Monday, June 2, 2014

கடவுள் குற்றம் செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்! - ஹேமால் குணசேக்கர

தான் முன்னின்று தெற்கு அதிவேகப் பாதையில் சேவை புரிகின்ற பொலிஸார் ஒருவரை கொல்வதற்காக துப்பாக்கிச் சூட்டு நடாத்தியதாகவும், அவரது மோட்டார் வாகனத்திற்கு தீ மூட்டியதாகவும் குறிப்பிடப்படுகின்ற செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை எனவும், அவ்வாறானதொரு விடயத்தைக் கடவுள் செய்தாலும் அவருக்கும் தண்டனை வழங்க வேண்டும் என கூட்டுறவு உள்நாட்டு வியாபார பிரதியமைச்சர் ஹேமால் குணசேக்கர குறிப்பிடுகிறார்.

தாக்குதலுக்குள்ளாகியுள்ள பொலிஸ் காவலர், பிரதியமைச்சரின் பெயரையும் குறிப்பிட்டு அவர்மீதும் குற்றம் சுமத்தியிருப்பது தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

ஹேமால் குணசேக்கர தொடர்ந்து குறிப்பிடுகையில் -

“சென்ற இரண்டு மூன்று நாட்களாக வெலிகமையிலுள்ள எனது வீட்டில்தான் தங்கியிருந்தேன். அதிவேக பாதையில் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலிஸ் காவலர் ஒருவர் தாக்கப்பட்டு, அவரது வாகனமும் தீமூட்டப்பட்ட செய்தியை நானும் ஊடகங்களின் வாயிலாகவே தெரிந்து கொண்டேன். அந்நிகழ்வு நடைபெற்றிருக்கின்ற போது நான் எனது குடும்ப அங்கத்தவர்களுடன் வெலிகம வாடிவீட்டில் தங்கியிருந்தேன். நாங்கள் இரவு சாப்பாட்டுக்காக அங்கு சென்றிருந்தோம்.

இதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் நான் பாராளுமன்றத்திற்குச் செல்லும்போது அதிவேக பாதையில் எல்லையைத் தாண்டி வாகனம் ஓட்டியதாகக் கூறி, குறித்த பொலிஸ் காவலர் எனது சாரதிக்கு தண்டப் பணம் செலுத்துமாறு கூறி பற்றுச்சீட்டொன்று கொடுத்திருந்தார். வாகனத்தின் முன் ஆசனத்தில் சாரதியுடன் ஒரு பணியாளரும் அமர்ந்திருந்தார். நானும் எனது மனைவியும் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்தோம். அப்போது எனது சாரதி ஜீப் வண்டி மந்திரியொருவருடையது எனக் கூறியிருக்கின்றார். அப்போது பொலிஸ் காவலர், யாருடையதாயின் எனக்கென்ன? என்று சொன்னார்.

நான் ஆயிரம் ரூபா தண்டப் பணம் செலுத்திவிட்டு, பொலிஸ் காவலர் கூறிய முறை சரியானதல்ல என்பதால், அவர் தொடர்பில் அதிவேக பாதையின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மகேஷ் குணசேக்கரவிடம் முறைப்பாடு செய்தேன்.

இப்போது அந்த பொலிஸ் காவலர் கறுப்பா வெள்ளையா என்று கூட எனக்கு ஞாபகமில்லை. அவரது வீடு எங்கு இருக்கின்றது என்றுகூட எனக்குத் தெரியாது. அந்த பொலிஸ் காவலர் அரசியல் இலாபம் பெற்று வெளிநாடு செல்வதற்காகச் செய்ய நாடகம் இது என்பது எனக்குத் தெளிவாகின்றது. இது தொடர்பில் பரிசீலனை நடாத்தப்பட வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன். ஏதேனும் ஒரு பிரிவினர் இதனைச் செய்திருந்தால் அவர்களுக்கும், பொலிஸ் காவலர் இந்த வேலையைச் செய்திருந்தால் அவருக்கும், அவர் கடவுளாக இருந்தாலும் பரவாயில்லை தண்டனை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

நான் போதைக்கு அடிமையான, மது அருந்துகின்ற அரசியல்வாதி அல்ல. “பைபாஸ்” அறுவைச் சிகிச்சை செய்துள்ளேன். என்னால் யாரையும் தாக்க வியலாது. ஆயினும், சில ஊடகங்கள் எனது பெயருக்கு இழுக்குச் சேர்க்க முயற்சி மேற்கொண்டு வருகின்றது. எனக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியம் தொடர்பில் நான் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளேன். நான் கௌரவமான முறையில் அரசியல் செய்வதை எல்லோரும் நன்கு அறிவர்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com