Monday, June 9, 2014

தமிழ் பெண்களும் இளைஞர்களும் அவதானமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கவும்!! அஜித் ரோஹன!!

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் பெயரில் பல்வேறு மோசடிகள் இடம்பெற்று வருவதனால் தமிழ் பெண்களும் இளைஞர்களும் மிகவும் அவதானமாகவும் பாதுகாப்பாக வும் இருக்க வேண்டும் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கொழும்பு பொலிஸ் தலைமை யகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், யுத்தம் நிறைவடைந்த பிற்பாடு விடுதலை புலிகள் இயக்கத்தின் பெயரில் பல்வேறு மோசடிகள் இடம்பெற்று வருகிறது. இதற்கமைய கடந்த மே மாதம் 31 ஆம் திகதி மானிப்பாய், கோப்பாய் ஆகிய பொலிஸ் நிலையங்களுக்கு நள்ளிரவு 12.30 மணிக்கு கிடைத்த விஷேட தொலைபேசி அழைப்பினூடாக இலங்கை பெண்ணொருவரின் தொலைபேசி இலக்கத்தினை குறிப்பிட்டு குறித்த பெண் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சார்ந்தவர் எனவும் அப்பெண்மனி பொலிஸ் நிலையங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளவிருப்பதாகவும் தகவல் விடுக்கப்பட்டது.

குறித்த தொலைபேசி அழைப்பு தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்ட மைக்கு அமைவாக அவ்வழைப்பு லண்டன் நகரிலிருந்து வந்துள்ளது. அத்தோடு கிடைக்கப்பெற்ற இலங்கை பெண்ணின் தொலைபேசி இலக்கம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட போது வல்வெட்டித்துறை பிரதேசத்தினை சேர்ந்த பெண் என்பது தெரிய வந்தது.

இந்நிலையில் லண்டனிலிருந்து கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பு தொடர்பில் அப்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்ட போது அது தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது என்றார். இதற்கமைய குறித்த பெண்ணின் தொலைபேசிக்கு கிடைத்த அழைப்பு தொடர்பில் பரிசீலனை செய்த போது அப்பெண்ணிற்கு கிடைத்த அழைப்புகளில் லண்டனிலிருந்து தொலைபேசி யினூடாக தகவல் கொடுத்தவரின் இலக்கமும் காணப்பட்டது.

இந்த தொலைபேசி இலக்கம் தொடர்பில் அப் பெண்ணிடம் விசாரணை செய்த போது தனது திருமணத்திற்காக இணையத்தள மொன்றில் விளம்பரமொன்று பிரசுரித்ததாகவும் குறித்த விளம்பரத்தினை பார்த்த லண்டனிலுள்ள ஒருவர் தன்னை திருமணம் செய்ய தயார் எனவும் அதற்கு 3 இலட்சத்து 50 ஆயிரம் ருபாவினை இலங்கையிலுள்ள வங்கியொன்றினூடாக தனக்கு அனுப்பி வைத்தால் லண்டனிலேயே திருமண ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியும் என்றாராம்.

இதற்கமைய குறித்த பெண் அப்பணத்தை லண்டன் நபரினால் வழங்கப்பட்ட கணக்கொன்றிற்கு அனுப்பியுள்ளார். இருப்பினும் அப் பெண்ணை லண்டனுக்கு அழைத்து செல்லவில்லை எனவும் இது தொடர்பாக அந்த நபரிடம் தொலைபேசியினூடாக தொடர்பு கொண்ட போது தன்னை அச்சுறுத்தியதாகவும் இது தொடர்பில் மேலதிக நடவடிக்கை மேற்கொண்டால் பின் விளைவுகள் மோசமாக இருக்குமென அச்சுறுத்தியுள்ளார்.

இதேவேளை இலங்கை வங்கியொன்றின் கணக்கு இலக்கத்தின் உரிமையாளர் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட போது முன்னாள் விடுதலை புலிகள் இயக்கத்தை சேர்ந்த 36வயதுடைய வேலாயுதம் பிள்ளை சுதத் என அறிய கிடைத்தது. இதற்கமைய முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த சுதத் நேற்று முன்தினம் இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பயங்கரவாத விசாரணை பிரிவிடம் அழைத்து வரப்பட்டார்.

ஆகவே இத்தகைய சம்பவங்கள் தொடர்பில் தமிழ் பெண்களும் இளைஞர்களும் அவதானமாக இருக்க வேண்டும் என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com