நீக்கப்பட்டார். ஆனால் சவூதி அரேபியா, அதுவும் குறிப்பாக அதன் உளவுத்துறை சேவைகள், ஈரானிய செல்வாக்கைக் குறைக்கும் ஒரு முயற்சியில் பல சுன்னி அமைப்புகளுக்கு ஆதரவளிக்க ஈராக் மற்றும் சிரியாவுக்குள்ளும் மற்றும் மத்திய கிழக்கு முழுவதிலும் அவற்றின் நடவடிக்கைகளை அதிகரித்துள்ளன.

“ஈராக்கின் ஜிஹாதிஸ்ட் எழுச்சிக்குப் பின்னால் இருக்கும் சதி" என்று தலைப்பிட்ட ஒரு கருத்துரையில், அமெரிக்க இராணுவம் மற்றும் உளவுத்துறை ஸ்தாபகத்தோடு நெருக்கமாக தொடர்புகள் கொண்டுள்ள ஒரு சிந்தனையாளர் குழுமமான ஸ்ட்ராட்பர் (Stratfor), துருக்கி, ஈரான் மற்றும் வளைகுடா அரசுகள் உட்பட பிராந்திய அதிகாரங்கள் அனைத்தும் ஈராக்கில் அவற்றின் நலன்களுக்கு அழுத்தம் அளிக்கின்றன என்று குறிப்பிட்டது. சவூதி அரேபியா தொடர்பாக அது குறிப்பிடுகையில், சிரியா, லெபனான் மற்றும் ஈராக்கை "பயனுள்ள பினாமி போர்களங்களாக்கி" “ஒரு பாரசீக-அமெரிக்க மீள்நல்லிணக்கமானது சுன்னி பேரரசிற்கு என்றும் நிலைத்திருக்கும் அச்சுறுத்தலாகும்,” என்று குறிப்பிட்டது.

சவூதி அரேபியா நேரடியாக ISISக்கு ஆதரவளிக்கவில்லை என்றாலும், அது அந்த சண்டையில் சம்பந்தப்பட்ட ஏனைய ஈராக்கிய சுன்னி அமைப்புகளோடு நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ளது என்று ஸ்ட்ராட்பர் கட்டுரை குறிப்பிட்டது. “பெரும்பாலான சுன்னி போராளிகளும், எண்ணிக்கையில் அதிகரித்து வரும் விழிப்புணர்வு குழுக்களில் இருந்து நீக்கப்பட்டவர்களும் (ஈராக்கில் அல் கொய்தாவோடு போராட அமெரிக்காவால் நியமிக்கப்பட்ட சுன்னி போராளிகள்) இந்த போராளிகள் குழுக்களில் இணைந்து, மஜ்லிஸ் துவார் அல் அன்பார் உடன் (அன்பார் கிளர்ச்சியாளர்களின் கவுன்சில்) நேரடியாக வேலை செய்து வருகிறார்கள், அந்த அமைப்பு குறிப்பிட்ட விதத்தில் ஈராக்-லேவண்ட் [சிரியா] இஸ்லாமிய அரசோடு சேர்ந்து வேலை செய்து வருகிறது. சவூதி அரேபியாவின் தற்காலிக உளவுத்துறை தலைவர் யொசெப் பின் அலி அல் அட்ரிசிஸ் (Yousef bin Ali al Adrisis), யுத்தகள வடிவமைப்பில் செல்வாக்கு செலுத்த ரியாத்திற்கு வாய்ப்பளிக்கும் விதமாக—அவ்விதத்தில் ஒரு அதிமுக்கிய உணர்வுபூர்வமான இடத்தில் ஈரானுக்கு சினமூட்ட—அவர் மஜ்லிஸ் துவார் அல் அன்பாருடன் நேரடியான தொடர்பில் இருப்பதாக நம்பப்படுகிறது,” என்று எழுதியது.

முன்னதாக, ISISஉம் மற்றும் சிரியாவில் உள்ள இதர அசாத்-விரோத போராளிகள் குழுக்களும் சவூதி அரேபியா மற்றும் வளைகுடா அரசுகளில் உள்ள செல்வந்த சுன்னி நன்கொடையாளர்களிடம் இருந்து கணிசமான அளவிற்கு நிதியுதவிகள் மற்றும் ஆயுதங்களைப் பெற்று வந்தனர், அதற்கு அவற்றின் அரசாங்கங்களும் அமெரிக்காவும் கண்மூடி இருந்தன. பிரபலமான புரூக்கிங் பயிலகத்தால் கடந்த டிசம்பரில் பிரசுரிக்கப்பட்ட ஒரு அறிக்கை, இந்த நிதிகளில் பெரும்பான்மை குவைத் வழியாக சென்றதாக விவரித்தது. “[சிரிய] கிளர்ச்சியாளர்களுக்கு தனிப்பட்ட குவைத் உதவியின் மதிப்பை அளவிடுவது சாத்தியமில்லை என்றாலும், அது நிச்சயமாக ஏறத்தாழ நூறு மில்லியன் கணக்கான டாலர்களை எட்டும்,” என்று அது குறிப்பிட்டது. “குவைத்தில் உள்ள நன்கொடையாளர்கள் வளைகுடாவின் ஏனைய இடங்களில் இருந்தும் நன்கொடைகளை ஒன்று திரட்டி இருந்தனர், அங்கெல்லாம் நிதி திரட்டுவதென்பது மிக கடுமையாக நெறிமுறைப்படுத்தப்பட்டு உள்ளது ... இந்த நடவடிக்கை குறித்து அமெரிக்க கருவூலத்திற்குத் தெரியும் என்பதோடு, அது இந்த தனியார் நிதி ஓட்டம் குறித்து கவலைகளை வெளியிட்டுள்ளது. ஆனால் மேற்கின் இராஜாங்க அதிகாரிகள் மற்றும் தூதர்களின் பொதுவான விடையிறுப்பு மொத்தத்தில் அலட்சியமாக இருந்துள்ளது,” என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

ஈராக் வேகமாக குறுங்குழுவாத உள்நாட்டு யுத்தத்திற்குள் சரிந்து வருவதானது வாஷிங்டனின் வெளியுறவுக் கொள்கையின் பொறுப்பற்ற, காட்டுமிராண்டித்தனமான மற்றும் தொடர்பற்றதன்மை மீதான ஒரு குற்றப்பத்திரிகையாகும், அது அனைத்திற்கும் மேலாக அதன் ஏகாதிபத்திய நலன்களைப் பின்தொடர இராணுவ பலத்தை உபயோகிப்பதை அடித்தளமாக கொண்டுள்ளது. அமெரிக்கா ஈராக்கில், பாரசீக வளைகுடாவில் உள்ள அதன் கூட்டாளிகளுக்கு முரண்பட்ட ஒரு ஷியைட் ஆட்சியை நிறுவியது. சிரியாவில், ஈரானின் கூட்டாளியான அசாத்திற்கு எதிராக ஒரு உள்நாட்டு யுத்தத்திற்கு எரியூட்ட சவூதி அரேபியா மற்றும் வளைகுடா அரசுகளை ஊக்குவித்தது. இவை அனைத்தும் மத்திய கிழக்கை ஒரு ரத்த ஆற்றுக்குள் இழுத்து வரும் அச்சுறுத்தலோடு அப்பிராந்தியம் முழுவதிலும் ஒரு குறுங்குழுவாத வெடிமருந்து பெட்டகமாக உருவாக்கி உள்ளன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com